நோதல் வேண்டாம் தோழர்களே!
நோன்பு துறங்கள்.
பசித்திருந்தது போதும்,
உணவு எடுங்கள்.
காந்தியையே மறந்தவகளுக்கு
காந்தியமொழி புரியாது; – நம்மைக்
கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம்
கண்ணியம் எதுவும் தெரியாது.
இன்று நம் முழக்கங்கள் நிறைக்கும் இந்த
முற்றத்திற்கு நாம் முடிந்த மட்டும்
எத்தனைமுறை வந்து சென்றோம்,
எண்ணிச் சொல்ல இயலுமா இவர்களால்?
கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும்
இடற்றும் பள்ளங்கள், ஏமாற்றும் மேடுகள்,
அரற்றும் சாலைகள் என அத்தனையும் கடந்து
ஆண்டாண்டு கோரிக்கைகளோடு அலுவலகம் புகுந்தால்
ஐயா இல்லை என அடித்துப் பொய் சொல்வார்களே!
இருந்தும் பலமுறை நாம் ஏறிய படிகள் எல்லாம்
எடுத்துக் கூட்டி ஒரு
ஏணி சமைக்கப் புகுந்தால் –
பரந்த ஆகாயத்தையும்
படுத்துக்கொண்டே தொட்டிடலாம்.
புரியவே கூடாதென்ற போற்றுதல் நோக்கத்தில்
இவர்கள் வடிவித்த அரசநெறி வரையறைகளைச்
சொற்பிரித்து, பொருள்கூட்டி, நம்
உரிமைக் குரல்களோடு உட்கார்த்தி, ஒன்றுகூட்டி,
எழுதி எழுதி எடுத்து வந்து
கொடுத்துக் கொடுத்து நாம்
குவித்த கோரிக்கை மடல்களின்
மலை உயரம் மறுக்க ஒண்ணுமா இவர்களால்?
உண்மையும் நம்பிக்கையும் கொண்டு – நாம்
உயிருறுக்கி உருவாக்கிய
உரிமை ஆவன அக்கினியின் தகிப்பால் – இவர்களின்
தனியறைக் குளிரூட்டிகளே தடுமாறிப் போன
தருணம் மறந்தார்களே!
எத்தனையோ வழிகள் சொன்னோம்,
எத்தனை முறை உரையாடினோம்,
“நிச்சயமா, கண்டிப்பா,
எழுதுகிறோம் கோப்புகள்,
இங்கே இவரிடம்,
அந்த மேசையில் அவரிடம்,
எங்கே போனது,
நாளை, அடுத்த நாள்,
இன்னும் ஒரே மாதம்,
இந்த வாரம்தான் இறுதி,
ஒரே ஒருநாள் பொறுங்க,
அடடா! அவர் லீவு,
நாளை வாங்க,
நாளைக்கு மறுநாள்,
அவர் டிரான்ஸ்ஃபர்,
புதிதாய் கோப்புகள்,
நாளை , , , , …”
வார்த்தைச் சம்பிரதாயங்களால் வருடக் கணக்காய் – நம்
வாழ்க்கை தின்றார்களே!
அமைதியாய், அசட்டையாய், – நம்மை
இவர்கள் அலைக்கழித்த காரணத்தைக்
ஏன் என்று கேட்கத் தலைபட்டால்,
குரலுயர்த்திகள் நாம் என்று
குரலேதும் இன்றித் தன்
கூட்டத்திற்கு சைகை செய்வார்களே!
நலமும் மறுவாழ்வும்
நாளெல்லாம் பேணுவார்கள்,
யாருக்கு என்பதெல்லாம்
ஊருக்கே தெரியும் தானே! – ஆகவே,
போதும் தியாகிகளே!
முடித்திடுங்கள் உங்கள்
உயரிய உண்ணா நோன்மை, –
பொம்மை அதிகாரங்களுக்குப்
புரியாது உயிரின் மேன்மை.
***
ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
பொம்மை அதிகாரிகள் கவிதை இன்றைய நடைமுறையில் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தை நன்றாக சுட்டிக்காட்டியுள்ளார்
பொம்மை அதிகாரிகள் கவிதை இன்றைய நடைமுறையில் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தை நன்றாக சுட்டிக்காட்டியுள்ளார்