விழுமியங்கள் சிறுகதை

,வெளியிடப்பட்டது

ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட பத்துக்குப் பத்து அளவிலான ஹால், சிறிய அளவிலான திண்ணையின் வலப்பக்கத்திலேயே சமையல்கட்டு என வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளைக்கொண்ட காம்பவுண்டுக்குள் இரண்டாவதாகவும், மூவாயிரம் அதிகம் என்று சொல்லும்படிக்கு இருந்தது ராமுவின் வாடகை வீடு.

(1)

“கொஞ்சமில்ல, இந்நேரம் குழில விழுந்திருப்ப. வெறுங்குழியா இருந்தாப் பரவால. அதில காண்கிரேட்டுக் கம்பிலாம் கெடக்கு. குத்திருந்தா என்ன ஆகுறது.” இலேசாக நடுங்கிக்கொண்டிருந்த ராமுவின் கையைப் பிடித்தபடி குப்பன் சொன்னார்.

“கெடுபிடி அதிகமா இருக்கும்போல. வந்தவுங்க அப்படியே திரும்பிட்டாங்க. இனிமே இன்னக்கி ராத்திரியோ, நாளைக்கோ நான் கேட்டு சொல்றேன்.”

“மறக்காம சொல்லுங்கண்ணே! நாங்க ரெண்டு பேரும் சேல்ஸுக்குக் கிளம்புறோம்.” கையில் மடித்து வைத்திருந்த வெண்கோலைப் பிணைத்திருந்த நாடாவை மேல்ப்பக்கமாக இழுத்துத் தளர்த்தியபடியே  சொன்னான் ராமு.

“சரி கிளம்பு. எனக்கு ஒரு மத்தியானமா ஃபோன் பண்ணு, என் நம்பர் இருக்க்இல்ல” கேட்டுக்கொண்டே குப்பன் நடக்கத் தொடங்கியிருந்தார்.

“இருக்குண்ணே” என்றபடி கலைந்த ஐந்து மடிப்புகளிலிருந்து குமிழ்கொண்ட தலைப்பாகத்தைத் தேடிப் பிடித்தான். அப்போது சுருண்டுகிடந்த ஒல்லிப் பாம்பொன்று திடுக்கிட்டெழுந்து, விறைப்பு காட்டி, சீறி நிலத்துக்கும் அவன் உள்ளங்கைக்கும் இடையே சரிந்து நின்றதான தொற்றம் கொண்டது  வெண்கோல். அதனை இட வலப்பக்கமாக நிலத்தில் தட்டி முன் செலுத்தியபடி தன் வீடு நோக்கிநடந்தான் ராமு.

தெருவின் முக்கத்தை அடைந்து, காம்பவுண்டை நோக்கிய மேட்டுப் பாதையில் ராமு ஏறியபோது, அங்கே விளையாடிக்கொண்டிருந்த அவனின் ஐந்து வயதுப் பையன் பிரபாகரன் ஓடி வந்து கைகளைப் பிடித்துக்கொண்டு, அவனை வீட்டுக்குக் கூட்டிப்போனான்.

ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட பத்துக்குப் பத்து அளவிலான  ஹால், சிறிய அளவிலான திண்ணையின் வலப்பக்கத்திலேயே சமையல்கட்டு என வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளைக்கொண்ட காம்பவுண்டுக்குள் இரண்டாவதாகவும், மூவாயிரம் அதிகம் என்று சொல்லும்படிக்கு இருந்தது ராமுவின் வாடகை வீடு. அனைத்து வீடுகளையும் இணைக்கும் முன்புற சிமெண்ட் தரையும், அதனை ஒட்டி அமைக்கப்பட்ட உயரமற்ற நீர்வழிப் பாதையும் பாத்திரம் தேய்க்கவும், பல் துளக்கவும் ஏதுவானவை. மற்றபடி குளிக்க, துவைக்க, கழிக்க என வீடுகளுக்கு எதிர்புறத்தில் தலா மூன்று குளியல் மற்றும் கழிப்பறைகள் பொதுவானதாக இருந்தன.

முற்றத்தில் குத்துக்கால் இட்டு பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த லட்சுமி, அவர்கள் இருவரின் நடைச் சத்தத்தை அருகில் அறிந்து, “என்ன எப்போ வருவாங்கலாம்?” என்றாள். ஒன்றும் சொல்லாமல் ராமு உள்ளே போக, பையன் அம்மாவின் பக்கத்தில் நின்றுகொண்டான். “ஏங்க உங்களத்தான்…” அவள் குரல் எழுப்ப, “உள்ள வாடி, எல்லாத்தையும் வெளியிலேயே நொட்டணும் இவளுக்கு…” கோபப்பட்டான் ராமு.

அருகில் நின்றிருந்த தன் பையனை மெல்ல அணைத்தபடி, “பிரபா! இந்தப் பாத்திரத்தைலாம் ஒன்னொன்னா எடுத்து உள்ள அடுக்கிவை செல்லம்!” சொல்லிவிட்டு உள்ளே வந்தவள், “என்னங்க ஆச்சு?” கேட்டுக்கொண்டே தரை துளாவும் கால்களால் அவன் அமர்விடத்தைக் கண்டு, அவன் தோளில் கைவைத்து அருகே அமர்ந்தாள்.

