களம்: விளிம்பிலிருந்து மையம் நோக்கி ஒரு வெற்றிப்பயணம்

,வெளியிடப்பட்டது

பாரா ஒலிம்பிக் மூலம் புகழ்பெற்று, அரசின் அரவணைப்பைப் பெற்றும் அரசு உறுதியின்படி அரசுப்பணி வழங்கப்படாத  மாரியப்பன் அவர்களின் நினைவும் வந்துபோனது. அவருக்குக் கிடைத்த குறைந்தபட்ச அரவணைப்புகூட விஜேஷாந்திக்கு இல்லை என்பதை நினைக்கையில்  ஊனத்தில்கூட பேதம் பார்க்கும் அரசின் ஊனப்பட்ட அணுகுமுறை அறுவறுப்பாய்படுகிறது.

கருத்தரங்க போஸ்டர்
கருத்தரங்க போஸ்டர்

1. 2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று பணிக்காக காத்திருக்கும் அனைத்து பார்வையற்றோருக்கும் உடனடியாக பணி நியமணம் வழங்க வேண்டும்.

2.      உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் (NET/SLET) தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் ஆயிரக்கனக்கான பார்வையற்றோரில் 100 நபர்களுக்காவது உதவிப் பேராசிரியர் பணியினை உடனடியாக வழங்க வேண்டும்.

3.      2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 107 மற்றும் 108ன்படி அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் வருகை விரிவுரையாளர்களாக பணியமர்த்தப்பட்ட அனைத்து பார்வையற்றோரையும் எவ்வித பாகுபாடும் இன்றி அரசு கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும். மேலும், இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பணி நியமணம் செய்யாத அரசு, அரசு உதவி, சுயநிதி கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

4.      அரசு, அரசு உதவி, அரசு தன்னாட்சி நிறுவனங்கள், கழகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள்,  அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995 (PWD Act 1995), மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 (RPD Act 2016) சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி பார்வையற்றோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டினை முறையாக கணக்கிட்டு, அனைத்து துறைகளிலும் உடனடியாக சிறப்பு ஆட்சேர்ப்பு மூலமாக, முதல் கட்டமாக குறைந்தது  500 பார்வையற்றோருக்காவது பணி நியமணம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட நான்கம்ச கோரிக்கைகளை ஏந்தி, கடந்த 17.02.2021 புதன்கிழமை முதல்  காலவரையற்ற காத்திருப்பு போராட்டமும், தேவைப்பட்டால் உண்ணாவிரத போராட்டமும் நடத்தவுள்ளதாக  அறிவித்தது பார்வையற்ற கல்ல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.

புதிய அரசாணை வெளியிடவோ அல்லது சட்டங்களை நிறுவவோ போராடவில்லை, மாறாக, இருக்கும் அரசாணைகளையும், சட்டத்தையும் முறையாக பின்பற்ற மட்டுமே கோரி மேற்கொண்ட போராட்டக்களம்  சந்தித்த இடையூறுகள் எண்ணற்றவை. காத்திருப்பு, அரசாணை எரிப்பு, நீதி கேட்பு, சாலைமறியல் என போராட்டத்தின் வடிவம் மாறியபோதும் , சற்றும் செவிமடுக்க மறந்துபோனது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. சளைக்காமல் துன்புறுத்தியது காவல்துறை.

தொடர்ந்து பதிமூன்று நாட்கள், அதில்  எட்டு நாட்கள் உண்ணாவிரதம் என போராட்டம் வலுவுற்று, சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் தற்காலிகமாக முடித்துக்கொள்ளப்பட்ட போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாகா அமைந்தது மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு.

கடந்த மார்ச்  11 வியாழக்கிழமை  அன்றுசென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் Phd பட்டம் பெற்றது, கல்லூரியில் பாடம் நடத்தவா…?, இரயிலில் மிட்டாய் விற்கவா..? மாற்றுத்திறனாளிகளின் துயரை கண் திறந்து பார்”  என்ற பொருண்மையில் நடைபெற்றது ஒரு கருத்தரங்கம்.

