தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 5: சைலன்ஸ் (Silence) (தமிழ்த் திரைப்படம்.

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.

கா. செல்வம்

சைலன்ஸ் போஸ்டர்
சைலன்ஸ் போஸ்டர்

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவான “சைலன்ஸ்” திரைப்படம், கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக இணைய வழியில் (O.T.T) வெளியிடப்பட்டது. சைலன்ஸ் திரைப்படம் முழுவதுமாக வெளிநாட்டிலேயே நடக்கும் கதையம்சம் கொண்ட, வெளிநாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இணைய வழியில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி, பிறகு ஏமாற்றத்தைத் தந்தது போலவே இத்திரைப்படமும் இருந்தது. ஆனாலும் நமது தொடரின் சார்பாக இத்திரைப்படத்தைப் பாராட்டி உச்சி முகர்வதற்கு நிறையவே அம்சங்கள் உள்ளன. அதாவது திரைக்கலை அடிப்படையில் ஏமாற்றத்தையும் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரக் கட்டமைப்பு அடிப்படையில் நம்பிக்கையையும் ஏற்படுத்திய மிக முக்கியமான திரைப்படம் “சைலன்ஸ்”.

கதைச் சுருக்கம்:

திரைப்படத்தின் நாயகியான அனுஷ்கா ஒரு ஓவியக் கலைஞர் மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி ஆவார். அவரது காதலர் மாதவன் உலகப்புகழ்பெற்ற செல்லோ இசைக் கலைஞர் ஆவார். நகரத்தின் ஒதுக்குப்புறமான, பழைய வீட்டில் இருந்து காயம்பட்ட அனுஷ்கா தப்பித்து ஓடி வருவதாகத் திரைப்படம் தொடங்குகிறது. வீட்டிற்குள் சுவற்றில் அறையப்பட்ட நிலையில் மாதவன் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஷ்காவிடம் விசாரணையைத் தொடங்குகிறார் காவல்துறை அதிகாரி அஞ்சலி. அந்த வீட்டில் இருக்கும் பழமையான ஓவியம் மற்றும் அந்த வீட்டின் அமானுஷ்யம் போன்றவை மாதவனின் மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தொடங்குகிறது. பிறகு வழக்கமான திரில்லர் திரைப்படங்களைப் போலவே அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என ஒவ்வொருவரையும் கைகாட்டிக் கொண்டே திரைக்கதை நகர்கிறது.

அடுத்தடுத்த திருப்பங்களில் ஒன்று கூட சுவாரஸ்யமான திருப்பமாக இல்லை என்பது மட்டுமின்றி மையக்கதையே வழக்கமான கதைதான். சிகப்பு ரோஜாக்கள், ஊமை விழிகள், மன்மதன் திரைப்படங்களைப் போல தவறான பெண்களைக் கொலை செய்யும் நாயகனின் கதைதான் இத்திரைப்படம். ஆனால் மற்ற திரைப்படங்களில் இப்படிப்பட்ட நாயகன் மீது அனுதாபம் ஏற்பட்டு மன்னிக்கப்படுவதாகத் திரைப்படம் நிறைவடையும்; இத்திரைப்படத்திலோ நாயகனான மாதவன் கொல்லப்படும் காரண காரியம் கூடுதல் அடுக்காகச் சேர்க்கப்பட்டு இருக்கும். ஆகவே மாதவன் ஏன் கொலை செய்யப்படுகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கூடுதல் மையக்கரு. ஆனால் அந்தத் திருப்பமும் கூட எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆக ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டிய திருப்பம், தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

செவித்திறன் மாற்றுத்திறனாளியாக அனுஷ்கா:

மெதுவாகப் பேசச் சொல்லும் அனுஷ்கா
மெதுவாகப் பேசச் சொல்லும் அனுஷ்கா

வாலி திரைப்படத்தில் அஜித்குமார் மற்றும் மொழி திரைப்படத்தில் ஜோதிகா செவித்திறன் மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பர். அவற்றில் அஜித்குமார் அதீதமான திறன் கொண்டவராக இருப்பார். அதிலும் சற்றுத் தொலைவில் இருந்து பேசுவதையும் இலேசாக முணுமுணுப்பதையும் கூட உதட்டசைவைக் கொண்டே புரிந்துகொள்வார். மேலும் தான் காதலிக்கும் பெண் மீது மிகுந்த பொசசிவ் கொண்டவராக இருப்பார். மொழி திரைப்படத்தில் ஜோதிகா மிகையான தன்னுணர்வும் தன்னம்பிக்கையும் கொண்டவராக இருப்பார். ஆனால் இத்திரைப்படத்தில் அனுஷ்காவிடம் ஓவியங்கள் வருவதைத் தவிர வேறு தனித்தன்மையான அல்லது அதீதமான குணநலன்கள் எதுவும் இருக்காது. அதிலும் சிறப்பாக ஓவியங்கள் வரையத் தெரியுமே தவிர, தனித்தன்மை கொண்ட ஓவியர் அல்ல. இப்படி சுவாரஸ்யமே இல்லாத கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். ஆனால் சராசரியான மாற்றுத்திறனாளியின் தன்மையை திரையில் காட்டியதால் நமக்கு இத்திரைப்படம் முக்கியமானது.