“இன்னக்கி வரமாட்டாங்க போல. மொதத் தெருவில கொடுக்க  ஆரம்பிச்சப்போ ரெய்டு வருதுன்னு தகவல் வந்ததும் கொடுக்கிறதப் பாதியில நிப்பாட்டிட்டு கிளம்பிட்டாங்கலாம். அதான் குப்பண்ணன்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். சரி நீ கிளம்பு. இவன உங்க அண்ணன் வீட்டுல விட்டுட்டு நாம வியாபாரத்துக்குப் போகலாம்” ராமு சொல்லி முடிப்பதற்குள்,

எது வியாபாரத்துக்கா? அன்னக்கி மாதிரி நாம போன அப்புறம் வந்துட்டா என்ன செய்யுறது?”

“இல்ல ரெய்டு வந்துட்டதால இனிமே ராத்திரிதான் வருவாங்க.” அவன் உறுதியாகச் சொன்னான்.

“அந்தக் கட்சிக்காரங்க நேத்தே கொடுத்திட்டாங்கலாம். நம்ம காம்பவுண்டுக்கு மட்டும்தான் வரலையாம்.” லட்சுமி கடிந்து சொன்னாள்.

“அதெல்லாம் இல்லடி, அவுங்களுக்கு இன்னும் மேலருந்து பணமே வரலையாம். அப்படியே வந்தாலும் இவுங்கல மாதிரி 1000 2000லாம் கொடுக்க மாட்டாங்க. 300 கொடுத்தாலே ஒசத்தி. “ஆமா லட்சுமி உங்க தலைவர் சைடிலருந்து ஏதாச்சும் தேறுமா?  அது சரி தலைவருக்கே ஏதும் தேறுமானு தெரியல. அவுங்களுக்கே கூட்டணித் தலைவர்கிட்டஇருந்து  வெறும் டோக்கன்தான் மிஞ்சும்போல.” ராமு நக்கலடித்துச்சிரித்தான்.

“என்ன ரொம்ப நக்கலா இருக்கு? கொடுத்தா வேணாமுனு சொல்லிறுவிகலோ?… இந்த பாருங்க! யார் எவ்ளோ கொடுத்தாலும் சரி. நா எங்க தலைவர் கட்சிக்குத்தான் போடுவேன்.” கோபப்படுவதான பாவனையில், கொஞ்சல் கலந்து லட்சுமி சொன்னாள்.

“போடு போடு. தொகுதில ஒரு ஓட்டாவது வாங்க வேணாமா உங்க தலைவரு.” மீண்டும் நக்கல்.

“நாங்க வாங்குறது இருக்கட்டும். உங்க ஆளுங்க டெபாசிட் வாங்குவாங்கலானு பாருங்க.” ஆயிரம் இல்ல, ஐயாயிரம் கொடுத்தாலும் ஒன்ன்ன்ன்னும் நடக்காது.” செல்லமாக அவன் தொடையைக் கிள்ளினாள்.

“ஏய் என்னப்பா பயங்கர சாபமா இருக்கு.” “பின்ன என்னவாம். ஒரு ஆயிரம் ஓவாய்க்கு எத்தனதடவ நடக்கிறது. எல்லாம் என்னச் சொல்லணும். நானாவது முந்தாநாளு வீட்டில இருந்திருக்கலாம்.” அவள் சலித்துக்கொண்டாள்.

(2)

பார்வையற்ற ஜோடிகள் நிற்கும் படம்
சித்தரிப்புப் படம்

மத்திய வெயில் உக்கிரமாக இருந்தது. கடைகடையாய் ஏறி இறங்கியும் வெறும் ஐந்தே பத்திப் பாக்கெட்டுகள்தான் விற்றிருந்தன. குறையாத பையின் சுமை லட்சுமியின் தோளைக் கணக்கச் செய்தது. அருகே இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடையை அவர்கள் அடைந்தபோது, அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்தவர்கள் ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து அமர்ந்தார்கள். ராமு தன் இடக்கையை பட்டும் படாமலும் முன்னே வீசி திண்டு காலியாய் இருப்பதை உறுதிசெய்தான். இருவருக்கும் என அவன் கை நீண்டபோது, அருகே இருந்த ஒருவர் மேலும் நகர்ந்தார்.

“லட்சுமி இங்க உட்காரு” அவளை முன் நகர்த்தி, அவளின் கையைப் பிடித்துத் திண்டின் மீது வைத்தான். இருவரும் வசதியாக அமர்ந்துகொண்டபின், ஓட்டலில் வாங்கியிருந்த தக்காழி சாதப் பொட்டளங்களைப் பிரித்துச் சாப்பிட்டார்கள்.

ராமுவுக்கு இரண்டு வாய்க்குமேல் சாப்பாடு ஏறவில்லை. “உப்பு இல்ல… சோறு வெற வெறையா இருக்கு…” சினந்தபடி, பொட்டளத்தைச் சுருட்டிக்கொண்டு, எறிவதற்கு எழுந்தான்.

“ஊஊஊஊம்” சோறடைத்த வாயுடன் அவனைத் தடுத்த லட்சுமி, அந்த பாலிதின் கவரிலேயே வைக்கும்படி அவன் முன் கவரை ஆட்டியபடி நீட்டினாள்.

