மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, ஓர் இறுதி நம்பிக்கைகொண்ட இறைஞ்சல்

,வெளியிடப்பட்டது

தூய்மையான, வெளிப்படையான ஆட்சியாக நடத்த நான் விரும்புகிறேன். விரும்புவதோடு மட்டுமில்ல, தூய்மையான வெளிப்படையான ஆட்சியை நடத்துவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

“டிரான்ஸ்பர் உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் வெளிப்படையாக இருங்கள். எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுத்துவிட வேண்டாம்.

இங்கே சீனியர் அமைச்சர்களும் இருக்கிறீர்கள், புதுமுக அமைச்சர்களும் இருக்கிறீர்கள். அமைச்சர் என்ற அதிகாரத்தின் வலிமை உங்கள் எல்லாருக்கும் தெரியும். அதேநேரம், எக்காரணத்தை முன்னிட்டும் போலீஸ் தொடர்பான விஷயங்களில் தலையிடாதீர்கள். சட்டத்துக்குப் புறம்பாக ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, ஒருவரை சிக்க வைக்க வேண்டுமென்றோ, வேறு எந்த கோரிக்கைக்காகவோ போலீஸ் நிலையங்களுக்கோ, போலீஸ் அதிகாரிகளுக்கோ நீங்கள் போன் பண்ணக் கூடாது. நியாயமான விஷயமாகவே இருந்தால் கூட போலீஸ் அதிகாரிகளுக்கு போன் பண்ணக் கூடாது.

ஏனென்றால் நான் தான் போலீஸ் துறைக்கு அமைச்சர். அதனால், எனக்குத் தெரியப்படுத்துங்கள் இல்லையென்றால், . முதல்வர் அலுவலக அதிகாரிகளை தொடர்புகொள்ளுங்கள். நியாயமான விஷயமாக இருந்தால் அவர்கள் செய்து தருவார்கள்.

பத்து வருடம் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கிறோம். மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்து பதவிக்கு வந்திருக்கிறோம். இந்த ஆட்சியை தூய்மையான, வெளிப்படையான ஆட்சியாக நடத்த நான் விரும்புகிறேன். விரும்புவதோடு மட்டுமில்ல, தூய்மையான வெளிப்படையான ஆட்சியை நடத்துவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.

அதனால் என்னுடைய முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. உங்கள் மீது ஏதேனும் புகார்கள் எனக்கு வந்தால் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்.”

தனிப்பட்ட முறையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அமைச்சர்களிடம் இட்ட கட்டளைகள் இவை என செய்திகள் வருகின்றன. இது உண்மை என்றால், அதிகம் பயன்படப்போவது அடித்தளத்தில் உழலும் மாற்றுத்திறனாளிகள்தான். ஏனெனில் காவல்த்துறை மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகள் துறையும்கூட முதல்வர் அவர்களின் துறைதான்.

துறைக்கான நிதி ஒதுக்கீடு 600 கோடியைத் தாண்டாது என்றாலும், இங்கு அரசியல் தலையீடுகள் அதிகம். இது பல ஆண்டுகளாக நிகழும் கூத்து. நேர்மையான ஆணையர்களால் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்புப் பள்ளி விடுதிகளின் இரவுக்காவலர் மீதுகூட சுதந்திரமாக நடவடிக்கை எடுத்துவிட முடியாது. உடனே அமைச்சர் அலுவலகத்திலிருந்து ஒரு ஃபோன் வரும். அடிமட்ட ஊழியருக்கே அவ்வளவு செல்வாக்கு என்றால், சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உயர் அலுவலர்கள் கொண்டிருக்கும் செல்வாக்கைக் கேட்கவே வேண்டாம். அதிலும் குறிப்பாக, துறையால் நிர்வகிக்கப்படும் சிறப்புப் பள்ளிகள் பெரும்பாலும் அரசின் பொதுவிதிகளுக்கு உட்படாதவை அல்லது சர்வ சாதாரணமாக அவற்றை மீறக்கூடிய நிலையில் இருப்பவை.

இங்கு பணியிட மாறுதல், பதவி உயர்வு, வெளிப்படையாகச் சொன்னால் பணி நியமனங்களே பெரும்பாலும் அப்பட்ட விதிமீறல்களாகத்தான் அரங்கேற்றப்படுபவை. பணம் அல்லது ஏதோ ஒரு அரசியல் செல்வாக்கால் விதிகளை வளைத்து பணிநியமனங்கள் பெற்றவர்கள் இந்தத் துறையில் அதிகம். பெரும்பாலும் இங்கு ஃபேவரைட்டிசம், நெப்போடிசம் மிக இயல்பானவை. ஐநூற்றுக்கும் குறைவான சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு, மிக நுட்பமாக அலசினால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுள் சிலர் அமைச்சர் வட்டம் வரை செல்வாக்கு பெற்றவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வார்கள். இத்தகைய அரசியல் தலையீடுகளால்தான், அருண்ராய் போன்ற நேர்மையான ஆணையர்களால்கூட சிறப்புப் பள்ளிக்கு அதிகம் பயன்விளைவிக்கும் ஆசிரியர்கள் இடையேயான பணிநிரவலைக்கூட நிறைவேற்ற இயலவில்லை.

2015ல் வெளியிடப்பட்ட சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர்ப் பணிநியமன அறிவிக்கைக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அதில் அப்பட்டமாக மீறப்பட்ட ரோஸ்டர் முறை, தற்போது நடந்திருக்கும் இடைநிலை ஆசிரியர்ப் பணியிடங்களைப் பட்டதாரி ஆசிரியர்ப் பணியிடங்களாக (junior b.t.) மாற்றம் செய்தது என துறையின் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களுக்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.

உண்மையில் சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடைந்ததைவிட, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அவர்களால் பயனடையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உயர் அலுவலர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்தத் துறையில் மட்டும்தான், ஆணையரின் கையெழுத்தையே ஒரு தலைமை ஆசிரியர் போட்டு, பல போலி ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதும், அவர் எந்தவித நடவடிக்கைகளும் இன்றி பணி ஓய்வு பெற்றார் என்பதும் வரலாறு. போதிய கண்காணிப்பும், அரசு முறையான விதிகளுமின்றி துறையால் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான சிறப்புப் பள்ளிகள் அன்ன சத்திரங்களாக மட்டுமே செயல்படுகின்றன.

எனவே, துறையின் அமைச்சரான மாண்புமிகு முதல்வர் அவர்கள், துறையை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி, கடந்தகாலத் தவறுகளுக்கு உரியவிசாரணைகள் மேற்கொண்டு, தவறுக்குள்ளானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, சிறப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, மாற்றுத்திறனாளி மாணவர்களின் தரமான கல்வியை உறுதிசெய்ய வேண்டும்.

இது பல ஆண்டுகளாக அழுக்கு துடைக்கப் போராடிப் போராடித்  தோற்றுத் துவண்டு கிடக்கும் ஒரு சிறப்புப் பள்ளி ஆசிரியனின் இறுதி நம்பிக்கைகொண்ட இறைஞ்சல். மேலே உள்ள செய்திகள் என் எதிர்பார்ப்பு நிச்சயம் ஈடேறும் என நம்பிக்கையூட்டுவதாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

***

ப. சரவணமணிகண்டன்

பகிர

6 thoughts on “மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, ஓர் இறுதி நம்பிக்கைகொண்ட இறைஞ்சல்

 1. ஒரு சிறப்பு பள்ளி ஆசிரியனின் இறுதி நம்பிக்கைகொண்ட இறைச்சலுக்கு இன்றைய முதல்வர் தீர்வு காணவேண்டும் சிறப்பு பள்ளிகல் சிறந்த பள்ளிகளாக மாற்றம் காண வேண்டும் உங்களைப் போன்றவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் 👏👏👏 👍🏻👍🏻👍🏻

 2. ஐயா வணக்கம்
  K.SURESH
  NO.398 PATC QUARTERS
  KONNERIKUPPAM PANCHAYAT
  KARAPATTAI POST
  KANCHIPURAM-631552
  நான்மேற்கன்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் மாற்றுத்திறனாளியான நான் கடந்த (2018) ல் இருந்து
  வே ூல வாய்ப்பு ( Job Offer) மாவட்ட ஆட்சி தலைவரின் கீழ்செயல்படக்கூடிய எந்த து றையில் ஆவது வே ூல வேண்டி மணு தரப்பட்டுளேன் இந்த நாள் வரை எனக்கு வே ூல வழங்கவில்லை எனது மகளின் படிப்பும் எனது குடும்பம் வருமை நிலைக்கு தல்லப்பட்டுள்ளது ஆகவே தயவு கூர்ந்து எனக்குவேலை வழங்குமாருகேட்டு
  கெ ாள்கிறேன்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்