பிறந்தநாள் பரிசு

,வெளியிடப்பட்டது

பொதுவாக எங்கள் வீட்டில் யாருடைய பிறந்தநாளாக இருந்தாலும், என் அப்பாவின் பிறந்தநாள் முதல் கடைகுட்டி கிரிஸ்டோபர் பிறந்தநாள்வரை அந்த நாட்கள் ஒரே குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்ததாகவே இருக்கும்.

சித்ரா
சித்ரா

பொதுவாக எங்கள் வீட்டில் யாருடைய பிறந்தநாளாக இருந்தாலும், என் அப்பாவின் பிறந்தநாள் முதல் கடைகுட்டி கிரிஸ்டோபர் பிறந்தநாள்வரை அந்த நாட்கள் ஒரே குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்ததாகவே இருக்கும். அம்மா, அக்கா ஆகியோரின் கைப்பக்குவத்தால் செய்யப்பட்ட பல்வேறு பலகாரங்களும், அசைவ உணவுகளும் திணறடிக்கின்ற விருந்தாக இருக்கும்.

பிள்ளைகள், என்ன ஐஸ்கிரீம் வாங்குவது, அல்லது வேறென்ன ஆர்டர் செய்யலாம் அல்லது ஒருவேளை ஹோட்டலுக்கு செல்லலாம் என்ற பல திட்டமிடல்களில் மூழ்கி மகிழ்ந்திருப்பர். இப்படியாக ஒவ்வொருவரும் அந்தக் கொண்டாட்டத்தில் அவர்களது பங்கை ஆற்றி மகிழ்ச்சி அடைவர். இரவில் வழக்கமாகச் செய்யும் குடும்ப ஜெபத்துடன் கேக் வெட்டும் கொண்டாட்டமும், பரிசுகள் கொடுக்கும் ஆர்ப்பரிப்பும் இணைந்து அந்தநாளின் இனிமையை உச்சகட்டத்துக்கு இட்டுச் செல்லும்.

ஏப்ரல் 29 2021 எனது பிறந்தநாளில், நான் மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளும் வழக்கமாக நடைபெற்றன. ஆனால், ஒரு சின்னத் திருப்பம், அலப்பரிய வியப்பு, புல்லரிக்கச் செய்த ஆர்ப்பரிப்பு என் மனதை ஆட்கொண்டது. இரவு குடும்ப ஜெபம் முடிந்து, என் பிள்ளைகள் அருகில்வந்து என் கைகளைக் குலுக்கி வாழ்த்துச் சொல்லி,கையில்் சிறு துண்டு பேப்பரைக் கொடுத்தார்கள். அந்தப் பேப்பரில் பிரெயிலில் எழுதப்பட்டிருந்த “happy birthday Chitrakka” என்ற வாசகத்தை என் கைகளால் தடவி வாசித்த நான் முற்றிலும் எதிர்பாராத அந்த கணம் என்னை மெய்சிலிர்க்கச் செய்தது.

பிரெயிலில் எழுதப்பட்ட தாள்கள்
பிரெயிலில் எழுதப்பட்ட தாள்கள்

அந்த சிலிர்ப்புடன், இதை யார் எழுதியிருப்பார்? எப்படி எழுதப்பட்டிருக்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாத திகைப்பிலிருந்து நான் மீள்வதற்குள், பிரெயிலில் எழுதப்பட்ட மற்றொரு பேப்பரை என்னிடம் கொடுத்தார்கள். அதில், “வெல்கம், டாஸ்க பண்ணு, கிஃப்ட அல்லு” என தங்கிலீஷில் எழுதப்பட்டிருந்தது. மற்றோரு பேப்பரில் “go to common toilet” என எழுதப்பட்டிருந்ததைப் படித்த நான், அங்கே சென்றேன். “சும்மாவெல்லாம் நடக்கக்கூடாது, ‘எங்க நாம போறோம்? காமன் டாய்லெட்டுக்கு’னு பாடிட்டே போங்க” எனக் கட்டளைகள் வேறு. பின்னர் அங்கிருந்து வேறிடம், பாடிக்கொண்டே இன்னோரு இடம், இடத்துக்கு இடம் அடுத்து எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டிருந்த பிரெயில் பேப்பர்கள் எனக்கு வழிகாட்டின. கூடவே ஆங்காங்கே எனக்காக வைக்கப்பட்டிருந்த அன்பளிப்புகளையும் எடுத்துக்கொள்ளுமாறும் அந்த பேப்பர்களிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

பல கேலிக்கையான கட்டளைகளை நானும் மகிழ்வுடன் இசைந்து செய்து அவர்களை மகிழ்வித்து, என்னுடைய அன்பளிப்புகளையெல்லாம் சேகரித்த பின், இறுதியில் என் அப்பாவிடம் அழைத்துவந்தார்கள். அவரும் ஒரு பேப்பரை நீட்டினார். அதில் “congrajulation god bless you our child” என எழுதப்பட்டிருந்தது. இறுதியாக மோனிஷா என்னிடம் நீட்டிய பேப்பரில் “நன்றி வணக்கம்” என தங்கிலீஷில் எழுதப்பட்டிருந்தது.

