எண்ணிக்கை நாளும் எண்ணியெண்ணிப் பார்த்த நினைவுகளும்

,வெளியிடப்பட்டது

பெருகிவரும் கரோனா பரவலால், தேர்தல் வரலாற்றில் ஊரடங்கு காலத்தில் நிகழும் முதல் வாக்கு எண்ணிக்கையாக நாளைய நிகழ்வு இருக்கப்போகிறது.

மின்னணு வாக்கு இயந்திரம்

அப்பாடா! 25 நாட்கள் ஓடிவிட்டன. கிட்டத்தட்ட ஒரு மாதம். எப்படிக் கடக்கப் போகிறோம் என்று நினைத்து, நினைத்து, அலுத்து இதோ வந்துவிட்டது அந்த நாளும். முன்னோக்கி வந்ந்துவிட்டாலும், வாக்கு எண்ணிக்கை என்றதுமே என் மனம் மிகவும் பின்னோக்கிச் சென்று சில நினைவுகளில் மூழ்குவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு கிரிக்கெட் மேட்சை போன்றுதான் என்னைப் போன்றவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை நாளும். உண்மையில் எட்டாம் வகுப்புப் படித்தபோதிலிருந்தே  இந்த நாட்களை அவதானிக்கத் தொடங்கிவிட்டேன். ஆனால், இப்போது அதை யோசிக்கையில், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1989 தேர்தலிலிருந்தே எனது ஆறு வயதிலிருந்தே நான் அரசியலில்தான் இருக்கிறேன் என்பது புரிகிறது.

வெற்றி முத்தம், திருநீறு வேண்டல்

அப்போது நாங்கள் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வாழ்ந்தோம். 1989 தேர்தல் பரப்புரைக்காக முதுகலத்தூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஐயா காதர்பாட்சா எங்கள் தெருவில் வரிசையாக இருந்த பத்து வீடுகளில் வாக்கு சேகரித்துக்கொண்டு வந்தார். எங்கள் வீட்டு வாசற்படியில் நான் சிறு பையனாக நின்றிருந்தேன். மேலும், எனக்குக் கண் பார்வை இல்லை என்று எவரோ அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும். அவர் என் இரு கைகளையும் பிடித்து, நிறைய கற்கண்டுகள் கொட்டினார். நான் அவரிடம், “ஐயா நீங்கதான் ஜெயிப்பீங்க கவலப்படாதீங்க” என்று உரத்துச் சொன்னேன். கூட்டத்தில் படு உற்சாகம். அவரும் சத்தமாகச் சிரித்தார். இரண்டு மூன்று நாட்கள் எங்கள் தெருவில் எனது இந்த செயலே பேச்சாக இருந்தது. 1989 தேர்தலில் அவர் வெற்றிபெற்று எங்கள் தெருவிற்கு வந்தபோது, என்னைத் தேடிப் பிடித்து தூக்கி முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றார். அதன் பின்விளைவாய், 1991 தேர்தல் பரப்புரையின்போது எங்கள் தெருவிற்கு வந்த ஒரு வேட்பாளர் என் கையால் திருநீரு பூசிக்கொள்ள வேண்டுமென என் அப்பாவிடம் கேட்டதாக அறிந்தேன்.

சிறப்புப் பள்ளியே காரணம்

நான் அரைப் புரிதலோடேனும் அவதானித்தது என்றால் அது 1996 ஆம் ஆண்டின் தேர்தல்  வாக்கு எண்ணிக்கையைத்தான். அப்போது நாங்கள் காரைக்குடியில் வசித்தோம். சென்னை தொலைக்காட்சியின் மண்டல ஒலிபரப்புதான் எங்கள் டீவியில் ஓடிய ஒரே சேனல். டீவி, வானொலி என மாறி மாறி தேர்தல் முடிவுகளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். வானோலிச் செய்திகள் வாயிலாக விடிய விடிய முடிவுகள் அறிவித்தபடியே இருந்தார்கள். அது நாடாளுமன்றம், மற்றும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தேர்தல் என்பதும், எனது புரிதலை விரிவுபடுத்தியது.

அந்தத் தேர்தலில் மாநிலத்தில் திமுக, தமாக கூட்டணி மிகப் பெரிய வெற்றிபெற்றது. போட்டியிட்ட 176 தொகுதிகளில் 173 தொகுதிகளை திமுகவும், 40ல் 39 தொகுதிகளை தமாகவும் கைப்பற்றின. திருநாவுக்கரசர், தாமரைக்கனி உள்ளிட்ட நாள்வர் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றிபெற்றனர். ஜெயலலிதாவே பர்குர் தொகுதியில் இளம் வேட்பாளரான சுகவனத்திடம் தோல்வியைத் தழுவினார். வளர்ப்பு மகன் திருமணம், ஏதேச்சதிகாரம் என மக்களிடம் ஜெயாவின்மீது கடும் அதிர்ப்தி நிலவியது. மத்தியில் காங்கிரஸ் 140, பாஜக 162 என எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போதுதான் திரு. வாஜ்பாய் அவர்கள் ஆட்சி அமைத்து 13 நாட்கள் மட்டுமே ஆட்சிபுரிந்தார்.