லட்சுமிக்கு மகன் பிரபாகரனின் ஞாபகம் வந்தது. சாப்பிட்டுக் கைகழுவிவிட்டு, தன் அண்ணனுக்கு ஃபோன் செய்து பேசினாள். அவள் ஃபோன் எடுத்ததும் ராமுவுக்குக் குப்பன் நினைவுவந்து அவனும் மனனமாக வைத்திருந்த எண்களை தன் ஃபோனில் அழுத்திக் காதில் வைத்தான். குப்பன் எடுக்கவில்லை.

நிழற்குடைக்கு வெளியே நகரம் வாகனங்கள், மனித நடமாட்டம் என அமைதியற்றுப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. “கொஞ்சம் வெயில் தாழட்டும். இன்னும் ஒரு ரவுண்ட் போய்ட்டுக் கிளம்பிடுவோம்.” என்றான் ராமு. லட்சுமி சில நொடிகள் மௌனமாய் இருந்தாள்.

“லட்சுமி உன்னத்தான்”

வெளில வந்து சாப்பிடறப்போ பிடிக்கலைனா அங்கேயே கொட்டிடக்கூடாதுன்னு தெரியாதா?” உதடுகளிலிருந்து சன்னமாய் வெளியேறும் கண்டிப்பு தொனியில், “இந்த சோறு கிடைக்காத எத்தனையோ பேர் இங்கேயே இருக்கலாம். இதப் பார்த்தா அவுங்க மனசு எவ்ளோ கஷ்டப்படும்… சீ கொஞ்சம்கூட…” மிகத் துல்லியமாக உரியவர்களை மட்டுமே சென்றடைந்து தாக்கும் அமைதிச் சொல்லம்புகளை உருவாக்கிக்கொள்வது பெண்களின் பிறவிக்கலை போலும்.

ராமுசொல்லற்று அமைதியாக இருந்தான். அமைதியைக் கலைக்கும்படியாக லட்சுமியே தொடர்ந்தாள்.

“குப்பன் ஃபோன் எடுக்கலையா?” லட்சுமி கேட்டு முடிப்பதற்குள், ராமுவின் செல்பேசி ஒலித்தது.

“ஹலோ யாரு”

“ராமு எங்க இருக்கீங்க?”

“சொல்லு வாத்யாரே எப்டி இருக்க! நானும் லட்சுமியும் சேல்சுக்கு வந்திருக்கோம்.”

“அப்புறமாப் பேசவா?”

“பரவால சொல்லு வாத்யாரே என்ன விஷயம்?”

“என்னங்க ராமு உங்க கட்சிக்காரங்க ஆயிரம் ரெண்டாயிரமுனு ரகல விடுறாங்க.”

“என்ன பிரையோஜனம். எங்களுக்கு ஒன்னும் கிடைக்கல.” ராமு பரிதாபமாகச் சொன்னான்.

“ஏன் நீங்க வாங்களையா? உங்க தெருப்பக்கமெல்லாம் எப்பவோ கொடுத்து முடிச்சிட்டதா கேள்விப்பட்டேனே!” ஆசிரியர் மணிகண்டன் ஆச்சரியமாகக் கேட்டார்.

“கெரகம் வாத்யாரே. எப்படியும் ராத்திரிதான் கொடுப்பாங்கனு அன்னக்கி நாங்க வியாபாரத்துக்குப் போய்ட்டோம். இன்னக்கி மொதத் தெருவில கொடுக்கிறாங்கனு போனா, ரெய்டுன்னு பாதிலேயே போய்ட்டாங்க. ஆமா உங்க ஆளுங்க என்னாச்சு வாத்யாரே? கொடுப்பாங்களா மாட்டாங்களா?” ராமுவின் குரலில் பரிகாசம்.

“அட எங்க ஆளுங்க இப்போ கொடுத்திட்டு இருக்காங்க.  அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன்.”

“அப்டியா? எவ்ளோ வாத்யாரே?”

“தலைக்கு ஐநூறு.”

ஐநூறாஆஆஆ!” ராமுவுக்கு ஆச்சரியம். “எங்க தெருவுக்கு எப்போ வருவாங்கனு தெரியலையே?” ராமு கேட்டான்.

“ராமு நீங்க ஒன்னு பண்ணுங்க. கொடுக்கிறவன்ல அப்பாவுக்கு தெரிஞ்ச பையனும் இருக்கான். நான் சொல்லிவைக்கிறேன். நீங்க  ரெண்டுபேரும் நேர நம்ம வீட்டுக்கு வந்துடுங்க.”  ஆசிரியர் மணிகண்டன் சொன்னான்.

“இப்போ ரெண்டுபேரும் எங்க இருக்கீங்க, பேட்டைலதானே? உடனே பஸ் பிடிச்சா ஒரு பதினஞ்சு இருபது நிமிஷத்தில வந்திட மாட்டீங்க?”

“வந்திடலாம்தான். ஆனா சரக்கு அப்படியே இருக்கேனு பாக்குறேன்.” கொஞ்சநேர  யோசனைக்குப் பிறகு, “சரி வாத்யாரே நாங்க புறப்பட்டு வாரோம்” என்று முடிவுக்கு வந்தவனாகச் சொன்னான் ராமு.

(3)

பேருந்தை விட்டு இறங்கிய இருவரும் அதன் நிறுத்தத்துக்கு வலப்புறமாக இருந்த தெருவில் நுழைந்து மணிகண்டன் வீட்டை அடைந்தார்கள்.