இக்கருத்தரங்கின் பதாகைகள் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி து.ஹரிபரந்தாமன் அவர்கள், கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.எஸ்.பாலன் அவர்கள், பேராசிரியர். இளங்கோவன் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் பார்வேந்தன் அவர்கள்  போன்றோரின் பங்கேற்பும் உறையும் கருத்தரங்கிற்கு நர்சிறப்பு சேர்த்தன. 

வரலாற்றுத் தருணமாய் வாய்க்கப்பெற்ற அந்த நிகழ்ச்சியின் முக்கியப் பதிவுகள் இங்கே:

மில்டன்
வழக்கறிஞர் மில்டன்

நிகழ்வின் தொடக்கமாய் வழக்கறிஞர் அருண் வழிமொழிதலில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய சென்னை கிளை செயலாளர் வழக்கறிஞர் திரு. சு. ஜிம்ராஜ் மில்ட்டன் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.

“பார்வையற்றவர்கலால் நடத்தப்பட்ட அந்த போராட்டம் சென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றும், பல ஆட்சித்தலைவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளால் கடந்துசெல்லும் வழித்தடத்தில் நடைபெற்றும் அவர்கள்  ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி கோரிக்கைகளைக்கூட விசாரிக்கவில்லை. இத்தகைய சூழலை மாற்றி, பார்வையற்றவர்களின் கோரிக்கை அரசை விரைவில் சென்றுசேர என்னென்ன வழிமுறைகள் மேற்கொள்ளவேண்டி உள்ளது, என்பதை குறித்து விவாதித்து, அதனை செயல்படுத்த, உடன் பயணிக்கவும் குரல்கொடுக்கவும்  இக்கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது” எனக் கருத்தரங்கின் அடிப்படை நோக்கத்தை முன்மொழிந்தார். மேலும், எத்திராஜ் மகளீர் கல்லூரியின் பணிக்காலியிட அறிவிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டினை முறையாக குறிப்பிடவில்லை என்பதற்காக பொதுமனு தாக்கல் செய்ய உதவி, அதனை தொடர்ந்து அக்கல்லூரி நிர்வாகம் திருத்திய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது என்றார். அத்தோடு, பார்வையற்றவர்கள் தனித்து போராடாமல் பிறரோடு இணைந்து பயணிக்கவேண்டுமெனவும் கூறி நிறைவுசெய்தார்

அவரின் உரையைத் தொடர்ந்து,  நெஞ்சுரமிக்க உறுதியோடு நிகழ்ந்தேறிய போராட்டக்களம் ஒரு குறும்படமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அந்தக் குறும்படத்தில், போராட்டம் எழுந்தமையின் காரணம் குறித்து சங்கத் தலைவர் ராஜா முழங்க, விலைபோகாப் பட்டத்தை வீட்டில் பூட்டிவிட்டு, வீதியில் பர்பி விற்கும் அரவிந்த் என்கிற பார்வையற்ற பட்டதாரியின் குரல் நெஞ்சை கனக்க வைத்தது.

பாரா ஒலிம்பிக் தொடங்கி, தான் பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் பல்வேறு பதக்கங்களைக் குவித்துவரும் பார்வையற்ற வீராங்கனை விஜேஷாந்தி தன் பேட்டியில் “நிச்சயம் வழிபிறக்கும்” எனத் தன்னைத்தானே தேற்றிக்கொண்டாலும், நமக்கோ இவருக்குக்கூட அரசு வேலை வழங்கவில்லையா என இயல்பாக மனதில் ஏக்கமாய் கேள்வி விரிந்தது, கூடவே பாரா ஒலிம்பிக் மூலம் புகழ்பெற்று, அரசின் அரவணைப்பைப் பெற்றும் அரசு உறுதியின்படி அரசுப்பணி வழங்கப்படாத  மாரியப்பன் அவர்களின் நினைவும் வந்துபோனது. அவருக்குக் கிடைத்த குறைந்தபட்ச அரவணைப்புகூட விஜேஷாந்திக்கு இல்லை என்பதை நினைக்கையில்  ஊனத்தில்கூட பேதம் பார்க்கும் அரசின் ஊனப்பட்ட அணுகுமுறை அறுவறுப்பாய்படுகிறது.

