கற்க கசடற கலைஞரை

,வெளியிடப்பட்டது

அவருக்கு அரசாணை அரசு விதிகளெல்லாமே எப்போதைக்கும் மீறக்கூடாத புனித கட்டளைகளாக இருந்ததில்லை. அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்பவும், பயனாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, மிகத் தெளிவான அரசாணைகளை வெளியிடுவதில் கலைஞர் அரசுக்கு நிகரான மாநில அரசு இந்திய ஒன்றியத்திலேயே இல்லை.

கலைஞர் தொடர்பான விகடனின் புகைப்படம்

அது 2009 ஜூலை மாதத்தின் ஒருநாள் என்பதாகத்தான் நினைவு. ஆயிரக்கணக்கான ஊனமுற்றவர்கள் பங்கேற்ற பிரமாண்டப் பேரணி தலைமைச் செயலகம் நோக்கி முன்னேறியது. உடனே அவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள். அன்றே ஊனமுற்றோருக்கு உயர்கல்வி கட்டணச் சலுகை, கல்வி உதவித்தொகைகள் இரட்டிப்பு, ஊனமுற்றோர் மற்றும் அவர் உடன் செல்வோருக்கு அரசுப் பேருந்தில் 75 விழுக்காடு பயணக் கட்டணச் சலுகை என ஊனமுற்றோர் தொடர்பான பத்திற்கும் மேற்பட்ட அறிவிப்புகள் அரசாணைகளாக மலர்ந்த வரலாற்று தருணம் நிகழ்ந்தேறியது.

21/ஜனவரி /2010 ஊனமுற்றோர் சங்கங்கள் கூட்டியிருந்த நன்றியறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்ற கலைஞர் அவர்கள், சுமார் 75 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்ப் பணிநியமன ஆணைகளை வழங்கினார். ஏழு ஆண்டுகளுக்க்உள் அவர்கள் இளங்கலைக் கல்வியியல் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் அனைவருமே 6,7,8 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலேயே பணியமர்த்தப்பட்டார்கள். இத்தனைக்கும் இடைநிலை ஆசிரியர்களாகப் பார்வையற்றவர்களை நியமிப்பதில்லை எனத் தனது முந்தைய ஆட்சி காலத்தில் எடுத்திருந்த கொள்கை முடிவு தளர்த்தப்பட்டு, அவர்களின் பணிப் பாதுகாப்பைப் பேணும் வகையில் ஒரு அரசாணையையும் வழங்கியே அவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

அவருக்கு அரசாணை அரசு விதிகளெல்லாமே எப்போதைக்கும் மீறக்கூடாத புனித கட்டளைகளாக இருந்ததில்லை. அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்பவும், பயனாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, மிகத் தெளிவான அரசாணைகளை வெளியிடுவதில் கலைஞர் அரசுக்கு நிகரான மாநில அரசு இந்திய ஒன்றியத்திலேயே  இல்லை. பொதுமக்களை அரசின் பங்குதாரர்களாக ஆக்குவதில் அவர் எப்போதுமே முனைப்புகொண்டிருந்தார். அதனால்தான் இன்றிருக்கும் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்களில் பெரு்ம்பான்மையானோர் கலைஞர் காலத்தில் பணிநியமனம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு நபரோ, ஒரு குழுவோ அரசுப்பணி பெறுவதற்கான ஒரே ஒரு சிறு நியாயத்தைச் சுட்டிவிட்டால் போதும். அதை அப்படியே உள்வாங்கி அதற்கேற்ற வகையில் பணிநியமன ஆணைகள் அரசாணைகளாக வெளிவரும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், என்னுடைய இடைநிலை ஆசிரியர்ப் பணிநியமனம்.

2008 ஆம் ஆண்டின் பிப்பரவரி மாதத்தில் மாநிலமெங்கும் இடைநிலை ஆசிரியர்ப் பணிநியமனங்கள் நடைபெறத் தொடங்கின. பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்ப் பயிற்சி மையத்தில் பயின்று தேர்ந்த 50க்கும் குறைவான பார்வையற்றோர் பணிநியமனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால், நான் மேற்சொன்னபடி, பார்வையற்றவர்களை இடைநிலை ஆசிரியர்களாக நியமிப்பதி்லை என்ற அரசின் கொள்கைக்கிணங்க எங்கள் பெயர்கள் பதிவு மூப்பிலிருந்து விலக்கப்பட்டன. ஆணையர், செயலர், அமைச்சர் என மாறி மாறி தலைமைச் செயலகம், பள்ளிக்கல்வித்துறை என நடையாய் நடந்தோம். உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தோம். ஒன்றும் பயனளிக்கவில்லை. உண்மையில், கலைஞரின் நாளிதழ் படிக்கும் பழக்கம்தான் அப்போது எங்களுக்கு உதவிக்கு வந்தது.

அரசின், அதிகாரிகளின் மௌனத்தை உடைக்க எல்லா வழிகளிலும் போராடித் தோற்ற நண்பர்கள் சுரேஷ் மற்றும் விஜய் ஆனந்த் இருவரும் இணைந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்தார்கள். அந்தப் பேட்டியி்ல் “நாங்கள் பணிவாய்ப்பிற்காக அலைந்து திரிந்து மிகப்பெரிய மன உலைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறோம். இனி எங்களிடம் சக்தி இல்லை. நாங்கள் அனைவரும் ஊனமுற்றோர் ஆணையரகத்தின் முன்பு தீக்குளிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என நண்பர் சுரேஷ் பேசியிருந்தார். செப்டம்பர் மாதத்தின் முதல்வாரம் பேட்டி வெளியானது. நவம்பர் 17 ஆம் தேதி எங்களில் 13 பேருக்கு பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஆணையில் குறிப்பிட்டிருந்த முக்கிய சரத்து என்ன தெரியுமா? “இந்தப் பணிநியமனங்களை எதற்கும் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாது. இது முற்றிலும்மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் பணியிடங்கள்”. ஆனால், அவரின் ஆணைகளை அவரே உடைக்கிற நாளும் விரைவில் வந்தது.