அவர்களின் வருகையை எதிர்பார்த்தவனாய், வீட்டின் போர்டிகோவில் நாற்காலியைப் போட்டு அமர்ந்திருந்த மணிகண்டன், வெண்கோல் சத்தத்தைக் கேட்டு, முன்வாசலைத் திறந்துகொண்்டு அவர்களை எதிர்சென்று “ராமு! வாமா லட்சுமி!” எனக் குரல்கொடுத்து, ராமுவின் கைபற்றி வீட்டுக்கு அழைத்துவந்தான்.

திண்ணைப் படிக்கட்டுக்கு அருகே தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு, லட்சுமியும் ராமுவும் உள்ளே சென்றார்கள். தரையின் வழவழப்பில் லட்சுமியின் பாதங்கள் சில்லிட்டன. அப்போது அவள் நினைவில் தன் வாடகை வீட்டு சிமெண்ட் தரை முகம் சிமிட்டிவிட்டுப் போனது.

ஹாலில் இருந்த சோஃபாவில் மூவரும் அமர, ராமு லட்சுமி இருவரும் தங்கள் தோள் சுமைகளை இறக்கி பக்கவாட்டில் வைத்தார்கள். வெல்வெட் சோஃபாவில் சாய்வது அவ்வளவு இதமாக இருந்தது லட்சுமிக்கு.

“ராமு! அப்பா உங்க ரெண்டுபேர் பத்தியும் சொல்லிட்டாராம். முடிச்சுட்டு ஃபோன் பண்றேன், நேர்ல வந்து வாங்கிக்கோங்கனு அந்ந்தப் பையன் சொல்இருக்கான். ஒரு ஒருமணிநேரம் பார்ப்போம்.” மணிகண்டன் சொன்னான்.

“எங்கணே அப்பா அம்மாவக் காணோம்?” லட்சுமி கேட்டாள்.

“அம்மா பேட்டைல அக்கா வீட்டுக்குப் போய் நாளு நாளாச்சு. அனேகமா ஓட்டுப் போடுறதுக்கு மொதநாள்தான் வருமுனு நினைக்கிறேன். அப்பா கடைத்தெருவில நிப்பாரு. வேறெங்க போயிருக்கப் போராரு.” என்றான் மணிகண்டன்.

“டீச்சரம்மா?” ராமு இழுத்தான்.

“அவுங்களுக்கு அவுங்க அம்மா வீட்டுக்குப் போறது, அமெரிக்கா போற மாதிரி. வாரதுக்கு  மனசே இருக்காது. நான்தான் நாளைக்குப் போய் கூட்டிட்டு வரணும்.” சொல்லிக்கொண்டே உள்ளே போய் கொஞ்சம் பிஸ்கட்டுகள் கொண்டுவந்து இருவருக்கும்் கொடுத்துவிட்டு, தானும் எடுத்துக்கொண்டான்.

“அப்போ ஸ்கூல்…?” லட்சுமி குரல் தாழ்த்திக் கேட்டாள்.

“நான் தினமும் போய்ட்டுதான் இருக்கேன். அவுங்க ஸ்பெஷல் ஸ்கூல்தானே. ஆன்லைன்ல க்லாஸ் போயிட்டிருக்கு.” லட்சுமிக்கு பதில் சொன்னான் மணிகண்டன்.

“அப்புறம், எங்க கட்சிலருந்து நாளாயிரம், உங்க கட்சில ரெண்டாயிரம், வாத்யார் காட்டுல மழைதான் போ”. எனமோவாய் மேலெழ, வெல்வெட்டால் ஆன சோஃபாவின் பக்கவாட்டுக் கைத்தளத்தைத் தன் கைகொண்டு வருடியபடியே ராமு சொன்னான்.

“ஹேய் இல்லப்பா. எங்க ஆளுங்ககிட்ட நாங்க ரெண்டுபேரும் வாங்கிறது இல்ல. அப்பா அம்மா மட்டும்தான். உங்க ஆளுங்ககிட்ட மட்டும்தான் வாங்கினோம். அதுவும் இந்தமுறைதான். போன தடவைலாம் யார்கிட்டேயும் வாங்கல. சரி, கொடுக்கிறவன் என்ன அவன் பாக்கெட்டில இருந்தா கொடுக்கிறான்.”

“அதுகூட நமக்கு வாய்க்க  மாட்டேங்கிது. மூனு நாளா தெனமும் நடக்கிறேன், இன்னக்கி நாளைக்கின்னு சொல்லி, ஒருவழியா இன்னக்கி காலைல வந்திறுக்காங்க. நம்ம அதிஷ்டம் பாரு வாத்யாரே. ரெய்டுக்காரன் பின்னாடியே வந்துட்டான்.” பெருமூச்சறைந்து சொன்னான் ராமு.

“அட போய்த் தொலையுது, விட்டுறுங்கனாலும் கேட்க மாட்டேங்கிறாரு. யார் யாருக்கோ ஃபோன் போட்டு, அங்க வாராங்களா? இங்க வாராங்களானு ஆளுநாளா இதே பேச்சுதான்ணே. என் காதே கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு.” லட்சுமியின் குரலில் விரக்தியும் சலிப்பும் கலந்திருந்தது.

“எப்டி விடுறதாம். தலைக்கு ஆயிரம் ரூபாய்னா சும்மாவா? இந்த ரெண்டாயிரத்த மொத்தமாப் பாக்குறதுக்கு, எத்தன நாளு எத்தனை பில்டிங் ஏறி இறங்குறோம். என்ன வாத்யாரே நான் சொல்றது?” தன் நியாயத்துக்கு மணிகண்டனையும் துணைக்கழைத்தான் ராமு.

