மகளிர்தின ஸ்பெஷல்: சிறுகதை: பூக்கள் பூக்கும் தருணம்

பரிபூரணி

அந்திப்பொழுது ஆறுமணி அளவில் சென்னை ஸ்டெர்லிங் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இசையா தனது கைப்பையில் இருந்த வெண்கோலை விரித்து, வலதுகால் முன்வைக்கையில் வெண்கோலை இடதுபுறமும், இடதுகால் முன்வைக்கையில் வெண்கோலை வலப்புறமும் தரையில் பதித்து, போக்குவரத்து நெரிசலையும், சாலை ஓரங்களில்  நடப்பட்டிருந்த கட்சி பதாகைகளையும்  கடந்து, மெதுவாக நடந்து சென்று மேற்குப்புறம் அமைந்திருந்த தனது  வீட்டு வாசலை அடைகிறாள்.  மல்லிகா மாமி மாதர்சங்க கூட்டத்திற்கு சென்றிருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவதாகவும், வரும்வரை தூங்கிக்கொண்டிருக்கும் இனியா பாப்பாவை பார்த்துக்கொள்ளுமாறு என்னிடம் கூறிச்சென்றிருக்கிறாள் அக்கா  என்று மூச்சிரைக்க ஓடிவந்து  கூறினால் எதிர்வீட்டு சிறுமி ஸ்னேகா. கை, கால் அலம்பிவிட்டு, கட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் தனது  ஏழு மாத குழந்தையை ஸ்வர்ஷிக்கிறாள். குழந்தை ஈரமின்றி உறங்கி கொண்டிருப்பதை உறுதிசெய்ததும், அவளை கொஞ்சிவிட்டு தேநீர் தயாரிக்க சமயலறைக்கு செல்கிறாள்.  

‘பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா; – அதில்

பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா;

கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா; – எந்த

கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?’

என்ற பாடல் வரிகளாய்  ஒலிக்கிறது அவளது அலைபேசி. எடுத்து காதுக்கு செலுத்துகிறாள். எதிர்முனையில் பேசியது  அவளது பள்ளி வகுப்பு தோழி  கனகா.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆறாம் வகுப்பில் அறிமுகமான நட்பு அது. அதிர்ந்த குரலும், அடர்ந்த குழலும் உடையவள். ஆறுவிரல்கொண்ட அவள்தான் விடுதியில் தலைவார பழகாத பெரும்பாலான மாணவிகளுக்கு இரட்டைச்சடை பின்ன பழக்கிவிடுவாள்.   விடுதியின் தலைவாரும் இடத்தை அடைபவர்கள் வரிசையின்படி ஒவ்வொருவருக்கும் நேராக சீப்பைக்கொண்டு  ஒரு கோடு வார்த்து, முடியை இரண்டாய் பிரித்து, பின்னர் ஒருபுறத்து முடியினை  மூன்றாய் பிரித்து, வலப்புற பாகத்தை இடைபாகத்திற்கு மேல் வைத்து, இடப்புற பாகத்தை அதற்க்கு மேல் வைத்து, இடைப்பாகத்தை அதற்க்கு மேலுமென மாறிமாறி  ஒன்றன்மேல் ஒன்றாக பின்னி ரிப்பனை  கொண்டு  சேர்த்து  அடியில் பின்னி மடித்து இறுக்கமாக கட்டி, எஞ்சியிருக்கும் ரிப்பனை பூப்போன்று சுங்கு வைத்துவிடுவாள். ஓரிரு மாத காலம் மட்டுமே இவ்வாறு செய்துவிட்டு பிறகு அவரவரையே பழக வைப்பாள். அந்த வரிசையில் தொடர்ந்த நட்புதான் இது.

