காலங்காலமாய் கண்டிருந்த கனவு

,வெளியிடப்பட்டது

உண்மையில் சென்னையை ஒப்பிடுகையில், மதுரையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கும் கல்விசார் உதவிகள், நன்கொடை வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முன் பக்கம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முன்பக்கம்

முன்னால் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளான நேற்று,  பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில், மாற்றுத்திறனாளிகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்பது அனைத்துத் தரப்பு மாற்றுத்திறனாளிகளாலும் பெருமளவில் கொண்டாடப்படுகிறது. நிச்சயம் அது கொண்டாடப்பட வேண்டிய அறிவிப்புதான். ஏனெனில், பார்வை மாற்றுத்திறனாளிகள் தவிர பிற மாற்றுத்திறனாளிகளுக்கு பெருநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்பது ஒரு குறிப்பிட்ட இரண்டு இடங்களுக்கு இடையே என வரையறுக்கப்பட்டதாகவே இருந்துவருகிறது. இனி அந்தத் தடை நீங்கும்.

ஒரு பார்வையற்றவனாகப் பெரிதும் எனக்கு மகிழ்வு தருவது அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போலவே, மதுரையில் கலைஞர் பெயரில் ஒரு நூலகம் என்கிற அறிவிப்பு. அப்படியானால், இங்கும் ஒரு பிரெயில் பிரிவு அமையும். எளிதில் வாங்க மனது கொள்ளாத விலை அதிகம் கொண்ட ஐஏபி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரெயில் வெளியீடுகள் இந்த நூலகத்தில் கொள்முதல் செய்யப்படும். அருப்புக்கோட்டையோ, புதுக்கோட்டையோ இரண்டே மணி நேரத்தில் வந்து புத்தகங்களில் மூழ்கிக் கிடக்கலாம்.

இது மதுரை மற்றும் அந்தப் பெருநகரைத் தங்களின் கல்வி மையமாகக்கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைத்திருக்கும் அரிய பரிசு. காலங்காலமாய் அவர்கள் கண்டிருந்த கனவு. உண்மையில், மதுரை மாணாக்கர்கள் இதற்காக எத்தனையோ நாட்கள் ஏங்கியிருப்பார்கள். இனி டிஆர்பி, டெட், டிஎன்பிஎஸ்சி மெட்டீரியல் தேடி நாகர்கோவிலிலிருந்து பேருந்தோ ரயிலோ பிடித்து, தன் ஒரு முழு நாளைச் செலவிட்டு ஒரு பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரி சென்னைக்குப் போக வேண்டியதில்லை. தன் படிப்பின் நிமித்தம் அலைந்து திரிந்த, தனக்கு நன்கு பழகிய மதுரை முற்றம் வந்தால் போதும். கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன். நினைக்க நினைக்க நெஞ்சில் தேனூறுகிறது.

உண்மையில் சென்னையை ஒப்பிடுகையில், மதுரையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கும் கல்விசார் உதவிகள், நன்கொடை வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான். சென்னையைப்போல இங்கு வாசிப்பாளர்கள் சேவை (reading service) எல்லாம் பெரிதாக கிடையாது. உடன் படிக்கும் நண்பர்களிடம் ஒட்டிக்கொண்டு உதவி பெறுவதுதான் ஒரே வழி. பிறகு விடுதிகளில் தன்னோடு படிக்கும் சக பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களோடு உரையாடி உரையாடிப் பெறுவதுதான் அவனின் ஆகச் சிறந்த கல்வி அனுபவம்.

அமெரிக்கன் கல்லூரி இதற்கு விதி விலக்காக இருக்கலாம். மேலும், இப்போது கொஞ்சம் நிலைமைகள் மாறியிருக்கவும் கூடும். ஆனால், இப்போதும் சென்னை, கோவையைவிட பின்தங்கிய நிலையில்தான் மதுரை இருக்கிறது.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் மிகப்பெரிய ஆலமரமான ஐஏபியே மதுரையில் இருந்தபோதிலும் இதுதான் நிலை. உண்மையில், மதிப்பிற்குரிய திரு. ஜின்னா அவர்கள் இப்போது இருந்திருந்தால், பெருகிவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, புதிதாக ஏதேனும் செய்திருக்கக்கூடும். இனிமேல் அவற்றையெல்லாம் அங்கிருந்து எதிர்பார்க்க முடியாது. அரசுதான் நமது ஒரே புகளிடம்.

ஆனால், இத்தனை நெருக்கடிகளுக்குப் பிறகும், மதுரைப் பக்கங்களிலிருந்துதான் புத்தாக்கப் படைப்புக் காற்று வீசத் தொடங்கியது. பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் கணினி பயன்பாடு அதிகரித்தபோது, பிரபல இணையதளங்களின் தினசரிப் பகிர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து, படித்து  சமூகம் முதலில் திழைத்துப் பின்னர் சாரமின்றி சோர்வுற்றுப் போனது. அப்போது, அதே இணையத்தைப் பயன்படுத்தி சொந்தப் படைப்புகளை எழுத வந்தவர்கள் மிகச் சிலர். அவர்களில் பெரும்பான்மை மதுரை மைந்தர்கள். அதற்கு பார்வையற்றோருக்கான தமிழின் முதல் மின்னிதழான விரல்மொழியரே தக்க சான்று.

நிற்க! மைந்தர்கள் என்ற சொற்றொடர் மண் சார்ந்தது அல்ல, மதுரை அவர்களுக்குத் தந்த கல்வி சார்ந்தது.

வாசிப்பாளர் உதவியுடன் புத்தகம் வாசிக்கும் பார்வையற்றவர்
வாசிப்பாளர் உதவியுடன் புத்தகம் வாசிக்கும் பார்வையற்றவர்

அரசு அமைக்கும் கலைஞர் நூலகம் அந்தப் படைப்புக் காற்றை மேலும் செறிவூட்டும். நூலகத்தில் அன்றாட பார்வையற்றோரின் வருகையால், பொது வாசகப் பரப்போடு ஒரு ஊடாட்டம் தொடங்கும். அதன் வழியே, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பாளர்களும், வாசிப்பு சேவை மையங்களும் அதிகரிக்கக்கூடும். விளைவு, நிறைய வாசித்து, செழுமையுற்ற புதிய படைப்பாளிகள் காத்திரமும் கூர்மையும் கொண்ட தங்கள் படைப்புகளோடு இந்த உலகோடு உரையாடுவார்கள். அதாவது, சென்னையைப் போலவே, இனி மதுரையிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் பெருகும்.

ஆனால் ஒன்று, வசதி வந்தால் கூடவே அசதியும் வரும். அதில் மட்டும் கொஞ்சம் கவனமா இருங்க மக்கா!

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்