கண்ணியமான பங்கேற்றலை உறுதி செய்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்

,வெளியிடப்பட்டது

தேர்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து வாக்களிக்கும் வண்ணம், சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்களுக்கான வாகனச் செலவை ரூ. 200 வரை ஆணையம் ஏற்கும் என்ற அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம், குறிப்பாக பார்வையற்றோரிடம் வரவேற்பைப் பெற்றது.

பிரெயில் பொறிக்கப்பட்ட ஈவிஎம்
பிரெயில் எண்கள் பொறிக்கப்பட்ட மின்னணு வாக்குப்்் பதிவு இயந்திரம்

மாநிலத்தின் ஜனநாயகத் திருவிழா ஏறத்தாழ முடிந்திருக்கிறது. முடிவு தெரிவதற்கு இன்னும் 25 நாட்கள் இடையில் இருப்பதுதான் பெரும் சோர்வைத் தருகிறது. மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 6,28,69,955 வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 71.79 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. துல்லியமான கணக்கீடு இன்று தெரிந்துவிடும்.

தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி, சுமார் 3 கோடியே 18 லட்சம் பெண்கள், 3 கோடியே 8 லட்சம் ஆண்கள், 7200 மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 4 லட்சத்து 62 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். அப்படியானால், 1ஒன்றரைக்கோடி மக்கள் அதாவது நான்கில் ஒரு வாக்காளர் வாக்களிக்கவே இல்லை என்பதைத்தான் வாக்குப்பதிவு விழுக்காடுகள் நமக்குச் சுட்டுகின்றன. எனினும் பாதகமில்லை. கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெருந்திரளான மக்களின் பங்கேற்பு பாராட்டுக்குரியது. அதிலும் தொற்றுக்கு எளிதில் இலக்காகும் மாற்றுத்திறனாளிகளும் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக்  கடமை ஆற்றியிருப்பதற்கும், அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் பொருட்டு, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும் வாழ்த்துகளைச் சொல்லியாகவேண்டும்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியது முதலாகவே, மாற்றுத்திறனாளிகளின் தேர்தல் பங்கேற்பில் அக்கறையோடு செயல்படத் தொடங்கியது தேர்தல் ஆணையம். வாக்குப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள பிரத்யேக ஏற்பாடுகள் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் வழியாக ஆணையம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. பெருந்தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக தபால் வாக்குப்பதிவு முறையை அறிமுகம் செய்ததோடு, தமிழகத்தில் 28,531 மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் முறை வாக்குப்படிவம் வழங்கப்பட்டு, ஏப்ரல் 4ஆம் தேதிவரை 28,159 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது. சில நடைமுறைக் குறைபாடுகள் தபால் வாக்குப்பதிவு முறையில் இருந்தாலும், அதனை மொத்தமாகவும் நிராகரிக்க முடியாது என்பதே நிதர்சனம்.

தேர்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து வாக்களிக்கும் வண்ணம், சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்களுக்கான வாகனச் செலவை ரூ. 200 வரை ஆணையம் ஏற்கும் என்ற அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம், குறிப்பாக பார்வையற்றோரிடம் வரவேற்பைப் பெற்றது. அதேவேளை, வேளச்சேரியின் ஒரு வாக்குப் பதிவு மையத்தில் சரியான முறையில் சாய்தளங்கள் அமைக்கப்படவில்லை என டாராடாக் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. நம்புராஜன் அவர்களின் குற்றச்சாட்டையும், தனது வாக்குப்பதிவு மையமான மேடவாக்கத்தின் தாமஸ் மவுண்ட் பள்ளியிலும் இதேநிலை இருப்பதாக டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு. தீபக்நாதன் சுட்டிக்காட்டியதையும் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. மாநிலத்தின் சில வாக்குச் சாவடிகளில் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் பிரெயில் வேட்பாளர் பட்டியல் குறித்தே பல வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெரியவில்லை என்ற செய்தி வேதனை தரும் ஒன்று.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, பிரெயில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்தத் தேர்தலைப் பொருத்தவரை, சாதாரண பூத் ஸ்லிப்புகளேநிறையஇடங்களில் வழங்கப்படவில்லைஎன்பதே பொதுமக்கள் பரவலாக வைக்கும் குற்றச்சாட்டாக அறிய முடிந்தது. ஆங்காங்கே சிற்சில குறைபாடுகள் இருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் சுய சார்பு மனப்பான்மையுடன் கண்ணியமாகத் தங்கள் ஜனநாயகச் செயல்பாட்டை மேற்கொள்ள பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு ஒரு சல்யூட். அத்தோடு, போற்றுதலுக்குரிய இத்தகைய முன்னேற்றங்களை,,  அனைவரையும் உள்ளடக்கள் மற்றும் அணுகல் (inclusive and accessible election) என்பது மாற்றுத்திறனாளிகள் அடைய வேண்டிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாகத் தொடர்ந்து வலியுறுத்திப் போராடும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சங்கங்களுக்கும் மனதின் அடியாழத்திலிருந்து நமது நன்றிகளும் வாழ்த்துகளும்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

1 thought on “கண்ணியமான பங்கேற்றலை உறுதி செய்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்