ஓர் அடிமை ஊழியனின் கோரிக்கை

,வெளியிடப்பட்டது

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் தொடங்கியாயிற்று. விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என்பது எழுதப்பட்டிருக்கும் விதி அவ்வளவுதான். தேர்வு,எதிர்காலம் குறித்த கவலைகளில் பெற்றோர்கள் துணிந்துவிட்டார்கள். முடங்கிக் கிடத்தல் தந்துவிட்ட சளிப்புக்கும் தனிமைக்கும் ஆறுதலாய் பள்ளி செல்லத் தொடங்கியிருக்கின்றன பல கொடுத்துவைத்த செல்லங்கள். ஆனால், இங்கே எதற்கும் எப்போதும் பொறுப்பேற்க முன்வராத பல அதிகார பீடங்களால், தங்களின் நிலை என்னவென்றே அறியாமல் எப்போதும் குழப்பமும் திகைப்புமாய் இல்லப்பட்டிகளில் ஒரு எல்லைவரை வருவதும், எட்டிப் பார்த்துத் திரும்புவதுமாய் பரிதவிக்கின்றன பாசத்தாம்பால் பிணைக்கப்பட்ட பாவப்பட்ட ஆடுகள்.

நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு கருதி அவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று சொல்லியாயிற்று. அப்படியே விதியும் சமைக்கப்பட்டுவிட்டது. அப்படியானால், தேர்வு? அதற்கு அவர்கள் எப்படி தயாராவார்கள்? இதற்கெல்லாம் எவரிடமும் பதில் இல்லை.

“சார், எங்களுக்கு எப்போஸ்கூல் திறக்கும்? சார் திறக்கச் சொல்லுங்க வீட்டுல ரொம்ப போரடிக்குது” பெரும்பாலான குரல்கள் இப்படித்தான்இருக்கின்றன. ஆடுகள் மேய்ப்பனைக் கேட்கின்றன, தங்களின் மேய்ப்பர்களே அதிகாரத்தின் பலியாடுகள்தான் என்றறியாமல்.

பெற்றோரிடம் கருத்துக் கேட்கச் சொன்னார்கள். “சார் ஒன்னு ஸ்கூல் வையுங்க, இல்லைனா பரிட்சை இல்லைனாவது  சொல்லுங்க, எதுவுமே சொல்லாம இருந்தா எப்படி?” அவர்கள் தொனியை அப்படியே கடத்தலாம்தான், ஆனால், பல அசமந்தங்களை எங்கள் குரல்களில் நாங்கள் திட்டுவதாகத் திரித்துக்கூறுகிற   உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்கள்தான் இங்கு அதிகம். எனவே பொறுப்புத் துறப்பில் நாங்களும் பங்காளிகள் ஆகவேண்டியதுதான்.

நாமினல் ரோல் தயார் பண்ணுங்க, ஐடி கார்டு, ஆதார அட்டை வாங்குங்க,” “அப்படினா பரிட்சை இருக்குதானே சார்?” “அது தெரியாது, இப்போதைக்கு சொல்றதைச் செய்யுங்க” சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் தலையெழுத்து இப்படித்தான் ஆகிப்போனது. மேலிருந்து கீழ்வரை இப்படித்தான். கட்டளைகளை நிறைவேற்றும் கணினிகள். யாரும் எதற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள். அந்தப் பொறுப்பேற்கும் தார்மீகத்துக்கும் சேர்த்துத்தான் ஊதியம் வாங்குகிறோம்என்பதையும் மறந்து.

ஊரடங்கு கடுமையாக இருந்தபோது பிழைப்பின்றி இருந்த பெற்றோர் இப்போது வேலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிள்ளையைத் தனிமையில் விட்டுவிட்டுச் செல்கிற குற்ற உணர்வு. அத்தோடு, எந்த ஒரு பிள்ளைக்கும் விடுதியிலிருந்து வந்த ஒரு மாதம் வீட்டில் தனி மரியாதை இருக்கும். பல நேரங்களில் அந்த மரியாதை தருகிற ஒருவிதத் தற்காளிக அங்கீகாரத்தை நாடியே மாணவர்கள் விடுதியிலிருக்கும்போது அடிக்கடி வீடு செல்ல எண்ணுவது. எல்லாம் கொஞ்சகாலம்தான் என்பதை கரோனா ஊரடங்கு பெற்றோர் பிள்ளைகள் என இருதரப்பிற்குமே நன்கு உரைக்கச்சொல்லிவிட்டது. 

இப்போது தங்களுக்கான சுதந்திரம் வீட்டில் அல்ல, விடுதியில்தான் என மாணவர்கள் அறியத் தொடங்கியதன் ஒரு வெளிப்பாடே “சார் எப்ப நாங்க ஸ்கூலுக்கு வரணும்” என்கிற தொடர் நச்சரிப்பு. தொந்தரவு, பிடிவாதம், வேண்டிய தருணங்களில் தவிர்க்க இயலாமை எனப் பிள்ளைகள் பெற்றோருக்கும், அதட்டல், கண்டிப்பு, புதிதாகத் தாங்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் குடும்பத்தின் இல்லாமை என பெற்றோர் பிள்ளைகளுக்கும் அலுப்பூட்டத் தொடங்கிவிட்டார்கள். சரி, அதற்கேனும் கொஞ்சம் ஒத்தடம் கொடுக்கலாமே என ஒரு வழி சொன்னோம்.