கைவேலை பாடப்பிரிவில் ஒயர்கூடை பின்னல், துணிப்பை தைத்தல்  உள்ளிட்டவற்றையும் விரைவில் புரிந்துகொண்டு, நேர்த்தியாக செய்து, பிறருக்கும் கற்று தருவாள். ஆனால், பாடங்களை கற்க சற்று சிரமப்பட்டதால், நெசவு பிரிவிக்கு விருப்பமின்றி  தள்ளப்பட்டால் அவள். நாள்முழுவதும் நெசவு வேலைசெய்த  அலுப்பை போக்கிக்கொள்ள மாதம் ஒருமுறை அவளது ஒவ்வொரு தோழிகளையும்  அலைபேசியில் அழைத்துவிடுவாள். இன்றும் அதுபோலத்தான் அழைத்திருக்கிறாள். இருவரும் ஒருவர் ஒருவரை நலம் விசாரித்து கொள்கிறார்கள் அவ்வாறே தனது தோழி மாளவிகாவை கூட்டு அழைப்பில் அழைக்குமாறு கூறுகிறாள் கனகா.   உடனே அழைக்கிறாள்.

‘ஆணின் இனம் அது கிளை மாதிரி

பெண்ணின் இனம் அது வேர் மாதிரி

கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே

வேர் பேசினால் அதை யார் கேட்பது?’

என்ற பாடலுடன் இணைக்கிறது அந்த அலைபேசி அழைப்பு. வீட்டில் அனைவரும் தனது சகோதரனின் நண்பர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றுவிட்டதாகவும், உடன் பணியாற்றும் சக பணியாளரது  திருமண  நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் வீட்டிலேயே இருப்பதாகவும், இன்றாவது சமயலறைக்கு சென்று தனக்கு மட்டும்  ஏதாவது உணவு தயாரித்துக்கொள்ளலாம் என்றெண்ணியபோது, வீட்டின் பணிப்பெண்  சிற்றுண்டி தயாரித்து மேசையின்மீது வைத்திருப்பதாக சொல்லிவிட்டு புறப்பட்டதால், அந்த எண்ணத்தையும் கைவிட்டுவிட்டதாகவும் அவளது மனக்குமுறல்களை கொட்டித்தீர்க்கிறாள் மாலவிகா.  

அடுத்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அழுவதாக அரைகுறையாய் அனுமானித்தபடி இருவரிடமும் விடைபெற்று, அலைபேசி இணைப்பை துண்டிக்கிறாள் இசையா. அப்போது வீடு நுழைந்த அவளது மாமியார், “வேலைமுடிந்து வீடுவந்ததும் அலைபேசியும் கையுமாகவே இருப்பதா? காலை நேரந்தான் உன் குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றால்,  மாலையிலாவது சற்று நாடகம் பார்க்க விடுகிறீர்களா? உன் குழந்தை நாள்முழுவதும் என்னையே சுற்றிவருகிறது. அதிகம் அடம்கொள்கிறது. அனைத்தையும் தூக்கி எரிகிறது” என்ற அவளது தினசரி குற்றப்பத்திரிகையை வாசிக்க ஆரம்பிக்கிறாள் மல்லிகா. “சரி அதை விடுங்கள் அத்தை. பெரியவளானால் சரியாகிடும்”  என்று கூறி சமாளிக்க முயல்கிறாள். அதை சிறிதும் செவிக்கு செலுத்திக்கொள்ளாமல், “ஒரு வாரத்திற்கு உன் பெற்றோரை அழைத்து பார்த்துக்க சொல்லு இல்லையென்றால் வேளையில் விடுப்பு எடுத்துக்கொண்டு பார்த்துக்கோங்க நான் மாதர் சங்க குழுவோடு சிம்லா சுத்தி  பாக்க போறோம்” என்று கூறி தனது நீண்ட பேச்சை நிறைவுசெய்கிறாள் மாமி மல்லிகா.