இவற்றையெல்லாம் முழுக்க முழுக்க நான் என் நினைவிலிருந்தே பதிவு செய்கிறேன். அது நான் ஏழாம் வகுப்பு முடித்திருந்த நேரம். செய்தித்தாள்கள்கூட பெரிதும் அறிமுகம் இல்லை. சிறப்புப் பள்ளி விடுதி வானொலியில் கேட்கும் மாநில மற்றும் ஆகாஷவானி சேய்திகள்தான் எங்களின் ஒரே அரசியல் சுவடிகள். ஆனாலும், எங்கள் வயதுமீறிய புரிதலை நாங்கள் அடைந்ததற்குக் காரணம், அந்த செய்திகளைக் கேட்டு, அதில் சில செய்திகளை எழுதிப்போய் ஒவ்வொரு காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் வாசிக்க வேண்டும் என்ற விதி நான் படித்த திருப்பத்தூர் பார்வையற்றோர் பள்ளியி்ல் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டதால்தான் என்பதை இப்போது பெருமையோடு நினைவுகூர்கிறேன். இன்று நான் பணியாற்றிய மற்றும் தற்போது பணியாற்றுகிற சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களே பங்கேற்கும் அந்த நடைமுறையை மெல்லப் புகுத்தியிருக்கிறேன். எதிர்காலத்தில் அது மாணவர்களுக்கு நிச்சயம் நல்ல பலனைத் தரும் என நம்புகிறேன்.

நானா அது?

2001 தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள் காலையிலேயே சன் டீவியின் முன்னால் அமர்ந்துகொண்டேன். திமுக ஜெயிக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால், தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் தந்தன. பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான ஐயா திரு. மாளன் அவர்கள் அன்று சன் டீவியில் இருந்ததாக நினைவு. இன்று அவரின் நிலைப்பாடுகள் ஆதரவுத்தளங்கலெல்லாம் ஊரறிந்த ஒன்று. ஆனால், அது அவருக்கு மட்டும் காலம் தந்த கொடையா என்ன?

2004 மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளின் காலையிலேயே எங்கள் வீடு இருந்த தெருவில் மின்சாரம் இல்லை. எனக்கு கடும்அதிர்ச்சி. இந்த மின் துண்டிப்பு என்பது செயற்கையானது என்றும், தேர்தல் முடிவுகள் ஆளும் அரசுக்கு எதிராக வரவிருப்பதால், இது காரைக்குடி நகரக் காவல்த்துறையால் இடப்பட்ட  வாய்மோழி உத்தரவு எனவும் எங்கள் தெருவில் சில பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். முகமெங்கும் கோபத்தின் ரேகைகள். உடனே நகரின் ஒரு காவல்த்துறை அலுவலகத்தின் எண்ணைத் தேடிப்பிடித்து, பெரியவர்கள் பேசிக்கொண்டதை சீற்றத்தோடே அந்தக் காவலரிடம் கேட்டேவிட்டேன். அவரும் இலேசாகக் கடிந்துகொண்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். இப்போது நினைத்தால் நானா அது என்று யோசிக்கத் தோன்றுகிறது.

வேறு எவரையிம் விட என் அப்பாவுக்கு என் ஆவல் அதிகம் புரியும் என்பதால், உடனே கடைக்குப் போய், ஆறு பெரிய எவரடி பேட்டரிகள் வாங்கிவந்து தந்தார். அதை எங்கள் வீட்டிலிருந்த சோனி டேப் ரெக்கார்டரில் செருகி, வானொலியில் செய்திகள் கேட்கத் தொடங்கினேன். வெளிவந்துகொண்டிருந்த தேர்தல் முடிவுகளின் காரணமாக, திரு. வைக்கோ அவர்கள் மிகவும் உற்சாகமாக அகில இந்திய வானோலியில் முழங்கிக்கொண்டிருந்தார். அந்தத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையின் நாற்பது மக்களவைத் தொகுதிகளையும் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கைப்பற்றியது. ஆனால், அந்த காலகட்டத்தோடு, வானோலி என் வாழ்க்கையிலிருந்தே மெல்லக் கைநழுவத் தொடங்கியது.

“பொன்னாடை போர்த்திரலாமா?”