“எங்க ளவிடு வாத்யாரே. பக்கத்து வீட்டுல கிழவனும், கிழவியும். ஒத்தப் புள்ள விட்டுட்டுப் போய்ட்டான். முதியோர் பென்ஷனுல கால் வயிறும் அரை வயிறுமா ஓடுது. பெரியவரு என்ன சொல்றாரு தெரியுமா? இந்தக் காச வச்சுதான் சீலிங் ஃபேன் வாங்கிப் போடப் போறாங்கலாம். டேபில் ஃபேன்ல காத்தே வரலையாம்.” ராமு இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருந்தபோது மணிகண்டனின் செல்பேசி ஒலித்தது.

“ஹலோ யாரு?” “சார் நான் விஜய் பேசுறேன். டீச்சர் இல்லையா சார்? அவுங்க நம்பர் போக மாட்டேங்குது.” விஜய் சொல்லி முடிப்பதற்குள்,

“விஜய், நல்லா இருக்கியா? டீச்சர் ஊர்ல இருக்காங்க. அவுங்களுக்கு அங்க டவர் சரியாக் கெடைக்காது. ஏதாவது அவசரமுனா சொல்லு நான் சொல்லிடுறேன்.” மணிகண்டனின் கேள்விக்கு, விஜய் தயங்கிக்கொண்டே

“இல்ல சார், டீச்சர்கிட்ட ஹாஸ்டல் ஃபீஸ் கேட்டிருந்தேன். அதான்.” இழுத்தான்.

“ஆமா பத்தாயிரம் தேவைப்படுறதா சொன்னாங்க. கவலப்படாத பார்த்துக்கலாம்.” உறுதி கலந்த குரலில் சொன்னான் மணிகண்டன்.

“ரொம்ப நன்றி சார். டீச்சர்கிட்ட சொல்லிடுங்க, நானும் ட்ரை பண்ணுறேன்” விஜய் தாழ்ந்த குரலில் சொன்னான்.

“கண்டிப்பா, விஜய் நீ என்ன மேஜரு, பி.ஏ. தமிழ்தானே?”

“ஆமா சார்.”

“எத்தனாவது வருஷம்?”

“தேர்டு இயர் சார்”

“குட், வோட்டுப் போடுவியா?” கேட்டுக்கொண்டே அவன் பதிலை ராமுவும் கேட்கட்டும் என்று நினைத்து, செல்ஃபோனை லவுட் ஸ்பீக்கரில் போட்டான் மணிகண்டன்.

“சார் கண்டிப்பா. அண்ணனுக்குதான் என்னோட ஓட்டு. நீங்களும் மறக்காம அண்ணனுக்கே போட்டிறுங்க சார். டீச்சர்கிட்டேயும் ஏற்கனவே சொல்லிருக்கேன்.” உற்சாகமாகச் சொன்னான் விஜய்.

“அட ஏன் பா ஓரு ஓட்டை வேஸ்ட் பண்ற?” சிரித்தபடி கேட்டான் மணிகண்டன்.

“எது வேஸ்டா? என்ன சார் இப்படி சொல்லீட்டீங்க. சார் காசு மட்டும் கொடுக்காம எல்லாரையும் நிக்க சொல்லுங்க பார்ப்போம் யார் ஜெயிக்கிறானு? எங்க ஊருலேலாம் மினிஸ்டர் தொகுதிங்கிறதால வோட்டுக்கு மூவாயிரம் நாளாயிரமுனு அள்ளி இறைக்கிறாங்க சார். எங்க வீட்டிலேயே நானு என் தம்பி, எங்க அம்மானு மூனு வோட்டு. நான் எங்க அம்மாகிட்ட வாங்குனாக்  கைய வெட்டிடுவேனு சொல்லிட்டேன்.” உணர்ச்சிகள் கொப்பளிக்க ஆவேசமாகப் பேசினான் விஜய்.

இளைய பிள்ளைகளின் நிபந்தனையற்ற நேர்மை குறித்து உள்ளூரப் பெருமிதம் ஏற்பட்ட அதேநேரம், அவர்களின் தூய்மையான நம்பிக்கை பொய்த்துப்போனால், அது எத்தகைய எதிர்மறையானவர்களாக அவர்களை மாற்றிவிடும் என்ற கவலையும் மணிக்கு ஏற்பட்டது. “குட் ரொம்ப சந்தோஷம் விஜய். நான் டீச்சர்கிட்டேயும் சொல்லிடுறேன்” என்று சொல்லியபடி அழைப்பைத் துண்டித்தான்.

“பாத்திங்களா ராமு! எப்படிப் பேசுறானு?”

“பின்ன எத்தன நாளைக்குத்தான் மாறி மாறி இவுங்களே இருப்பாங்கலாம். ஒரு சேஞ்சு வேணாமா? நான்கூட  சொல்லிட்டேன்ணே! யார் எவ்ளோ கொடுத்தாலும் எங்க தலைவர் கட்சிக்குத்தான் போடுவேனு.” லட்சுமி ஆரம்பித்தாள்.

“அட அப்படியா? பார்டா என்ன ராமு நீங்க ஸ்டேட்டு, லட்சுமி செண்டர் போல இருக்கு?” மணிகண்டன் சிரித்தான்.

