மகளிர்தின ஸ்பெஷல்: இருளும் ஒளியும்

ஆசிரியர் கலைச்செல்வி
ஆசிரியர் கலைச்செல்வி

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு,  கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு. முதுகலை விலங்கியல் முடித்து, இளநிலைக் கல்வியியலில் பட்டம் பெற்று, ஒரு தனியார் பள்ளியில் வெற்றிகரமான அறிவியல் ஆசிரியராக வளம் வந்தவர்தான் திருமதி. கலைச்செல்வி. கணவர் காவல்த்துறையில் உயர் பொறுப்பு வகித்தவர்.  ஆங்கிலக் கவிஞன் ஜான் மில்டனைப்போல நடுவயதில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்துக்கொண்டிருந்த இருளின் அந்தத் தருணங்கள் ஆழ் மனதின் அழியா நினைவுகளாய் எப்போதும் அவர் உடன்வரக் கூடும். ஆனால், மூழ்கியவர் அமிழ்ந்துவிடவில்லை, அதிரடியாய் எழுந்தார்.

தான் விரும்பியபடியே கல்வி, வேலை என வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிய அவருக்குத் தோள் கொடுக்க ஓர் ஆண்மகனும் வந்துசேர இனியென்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு. அரவணைப்பான குடும்பத்தலைவியாய், கனிவும் கண்டிப்புமான ஆசிரியராய் இரு பாத்திரங்களிலும் ஜொளிக்க விரும்பியவருக்கு அவரது 33ஆவது வயதில் நிகழ்ந்தது அந்தத் திருப்பம். “இதோ பாரும்மா! உங்க அப்பா புரிஞ்சுகிட மாட்டேன்கிறார். அவரச் சொல்லித் தப்பில்ல. ஆனா நீ எம்எஸ்சி சுவாலஜிங்கிறதால, உனக்குக் கண்டிப்பாபுரியும். உன்னோட விழித்திரை செல்கள் பாதிப்படைஞ்சிருக்கு. இதுக்கு ரெட்டினாய்ட் பிக்மன்டோசானு பேரு. இதுக்கான சிகிச்சை இப்பவும் ரிசர்ச் ஸ்டேஜ்லதான் இருக்கு” என்று சங்கர ந்ஏத்ராலயாவின் தலைமை மருத்துவர் சொல்லச் சொல்லக் கண் முன்னே அந்த இருள் பூதத்தின் பேருருவம் விரிந்தபடியே இருந்திருக்கிறது கலைச்செல்விக்கு.

கணவருடன் கலைச்செல்வி
கணவருடன் கலைச்செல்வி

இனி பார்வைக்கே வாய்ப்பில்லை, இருப்பதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டேதான் போகும் என்ற நிலையில், ஒரு மனைவியாய், தாயாய், புகுந்த இடத்தில் தன் இருப்பைப் பெருமையோடு முன்வைக்க விரும்பிய   அவருக்குப் பேரதிர்ச்சி. எண்ணற்ற கனவுகளும் கற்பனைகளும் கொண்டிருந்த தனது வண்ண உலகம் வசீகரமிழந்துவிடப்போகிறது என்ற உண்மைக்கு முகம் கொடுக்க நேர்கிற ஒரு பெண்ணின் மனநிலையை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட இயலாது.

இதை எப்படிச் சொல்வது?  யாருக்கெல்லாம் விளக்குவது? தன்னிலையை எண்ணி அவர்கள் பரிவுகொள்வதும் கூட கலைக்கு ஒரு சுமையாகத்தானே தோன்றும். உண்மையில் அவர் நினைத்ததுபோல எதுவும் கடினமாக இல்லை. கணவர் உட்பட அவர் குடும்பத்தில் அனைவருமே மிக விரைவாகவும் எளிதாகவும் ஏற்றுக்கொண்டார்கள். தங்களுக்கே இது மிகப்பெரிய வலியென்றால்,இதை நேரடியாக அனுபவிக்கும் தன் மனைவிக்கு இது எத்தகைய வேதனை அளிப்பதாக இருக்கும் என்று யோசித்த மறுகணமே, காயங்களுக்குக் களிம்பு பூசுவது மட்டுமல்ல, மொத்தமாக வடுவறியாப் புது மனுஷியாய் தன் மனைவியை மாற்றுவது என முடிவு செய்தார் கணவர். அவரின் ஒத்துழைப்போடு பார்வையற்றோருக்குக் கற்பிக்கும் சிறப்புப் பயிற்சி முடித்து, பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்ந்த்உ, இன்று பதவி உயர்வு பெற்று முதுகலை ஆங்கில ஆசிரியராக அதே வெற்றிமுகத்துடன் பயணிக்கிறார் கலைச்செல்வி.

