graphic english braille letters

பிரெயில் பழக்குவோம், பரவலாக்குவோம்

,வெளியிடப்பட்டது

• வாங்கும் சோப்பு, பேஸ்ட், மருந்து பொருட்கள் உட்பட அத்யாவசியப் பொருட்கள் அனைத்திலும் சாதாரண எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பிரெயிலிலும் ஒட்டப்பட வேண்டும்

லூயி பிரெயில்
லூயி பிரெயில்

இன்று உலக பிரெயில் தினம். பார்வையற்றோருக்கான பிரத்யேகமான தொட்டறியும் புள்ளி எழுத்துமுறையைக் கண்டறிந்த லூயி பிரெயில் அவர்கள் ஜனவரி நான்கு 1809 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்திற்கு அருகே இருக்கிற ஹூப்ரே ்என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை குதிரைக்கு லாடம் அடிக்கும் தொழில் செய்துவந்தார். தனது ஐந்தாவது வயதுவரை பார்வையுள்ள சிறுவனாக இருந்த லூயி, தந்தையின் தொழில் களத்தில் இருந்த ஊசியைக்கொண்டு தன் கண்ணைக் குத்திக்கொண்டார். பார்வை திரும்ப வாய்ப்பில்லை என்றானபிறகு, வாலைண்டைன் ஹாய் அவர்கள் தொடங்கிய உலகின் முதல் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் இணைந்து கல்வி பயின்றார்.

ஆங்கில எழுத்துகளின் பிரெயில் வடிவம்
ஆங்கில எழுத்துகளின் பிரெயில் வடிவம்

இந்தப் பள்ளிக்கு வருகை தந்த இராணுவ வீரரான சார்லஸ் பார்பியர் அவர்களிடமிருந்து இராணுவ ரகசியங்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படும் மேடுறுத்தப்பட்ட குறியீட்டுமுறை பற்றித் தெரிந்துகொண்டார் லூயி. அந்த முறையினை எளிமைப்படுத்தி பயன்படுத்தினார் லூயி. அதே பள்ளியில் அவர் ஆசிரியராகப் பணியாற்றினார் என்றாலும், அவர் பள்ளி உட்பட யாருமே அவர் வடிவமைத்த முறையினை அங்கீகரிக்கவில்லை.

பிரான்ஸ் அரசு அமைத்த நினைவுச் சின்னம்
பிரான்ஸ் அரசு அமைத்த நினைவுச்சின்னம்

காசநோயால் அவதிப்பட்ட லூயி பிரெயில், 1852 ஜனவரி 6ஆம் நாள் மறைந்தார். அவர் இறப்பிற்குப் பிறகே அவர் வடிவமைத்த முறையினைப் பார்வையற்றோர் கற்பதற்கான எழுத்து வடிவமாக அங்கீகரித்தது பிரான்ஸ் அரசு. பிறகு உலக சமூகமும் இந்த முறையினை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தத் தொடங்கின. அமெரிக்காவைச் சேர்ந்த செவி மற்றும் பார்வைத்திறன் இழந்த ஹெலன்கெல்லர் பிரெயில் முறையில் படித்துதான் பட்டங்கள் பெற்றதோடு, பல புத்தகங்களஐயும் எழுதி உலகம் அறிந்த சாதனையாளராக வளம் வந்தார் என்பது வரலாறு.

பிரெயிலின் இன்றைய நிலை:

உலகமயமாக்களுக்குப் பின்னான மாறிவரும் கல்விச்சூழலில் கணினித் தொழில்நுட்பம் பிரெயிலின் இடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. இன்றைய நிலையில், ஒரு பார்வையற்றவர் பிரெயில் முறையைக் கற்காமலேயே முனைவர் பட்டம்வரை முன்னேறிவிடுகிறார். இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் உள்ளடங்கிய கல்விமுறை காரணமாக பள்ளி வயது பார்வையற்ற குழந்தைகள் பிரெயில் கற்பது அரிதாகி வருகிறது.

சாதாரணக் குழந்தைகள் தங்கள் ஆரம்பக் கல்வியில் பெறுகிற எழுதுதல், வாசித்தல் ஆகிய திறனடைவுகளை உள்ளடங்கிய கல்விமுறை மூலமாகப் பயிலும் பார்வையற்ற குழந்தைகள் பெறுவதில்லை. அவர்களுக்கு எல்லாமே மனப்பாடம்தான். கேட்டல், ஒப்புவித்தல் என்ற திறன்களினூடே பள்ளிக்கல்வியைக் கடப்பவர்கள் ஒலிப்புத்தகங்கள் மற்றும் கணினி உதவியுடன் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பை முடித்து பணியில் அமர்ந்துவிடுகிறார்கள்.

இந்த நிலை மாறவேண்டும். பார்வையற்றோரின் ஆரம்பக் கல்வி பிரெயிலை மையப்படுத்தியதாக வடிவமைக்கப்பட வேண்டும். பார்வையற்றோர் தங்கள் எட்டாம் வகுப்புவரை சிறப்புக் கல்விமுறையில் படிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். முதல் கட்ட நடவடிக்கஐயாக, பத்தாம் வகுப்பு உள்ளிட்ட அரசுப் பொதுத்தேர்வுகளில் பிரெயிலிலும் வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.

வேறு என்னவெல்லாம் செய்யலாம்?

  • சாதாரண எழுத்துமுறைக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் பிரெயில் முறைக்கும் வழங்கப்பட வேண்டும்.
  • அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் அமைக்கப்படும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குரிய பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களின் பெயர்ப்பலகை தொடங்கி, உள்கட்டமைப்பிலும் பிரெயில் முறை இடம்பெறவேண்டும்.
  • ஒவ்வொரு கட்டடத்தையும் பார்வையற்றவர்கள் எளிதாக அணுகும் வண்ணம், அவற்றின் உள்ளமைப்புகள் குறித்த பிரெயில் வரைபடம் கட்டாயம் அனைத்துக் கட்டடங்களிலும் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • உணவகங்களில் பிரெயில் முறையிலும் உணவுப்பட்டியல்கள் (MENU CARDS) பராமரிப்பதைச் சட்டமாக்க வேண்டும்.
  • வாங்கும் சோப்பு, பேஸ்ட், மருந்து பொருட்கள் உட்பட அத்யாவசியப் பொருட்கள் அனைத்திலும் சாதாரண எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பிரெயிலிலும் ஒட்டப்பட வேண்டும் அல்லது அந்தப் பொருட்கள் குறித்த முழு விவரங்களும் அடங்கிய பிரெயில் கையேடு பார்வையற்ற நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.
  • இதனைத் தளர்வின்றிக் கடைபிடிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களை உரிய சட்டங்களின் வழியே அரசு நிர்பந்திக்க வேண்டும்.

மேற்சொன்ன நடவடிக்கைகள் மூலம், பிரெயில் முறை பயன்பாட்டை அரசு பரவலாக்க முன்வந்தால், ஏற்கனவே செயல்படும் பிரெயில் அச்சகங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் நடவடிக்கையாக அவை அமையும். அதனால் பல பிரெயில் அறிந்த பார்வையற்றவர்கள் பணிவாய்ப்பு பெறுவார்கள்.

அனைவருக்கும் உலக பிரெயில் தின வாழ்த்துகள்.

***

ஆசிரியர்

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *