முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்த்துகள், மாற்றுத்திறனாளிகள் நலன் பேணும் அமைச்சருக்கு எங்களின் வேண்டுகோள்கள்

,வெளியிடப்பட்டது

அந்த மாமனிதரின் அடிச்சுவடைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

மு.க. ஸ்டாலின்

மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் அவர்களே!

எங்களைக் கருணைத் தளத்திலிருந்து உரிமைத் தளத்திற்கு நகர்த்த உங்கள் தந்தையும், தமிழகத்தின் ஒப்பற்ற தலைவருமான ஐயா கலைஞர் பெரிதும் விரும்பினார். அதன் முதற்படியாகத்தான், ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றுத்திறனாளிகள் என மாற்றிச் சட்டமாக்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித்துறையை உருவாக்கி, அதனைத் தனது நேரடிக் கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டார். அந்த மாமனிதரின் அடிச்சுவடைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஐயா கலைஞர் அவர்களின் கணவை நிறைவேற்றி, மாற்றுத்திறனாளிகளாகிய எங்களின் கண்ணியமான சமூக ஒருங்கிணைப்பை உங்கள் ஆட்சிசாத்தியமாக்கும் என நம்புகிறோம். அந்த வகையில் எங்களின் நீண்டநாள் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை உங்களிடம் முன்வைக்கிறோம்.

  1. பொறுப்பேற்றுள்ள புதிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளை தனித்த அக்கறைகளோடு கவனித்து, அதனைக் கலைந்திட முன்வரவேண்டும்.
  2. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உள்ளடங்கிய கல்வி மற்றும் சிறப்புக்கல்வி முறைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து, ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் தரமான அடிப்படைக்கல்வியைப் பெற்றிட உடனே குழு அமைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  3. அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாத பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் ஏராளமாகஇருக்கின்றன.  அவற்றைப் பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகள் உரிய கல்வித்தகுதிகளுடன் ஏராளமானோர் பல்லாண்டுகள்ஆக அரசுப்பணிக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாகப் பணிவாய்ப்புகள் வழங்கி, காலங்காலமாக வறுமையில் வாடும் அவர்களின் குடும்பங்கள் ஏற்றம்பெற ஆவன செய்திட வேண்டும்.
  4. மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாடத்தைப் பேணும் வகையில், ஏதேனும் ஒரு தொழில் செய்து அதில் பெறும் சொற்ப வருவாயைக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். உதாரணமாக, ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்கள், ரயில்கள், பேருந்து நிலையங்களில் அலைந்து திரிந்து பத்தி, கடலை மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் வியாபாரத்தை முறைப்படுத்தும் வகையில், அவர்களின் பொருட்களை பல்வேறு அரசுத்துறைகளின் கீழ் செயல்படும் அமைப்புகள் கொள்முதல் செய்திடக் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும்.
  5. தொழில் செய்ய முன்வரும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பேருந்து நிலையங்களில் கடை ஒதுக்குதல், ஒவ்வொரு மாவட்டத்திலும் கணிசமான அரசு குடியிருப்புகளை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்தல், வறுமைச் சூழலில் பின்தங்கியு்ள மாற்றுத்திறனாளி தம்பதிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட ஆவன செய்ய வேண்டும்.
  6. மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு மற்றும் சம பங்கேற்பை உறுதி செய்யும் சட்டமான மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 (Rights of Persons with Disabled Act 2016) உரிய முறையில் அமல்ப்படுத்திடும் வகையில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அச்சட்டத்திற்கான மாநில அரசின் விதிகளைத் திருத்தி, அதனை ஒரு பலம் பொருந்திய சட்டமாக மாற்றவும், மாநிலமெங்கிலும் அது முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  7. அனைத்திற்கும் மேலாக, மேற்கண்ண்ட கோரிக்கைகளை முறையாகவும், திறம்படவும் நடைமுறைப்படுத்திட முதலில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான துல்லியமான கணக்கெடுப்பை மாநிலம் முழுவதும் நடத்திட அரசுவிரைந்து முன்வர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதிலிருந்தே தாங்கள் தங்களின் தந்தையைப் போலவே எங்கள் மீது பேரன்பும், உண்மையான அக்கறையும் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். தங்கள் ஆளுகையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் சமூகநீதி மற்றும் சமத்துவ ஒளியும் பெருகிப் பரவட்டும். பொற்றுதலும், வாழ்த்துகளும்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புடையவை

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை?

பகிர

4 thoughts on “முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்த்துகள், மாற்றுத்திறனாளிகள் நலன் பேணும் அமைச்சருக்கு எங்களின் வேண்டுகோள்கள்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்