காதல் திருமணம், அதுவும் கலப்பு திருமணம்  என்ற காரணத்திற்காக தனது திருமணத்திற்குகூட வரமருத்து, ஆனால்  ­மகனின் காதலை மட்டும் ஏற்றுக்கொண்டு, ஆதரித்துவரும் பெற்றோரை இப்பொதுமட்டும் குழந்தையை பார்த்துக்கொள்ள அழைப்பது, சரியானதாக இராது. அவ்வாறு கேட்டு அவர்கள் வர மறுத்தால், அது மனதை மிகவும் காயப்படுத்திவிடுமே,  என்பதை எண்ணி, தனது தோழி மாளவிகாவை  அழைத்துக்கொள்ளலாம் என முடிவுசெய்கிறாள் இசையா. பலகாரங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கவும், சுற்றுலாவிற்கு தயாராகவும் தனது அத்தைக்கு உதவுகிறாள் இசையா. 

அத்தை ­விடைபெற்றதும், மாளவிகாவும் இசையாவும்  பணியில் இரண்டு வாரங்கள் விடுப்பெடுத்துக்கொண்டு இருவரும் சேர்ந்து குழந்தையுடன் நேரத்தை செலவிடுகின்றனர். நன்கு படித்து, நல்ல பணியில் இருந்தும், பார்வையுள்ள மணமகனை எதிர்பார்த்து, காலம் கடந்தும் மணமுடிக்காததால், தனது குடும்பத்துடன்  வாழ்ந்துவருகிறாள். இயன்றால் எப்பணியினையும் செய்ய துடிக்கும் துணிவு பெற்றிருந்தும், குடும்பத்தினரால் அனுமதிக்கப்படாமல், கூட்டுக்குடும்பமென்றாலும் கூட்டுக்குள் அடைக்கப்பட்டவள்போல் இயன்ற எதையும் செய்ய இயலாமல் மேசைக்கு வரும் வெந்த உணவை மட்டும் உண்டு பழகிய மாளவிகாவிற்கு இசையாவின் இல்லம் மிகுந்த இன்பத்தை அளித்தது. எதோ கூட்டிற்குள் இருந்து சுதந்திரம் பெற்றதுபோன்ற ஒரு  எண்ணம் அவளுக்கு.  அவளாகவே சமயலறைக்கு சென்று சிறப்பு  பள்ளியில் கற்றுத்தந்தவற்றை நினைவுகூர்ந்து பழக்கமுயல்கிறாள்.  இருவரும் இணைந்து வீட்டுப் பணிகளையும் குழந்தையை பராமரிக்கும் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

இசையா   குளீர்சாதனப்பெட்டியிலிருந்து அரைத்துவைத்த மாவை எடுத்து, உப்பும் ஒரு சிட்டிகை சோடாமாவும், சிறிது தண்ணீரும் சேர்த்து கலந்து, நன்கு கரைத்து இட்டலி பாத்திரத்தின் கால்பாகத்திற்கு கீழ் தண்ணீர் நிரப்பிவைத்து, இடதுகையில் இட்டலி தட்டை பிடித்துக்கொண்டு, எண்ணெய் பாத்திரத்தில் கரண்டியை விட்டெடுத்து கரண்டியின் பின்புறத்தை வைத்து, இட்டலி தட்டின் குழியில் தேய்த்து, மாவை கட்டியாக எடுத்து இட்டலி குழியில் இட்டு, நிரப்பி மூடியை கொண்டு மூடி அவிக்க, , மாளவிகா காய்ந்த மிளகாயையும் கடலைப்பருப்பையும்  பிறகு கிள்ளிவைத்திருந்த புதினாவையும் மல்லியையும் எண்ணெயில் வறுத்து, சிறிது புலியும் சேர்த்து மின் அம்மியில் அரைத்து சட்டினி  தயாரிக்கிறாள். மாளவிகாவின் வீட்டில் மூன்றுவேளை உணவும் பணிப்பெண்தான் தயார்செய்வார்கள். அவர்கள் விடுப்பெடுத்துக்கொண்டாள், அனைவரும் சேர்ந்து பெரிய உணவகத்திற்கு சென்றுவிடுவார்கள். அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் சமைக்க மறந்துபோயிருக்கும் நிலையில் மாளவிகா செய்ததை ருசித்து உண்ட இசையா  ஆச்சரியத்தோடு வினவ முயன்றதை அனுமானித்து, மாளவிகா அவளாகவே முன்வந்து அதற்க்கு விடையளிக்கிறாள்.  