“வாழ்க்கைல எனக்கு நடந்தது ஒரு திருப்புமுனைதான். ஆரம்பத்தில அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் பிரியட் ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா நாம மனம் தளரவே கூடாது. முதலில் அங்கே இங்கேனு மோதிக்குவேன். அப்புறம் எல்லாம் பழகிடுச்சு. இப்பவும் வீட்டுல எல்லா வேலையும் நான் பார்த்துடுவேன். தோசை சுடுறது, புடவையோட முன்பின் பக்கங்கள் பார்க்கிற சின்னச் சின்ன கஷ்டங்களையும் என் குடும்பத்தோட உதவியோட எளிதாக் கடந்திட முடியிது” என்கிறார் பெருமிதமாக.

வரைவது என்கிற தனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு, முக்கிய இதழ்களைப் படிப்பது என சில விஷயங்களை வாழ்க்கையில் தன் பார்வையிழப்பால் தவறவிட்டிருப்பதாகச் சொல்லும் கலைச்செல்வி, ஒரு குடும்பத் தலைவியாக குடும்ப விழாக்களில் நிகழ்த்தப்படும் சடங்குகளில் முன்புபோல ஈடுபடுவதில்லை என்கிறார். அத்தகைய கூடுகைகளில் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டாலும், தன்னைப் போன்ற பார்வையற்றவர்கள் அழைக்கும் குடும்ப விழாக்களில் பங்கேற்பதே தனக்கு அதிக நிறைவை அளிப்பதாகச் சொல்கிறார்.

“என்னோட மகன்கள் அவுங்களோட சின்ன வயசிலேயே எனக்குப் பார்வை போயிட்டதால அதைப் பற்றிப் பெருசா யோசிக்க அவுங்களுக்கு அவகாசம் இல்ல. இப்போ ரெண்டுபேருமே பெருசாயிட்டாங்க. எதையுமே எனக்குப் புரிய வைக்க ரொம்பவே மெனக்கெடுவாங்க. அதுபோல எனக்குப் பார்வை இல்லங்கிறதெ்லாம் அவுங்க ஒரு குறையாவே நினைக்கிறதில்ல” என்பவர் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்குக் கற்பிக்கும் தனது ஆசிரியர்ப் பணியில் தன்னால் முழு ஈடுபாட்டுடனும் உத்வேகத்துடனும் செயல்பட முடிவதாகப் பூரிக்கிறார். “ஒரு அறிவியல் ஆசிரியரா பார்வையற்ற மாணவர்களுக்கு என் பாதி வாழ்க்கை வரைக்கும் நான் பார்த்ததை விளக்குறதுங்கிறது சவாலான அதேநேரம் சுவாரசியமான ஒரு முக்கியப்பணி. அவுங்க நான் விளக்குறதைப் புரிஞ்சிட்டு ஆமோதிக்கிற அந்த நிமிஷம் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.” என்னோட பார்வை இழப்பிற்கும் ஒரு அர்த்தம் இருக்குன்னு நான் உணர்கிற தருணங்கள் அவை” எனச் சிலிர்க்கிறார்.

இந்தக் கரோனா ஊரடங்கு காலத்திலும் தன் மாணவர்களுக்குக் கூட்டழைப்பு மற்றும்  வாட்ஸ் ஆப் வழியாக ஒலிப்பதிவுகளை அனுப்புவதன் மூலமும் தன் கற்பித்தல் பணியை உற்சாகமாகத் தொடரும் ஆசிரியர் கலைச்செல்வி, “எந்ந்தச் சூழ்நிலையிலும் பார்வையற்ற பெண்கள் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் மட்டும் விட்டுடவேகூடாது. வேலைமட்டும் இல்லை, நாம குடும்பத்திலையும் சாதிச்சாதான் நம்மல இந்த சமூகம் ஒரு பார்வையற்ற பெண்ணா பார்க்காம ஒரு சராசரிப் பெண்ணாப் பார்க்கத் தொடங்கும்”என்கிறார் அழுத்தமாக.

***

ஆசிரியர்க்குழு

தொடர்புக்கு: mail@savaalmurasu.com

***

சின்ன விஷயம்தான்

சவால்முரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s