ஊனப்பட்டது நாங்கள் மட்டுமல்ல, எங்கள் துறையும்தான்

அரங்கராஜா
அரங்கராஜா

தங்கள் போராட்டத்தின் நியாயத்தை அவைக்கு எடுத்துரைக்க மேடையேறிய பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் திரு. அரங்கராஜா பேசியதுவெறும் பேச்சில்லை முழக்கம். “பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி அவர்களின் மரணத்தின் காரணம் இன்னும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. பார்வையற்றோர் அதிகம் புழங்கும் திருநின்றவூர் ரயில் நிலையத்தில்கூட சிசிடீவி இல்லை என அசால்ட்டாக சொல்கிறது அரசு. இது இன்று நேற்று தொடங்கிய போராட்டம் இல்லை. ஏன் இந்த உண்ணாவிரதத் தியாகிகளில் ஒருவரான திரு. அரவிந்த் அவர்கள் கடந்த 2010 முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் மொத்தம் 30  நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர். அதுபோலவே 2012 ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின்போது மெரினா கடற்கரை என்று கூறி காவல்துறையினரால் உத்தண்டி சுடுகாட்டில் இறக்கிவிடப்பட்ட அவலங்கள் கூட அரங்கேறி உள்ளது. அமில வீச்சும் நடைபெற்றது.” என ஆவேசம் கொண்டார்.

சூச்சும அரசாணைகள்

அரசாணை என்ற பெயரில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறெல்லாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை தகுந்த சான்றுகளுடன் ஒவ்வொரு அரசாணையையும் மேற்கோள் காட்டி, அவையில் புட்டுப்புட்டு வைத்தார் ராஜா. “பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டதாகச் சொல்லப்பட்ட அரசாணை எண்.  260   எதிர்வரும் பின்னடைவு பணிக்காலியிடங்கள் நிரப்பப்படும் என்ற வார்த்தை ஜாளத்தால் பயனற்றுப்போனது.

அரசாணை எண்.   107 படி வருகைதரு விரிவுரையாளர்களுக்கான  75% ஊதியம் கல்லூரி நிதியிலிருந்தும்,  எஞ்சிய 25% ஊதியம் அரசால் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டதே தவிர, அதுவும் எந்நிதியிலிருந்து வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறாமல் குழப்பமே மிஞ்சியது.

அரசாணை எண்.   108 ஊனமுற்றோர் நலச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீட்டினை முறையாக பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் உரிமம் இரத்துசெய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டும், இதுவரை அதற்கான பணிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை. பணியமர்த்த பணிகளும் நடைபெறவில்லை.” என அடுத்தடுத்து விரல்நுனித் தகவல்களை வீரியத்துடன் எடுத்துவைத்தார்.

 “போராட்டத்தின் 13 ஆம்  நாள் மாற்றுத்திறனாளிகள் துறையின் செயலரை சந்தித்தபோது, இவ்வாறான போராட்டம் நிகழ்வதே தனக்கு தெரியாது என கூறினார். அப்படியானால், அரசு அதிகாரிகளுக்கிடையேயான சங்கிலித் தொடர்பு அறுந்து கிடக்கிறது என்றுதானே பொருள்?” என ஆவேசத்துடன் கேட்ட அவர், “Right Scheme புதியதாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கென்ன அர்த்தமென்று ஏதாவது தகவல் இருக்கிறதா? எங்களுக்காகப் புதிய சட்டம் செய்யும் புண்ணியவான்களே! எங்களைக் கலந்தாலோசித்தீர்களா” என்று உணர்ச்சி பொங்கப் பேசியமர்ந்தார்.