2006 ஆம் ஆண்டு நான் பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளி வளாகத்தில் இயங்கிய இடைநிலை ஆசிரியர்ப் பயிற்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தேன். நானும், என் சகப் பயிற்சியாளரான நண்பர் சுரேஷும் சிறு பிணக்கு காரணமாகப்பேச்சுவார்த்தைகள்இன்றிப் பல மாதங்கள்இருந்துவிட்டு அப்போதுதான் பேசத்தொடங்கியிருந்தோம். நானோ வைக்கோ ஆதரவாளன், நண்பர் மாறாத அஇஅதிமுக.  தேர்தலில் அதுவரை திமுக கூட்டணியில் இருந்த வைக்கோ அவர்கள் விலகி, அதிமுக கூட்டணியில் இணைந்தார். அது எங்களிடம் மேலும் நெருக்கத்தை உருவாக்கியது. உடல்நிலை சரியில்லை என வகுப்பாசிரியர்களிடம் பொய்சொல்லிவிட்டு, மன்னன் பட ரஜினி கௌண்டமணி போல பூவிருந்தவல்லியில் திரு. வைக்கோ அவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சென்று அவரிடம் கைகொடுத்துவிட்டு வந்தோம். இதை எங்கள் சக வகுப்பு நண்பர் பார்த்துவிட்டு, நிர்வாகத்திடம் சொல்லிவிடவே, மற்றோரு சந்தர்ப்பத்தில் நண்பர் சுரேஷ் ஆசிரியரிடம் உடல்நிலை சரியில்லை என்று சொன்னபோது, “கவலப்படாத பொன்னாடை போர்த்திரலாம்” என அவர் பதில் சொன்னதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது.

2006 ஆம் ஆண்டின் தேர்தலில்தான் நடிகர் விஜேகாந்த் தேமுதிகவை தொடங்கி, அனைத்து இடங்களிலும் தனியாகப் போட்டியிட்டார். அது பட்டன் செல்பேசிகள் தலைகாட்டத் தொடங்கியிருந்த காலம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று, பிற்பகல் பொழுதில், ஏதோ ஒரு காரணத்துக்காக நான் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்தேன். அங்கே இருந்த அலுவலர் என்னிடம் குறைகேட்பதை விட்டுவிட்டு, “சார் தேர்தல் ரிசல்ட் என்னாச்சு? விஜேகாந்த் எத்தனை இடம் பிடிச்சார்” என்று கேட்டார். அந்தத் தேர்தலில் 93 இடங்களில் திமுக வெற்றிபெற்று, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. தன் கட்சியின் சார்பில் விஜேகாந்த் மட்டும் விருத்தாச்சலத்தில் வெற்றிபெற்றார்.

நினைத்தது நடந்தது

ஈழப் பிரச்சனை உக்கிரமாக இருந்த 2009 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் நான் திமுகவிற்கும் கலைஞருக்கும் தமிழக மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று ஆவலோடு டீவிப் பெட்டியின் முன்னால் அமர்ந்திருந்தேன். முடிவுகள் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வந்தது என்றாலும், ஏதோ ஒன்று உருத்தலாகத் தோன்றியது. ஏனெனில், மறைந்த திரு. தா. பாண்டியன் அவர்கள் வடசென்னையில் போட்டியிட்டுத் தோற்றார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நின்ற வைக்கோவும் தோற்றார். திரு. பா. சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியைத் தழுவினார் என முதலில் வந்த செய்தி பின்னர் மாறியது. ஆக திமுக காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களில் வெற்றிபெற்றது.

2011 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ரமேஷ் பிரபாவுடன் திரு. நக்கீரன் கோபால் அவர்கள் பங்கேற்ற சிறப்பு விவாதம், முதலில் வெற்றி நம்பிக்கைகளோடு தொடங்கியது. பின்னடைவான முடிவுகள் வந்துகொண்டிருந்ததால், கலைஞர் தொலைக்காட்சி தனது வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஒலிபரப்பைக் கைவிட்டு வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியது. இது நாளைய தினத்தில் எந்தத் தொலைக்காட்சிக்கு நடக்கப்போகிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம். உண்மையில் அந்தத் தேர்தலில் நான் நினைத்தது நூறு விழுக்காடு நடந்தேறியது. திமுக எதிர்கட்சி அந்தஸ்தையே இழந்து, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.