விடுதியில் அவர்களின் அன்றாட உணவிற்காய் அரசு ஒரு மாணவனுக்கு மாதம் தோறும் ரூ. 900 தருகிறது. விடுதிகள் மூடப்பட்டிருப்பதால் இந்த ஆண்டு அந்தப் பணம் பயன்படுத்தப்படாமல் மீண்டும் அரசு கருவூலத்தையே சென்றுசேரும். அதைக் கொஞ்சம் மடைமாற்றி, அந்தந்த மாணவர்களிடமே பணத்தை ஒப்படைத்தால், கொஞ்ச காலமேனும் இருதரப்புக்கும் ஒரு பிடிகிடைக்கும் என வாதாடிக்கொண்டேதான் இருக்கிறோம். ஒரு முடிவு எடுத்தார்கள் இல்லை. முடியாது என்றும் சொல்லவில்லை.

சரி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பயன்படுத்திப் பள்ளி விடுதிகளில் வைத்திருக்கலாம் என்றால், அதற்குச் சவால்விடுவதாக இருக்கின்றன பள்ளி வளாகப் போதாமைகள். அதிலும் தொடுதலையே தங்களின் முக்கிய தகவல் பரிமாற்றச் செயலாகக் கொண்டிருக்கும் பார்வையற்ற மாணவர்களிடம் தனிமனித இடைவெளியை அமல்ப்படுத்த்உவது மிகுந்த சவாலான காரியம்தான். “அவுங்களுக்கென்ன வச்சுக்க சொல்லிடுவாங்க, இங்க தினம் தினம் நாமதானே திண்டாடணும்” என்பது பள்ளித் தலைகளிடமிருந்து கேட்கும் குரல்கள். ஆனால், இந்தக் குரல்கள் ஒருவகையில் முனகல்கள் மட்டுமே. “வைத்துக்கொள்ளுங்கள்” என்று ஆணையிட்டால் அவர்களிடம் மாற்றுக்கேள்வி இராது. அங்கே கைக்கொண்ட மௌனத்தின் குமுறல்களை மாணவர்களிடம் கோபமாய்க் கொப்பளித்துத் துப்ப வேண்டியதுதான்.

இதில் மிகுந்த துப்புகெட்ட நிலைமைக்குச் சொந்தக்காரர்கள் மனம் பதைக்கும் சில ஆசிரியர்களாகிய நாங்கள்தான். “இப்போதைக்கு இணைய வழியில் வகுப்பெடுங்கள்” போகிற போக்கில் உச்சபீடங்கள் உதிர்த்துவிட்ட ஆணைக்குக் கீழ்ப்படிய நினைத்துச் செயலில் இறங்கினோம். மாணவர்களில் சிலரிடமே திறன்பேசிகள், அதிலும் சிலரிடமே இணையவசதி என்ற எதார்த்தத்தை எதிர்கொண்டோம். மூளையைக் கசக்கி, கூட்டழைப்புக் குடைக்குள் எல்லோரையும் ஏகமாய்க் கொண்டுவரும் எங்களின் அன்றாட சாகசங்களைத் தொகுத்து ஆயிரம் புறப்பாட்டுகள் எழுதலாமே தவிர, ஒருபோதும் அத்தகைய அழைப்புகளின் வழியே புறநானூற்றை அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்ற அனுபவ உண்மை ஒருபுறம் கசக்கிறது. மற்றோரு புறம், அன்றாடங்காய்ச்சிப் பெற்றோரிடமிருந்து தற்காளிகமேனும் ஒரு விடுதலை கோரும் மாணவனின் “சார் ஸ்கூல் எப்போ திறக்கும்” என்ற அனுதினக் கேள்வியைத் தைரியமாய் பதிலின்றி எதிர்கொள்ளும் பாசாங்கும் பக்குவமும் வாய்க்கப்பெறாத மனம் அழுத்துகிறது.

அவனுக்குப் பாடம்ஏறவில்லை,என்பதுபோய் எனக்குக் கற்பிக்கத் தெரியவில்லையோ? என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் நாட்கள் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. இவை எதையும் அறியாத எங்களின் உற்ற தோழர்கள் “உனக்கென்னப்பா! ஜாலியா வீட்டில இருக்க” என எங்களுக்குள் கனன்றுகொண்டிருக்கும் குற்ற உணர்ச்சிக்கங்கைப் பிளம்பாக்குவதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

எனது இந்தப் பதிவுகூட அத்தகைய ஓர் மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான். ஆனால், அழுத்தமாக இருப்பவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. வேண்டுமானால், ஒரு மெமோ வரலாம்.

வரட்டும் என்று துணிந்துதான் கேட்கிறேன்,

எல்லா வாய்ப்புகளும் இருக்கிற சாதாரண மாணவனுக்கே இணையவழி சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்துதானே பள்ளி திறக்கப்பட்டிருக்கிறது? அப்படியானால், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் தேர்வை எதிர்கொள்ள இணையவழி போதுமா? போதாதென்றால், என்னதான் வழிவகை வைத்திருக்கிறீர்கள்? தேர்வே இல்லை என்றாவது சொல்லுங்கள். இருக்கிறதென்றால், அவன் முறையாகக் கல்வி கற்க ஏற்பாடாவது செய்யுங்கள்.

இது, கல்வியின் வழியே சுதந்திர சிந்தனையை மாணவனிடம் வளர்த்தெடுக்க விரும்பும் உங்களின் அடிமை ஊழியனின் கோரிக்கை.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

2 thoughts on “ஓர் அடிமை ஊழியனின் கோரிக்கை

  1. அனைத்து மாணவர்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பதாக தோன்றுகிறது

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்