“எனக்குவரன் தேடும் படலம் தொடங்கியபோதே சமயலின்மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. தேடித்தேடி வளையொலியில் பல சமையல் குறிப்புகள் பார்ப்பதையும், அதை பிறையிலில் குறிப்பெடுத்துக்கொள்வதையே ஒரு பெரும்பணியாக மேற்கொண்டிருக்கிறேன். மேலும், ­அதை பார்வையற்றவர்கள் தனியாக எவ்வாறெல்லாம் மேற்கொள்வதென்றும் பலமுறை சிந்தித்திருக்கிறேன். எனக்கும் எங்கள் வீட்டு பணிப்பெண்ணுடனான உரையாடல் பெரும்பாலும் சமையல் குறிப்பு தொடர்பானதாகவே இருக்கும். அவர்கள் வீட்டு மாடியில் ஒரு  பார்வையற்ற தம்பதியர் தனியாக வாழ்ந்துவருவதையும் அவர்களது வீட்டு பராமரிப்பு குறித்து வியந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவைகளுள் சில குறிப்புகளையும் என்னுடன்   பகிர்ந்துகொள்வார்கள். இது வெறும் சட்டினிதானே. இதயும் தாண்டி எனக்கு பலவகை சைவம் மற்றும் அசைவம் உணவு செய்முறை நன்கு தெரியும். ஆனால், அதை செய்து பார்க்கத்தான் வாய்ப்பு கிடைக்கவில்லை. உன்னைவைத்து அச்சோதனைகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் நீ அழைத்ததும் பள்ளியில் விடுப்பெடுத்துவிட்டு  உன்னுடன் இருக்க  ஒப்புக்கொண்டிருக்கிறேன்”  என்கிறாள் மாளவிகா.

அதற்க்கு இசையா,  தன்னை முதல்முறை தந் தாய் சட்டினி தயாரிக்க பணித்தபோது மின் அம்மியில் அரைத்தவற்றை வானலியில்  தாளித்து வெகுநேரம் கிளறிக்கொண்டிருந்ததையும், அது கேசரிபோல் கெட்டியானதையும், அந்த நேரம் தற்செயலாக வீடு நுழைந்த தந் தமக்கை பார்த்து சிரித்துவிட்டு, “வானலியில் தாளித்துவிட்டு, அதனை இறக்கிவைத்து, பின் அரைத்தவற்றுடன் தாளித்தவற்றை சேர்த்து கலக்கவேண்டுமென்று” கூறியதை சொல்லி  நகைத்தனர். அதுமுதல் எந்த உணவாயினும், என் இட்டலி பொடி அரைப்பதைக்கூட ஒருமுறைக்கு பலமுறை பல வளையொலி சேனல் குறிப்புகளை கேட்டுக்கொண்ட பின்பே சமயலறைக்கு செல்வேன் என்றால்.

அந்த நேரம்  தெருவில் வாழைப்பூ வியாபாரம் செய்வது இருவரின் காதுக்கு எட்டவே, இவ்வாறு வீட்டில் இருக்கும்போதுதான் வாழை பூவை சுத்தம் செய்து சமைக்க இயலும் என்று இசையா கூறவே, அரட்டையை நிறுத்திக்கொண்டு  அதனை வாங்க செல்கின்றனர். வாழைப்பூவை உரித்து, அந்த பூக்களின் கீழ்பாகத்தில் புள்ளிபோன்று  அடிபாகத்தை கொண்டுள்ள நாரினை நீக்கிவிட்டு, சிறிதுசிறிதாய் நறுக்கி அதனுடன் முருங்கைக்கீரையும் சேர்த்து சுவையான பொரியல் ஒருபுறம் தயாராக, வெண்டைக்காய் புளிக்குழம்பும் மோர்குழம்பும் மறுபுறம் தயாராகிறது. சனிக்கிழமை என்பதால் கனகா உள்ளிட்ட அவளது தோழிகள் நாள்வரை வீட்டிற்கு அழைத்திருந்தால் இசையா.

