ஆழ்ந்த இரங்கல்கள், அரசுக்குக் கோரிக்கைகள்

கரோனா வைரஸ்

நண்பர் திரு. வரதராஜன் அவர்களின் மரணம் அதிர்ச்சியை அளிக்கிறது. விளையாட்டு ஆர்வலர். நல்ல நோக்கத்திற்காக முன் நிற்கும் குணம் என அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலும், அவருடைய பெற்றோர், அவரோடு உடன் பயின்ற சக பார்வையற்றவர்களைத் தங்கள் சொந்தப் பிள்ளைகள் போல உபசரிப்பவர்கள் என்று நண்பர் நசுருதீன் சொல்லிப் பலமுறை கேட்டிருக்கிறேன்.

அவரைஇழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்தஇரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாற்பதைத் தொடும் மிகச் சிறிய வயதிலேயே நண்பர் திரு. வரதராஜன் அவர்கள் கரோனாவிற்குப் பலியாகியிருப்பதாக வரும் செய்திகள் ஒரு பார்வையற்றவனாக என்னைப் பதட்டம் கொள்ளச் செய்கின்றன.  சில மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் இதே வயதை ஒத்த நமது நண்பர் திரு. ஜேசுதாஸ் அவர்களை நாம் கரோனா பாதிப்புக்குப் பறிகொடுத்தோம். இவற்றையெல்லாம் எண்ணும்போது, பார்வையற்றவர்களாகிய நாம் உடலைப் பேணுவதில் பின்தங்கியவர்களாகவோ, அல்லது அதற்கான சூழல் மறுக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறோம் எனத் தோன்றுகிறது.

இந்த சூழலில் முப்பதுகளிலேயே நம்மில் சர்க்கரை போன்ற நோய்கள் குடியேறிவிடுகின்றன. அதனால், கரோனா பாதிக்கப்படும் ஒரு பார்வையற்றவருக்கு  மிக எளிதில் மரணம் நேர்ந்துவிடுகிறது.

தற்போது கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. “அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம்” என முதல்வரே மக்களை அறிவுறுத்துகிறார். அதேசமயம், பிறரின் உதவியை மட்டுமே நம்பி வெளியே நடமாட முடிந்த பார்வையற்றவர்களாகிய நாம் அரசுப்பணி, வியாபாரம் என பயணம் செய்தே ஆகவேண்டியிருக்கிறது.

மாணவர்களே முழுதுமாய் வராத பள்ளிகளில்கூட பார்வையற்ற ஆசிரியர்கள் அன்றாடம் சென்றுவருகிறார்கள். வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் திறன் பெற்ற பார்வைத்திறன் குறையுடைய பேராசிரியர்களும் கல்லூரிக்கு வருகை தருவது கட்டாயமாக இருக்கிறது. இத்தனைக்கும் பல அரசுக் கல்லூரிகளில் இணைய வசதியே சரிவர இல்லை எனினும் அவர்களுக்கு அந்த நிர்பந்தம். அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு என்று வரையறுத்தாலும், பார்வையற்ற அரசு ஊழியர்களின் நலனைப் பற்றியும் பிரத்யேகமாகச் சிந்திக்க வேண்டியது ஓர் அரசின் கடமையல்லவா?

இத்தனைக்கும் மேலாக பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு இடையில் 20 நாட்கள்கூட இல்லை. சிறப்புப் பள்ளிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குறித்தும், ஒரு குழப்பநிலையே நீடிக்கிறது. உண்மையில், சிறப்புப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் மாணவர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், தங்கள் செயல்கள் குறித்த பிரக்ஞை துளியுமற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளின் பொறுப்பின்மைக்கு தினம் தினம் களப் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையில் பொறுப்பை யாருக்குக் கைமாற்றலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அலுவலர்கள் சிந்திப்பதை விடுத்து, உடனடியாக செயல்பாடுகளில் இறங்க வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாகத் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படவேண்டும்.

அன்றாடம் வணிகம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடைக்கால நிவாரண நிதிகளை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கரோனாவால் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தொகை நிர்ணயித்து வழங்கிட வேண்டும்.

இதே கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காகப் போராடும் சங்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்று, ஒரே குரலில் மிகத்தீவிரமாக வலியுறுத்திட வேண்டும். அதன் முதற்படியாக, இந்தப் பதிவு அரசைச் சென்று சேரும்வரை அனைவருக்கும் பகிர்வோம்.

***

ப. சரவணமணிகண்டன்

சவால்முரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s