“அதிகாரிகள் எங்கள் குரல்கள் அல்ல; அன்பிற்குரிய முதல்வர் அவர்களே! எங்களிடம் பேசுங்கள்”

,வெளியிடப்பட்டது

தனியாள் இடைவெளிகள் கராராகப் பேணப்பட வேண்டிய இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையத்திற்கு வரவேண்டும் என அரசு எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.

மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி அறிவிப்பு குறித்த இந்து ஆங்கில நாளிதழின் செய்திப் பக்கம்
இந்து ஆங்கில நாளிதழின் செய்திப்பக்கம்

“மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி மையங்களில் தனி கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும், அவ்வாறு அமைக்கப்பட இயலாத இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தடுப்பூசி மையங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் சாய்தளங்கள் கொண்டதாக அமைக்கப்படவேண்டும்.” என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைச் செயல்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு உண்மையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு நலம் பயக்கும் அறிவிப்புதானா என்றால், இல்லை என்பதே நிதர்சனம்.

தனியாள் இடைவெளிகள் கராராகப் பேணப்பட வேண்டிய இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மையத்திற்கு வரவேண்டும் என அரசு எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. ஏறத்தாழ 21 வகையான மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 வகைப்படுத்தியிருக்கிறது என்றாலும், பெஞ்ச்மார்க் டிசைபிலிட்டி என்று சொல்லப்படுகிற ஐந்து வகையான மாற்றுத்திறனாளிகளைக்கொண்டு தமிழக அரசின் கருத்தைப் பரிசீலித்தாலே அரசின் அறிவிப்பு பயனற்றது என்பது புரியும்.

கோவிட் இரண்டாம் அலை குறித்தான விழிப்புணர்வினை அரசு செவித்திறன் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளிடம் அதிக அளவில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே கள உண்மை. உண்மையில் கோவிட் முதல் அலையிலிருந்து இரண்டாம் அலை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என்பதை எத்தனை செவித்திறன் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் புரிந்துவைத்திருக்கிறார்கள்? அல்லது அவர்களின் புரிதலுக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை? என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்திட முதலில் அரசு திட்டமிட வேண்டும்.

உடல்ச்சவாலுடைய மாற்றுத்திறனாளிகள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இயங்குவதில் அதிகம் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதேபோலத்தான் பார்வையற்றவர்களும். எல்லாமே தொட்டுத்தொட்டுப் பார்த்து வாழ்க்கை நடத்துகிற அவர்களின் மாற்றுப்புலன்களும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கிற இந்த இக்கட்டான பேரிடர் நாட்களில் கட்டப்பட்டிருக்கின்றன. பிறரைச் சார்ந்து இயங்கும் மாற்றுத்திறனாளிகளை தடுப்பூசி மையத்திற்கு வரவழைப்பது என்பது, மாற்றுத்திறனாளிகளின் அணுகுதல் உரிமைக்கு (accessibility rights) எதிரானது.

ஒவ்வொரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் நடமாடும் மறுவாழ்வு வாகனம் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தை முழு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து, மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடலாம். மேலும், இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில், வருமானம் இழந்து தவிக்கும் விளிம்புநிலை மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள், மருந்து பொருட்கள் வழங்கவும் அரசு விரைந்து ஆவன செய்யவேண்டும். அதற்கும் இந்த மறுவாழ்வு வாகனங்களை முழு வீச்சில் பயன்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு அறிவித்த இலவச உதவி மைய எண்ணான 18004250111என்ற எண்ணிற்கு உயிரூட்டி,அதன்மூலம்மாற்றுத்திறனாளிகளை இந்தஇக்கட்டான பேரிடர் காலத்தில் அரசு காக்க முன்வர வேண்டும்.

கரோனா தொற்று காரணமாக தற்போதுவரை அறிந்தவகையில் 20க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் இறந்திருக்கிறார்கள். எனவே, கரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறித்த சரியான புள்ளிவிவரங்களை அரசு பராமரிக்க வேண்டும்.

இறுதியாக ஒன்று, எங்களைப் பற்றிய முடிவுகளை அரசு பரிசீலிப்பதற்கு முன்பு, எங்களின் கருத்துகளையும் கேட்டறியும்போதுதான் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக அரசு முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நூறு விழுக்காடு பயன் கிடைக்கும்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புடைய பதிவுகள்:

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, ஓர் இறுதி நம்பிக்கைகொண்ட இறைஞ்சல்

முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்த்துகள், மாற்றுத்திறனாளிகள் நலன் பேணும் அமைச்சருக்கு எங்களின் வேண்டுகோள்கள்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை?

பகிர

2 thoughts on ““அதிகாரிகள் எங்கள் குரல்கள் அல்ல; அன்பிற்குரிய முதல்வர் அவர்களே! எங்களிடம் பேசுங்கள்”

  1. அதிகாரிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளையும் அழைத்து கலந்து பேசி ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் கடைநிலையில் உள்ள உண்மை நிலைமை புரியும்.

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்