இனியாவை முதல்முறை பார்க்கவருபவர்களெல்லாம் பரிசு பொருட்கள் வழங்க, வந்தவர்களுக்கு இசையா  உணவு பரிமாற, பின்பு தோழிகளெல்லாம் சேர்ந்து பாடல்கள் பாடி,  பழைய நினைவுகளை பகிர்ந்து, மனம்விட்டு உரையாடி மகிழ்ந்திருந்தனர்.

அவரவரது தோழிகளின் தற்போதைய நிலைகளை குறித்து பகிர்ந்துகொண்டிருக்கையில், ஒருசிலர் நிலையான  வேலையின்றி நடைப்பகுதிகளில் வியாபாரம் செய்துகொண்டிருப்பதாகவும், அதனால் ஈட்டும் சிறு வருமானத்தை கொண்டு வாழ்க்கையை நகர்த்த பெரும் அவதியுறுவதையும் குறித்த உரையாடல் ஏற்படுகையில், பள்ளி அல்லது கல்லூரிகளிலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும் ஏதாவது  உணவகங்கள் பெட்டி கடைகள் போன்றவற்றை இருந்த இடத்திலிருந்தே நடத்த அனுமதி பெற்று, அதற்கான முன்பணத்தை நாம்  அவர்களுக்கு ஏற்பாடு செய்து தரலாமே? அல்லது நாமே கொடுத்து உதவலாமே? அப்படி நேர்ந்தால் நான் விடுமுறை நாட்களில் அங்கு சென்றாவது எனது விருப்ப சமையல்கலை செய்து திருப்தியுறுவேன்  என்று மாளவிகாவிற்கு உதித்த சிந்தனை துளிகளை சிதறவிடுகிறாள். சரி முயற்சி செய்யலாம் என அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

ஏலக்காய் தேனீர் வேண்டுமா அல்லது இஞ்சி தேநீர் வேண்டுமா என ஒவ்வொருவரையும் வினவிய இசையாவிற்கு ஏலக்காய் தேநீர்தான் வேண்டும் சோடாமாவு தேநீரல்ல  என்று உறக்கச்சொல்லி சிரித்தாள் மானசா. “அது என்ன சோடாமாவு தேநீர்?” என குமுதா கேட்க, “ஏலக்காய் பொடி அரைத்துவைத்திருந்த பாட்டிலில் அப்பொடி தீர்ந்துவிட்டதும், தந்  தாய்  அதில் சோடாமாவினை நிரப்பியிருந்தார். ஆனாலும் அந்த வாசனை  அவ்வாறே இருந்ததால், ஏலக்காய் பொடியென்றெண்ணி கொதிக்கும் தேநீரில் சோடாமாவை தூவியதை கண்டு, தாய் நடந்தவற்றை கூறி பின்னர் அந்த தேநீரை கீழே ஊற்றிவிட்டோம். நினைவாற்றலும் நுகர்வுத்திறனும் தொடுதல் மூலம் பொருட்களை உணரும் திறனே பார்வையற்ற பெண்கள் தன்னிச்சையாகவும் சுவையாகவும் சமையல் செய்ய மிக அவசியமாகிறதல்லவா ? அதிலும், பார்வையுள்ளவர்களோடு சேர்ந்து சமையலறையை பயன்படுத்தும்போது  அவர்கள் நமக்கு தக்கசமயம் உதவுவார்கள் என்பது மகிழ்ச்சியானதாக இருந்தாலும், பொதுவாக அவர்கள் பார்வையையே நம்புவதால் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காமல் மாற்றிமாற்றியே வைப்பார்கள். அதனை தேடி கண்டுபிடித்து உரிய நேரத்தில் சமைத்துமுடிப்பதே நமக்கான மிக பெரிய சவாலாகி விடுகிறதல்லவா? என் தாயே ஒருமுறை உப்புமா செய்ய ரவையென்றெண்ணி சர்க்கரையை கொடுக்க, அதையும் நான் கிளற, அது கெட்டியாகாமல் இறுக, சுவைத்துப்பார்க்கயில் அது இனிக்க, பின்னர்தான் அதில் தான் சர்க்கரை நிறப்பிவைத்தது நினைவிற்குவர, போன்ற  நிகழ்வெல்லாம் எங்கள் வீட்டில் அரங்கேறி உள்ளது. அதுபோலத்தான் எனது சோடாமாவு தேநீரும்” என்று சொல்லிவிட்டு தேனீர் தயாரித்து அனைவருக்கும் கோப்பைகளில் வழங்குகிறாள் இசையா.