உதட்டசைவைப் புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள்:

உதட்டசைவைப் பார்த்துப் பேசும் அனுஷ்கா
உதட்டசைவைப் பார்த்துப் பேசும் அனுஷ்கா

அனுஷ்கா தன்னிடம் ஒருவர் பேசும்போது மிகக் கவனமாக அவரது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பார்; பேசுபவர் தலையை அசைத்து அசைத்துப் பேசினாலோ அல்லது திரும்பிக் கொண்டு பேசினாலோ அவரது உதட்டசைவைத் தெளிவாகப் பார்க்க முயற்சி செய்வார்; நடந்து கொண்டே பேசினால் இன்னும் சிரமப்படுவார். பேசுபவரைத் தடுத்து, தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறுவார். இயல்பான வேகத்தில் பேசினாலும் கூட இன்னமும் சற்று வேகத்தைக் குறைத்து, மெதுவாக பேசுமாறு கேட்பார். அதாவது உதட்டசைவைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்தாலும்,  செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு அதில் இவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்துவதாக அனுஷ்காவின் கதாபாத்திரம் இருக்கும்.

பொசசிவாக, முரட்டுத்தனமாக இல்லாத மாற்றுத்திறனாளி:

பொசசிவாக இருக்கும் ஷாலினி பாண்டே
பொசசிவாக இருக்கும் ஷாலினி பாண்டே

திரைப்படத்தில் அனுஷ்காவும் ஷாலினி பாண்டேவும் மிகவும் நெருக்கமான தோழிகளாக இருப்பர். அதாவது சிறு வயதில் இருந்தே ஒன்றாகவே காப்பகத்தில் வளர்ந்தவர்கள். இப்படியான சூழலில் மற்ற திரைப்படங்களில் செவித்திறன் மாற்றுத்திறனாளி, தன் தோழி மீது பொசசிவாக இருப்பதாகவும், அவளைப் பிரிய நேர்ந்தால் கோபப்படுவதாக அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் நேர்மாறாக இருக்கும். அதாவது ஷாலினி, அனுஷ்கா மீது பொசசிவாக இருப்பார்; தன்னைவிட்டுப் பிரிந்துவிடுவாரோ என்ற பதற்றத்திலேயே இருப்பார்; பல நேரங்களில் இதன் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்வார். மாறாக அனுஷ்கா, ஷாலினியை ஆற்றுப்படுத்துவராக இருப்பார். ஆக மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.

தோழியை வழிநடத்தும் மாற்றுத்திறனாளி:

ஓவியக் கலை தொடர்பாக தனது தோழியை விட்டுவிட்டு இன்னொரு நகரத்திற்கு வருவார் அனுஷ்கா. அங்கு பணியாற்றும் ஒரு இளைஞர் அனுஷ்காவிற்கு நிறைய உதவிகள் செய்வார்; அனுஷ்காவை ஒருதலையாகக் காதலிக்கவும் செய்வார். ஆனால் மாதவனைத் திருமணம் செய்யவிருக்கும் அனுஷ்கா, அந்த இளைஞரின் நற்பண்புகளை உணர்ந்து தன்னுடைய தோழி ஷாலினியை மணந்துகொள்ளப் பரிந்துரை செய்வார். இந்நிலையில் அனுஷ்கா தவிர வேறு எவருடனும் பழக விரும்பாமலும் அனுஷ்காவும் வேறு எவருடனும் பழகுவதை விரும்பாமலும் இருக்கும் ஷாலினி, முதலில் அந்த இளைஞரை ஏற்கமாட்டார். ஆனால் அனுஷ்காவின் படிப்படியான அறிவுரைகளால் ஷாலினி அந்த இளைஞரை ஏற்றுக்கொள்வார். சுருக்கமாகச் சொன்னால் பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா, விக்ரமிற்குச் செய்வதை அனுஷ்கா, ஷாலினிக்குச் செய்வார். மாற்றுத்திறனாளி இறுக்கமானவராக இருந்து இயல்பான மனிதராக மாறுவதாகவே பல திரைப்படங்களில் காட்டப்படுகிறது. ஆனால் இறுக்கமான மனிதர்களாக மாற்றுத்திறனாளி அல்லாதவர்களும் இருக்கின்றனர் என்பதையும் அவர்களை மாற்றக்கூடியவர்களாக மாற்றுத்திறனாளிகளும் இருக்கின்றனர் என்பதையும் காட்டிய ஒரே திரைப்படம் இத்திரைப்படம் மட்டுமே.

