புதிய அரசு தந்த புதிய நம்பிக்கைகள்

,வெளியிடப்பட்டது

புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.

மாற்றுத்திறனாளியோடு பேசும் மு.க. ஸ்டாலின்
மாற்றுத்திறனாளியோடு பேசும் மு.க. ஸ்டாலின்

கடந்த 21.மே.2021 அன்று திருச்சியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்து 15 நாட்களில் தனது அரசு கரோனா பெருந்தொற்று காலத்தில் செய்திருப்பனவற்றையும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் தேதி வாரியாகப் பட்டியலிட்டார். அந்தவகையில், புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.

5.மே.2021

முதல்வராகப் பதவி ஏற்கும் முன்பாகவே மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்களிக்கும் அரசாணையை உரிய நேரத்தில் வெளியிட்டது தமிழக அரசு. அத்தோடு, கரோனா ஊரடங்கு தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உள்ளடக்கிய அரசாணையிலும் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவோர் அதற்குரிய அடையாள அட்டைகளைக் காண்பித்து வெளியே செல்லலாம் என மாற்றுத்திறனாளிகள் குறித்த குறிப்பு இடம்பெற்றது.

6.மே.2021

அன்று மாலை ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்ப அதிர்ச்சி. எப்படியும் சமூகநலத்துறையின் கீழ் ஒரு பிரிவாகத்தான் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயங்கப்போகிறது, மாண்புமிகு அமைச்சர் திருமதி. கீதாஜீவன்தான் நமக்கும் அமைச்சர் என எதிர்பார்த்த மாற்றுத்திறனாளிகள், மாண்புமிகு முதல்வர் அவர்களே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறார் என்ற செய்தியை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். தந்தை வழி நடக்கும் தனயன் என மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்க்உப் புகழாரம் சூட்டினார்கள்.

12.மே.2021

அனுஜார்ஜ் இ.ஆ.ப.
அனுஜார்ஜ் இஆப

மாண்புமிகு முதல்வர் அவர்களின் தனிச் செயலர்களுக்கு முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல துறைகள் பிரித்து வழங்கப்பட்டபோது, திருமதி. அனுஜார்ஜ் இ.ஆ.ப. அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒப்படைக்கப்பட்டது.

17.மே.2021

மாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசி போட தடுப்பூசி மையங்களில் தனிக் கவுண்டர் ஏற்படுத்தப்பட வேண்ட்உம். அவ்வாறு செய்ய இயலாத இடங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில், தடுப்பூசி மையங்களில் சாய்தளம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு. தீபக்நாதன் அவர்கள். இந்த நிலையில், தனது கொலத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாண்புமிகு முதல்வர் அவர்கள். அங்கே சென்று தனது கோரிக்கையினை முன்வைத்த தீபக் அவர்களிடம் பரிசீலிப்பதாகச் சொன்னார் முதல்வர். அடுத்த நாளே, மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் மாண்புமிகு மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள்.

ககன்தீப்சிங் பேடி
ககன்தீப்சிங் பேடி

மேலும், கரோனா அதிகம் பாதித்த 9 மாநில முதல்வர்களோடு பிரதமர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், சென்னை மாநகர ஆணையர் திரு. ககன்தீப்சிங் பேடி அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடத் திட்டம் வகுத்திருப்பதைத் தெரிவித்தபோது, அதனை வெகுவாகப் பாராட்டிய பிரதமர் அவர்கள், பிற மாநிலங்களும் அதனைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினாராம்.

22.மே.2021

தடுப்பூசி முகாமைத் தொடக்கிவைக்கும் முதல்வர்
தடுப்பூசி முகாமைத் தொடக்கிவைக்கும் முதல்வர்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை சென்னையில் தொடக்கி வைத்தார் மாண்புமிகு முதல்வர் அவர்கள். இதனையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் சென்னையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் 18004250111  எண்ணிலும், செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் 9700799933 என்ற காணொளி அழைப்பு மூலம் தொடர்புகொண்டு, தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்் என அரசு அறிவித்தது. அத்தோடு, தடுப்பூசி தொடர்பான ஐயங்களுக்குத் தெளிவுபெற மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேகமாக ஒரு ஜூம் வழிக் கூடுகையை ஏற்பாடு செய்திருந்தது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

24.மே.2021

முன்பெல்லாம் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கான பணிவிலக்கு நீட்டிப்பு அரசாணை வெளிவருவதில் மிகப்பெரிய காலதாமதம் ஏற்பட்டது. பல சமயங்களில் அரசாணை வெளிவருவதற்குள் ஊரடங்கு காலமே முடியும் தருவாயில் இருக்கும். இந்தநிலை தற்போது மாறியிருக்கிறது. கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் 23ஆம் தேதிவரை பணிவிலக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகமெங்கும் மேலும் ஒரு வாரத்திற்குத் தளர்வில்லா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேலும் ஒரு வாரத்திற்கான பணிவிலக்கு நீட்டிப்பு அரசாணை வேண்டுமே எனப் பதறினார்கள் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள். அந்த அரசாணை நேற்று மாலையே வெளியாகியிருப்பது மாற்றுத்திறனாளிகளிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

அரசாணையைப் பதிவிறக்க

புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் உரிமைகள் மீது மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் என்பதால், மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகளை உரிமையோடு கேட்டுப் பெறும் நல்வாய்ப்பு அமைந்திருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள்.

வாழ்த்துகள்! பிறந்திருக்கும் புதிய ஆட்சிக்கும், நம்மவர்களின் புதிய நம்பிக்கைகளுக்கும்.

பகிர

1 thought on “புதிய அரசு தந்த புதிய நம்பிக்கைகள்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்