முற்றிலுமாக, மனம் நெகிழ்ந்த இனம் புரியாத ஒரு மகிழ்வுடன் வந்து அமர்ந்த நான், மோனிஷாவிடம் கேட்ட முதல் கேள்வி “யார் டி பிரெயில்ல எழுதுனது?”

அதற்கு அவள் சொன்ன பதில் மேலும் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. அவள் சொன்னது இதுதான், “நான்தான் அக்கா கூகுலில் தேடித் தேடி உங்க பிரெயில் டைப்ரைட்டர்ல டைப் பண்ணினேன்.”

“எப்போ இதெல்லாம் எழுதுன?”

“நேற்றைக்கும் இன்னைக்கும்தான்  மாடில வைச்சு டைப் செஞ்சேன்.

ஆனா கூகுலில இருந்ததும் நான் டைப் பண்ணினதும் மேட்ச் ஆகலைனு தெரிஞ்சப்போ, நான் ஒரு தப்பு பண்ணிறுக்கேனு புரிஞ்சுகிட்டேன். உங்கடைப்ரைட்டர்ல இருக்கிறகீஸ் எல்லாம் 1,2,3 ஸ்பேஸ் பார்அப்புறம் 4,5,6 என வரிசையா இருக்குமுனு நான் தவறா நினைச்சு டைப் பண்ணிட்டேன்.” என வெள்ளந்தியாக அவள் சொன்னபோது, உருகிப்போனேன். இதற்கே அவள் பேப்பரை வைக்கத் தெரியாமல் வைத்து, பின் அதைக் கிழித்து, மறுபடியும் வைத்து என பல திண்டாட்டங்களுக்குப் பிறகுதான் இந்த முயற்சி அவளுக்குக் கைகூடியிருக்கிறது.

நான் அவளிடம், “இதாண்டி என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பிறந்தநாள்” என்றேன். அதற்கும் இலேசான புன்னகையுடன் “அத விடுங்ககிஃப்ட பிரிங்க”னு அலட்டிக்கொள்ளாமல் அந்த கணத்தைத் தாண்டினாள்.

மோனிஷா
மோனிஷா

என் பெரிய அக்காவின் மகள்தான் மோனிஷா. பீ.ஈ முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். என் சொந்த வேலையாக இருந்தாலும், சங்க வேலையாக இருந்தாலும், என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பெரிதும் முயற்சி எடுத்துக்கொள்வாள். அவளுடைய பணிச்சுமை அதிகமாக இருந்தபோதும், அதற்கிடையில் எனக்கு உதவுவாள். நான் அசந்து மறந்த நேரங்களில் எனக்கே என்னுடைய பணிகளை நினைவூட்டிக்கொண்டே இருப்பாள். சமூகம் சார்ந்த எனது ஒவ்வொரு முன்னெடுப்பிலும் எனது விழிகளாக இருந்து செயல்படுபவள், இன்று என் இதயமாகவே மாறி நிற்கிறாள்.

நான் மானசீகமாய் சொல்லிக்கொள்கிறேன்,

“மீண்டும் ஜென்மங்கள் காணும்போது, நான் உன் மகளாக வேண்டும்.”

***

சித்ரா உபகாரம்

தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com

தொடர்புடைய கட்டுரைகள்

எண்ணிக்கை நாளும் எண்ணியெண்ணிப் பார்த்த நினைவுகளும்

பகிர

9 thoughts on “பிறந்தநாள் பரிசு

 1. சித்ராக்கா மோனிஷா உங்களோட பிறந்த நாள் பகிர்வு அற்புதம்

  உங்களுக்காக எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது

 2. சித்ராக்கா மோனிஷா உங்களோட பிறந்த நாள் பகிர்வு அற்புதம்

  உங்களுக்காக எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது

 3. முற்றிலும் வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடி உங்களை ஆச்சரியத்தில் அசாத்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

 4. முற்றிலும் வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடி உங்களை ஆச்சரியத்தில் அசாத்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

 5. நன்றி சொல்ல வார்தைகலில்லை மொனிஷா விக்கு ,
  கடவுளின் ஆசி உரிதகுக, அனைத்து உள்ளங்கலுகும்
  நெஞ் சார்ந்த நன்றி.

 6. நன்றி சொல்ல வார்தைகலில்லை மொனிஷா விக்கு ,
  கடவுளின் ஆசி உரிதகுக, அனைத்து உள்ளங்கலுகும்
  நெஞ் சார்ந்த நன்றி.

 7. நல்ல பதிவு. நினைவலைகள் நெகிழ்ச்சி யை தரட்டும்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்