தேநீர் அருந்தியதும், தனது பள்ளியின் பெற்றோர்தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தன்னை அழைத்திருப்பதாகவும், அதில் சிறப்புரை ஆற்றிட தகுந்தவற்றை கூறும்படி கேட்கிறாள் மானசா. அதற்க்கு உடனே மாளவிகா “பார்வையற்ற பிள்ளைகளின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒவ்வொருவரையும் பார்வையுள்ள குழந்தைகளுக்கு இணையாய் சமூகத்தில் பங்கேற்க தேவையான முகபாவனைகள், உடற்பாக அசைவுகள், தன்னிச்சையாக தனது பணிகளை மேற்கொள்ள தேவையானவை உள்ளிட்டவற்றை தவறாது கற்றுத்தந்து, அதை அவர்கள் முறையாக பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்ள வேண்டுமென்பதையும், பிரெய்ல் எழுத்து போன்றே பார்வையுள்ளவர் பயன்படுத்தும் வரி எழுத்துக்களையும் பழக்கவைத்து, கையொப்பம் இடவும் கற்றுத்தர வேண்டுமென்பதையும் கூறிவிட்டு, பார்வையுள்ளவர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியின் காரணங்களை நன்கு அலசி ஆராய்ந்து, அதனை செயல்படுத்த சிறுவயதிலிருந்தே கற்றுத்தர முயலவேண்டும்  என்றும் கூறு” என்கிறாள். 

அவள் பேசி முடிக்கும்வரை பொறுமை காத்த பூமிகா பின் தொடர்கிறாள்.  “பார்வையற்ற பெண்களை எட்டாம் வகுப்புவரை விடுதியில் தங்குவதை கட்டாயமாக்கி, பெண் சார்ந்த அடிப்படை பணிகள், அழகியல், சமையல்  உள்ளிட்ட  அனைத்தையும் முறையாகவும், நேர்த்தியாகவும், தன்னிச்சையாகவும் மேற்கொள்ள பயிற்சி வழங்கிட வேண்டும் என்பதையும் தவறாது கூறிவிட்டு, நீ பேசியதய் பதிவு செய்து பின்னர் அதனை நமது புலனக்குழுவில் பதிவிடு” என்று கூறுகிறாள்.

கடிகாரம் ஆறுமுறை மணி அடித்ததும் அனைவரும் இசையாவின் வீட்டைவிட்டு புறப்பட தயாராகி, விடைபெற்றுக்கொண்டு அவரவர் வீடு நோக்கி செல்கின்றனர் பேசிக்கொண்டனவற்றில் சிலவற்றையேனும் செயலாக்கிட வேண்டும் என்கிற எண்ணத்தைச் சுமந்தபடி.

***

தொடர்புக்கு: paripoorani2410@gmail.com

***

ஆயுள் காதலன் சிறுகதை

சவால்முரசு

4 thoughts on “மகளிர்தின ஸ்பெஷல்: சிறுகதை: பூக்கள் பூக்கும் தருணம்

  1. பூக்கள் பூக்கும் தருனம் என்னும் சிறு கதை பல்வேறு அனுபவத்தை பகிர்ந்தவிதம் மிகவும் அருமை மின் அம்மி இந்த வார்த்தை சிறப்பு

    Like

  2. பூக்கள் பூக்கும் தருனம் என்னும் சிறு பல்வேறு அனுபவத்தை சுட்டி காட்டி இருக்கிறது நல்ல முயற்சி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s