கட்சி சாரா செய்தி ஊடகங்கள்

சன்நியூஸ், கலைஞர், ஜெயா என கட்சிசார் சேனல்களை மட்டுமே செய்திகளுக்கு நம்பிக்கொண்டிருந்த காலம் மாறி, புதியதலைமுறை, தந்தி என மேலும் கட்சிசாரா செய்தி ஊடகங்களின் நிகழ்ச்சிகள் துணையோடு 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை எதிர்கோண்டேன். நாடு முழுக்க காங்கிரஸுக்கு எதிரான அலையும், மோடிக்கு ஆதரவான அலையும் உருவாகியிருந்தாலும், தமிழகத்தில் அதிமுக 40க்கு 37 தொகுதிகளில் அபார வெற்றிபெற்றிருந்தது. அப்போதே மோடி, இந்துத்துவா என்றால் எனக்கு ஒவ்வாது என்பதால், நான் அந்தத் தேர்தலின் முடிவுகளைப் பெரிதும் ரசிக்கவில்லை.

மக்கள்நலக் கூட்டணி என்ற மாற்று பேசப்பட்ட 2016 ஆம் ஆண்டு வாக்கு எண்ணிக்கை நாளில் என் டீவி ரிமோட்டை அழுத்திக்கொண்டே இருந்தேன். காரணம் ஐந்துக்கு மேற்பட்ட செய்திச் சேனல்கள் மற்றும் நிமிடத்துக்கு நிமிடம் மாறிமாறி வந்துகொண்டிருந்த முன்னணி நிலவரங்கள். திரு. விஜேகாந்த் அவர்களைத் தர்மன் என்று சொல்லிப் புலகாங்கிதம் அடைந்தது, கலைஞரை ஜாதிசொல்லிப் பழித்தது, கோவில்ப்பட்டி தொகுதியில் கடைசி நேரத்தில் போட்டியிடாமல் பின்வாங்கியது என அந்தத் தேர்தலின்போதுதான் வைக்கோ என் மனதிலிருந்து இறங்கத் தொடங்கியிருந்தார். எனவே, அந்தத் தேர்தலில் திரு. திருமாவளவன் உட்பட சில மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் அத்தோடு திமுக ஆட்சி அமைய வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், மயிரிழையில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.

திரையில் தெரிவது செவியைச் சேருமா?

இறுதியாக, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கலைஞரின் மீதான என் மதிப்பு கூடிவிட்ட காலம். அவர் மறைவை ஒட்டி, நான் பங்காற்றிய விரல்மொழியர் மின்னிதழில் அவரின் பெயரால் ஒரு சிறப்பிதழ் வெளியிட்டோம். அந்த இதழை நூலாக வெளியிட்ட பெருமிதத்தோடு, நிச்சயம் திமுக வெற்றிபெறும் என்ற பெரும் நம்பிக்கையோடு, திருவல்லிக்கேணியின் ஒரு மேன்ஷனில், நண்பர்களோடு அமர்ந்து வாக்கு எண்ணிக்கையைப் பார்த்தேன். எங்களோடு உடன் இருந்த நண்பர் செல்வம் அவர்கள், கிரிக்கெட் வர்ணனையாளரைப்போல உடனுக்குடன் திரையில் ஓடிய முன்னணி நிலவரங்களைச் சொல்லியபடியே இருந்தார் என்பது மறக்க முடியாத அனுபவம். ஒரு மகத்தான வெற்றி திமுகவிற்குக் கிடைத்தது.

பெருகிவரும் கரோனா பரவலால், தேர்தல் வரலாற்றில் ஊரடங்கு காலத்தில் நிகழும் முதல் வாக்கு எண்ணிக்கையாக நாளைய நிகழ்வு இருக்கப்போகிறது. கட்சி ஆதரவாளர், பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர், சமூக ஆர்வலர் என யார் யாரோ பேசிக்கொண்டிருக்க, முன்னணி நிலவரங்கள் திரையில் ஓடியபடியே இருக்கும். ‘அடிக்கடி வாய்விட்டு சொல்லமாட்டார்களா’ என்ற ஏக்கத்தோடே எங்கும் நகராமல் நானும் ஆண்டவன் ஆட்கொண்ட அடியானாய் டீவியின் முன்பு அமர்ந்திருக்கப் போகிறேன். சன் நியூஸ், புதியதலைமுறை, தந்தி, நியூஸ் 7, நியூஸ் 18 என தெரிவுகள் அதிகம் என்பதால், நாளைக்கும் என் கையில் டீவி ரிமோட் படாத பாடுபடப்போகிறது.

ரிமோட்டின் பாடு இருக்கட்டும்! அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களைப் பாடு, ,,,, சாரி சாரி மக்களுக்குப் பாடுபடப்போவது யார்?

***

ப. சரவணமணிகண்டன்

பகிர

3 thoughts on “எண்ணிக்கை நாளும் எண்ணியெண்ணிப் பார்த்த நினைவுகளும்

  1. எண்ணியெண்ணிபார்த்த அந்த நாட்கள் குறித்த பல தகவல்கள் எங்களைப்போன்ற பலரை சிந்திக்க செய்திருக்கும் என நம்புகிறேன். அருமை 👍🏻👍🏻👍🏻

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்