பார்வேந்தன்
பார்வேந்தன்

திரு. அரங்கராஜாவைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த வழக்கறிஞர் பார்வேந்தன் அவர்கள், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் கோரிக்கை பார்வையற்றோர் உரிமை சார்ந்ததாகவே அமையும் என உறுதியளித்தார். அடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் திரு. பார்த்தசாரதி அவர்கள், பார்வை மாற்றுத்திறனாளியான திரு. வெங்கடேசன் தொடர்ந்த வழக்கினை நடத்துவதற்கான உத்வேகத்தைத் தான் வெங்கடேசனிடமிருந்தே பெற்றதாக நெகிழ்ந்தார்.

வர்க்கி சாப்பிடுவதற்கே காய்ச்சல்  வரவேண்டும்

அரசின் அலட்சியங்களைக் கடுமையாகச் சாடிக்கொண்டிருந்த  அடுத்தடுத்த பேச்சாளர்களின் முழக்கத்தால், ஒரு கட்டத்தில் அரங்கத்தில் மூச்சுமுட்டத் தொடங்கியதைப் புரிந்துகொண்டு, தன் இலகுவான பேச்சால், போராட்ட உணர்வை மெல்லக் கடத்தத் தொடங்கினார் பேராசிரியர் இளங்கோ.

“இந்த நிகழ்ச்சிக்கு நண்பர்கள் என்னை அழைத்தபோது மனம் வரவேண்டும் என்கிறது, உடலோ வேண்டாம் என்கிறது, என்றுதான் சொன்னேன். ஆனால், இறுதியில் காயத்தை மனம் வென்றுவிட்டது. அப்படி வெல்வதுதான் வெற்றி. இதுவரை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பதிமூன்று பொதுமனு தாக்கல் செய்து,  தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தினால் பின்பற்றப்பட்ட மாவட்டம்வாரியான மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டு முறையை மாற்றி, மாநில அளவிலான இடஒதுக்கீட்டினை பின்பற்ற கோரிப் போராடியிருக்கிறேன்.  இடஒதுக்கீடு தவிர எஞ்சிய பொதுப்பிரிவில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தவேண்டும் எனவும்  எனது முயற்சியால் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

நண்பர்களே! போராடித்தான் ஆகவேண்டும். இங்கு போராட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது. ‘இழப்பதற்கு உன்னிடம் எதுவுமில்லை, உன் அடிமை விலங்கைத் தவிர’ என மார்க்ஸ் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பதிலி எழுத்தர்களுக்கான தொகையினை பல்கலைக்கழகமே வழங்கவேண்டுமன்றி தேர்வர்களிடமிருந்து வசூல் செய்யக்கூடாது என வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றேன்.

காய்ச்சல் கண்டால்தான் வர்க்கி சாப்பிட முடியும் என்ற நிலையில் வாழும் மக்களைக்கொண்ட இந்த நாட்டில், அரசு எதையும் தானாக முன்வந்து செய்துவிடாது. போராடுவதுதான் ஒரே தீர்வு” ஆகவே பார்வையற்றோராகிய நீங்கள் தனித்து இல்லாமல், அனைவரையும் இணைத்துக்கொண்டு போராட வேண்டும்” என எள்ளல் கலந்த உணர்ச்சிக் கொந்தளிப்பாய் பேசி முடித்தார் பேராசிரியர் இளங்கோ.

நிகழ்வின் ஓர் இளைப்பாறலாக, ஸ்ரீஜா என்னும் வழக்கறிஞர் தனது இனிய குரலால் பார்வையற்றவர்கள் போராட்டம் குறித்து பாடல் இயற்றி பாடினார்.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளி வகைமைக்கும் தனிச் சட்டம் வேண்டும்

கருத்தரங்கில் பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலன் அவர்கள் பங்கேற்று இங்கிலாந்தைப் போன்று பார்வையற்றவர்களுக்குத் தனிச் சட்டம் “இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் என்பது லட்சம் பார்வை  மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.  லண்டனில் பார்வையற்றவர்கள் சட்டம் என சிறப்பு சட்டம் 1920  ஆண்டு ஏற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது. 102 பிரிவுகளை  கொண்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தில் பிரிவு   34ல்  மட்டும் பார்வையற்றவர்கள் ஏன்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு வகை மாற்றுத்திறனாளிகளின் தேவையும் மாறுபட்டதாகும்.  அப்படி மாற்றுத்திறனாளிகளின் வகை வாரியாக சிறப்பு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிகளை எவ்வாறு திரட்டப்படவேண்டும் உள்ளிட்ட எந்த விவரமும் இடம்பெறவில்லை.