இயல்பாக, சுயமாக இயங்கும் மாற்றுத்திறனாளி:

திரைவாசிப்பான் உதவியுடன் மாதவனிடம் பேசும் அனுஷ்கா
திரைவாசிப்பான் உதவியோடு மாதவனிடம் பேசும் அனுஷ்கா

பொதுவாக ஒரு திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் அவர் கூடவே மாற்றுத்திறனாளி அல்லாத ஒருவர் இருப்பது போல திரைக்கதை அமைக்கப்படும். அதாவது மாற்றுத்திறனாளிக்கு உதவுவதற்காக, மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளப் பயன்படும் இணைப்புச் சங்கிலியாக அவர் இருப்பார். இதன் மூலமாக மாற்றுத்திறனாளியான ஒருவர் தனித்து இயங்க முடியாது என்றும் மற்றவர்களுடன் தாமாகவே தொடர்பு கொள்ள முடியாது என்றும் மறைமுகமாக உணர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக செவித்திறன் மாற்றுத்திறனாளி சைகை மொழியில் பேசுவதை மொழிபெயர்த்துக் கூறுவதாக ஒரு கதாபாத்திரம் கூடவே உருவாக்கப்படும். அந்தத் தவறான கருத்தாக்கம் இத்திரைப்படத்தில் மிக எளிதாக உடைக்கப்பட்டிருக்கும்.

நமது அலைபேசிகளில் நாம் பேசுவதை எழுதும் மென்பொருள் இருப்பது போல, நாம் எழுதுவதைப் பேசிக் காட்டும் அதாவது வாசித்துக் காட்டும் மென்பொருளும் செயலிகளும் தற்போது நிறைய உள்ளன. அனுஷ்கா சைகை மொழி தெரியாத புதியவர்களிடம் பேசும்போது இந்த வசதியைப் பயன்படுத்துவார். அதாவது ஒருவரிடம் பேச வேண்டிய செய்தியை அல்லது கேட்க வேண்டிய கேள்வியை தனது கைபேசியில் தட்டச்சு செய்து காட்டுவார்; அந்தக் கைபேசியில் உள்ள மென்பொருள் அந்த சொற்களை பேசிக் காட்டும் அல்லது வாசித்துக் காட்டும். இவ்வாறாக புதிதாக ஒருவரிடம் உரையாடுவதில் எவருடைய துணையையும் அனுஷ்கா நாட மாட்டார். எப்போதும் மற்றவர்களைச் சார்ந்தே மாற்றுத்திறனாளிகள் இருப்பர் என்பது போன்று இதுநாள் வரை உருவாக்கப்பட்ட பொய்யான தோற்றத்தை நடைமுறை யதார்த்தத்துடன் இத்திரைப்படம் துடைத்து இருக்கிறது. வாலி திரைப்படத்தில் அஜித்குமார், மொழி திரைப்படத்தில் ஜோதிகா போன்று செயற்கையான மிகைத்தன்மை இல்லாமல் ஒரு மாற்றுத்திறனாளியின் சுயமான செயல்திறனை மிக இயல்பான முறையில் அனுஷ்கா கதாபாத்திரம் மூலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

பொதுப்புத்தியை மாற்றும் முயற்சி:

தொடர் கொலைகள் செய்யும் மாதவன், அதீதமான பொசசிவாக இருக்கும் ஷாலினி, மிக நுட்பமாக புலனாய்வு செய்யும் அஞ்சலி என தனித்தன்மையான கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன. ஆனால் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரமான அனுஷ்காவிடம் வித்தியாசமான தன்மை எதுவும் இல்லை. அவர் செவித்திறன் மாற்றுத்திறனாளியாக இருப்பது திரைக்கதையில் மெலிதான திருப்பத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. அதாவது மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரம் சாகசம் செய்ய வேண்டும் அல்லது அனுதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இங்கு பெரும் ஏமாற்றமாக முடிந்துவிட்டது. இயல்பிற்கு மாறாக தவறான கருத்தாக்கத்தை ஏற்படுத்தாமல், மிகவும் சராசரியான மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரத்தை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் பயணம் வணிக ரீதியாக தோல்வியில் முடிந்து இருக்கலாம். ஆனால் மாற்றுத்திறனாளிக் கதாப்பாத்திரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்று இனிவரும் திரைப்படங்களுக்கு கலங்கரை விளக்கமாக நிலைத்து நின்று வழிகாட்டும்.

அடுத்த பகுதி:

ஒரு திரைப்படத்தில் ஒரேயொரு மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரம் இருந்தாலும் அது திரைக்கதைக்கு உதவவில்லை என்றால் அந்த மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரம் தேவையற்ற சுமை என்றே விமர்சிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பொதுப்புத்தியினால் தான் அனுஷ்கா செவித்திறன் மாற்றுத்திறனாளியாக நடித்த “சைலன்ஸ்” மிகப்பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. ஆனால் திரைக்கதையின் திருப்பத்திற்கு என்று இல்லாமல் இயல்பான காட்சியமைப்புகளுக்காகவே மாற்றுத்திறனாளிகளை அல்லது மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களை ஆங்காங்கே பயன்படுத்தி வரும் ஒரு படைப்பாளியைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

***

தொடர்புக்கு: teacherselvam@gmail.com

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்