“ஐயோ அண்ணா இல்ல. அவரு பேசுறதே புரியாது. அவருக்கெல்லாம் இல்ல.” லட்சுமி உதடு பிதுக்கினாள்.

“ஓஹ்்ஹ்ஹோ, அவரா?” எனப் புரிந்துவிட்ட பாவனையில் குரலைத் தாழ்த்தினான் மணி.

“அட அவ கெடக்கிறா வாத்யாரே. அந்தப் பையனக் கவனிச்சியா?  வேஸ்டுனு சொன்னதும் எவ்ளோ கோபம் வருது.

ஊம்! “இள ரத்தம், அறியாத வயசு. இப்போ நாம எது சொன்னாலும் புரியாது. பட்டுத் திருந்துனாத்தான் புத்தி வரும். என்ன செய்யுறது.” விரக்தியில் பெருமூச்சறைந்து சொன்னான் மணி.

“அடப் போ வாத்யாரே! அம்பது வருஷத்துக்கு முன்னால உங்க ஆளுங்களையும் இப்படித்தான் கதர் ஆளுங்க சொல்லிருப்பாங்க. ஆனா ஒன்னு வாத்யாரே! உண்மையிலே இந்தமுறை அவுங்க ஓட்டு கொஞ்சம் அதிகமாத்தான் வாங்குவாங்கன்னு எனக்குத் தோணுது. இப்படியே போனா நானேஅவுங்களுக்குப் போட்டுறுவேன் போல.”

“ஏங்க என்ன சொல்றீங்க?” அதிர்ச்சியோடு, அவன் தொடைமீது கை வைத்தாள் லட்சுமி.

“பின்ன என்னடி. இப்போ பொட்டி பொட்டியா இறக்குறாங்களே! கரோனா ஊரடங்கப்போ நாமலாம் ஒருவேளச் சோத்துக்கு எவ்ளோ கஷ்டப்பட்டோம். அம்பது ரூபாய் யாராவது கொடுக்க மாட்டாங்களானு எவ்ளோ ஏங்கிருப்போம். உண்மைலே சொல்றேன் வாத்யாரே! நம்ம ஆளுங்க கொஞ்சம் கொடுத்தாங்க. அப்புறம் அபிதா மேடம், அதான் மெட்ராஸில இருக்கிற லட்சுமியோட ரீடர் கொஞ்சம். காசு மளிகை சாமான்னு எங்க பாஸ்டர் அப்பப்போ கொடுத்துக் காப்பாத்துனார். இல்லைனா நாங்க மூனு பேரும் செத்த இடம் இந்நேரம் புல்லு  முளைச்சிருக்கும். சே சே எவ்ளோ கஷ்டம்.”

“இப்ப மட்டும் என்ன? வியாபாரமெல்லாம் முன்ன மாதிரி இல்லணே. அஞ்சு பாக்கெட் விக்கிறதுக்குள்ள போதும் போதுமுனு ஆயிடுது.” லட்சுமியின் கவலை தோய்ந்த குரல், மணியின் இதயத்தைக் கனக்கச் செய்தது.

“இதுல மறுபடியும் ஊரடங்குவந்தா என்ன செய்யப் போறோமுனே புரியல.” ராமுவின் மிரட்சி அவன் குரலில் தெரிந்தது.

“அப்டிலாம் ஒரேயடியா சொல்லிட முடியாது ராமு. எங்க ஆளுங்களாம் நிறைய உதவி செஞ்சாங்க. நானே ரெண்டு மூனு இடத்துக்கு சிபாரிசுசெஞ்சிருக்கேன்.” மணி சொன்னான்.

“எங்க ஆளுங்ககூடத்தான் செஞ்சாங்க. இல்லவே இல்லைனு மறுக்கல. கட்சி கிட்சிலாம் விடு வாத்யாரே. இப்போ கொடுக்கிறதுல இருக்கிற வேகமும் ஆர்வமும் அப்போ ஏன் இல்லங்கிறதுதான் என்னோட கேள்வி. எவ்ளோ நுணுக்கமா அலசி ஆராஞ்சு யாருக்கு எவ்ளோ போகணும், யார் மூலமாப் போகணுமுனு எப்டிலாம் திட்டம் போட்டு கொடுக்கிறாங்கனு பாக்குறோமா இல்லையா? இன்னக்கி ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரமுனு வச்சாக்கூட குறைஞ்சது மூனு கோடிப் பேருக்காச்சும் கொடுத்திருப்பாங்கதானே? ஆனா, அப்போ வெறும் பதினோரு லட்சம் பேரு, ஐயாயிரம் கேட்டோம், ஆயிரம் கொடுக்கவே அவ்ளோ யோசனை. இத்தனைக்கும் நம்ம சங்கத்து ஆளுங்களில ஒருத்தரு “பெத்த தகப்பன்கிட்ட கேட்குற மாதிரி கெஞ்சிக் கேட்கிறேனு” சொன்னதை இப்ப நினைச்சாலும் ஈரக்குலையே நடுங்குது.” ராமுவின் கோபம் மணிக்கு நியாயமாகவே பட்டது.

“கட்சிலாம் ஒன்னும் இல்லங்க ராமு. மாற்றுத்திறனாளினு வந்துட்டா எல்லாரும் ஒன்னா நிக்கணும். அதான் நம்ம கொள்கை. இப்ப கூடப் பாருங்க, தேர்தல் அறிக்கையில எவ்வளவோ எதிர்பார்த்தோம். ஒன்னும் நடக்கலையே. அப்புறம் எங்க கட்சி உங்க கட்சினு பேசுறதுல என்ன இருக்கு.”