 ஒவ்வொரு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பட்ட வகை சட்டம் இயற்றிட வழிவகை ஏதும் அச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை” என்றார்.

விவாதமின்றி நிறைவேறிய இட ஒதுக்கீடு, வீதிக்கு வந்தும் நிறைவேற்றப்படாத மாற்றுத்திறனாளிகள் சட்டம்

ஆலூர் ஷானவாஸ்
ஆலூர் ஷானவாஸ்

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தினை பார்வையற்றோரின் உரிமைப் போராட்டத்துடன் ஒப்பிட்டு, நடக்கும் அரசு யாருக்கானது என உணர்ச்சி பொங்க கேள்வியெழுப்பினார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்ஆலூர் திரு. ஷானவாஸ் அவர்கள். .

“இந்த நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தங்களின் இயல்பான தேவைகளுக்குக்கூட பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த அரசு, சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நலனுக்காக, எந்த ஒரு விவாதமுமின்றி, உடனடியாக பொருளாதாரத்தில் பின்தங்கியோர் எனச் சிலரைச் சுட்டி, அவர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்ப்படுத்துகிறது. அவசர அவசரமாக அதை அனைத்துத் தளங்களிலும் நிறைவேற்றிட துடியாய்த் துடிக்கிறது.

ஆனால், மாற்றுத்திறனாளிகள் பல ஆண்டுகளாகப் போராடி் பெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் சரத்துகளை, மாற்றுத்திறனாளிகள் சாலையில் இறங்கிப் போராடினாலும், வாரக்கணக்கில் உண்ணாவிரதம் மேற்கொண்டாலும் நிறைவேற்றவே மாட்டோம் எனப் பிடிவாதம் செய்வதைப் பார்த்தாலே இது யாருக்கான அரசு என்பது தெளிவாக விளங்கும். எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற விடுதலைச் சிறுத்தைகள் என்றென்றும் துணைநிற்கும்” என்றார் உறுதியுடன்.

அரசியலமைப்புச் சட்டமே திருத்தப்பட வேண்டும்

முத்துச்செல்வி
முத்துச்செல்வி

பங்கேற்கும் அவை எதுவானாலும், தான் பேச விழைகிற முக்கியக் கருத்துகளைத் தொகுத்து, மிகச் சுருக்கமாகவும், அழுத்தமாகவும் எடுத்துவைக்கிற அகில இந்திய பார்வையற்றோருக்கான சம்மேளனத்தின் துணைத்தலைவர் திருமதி. மு. முத்துச்செல்வி பாண்டியராஜன் அவர்கள், அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் வேண்டும் என்று சொன்னபோது, அவைநிறைந்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஆடித்தான் போனார்கள். எண்ணியெண்ணி அவர் எடுத்துவைத்த கருத்துகள் இதோ!

