
நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் நேற்று 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்த உரையில் ஊனமுற்றோர் வளர்ச்சிக்காக 1171.77 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைக் கடுமையாக எதிர்க்கும் ஊனமுற்றோருக்கான தேசியமேடை, இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட 12 விழுக்காடு குறைவானது எனவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அமலாக்கத்திற்காக ஒதுக்கப்படும் நிதியாக கடந்த ஆண்டு 250 கோடி ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு அது 209 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- கற்றல் குறைபாடு, மூளை முடக்குவாதம், ஆட்டிசம் போன்ற குறைபாடுடையோருக்காகச் செயல்படுத்தப்படும் தேசிய அறக்கட்டளைக்குக் கடந்த ஆண்டு ஒதுக்கிய 39.5 கோடியில் இந்த ஆண்டு 9.5 கோடி வெட்டப்பட்டுள்ளது.
- தேசிய பார்வையிழப்புத் தடுப்புத் திட்டத்திற்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியும் கூட 20 கோடியிலிருந்து பாதியளவு வெட்டு கண்டு 10.5 கோடியாக உள்ளது.
- கரோனா போன்ற தேசியப் பேரிடர்களை ஊனமுற்றோரும் எதிர்கொண்ட நிலையில், வேலை இழப்பு, வணிக முடக்கம் போன்றவற்றால் முற்றிலும் வருமானம் இழந்து தவிக்கிறார்கள் என்பதைக்கூட பொருட்படுத்தாதநிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது. காரணம் என்ஹெச்எஃப்டிசி வங்கிக்கு கடந்த 2019-20ல் 41 கோடி ஒதுக்கிய நடுவண் அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் வெறும் 0.01 கோடியை ஒதுக்கியிருக்கிறது.
- தேசிய அளவில் செயல்படுத்தப்படும் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டங்களுக்காக கடந்த ஆண்டு 655 கோடி ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு அது 584 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கு வழங்கப்படும் உதவி நிதிகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
- திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய 740 கோடி இந்த ஆண்டு 709 கோடி எனக் குறைந்துள்ளது.
- சமூகப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கான கடந்த ஆண்டின் மொத்த ஒதுக்கீடு 1126.79 லிருந்து 988.59 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- ஊனமுற்றோரின் வளர்ச்சியைப் பெரும் அக்கறையோடு அணுகுவதாகக் காட்டிக்கொள்கிற நடுவண் அரசு, அதனைப் பறைசாற்றும் பொருட்டு தொடங்கிய அக்சஸ் இந்தியா கேம்பைன் (Access India Campaign) பற்றி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பேச்சே இல்லை.
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கத் துடிக்கும் இந்த அரசினால் ஊனமுற்றோர் எப்போதும் இல்லாதவகையில் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிதிநிலை அறிக்கையினைக் கடுமையாக எதிர்க்க வேண்டுமென ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் திரு. முரலிதரன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
One thought on “கடந்த ஆண்டைவிட 12 விழுக்காடு நிதி குறைப்பு, நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை கடுமையாக எதிர்க்கும் என்பிஆர்டி”