
உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் டிசம்பர் மாத கூட்டம் “இலங்கையில் பார்வையற்றோர் நிலை” என்ற தலைப்பில் நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாழ்வகம் என்ற பார்வையற்றோருக்கான இல்லத்தின் தலைவரும், யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்புக் கல்வியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
1993ல் யாழ்ப்பாண பாடசாலையில் ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய திரு. ஆறுமுகம் இரவீந்திரன் அவர்கள், 2004 முதல், யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றில் சிறப்புக்கல்வி குறித்துக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் பார்வையற்றோரின் முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றியவர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் அவர்கள். அவர் 1988ல் யாழ்ப்பாணத்தில் வாழ்வகம் என்ற பெயரில் பார்வையற்றோருக்கான இல்லத்தைத் தொடங்கினார். 2006 அவரது மறைவுக்குப் பின், வாழ்வகத்தைத் தொடர்ந்து பேணி வருபவர் திரு. ஆறுமுகம் இரவீந்திரன் அவர்கள். இலங்கையில் பார்வையற்றோர் நிலைகுறித்து அவர் பகிர்ந்துகொண்டவற்றிலிருந்து சில முக்கியத் தகவல்கள் இதோ.
- இலங்கையின் முதல் சிறப்புப் பள்ளி 1912 ஆம் ஆண்டு தென் இலங்கையின் ரத்மலான என்ற இடத்தில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறையுடையோர் என இரு பிரிவினருக்குமான பள்ளியாகத் தொடங்கப்பட்டது.
- 1956ல் யாழ்ப்பாணத்தில் கைத்தடி என்னும் இடத்தில் நஃபீல்டு பள்ளி மேற்சொன்ன அதே இரு தரப்பினருக்குமான பள்ளியாகத் தொடங்கப்பட்டது.
- 1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒன்றிணைக்கப்பட்ட பள்ளிகள் என்ற பெயரில் அனைத்து மாணவர்களுடன் ஊனமுற்ற மாணவர்களும் இணைந்து கற்கும் பள்ளிகள் தொடங்கப்பட்ட பிறகுதான், இலங்கையில் அதிலும் குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் ஊனமுற்றோருக்கான கல்வியில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.
- போக்குவரத்து வசதிகளே இல்லாத அந்த காலகட்டத்திலும் ஒன்றிணைக்கப்பட்ட கல்விமுறை மூலமாக எண்ணற்ற பார்வையற்ற மாணவர்களைத் தேடிச்சென்று பள்ளிக்கு அழைத்து வந்தவர்தான் கலாநிதி. அன்னலட்சிமி சின்னத்தம்பி அம்மையார் அவர்கள்.
- மங்கலராணி கிரிஸ்டோபர் என்ற பெண்தான் தமிழ்ப்பகுதிகளைச் சேர்ந்த முதல் பட்டதாரியாவார்.
- ஊனமுற்றோருக்கு இலங்கையில் அரசு வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால், வழங்கப்படும் பணிக்கேற்ற உடல் தகுதியை ஊனமுற்றவர் பெற்றிருக்கிறாரா என்ற பரிசீலனைக்குப் பிறகே பணி வழங்கப்படும்.
- இந்தியாவைப் போன்று ஊனமுற்றோருக்கான தனிச்சட்டமெல்லாம் இல்லை. ஆனால், இலங்கை அரசும் ஊனமுற்றோர் குறித்த 2007 ஐநா தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
- ஊனமுற்றோருக்கான பல்வேறு சமூகநலத் திட்டங்கள் அமல்ப்படுத்தப்பட்டாலும்,இந்தியாவைப் போல ஊனமுற்றோருக்கு அடையாள அட்டை வழங்கும் முறை முன்பு இருந்தது, தற்போது இல்லை.
- முன்பைவிட தற்போது பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தைப் போல, தொலைபேசி இயக்குதல் உள்ளிட்ட பிற பணிகளை பார்வையற்றவர்கள் இலங்கை அரசிடமிருந்து பெறவும், ஏடிஎம் உள்ளிட்ட வங்கிச் சேவைகள் பெறவும் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது.
- அதிகம் படிப்பில்லாத பார்வையற்றவர்கள் துடைப்பம் செய்வது, நெசவுப்பாய்கள் பின்னி விற்பது போன்ற வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
யாழ்ப்பாணத்திற்கு ஒரு வாழ்வகம் என்றால், முல்லைத்தீவில் விழிப்புலன் மற்றும் செவிப்புலன் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்காக மெதடிஸ்தா திருச்சபையினால் நடத்தப்படும் பள்ளி ஒன்றில் போரினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் தங்கிக் கல்வி கற்று வருவது பற்றியும், அதன் முக்கிய ஊழியரான தமது இள வயது நண்பன் திரு. ரேமன் பக்ததாஸ் குறித்தும் ஷோபாசக்தி தனது பாக்ஸ் என்கிற நாவலில் சில தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இன்னும் தேடத் தொடங்கினால், நிறைய நல்லுள்ளங்களின் சத்தமில்லாத அறப்பணியை நாம் கண்டுகொள்ளக் கூடும். அந்தத் தேடலுக்கான தோற்றுவாயாக எப்போதும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை திகழ்ந்து வருவது வரவேற்புக்குரியது. அதேபோல் பேரவையினரின் அழைப்பை ஏற்று, திறந்த மனதுடன் தனது உரையை நிகழ்த்தி, இறுதிவரை பொறுமை காத்து எல்லோருடைய வினாக்களுக்கும் பதில் வழங்கிய ஐயா திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்களுக்கும் சவால்முரசு தனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களே! போர் ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களை ஊனப்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு மருந்திட நீளும் உங்கள் அன்புக்கரங்கள், மறுவாழ்விற்காகவும் நீண்டிட வேண்டும். ஊனமுற்றோருக்கான உலகளாவிய கல்வியைத் தமிழ் நிலத்தில் சாத்தியமாக்கிட உங்களால்மட்டுமே முடியும். உணவு, உடை, மருந்தோடு சேர்த்து அவர்களின் கல்வி குறித்தும் சிந்தித்து முன் நகருங்கள். ஏனெனில், மருந்திடுதல் காயங்கள் ஆற்றும், மறுவாழ்வுதான் காலத்தையே மாற்றும்.
திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்களைத் தொடர்புகொள்ள:
vaazhvagam@gmail.com