  1. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து  14,15& 16 சட்டத்தின்முன் அனைவரும் சமம்.  மொழி இனம் பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் யாரையும் பாகுபடுத்தக்கூடாதுஎன குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்  மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தை இடம்பெறவில்லை.
  2. மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் இயற்றுவதற்குமுன் அதன் வரைவு வெளியிடப்பட்டவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான  முதன்மை மாற்றுத்திறனாளிகள் ஆணையர்  CCPD மற்றும் மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையர் SCPD  ஒரு மாற்றுத்திறனாளியாக இருக்கவேண்டுமென்ற எங்களது கோரிக்கை அச்சட்டத்தில் இடம்பெறவில்லை.
  3. மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையருக்கு நீதிமன்றத்தை ஒத்த அதிகாரம் (Quacy Judicial  Power)  உள்ளது. ஆனால் அதனை பயன்படுத்தி எந்த ஒரு வழக்கையும் விசாரிப்பதில்லை.
  4. உச்சநீதிமன்றம் 08.01.2013 அன்று வெளியிட்ட தீர்ப்பாணையில் 1996  ஆண்டு முதல் பின்னடைவு பணிக்காலியிடங்களை கணக்கிட்டு பணிவாய்ப்பு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தும், மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் 2005 ஆண்டு முதல் கணக்கிடுவதாக அரசாணை வெளியிட்டது. பின்னர் 2017 ஆண்டு முதலே பின்னடைவு பணிக்காலியிடம் கணக்கிடப்படும் என அரசாணை  எண் 13/2020  வெளியிட்டுள்ளது.
  5. மத்திய அரசு மாற்று திறனாளிகளின் வேலைவாய்ப்பிற்காக ஒருங்கிணைந்த அலுவலக குறிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைப்போன்று மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகமும்  வேளியிடவேண்டும்.
  6. மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக வெளியிடப்படும் பணியிட பட்டியல் மத்திய அரசால் வெளியிடுவதுபோல இருத்தல் வேண்டும்
  7. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்ட விதிகளில் TN RPD Rules  வேலைவாய்ப்பு குறித்த எதுவும் இடம்பெறவில்லை மாறாக  ஆணையறது பணிகள் குறித்து மட்டும் இடம்பெற்றுள்ளது.
  8. 8000 அரசு உதவிபெறும் பள்ளிகள், 154   அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டினை முறையாக பின்பற்றுவதில்லை. இப்படி அடுத்தடுத்து கூர்மையாக அவர் சொல்லிச் சென்ற குறைபாடுகள் மட்டுமாவது களையப்பட்டாலே, மாற்றுத்திறனாளிகளுக்கான 80% பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றுகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு தோழமைக்கும் பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகள் குறித்த ஆழ்ந்த புரிதல் இருந்ததை உணர முடிந்தது. அந்த அளவிற்கு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள் அவர்களிடம் பார்வையற்றோரின் உரிமைசார் பிரச்சனைகள் குறித்து மிக தீர்க்கமாக உரையாடி, அழுத்தமான புரிதலை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது விளங்கியது. நமது உரிமைசார் பிரச்சனைகளை நமக்குள்ளும், நமது அதிகாரிகளோடும் காலங்காலமாகப் பேசிக்கொண்டிருப்பதைவிட, அதைப் பொதுவிவாதமாக்கிட என்னவெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்கிற யோசனையில், தனது முதல் முயற்சியை மிக பலமாக முன்னெடுத்திருக்கிறது சங்கம். அதேநேரம், அதன் முயற்சிக்கு நம்மவர்கள் தந்த ஆதரவு போதுமானதா என்பதை ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகமும் தங்கள் மனதின் பரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. இன்னும் அரங்குநிறை ஆதரவை நாம் அன்றைக்கு வழங்கியிருக்க வேண்டியது நமது தார்மீகக் கடமையல்லவா?

விளிம்புநிலை மனிதர்களின் உரிமைகளுக்காய் களத்தில் ஓயாது உழைக்கிற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் போன்ற மனித உரிமை அமைப்புகளிடமிருந்து சங்கம் தொடங்கியிருக்கிற பயணம், படிப்படியாக அனைத்து அமைப்புகளையிம் ஒன்றிணைத்துக் கைகோர்த்தபடி, சமூகத்தின் மையத்தை நோக்கி முன்னேறுகிற சாத்தியங்களைக்கொண்டிருக்கிறது. நன்றிகளும் வாழ்த்்துகளும்.

***

தொகுப்பு: செல்வி. K. ஷியாமலா

எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: mail@savaalmurasu.com

***

தொடர்புடைய பதிவுகள்:

முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு: ஆதரவும் வாழ்த்துகளும்

அறிவிப்பு: எதிர்வரும்் புதன்கிழமை ஆணையரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தகவல்

பகிர

2 thoughts on “களம்: விளிம்பிலிருந்து மையம் நோக்கி ஒரு வெற்றிப்பயணம்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்