“யாரு வந்து என்னண்ணா நடக்கப்போகுது? எம்ஏ எம்ஃபில் படிச்சு, டெட் பாஸ் பண்ணினாலும், வெயிலு மழையினு கடைகடையா ஏறி இறங்குனாத்தான் நமக்கு சாப்பாடு. 2014ல இருந்து நாங்களும் இப்போ போட்றுவாங்க, அப்போ போட்றுவாங்கனு காத்திட்டு இருந்ததுதான் மிச்சம். இத நம்பி கல்யாணம்லாம் பண்ணி… ஹூம்!! எங்க பிரபா தலையெடுத்து, அவன் கல்யாணத்துக்கு அப்புறம்தான் வேல கிடைக்கும்போல.”” நீண்ட காத்திருப்பின் சுவடுகள் லட்சுமியின் குரலில் எதிரோலித்தது.

“வாத்யாரே! அப்பாகிட்ட கொஞ்சம் என்ன ஆச்சுன்னு கேளு. டைம் ஆயிடுச்சு. போய் பிரபாவ வேற கூட்டிட்டு போகணும்.” ராமு சொன்னான்.

மணிகண்டனின் அழைப்பைத் துண்டித்த அவனது அப்பா, வாசலைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டார்கள். தன் பாக்கெட்டிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து ராமுவிடம் கொடுத்தார்.

“நீங்க ரெண்டுபேரும் பஸ் விட்டு இறங்கிறப்போ நா அந்தப் பையனெல்லாம் கொஞ்சம் எட்டி நின்னுட்டுதான் இருந்தோம். உங்களக் காட்டி இவுங்கதானு சொன்னேன் கொடுத்துட்டாப்ல.”

“அப்புறம் ஏன் இவ்ளோ நேரம்? வாங்கிட்டா வர வேண்டியதுதானே?” மணி கேட்டான்.

“சொன்ன உடனே ரோட்டிலேயே வச்சு கொடுத்துற முடியுமாடா? வீடு வீடாக் கொடுத்து முடிச்சு கொஞ்சம் இருந்ததில கொடுத்தான்.”. இதுக்காக நா அவன் பின்னாலேயே போயி… கடைசில நானும் சேர்ந்து வீடு வீடாக் கொடுத்தது மாதிரி ஆயிப்போச்சு. மணி அவுங்க எல்லாருக்கும்லாம் கொடுக்கல. நமக்கு உறுதியா வரும்கிறவுங்களுக்கு மட்டும்தான் கொடுக்கிறாங்க. கண்ணு தெரியாதவுங்கங்கிறதால இவுங்களுக்குக் கொடுத்திட்டான்.” அவர் குரலில் தன்னால்தான் கிடைத்தது  என்ற பெருமிதத் தொனி.

“ரொம்ப நன்றிப்பா.” ஒருசேரச் சொன்னார்கள் ராமுவும் லட்சுமியும்.

“இருக்கட்டும். அந்தப் பக்கம் வாங்கியாச்சா?” அவர் கேட்டார்.

“இல்லப்பா. மூனு நாளா அலைஞ்சிட்டிருக்கேன்.” ராமு சொன்னான்.

“அட சொல்லிருந்தா கேட்டிருப்பேன்ல. அந்தப் பயல்களும்அங்கிட்டுதான் சுத்திட்டு இருந்தாங்க. எல்லாரும் ஒன்னாத்தான் குடிக்கிறான், கூத்தடிக்கிறான். நீங்க கொடுத்திறுங்க, அப்புறம் நாங்க கொடுக்கிறமுனு அவுங்களுக்குள்ளேயே ஏகப்பட்ட அஜஸ்மண்டு.

இரு. கருப்புசாமி பயகிட்ட கேட்போம்.” அவர் யாருக்கோ ஃபோன் பேசினார்.

“எல்லாம் கொடுத்து முடிச்சாச்சு. வேட்பாளர் நம்ம ஊருக்கு வாராறாம். அதில பிஸியா இருக்கோம். நாளைக்கு சாய்ங்காலமா ஃபோன் போடுங்க பார்க்கலாம்கிறான். இது வேலைக்கு ஆகுர மாதிரி தெரியல.” என்றார் சலிப்பாக.

“சரி வாத்யாரே நாங்க கிளம்புறோம்” ராமு சொல்ல இருவரையும் கைபிடித்து வீட்டிற்கு வெளியே அழைத்துவந்து சாலையில் விட்டார் மணியின் அப்பா.

(4

“எப்டிருக்க வாத்யாரே” மேளத்தின் பெருஞ்சத்தப் பின்னணியில் ராமுவின் குரல் செல்பேசியில் மெல்லிதாய் ஒலித்தது.

“சொல்லுங்க ராமு? என்ன ஒரே சத்தமா இருக்கு?”

“நான் சொன்னேன்ல. பக்கத்துவீட்டுப் பெருசுங்கனு. அதில கெழவி போயிடுச்சு.”

“அச்சச்சோ! ஏன் உடம்பு சரியில்லாம இருந்தாங்களா?”