2010 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் எங்களோடு இடைநிலை ஆசிரியர்ப் பயிற்சி மையத்தில் பயின்ற 72 உடல் ஊனமுற்றவர்கள் ஒன்றிணைந்து ஒரு உண்ணா நோன்பை முன்னெடுத்தார்கள். அவர்களின் முக்கிய கோரிக்கையே எங்களோடு பயின்ற பார்வையற்றோரெல்லாம் பணிக்குச் சென்றுவிட்டார்கள். நாங்கள் பின்தங்கிவிட்டோம் என்பதாக இருந்தது. இத்தனைக்கும் இடைநிலை ஆசிரியர்ப் பணிநியமனங்களில் அவர்கள் விலக்கப்படவெல்லாம் இல்லை. அப்போது அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே சென்று கண் கலங்கிய கலைஞர், அவர்களின் உண்ணா நோன்பை முடித்துவைத்து, அத்தனை அரசு விதிகளையும் தளர்த்தி, அவர்கள் அனைவருக்கும் உடனடியாக இடைநிலை ஆசிரியர்ப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அவர்தான் மார்ச் 5 2010 அன்று சட்டப்பேரவையில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். ஊனமுற்றோர் நலத்துறையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை எனப் பெயர் மாற்றியதோடு, அதைத் தனது கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொண்டார். அதுவரை சமூகநலத்துறை செயலரால் கண்காணிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென்று புதிதாக திரு. ஜவஹர் ஐஏஎஸ்அவர்களை மாற்றுத்திறனாளிகள் நல செயலராக நியமித்தார்.

“டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு சிறப்புத் தற்செயல் விடுப்புவழங்கியது, மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களுக்கு 15 நிமிடம் தாமதமாக வரலாம், மாலையில் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே அலுவலகங்களிலிருந்து கிளம்பலாம்” என மாற்றுத்திறனாளிகளின் நுட்பமான தேவைகளையும் கனிவுடன் பரிசீலித்து உரிய அரசாணைகளைப் பிறப்பித்தார்.

தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தைத் தொடங்கியபோது
lc/தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தை தொடங்கியபோது

பார்வையற்றவர்களின் அறிவு தாகத்தைத் தணிக்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினிவழி பிரெயில் பிரிவைத் தொடங்கினார். இன்றும் தமிழகத்தில் இருக்கிற அரசு சிறப்புப் பள்ளிகளில் 90 விழுக்காடு பள்ளிகள் அவர் காலத்தில் தொடங்கப்பட்டவையே. ஆசியாவிலேயே பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரு்க்கான மறுவாழ்வு இல்லத்தை 1972 ஆம் ஆண்டிலேயே சென்னையில் பரனூர் என்னும் இடத்தில் நிறுவிய பெருமைக்குச் சொந்தக்காரர் அவர்.

இத்தனைக்குப் பிறகும், அவர் புகழடைந்து விடக்கூடாது என்ற புழுக்கத்தில் பல மாற்றுத்திறனாளிகளே “அவர் ஒரு மாற்றுத்திறனாளியாகி சக்கர நாற்காலிக்கு வந்தபிறகுதான் நம்மைக் குறித்துச் சிந்தித்தார்” என தர்க்கித்துத் திரிகிறார்கள். அவர்கள் தங்கள் குரல் எழும்புவதற்குக் காரணமான மூல திசையை நோக்கி ஒரு கனம் சிந்திக்க வேண்டும். அத்திசை வீற்றிருந்த அவர்களின் அம்மைக்கு, தான் முடங்கிவிட்டது குறித்தே வெளிச்சொல்லத் தயக்கம் இருந்தது என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் போலவே, மாற்றுத்திறனாளிகளும் சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றின் பலன்களை அனுபவிக்க உரிமையுடையவர்கள் என உறுதியாக நம்பிய கலைஞர், இலவசப் போக்குவரத்துப் பயணம், மாவட்டத்திற்கு ஒரு சிறப்புப் பள்ளி எனத் திட்டமிட்டபடியே இருந்தார். ஆனால், அவரைத் தலைவர் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டே, பாஸ் என்று நீட்டினால்  முகம் சுலிக்கும் பல நடத்துநர்கள் தொமுசாவிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவருடைய பிறந்தநாளில் பிரியாணியும் ஜாங்கிரி மட்டுமே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் போதும் என சிறப்புப்பள்ளி வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க முந்தியடிக்கிற உடன்பிறப்புகளைப் பார்க்கும்போதெல்லாம் நான் அவர்களிடம் சொல்ல இயலாமல் என் மனதிற்குள் சொல்லிக்கொள்வது,

‘கற்க கசடற கலைஞரை கற்றபின்

நிற்க அதற்குத் தக”

#hBD-kalainar.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

2 thoughts on “கற்க கசடற கலைஞரை

  1. இந்த தொகுப்பிற்கு வழங்கிய தலைப்பு அருமை கலைஞர் உடல் மறுத்தாலும் அவருடைய புகழ் என்றும் மறையாது

  2. இந்த தொகுப்பிற்கு வழங்கிய தலைப்பு அருமை கலைஞர் உடல் மறுத்தாலும் அவருடைய புகழ் என்றும் மறையாது

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்