“அதெல்லாம் இல்ல வாத்யாரே. காலைல நாங்க மூனு பெரும்தானே ஓட்டுப்போடப் போனோம். ஆனா காலைலருந்தே கெழவி ரொம்ப டல்லாத்தான் இருந்துச்சு. எப்பவுமே லொடலடனு எதாவது பேசிட்டு வரும். இன்னக்கி பெருசுகிட்டக் கூட ரொம்ப பேசல. கெழவிக்கு வெயில் தாங்களைனு நினைக்கிறேன்.” ராமு  முடிப்பதற்குள்,

“மூனு பேரா? லட்சுமி ஓட்டுப் போடலையா?”

“இல்ல வாத்யாரே!” கம்மிய குரலில் ராமு தொடர்ந்தான்.

“லட்சுமியும் பிரபாவும் ஒரு ஜெபக் கூட்டத்துக்காக பெங்களூரு போய்ட்டாங்க. யாரோ ஃபாரின்லருந்து வாராறாம். பாஸ்டர் கூப்பிட்டாரு. சரி, நமக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்றாருன்னு நான்தான் அனுப்பிவச்சேன்.”.”

மறுமுனையில் மணி ஏதோ சொல்ல, ராமுவுக்கு அது விட்டுவிட்டுக் கேட்டது.

“வாத்யாரே! உன் பக்கம் டவர் ரொம்ப வீக்கா இருக்கும்போல. விட்டுவிட்டு கேக்குது. எங்க இருக்க”

“இப்போ கேட்குதா?”

“ஊம் இப்போ தெளிவாக் கேட்குது.”

“மாமியார் வீட்டுலதான் இருக்கோம். இந்தமுறை நாங்க ரெண்டுபேருமே வோட்டுப் போடல.””

“என்னது! ரெண்டுபேருமே போடலையா? ஏன் வாத்யாரே அங்க எதுவும் முக்கியமான வேலையா?” மேலெழுந்த குரலில் ராமு கேட்டான்.

“வோட்டுப் போட ஊருக்குக் கூட்டிட்டுப் போலாம்தான் பா வந்தேன். அதுக்குள்ள அவுங்க சொந்தக்காரர் ஒருத்தர் இறந்துட்டாரு. துக்கமெல்லாம் விசாரிச்சுட்டு நேத்து ராத்திரிதான் வீட்டுக்கு வந்தோம். சரி நான் மட்டுமாவது கிளம்பிடலாம்னுதான் நினைச்சேன். ரொம்ப டயர்டாஇருந்துச்சு. இன்னக்கி மாமியார் ஊருக்கு என்னோட ஃபேவரைட் ரைட்டர் நேயன் வாரதாக் கேள்விப்பட்டேன். தங்கிட்டேன்.” மணி முடித்தான்.

“அதான பார்த்தேன். ரைட்டரு வந்தாரா?””?”

“ஊம். இன்னக்கித்தான் அவர மொதமொதலா நேர்ல சந்திச்சேன். ஒரு பத்து பதினஞ்சு பேரு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். ஆமா அப்புறம் என்ன ஆச்சு? உங்க ஆளுங்க கொடுத்தாங்களா இல்லையா?” பேச்சை மாற்றும் நோக்கத்தோடு கேட்டான் மணி.

“அட! அந்தக் கத உனக்குத் தெரியாதில்ல… உங்க வீட்டுக்கு வந்துட்டுப்போன ராத்திரிக்கே குப்பன் அண்ணன் கிளை வீட்டுக்கே கூட்டிட்டுப் போனாரு. எல்லாம் கொடுத்து முடிச்சாச்சு, நாளைக்குப் பார்க்கலாமுனு கிளை சொல்லிட்டாப்ல. ஆனா நம்ம அதிஷ்டம், அடுத்தநாள் வேட்பாளர் வந்தாரில்ல. வீடு வீடா வந்தப்போ, நம்மலப் பார்த்ததும் தோளத் தட்டிக் கையப் புடிச்சு குலுக்கி, “தம்பி எப்பவுமே நமக்குத்தான் போடுவாரு. உங்க ஆளுங்ககிட்டேயும் சொல்லிடுங்க தம்பி”னு ஒரே அமர்க்களம். நம்ம தொகுதி எம்எல்ஏங்கிறதால நாளஞ்சு தடவ மனு கொடுக்கப் போயிருக்கேன் அவ்வளவுதான். பரவால! மனுஷன் நம்மல நல்லா ஞாபகம் வச்சிருக்காரு. கூட இருந்தவனெல்லாம் அளறிட்டான் போ. அடுத்தநாளே ரெண்டாயிரம் வீடு தேடி வந்திருச்சுனாப் பாரேன்.” கெத்தாகச் சிரித்தபடி சொல்லிக்கொண்டிருந்தான் ராமு.

எதிர்முனையில் மணியின் குரல் மீண்டும் வெட்டத் தொடங்கியது.

ஹலோ… வாத்யாரே “என்ன சொல்ற? ஒன்னும் கேட்க மாட்டேங்குது.

“இப்போ?”

“கொஞ்சம் பரவால.” ஆமா. ரைட்டருனு சொன்னியே. அவருக்கு அதுதான் சொந்த ஊரா?” ராமு கேள்வியை முடிப்பதற்குள்

‘ட்டூஉன்… ட்டூஉன்… ட்டூஉன்…’ ஒலியுடன் அழைப்பு முறிந்தது.

***

ப. சரவணமணிகண்டன்

மகளிர்தின ஸ்பெஷல்: சிறுகதை: பூக்கள் பூக்கும் தருணம்

ஆயுள் காதலன் சிறுகதை

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்