தேடலுக்கும் தீர்வுக்கும் தெரிந்துகொண்ட அரங்கம்

,வெளியிடப்பட்டது
zoom logo

கரோனா ஊரடங்கு காரணமாக, பெருநிறுவனங்களின் குளிர் அறைக் கூடுகைகளையும் கடந்து, சாமானியனின் ஒற்றை அறைக்குள்ளும் ஒளிர்மிகு அரங்கைக் கட்டமைத்த பெருமை ஜூம் தொழில்நுட்பத்தையே சாரும். வாடகைக்கு மண்டபம் பிடித்து, வருவோருக்கு மத்திய உணவு வழங்கி, கவனிக்க அவசியமான உரைகளின் இடையேயும் காஃபி டீ பரிமாறி, எல்லாவற்றிற்கும் எவரெஸ்டாய் பங்கேற்றோருக்கான பயணப்படியெல்லாம் பட்டுவாடா செய்வதற்குள், ஸ்ஸப்ப்ப்பா. இனி அதற்கெல்லாம் வேலை இல்லை. நூறுபேர் உட்காரும், இல்லை படுத்திருக்கும் இல்லை இல்லை அவரவர் வேலையைச் செய்துகொண்டே இங்கேயும் தன் அவதானிப்பைக் கொடுக்கும்படியான கூடுகை அரங்கு. அதனை உலகெங்கும் எத்தனைபேர் வேண்டுமானாலும் பார்க்கும் நேரலை வசதி. இவை அத்தனையும் மாதம் ஒன்றிற்கு நூற்றைம்பதே ரூபாய் கட்டணத்தில்.

சிக்கனம் என்கிற அம்சத்தாலேயே நாம் வெர்ச்சுவல் அரங்கில் விரும்பிக் குடியேறுகிறோம். அதிலும் பார்வையற்றோரைப் பொருத்தவரை, பேருந்து பிடித்து, பெருநகரம் சென்று, ஒருவேளைக் குளியலுக்காக ஓராயிரம் கொடுத்து அறை எடுத்து, கூடுகை அரங்கு சேர தானி வேறு பிடித்து இத்தோடு முடிந்ததென்றால் இல்லை. அரங்கிற்குள் அவ்வப்போது கழிப்பறை தேட, அதற்காக இன்னோருவரின் ஆர்வம் கலைத்துக் கூட்டிப்போவது, அதற்குள் நம் நாற்காலி பரிபோய்விடக் கூடாதே என்கிற பதைபதைப்பு வேறு. இவ்வளவு இயல்பான சிக்கல்களையும் கடந்து, பங்கேற்பு சந்திப்பு என்கிற வகையில் பார்வையற்றோராகிய நாம் கேட்கப்போவதென்னவோ சில பல குரல்களைத் தானே. அதை வீட்டிலிருந்தே டீப்போட்டுக் கொண்டோ, அல்லது  மனைவியோடு டிஷ்யூம் போட்டுக்கொண்டோ தோள் தொட்டு இல்லை என்றாலும், கேட்கலாம், பேசலாம், அலவலாவலாம். அதனால்தான், பிற எந்தத் தரப்பையும்விட பார்வையற்றோர் ஜூமின் வருகையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

தீர்வுக்காய், தேடலுக்காய் எண்ணற்ற எத்தனை எத்தனை கருத்தரங்குகளை இந்த ஆண்டு எளிமையாய் கட்டமைத்தன பல பார்வையற்றோருக்கான அமைப்புகள். அவற்றுள் நமது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் செலவே இன்றி அமைத்த அரங்குகள் மிகச் சிலவே என்றாலும், ஒவ்வொன்றும் தனித்த நிறத்தில், தனக்குள் வெவ்வேறு நோக்கத்தை நிறைவேற்றும்படியாக இருந்தன. அப்படி நாம் நடத்திய கூடுகைகளின் ஒரு குட்டித் தொகுப்பு இது.

எல்லோரும் இணைவோம், இடுக்கண் களைவோம்!

திருமதி கஸ்தூரி உள்ளிட்ட மூவர்
திருமதி கஸ்தூரி உள்ளிட்ட மூவர்

இது, 26 ஜூலை, 2020 அன்று நடந்த சங்கத்தின் முதல் ஜூம் வழிக் கருத்தரங்கிற்கான அழைப்பிதழின் முதல் வரி. தனியாள் இடைவெளி என்கிற பதம் கரோனா பேரிடர் காலத்திலும், பேரிடருக்குப் பின்னான நாட்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் அன்றாடத்தில், அதிலும் குறிப்பாக சுயதொழில் மற்றும் வணிகம் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்முறையில்ஏற்படுத்திய  எதிர்த் தாக்கங்கள், பாதிப்புகள் குறித்தும், அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் ஊரடங்கு காரணமாக நேரடி பாதிப்புக்குள்ளானவர்களையே அழைத்துக் கேட்பது, நமக்குத் தோன்றுவதையும் தீர்வாக முன்வைப்பது என்ற நோக்கத்தில் முதல் கூடுகை கூட்டப்பட்டது.

ஆணையர் திரு. ஜானிடாம் வர்கிஸ்

கூட்டத்தில், ரயில்வணிகம் செய்யும் திரு. செல்லமுத்து, திருமதி. கஸ்தூரி மற்றும் திரு. கொலஞ்சிநாதன் ஆகியோர் பங்கேற்று, தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் குறித்துப் பேசினார்கள். கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் திரு. ஜானிடாம் வர்கிஸ் முன்னிலை வகிக்க, துறையின் பல உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். நிகழ்வில் பங்கேற்ற அனைவரின் உரைகளும் குறிப்பெடுக்கப்பட்டு, அந்தக் கருத்துகள் தொகுக்கப்பட்டு, அரசின் மேல்நடவடிக்கைக்காக ஒரு விரிவான மனுவும் சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல்:

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில், உயர் மற்றும் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, சங்கம் தொடங்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுமுதல் நேரடியாகவே சென்று பல்வேறு நிபுணர்களைக்கொண்டு வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு நடத்தி வந்தோம். இந்த நிகழ்வின் மூலம், பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், அவர்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன, கல்விக்கென வழங்கப்படும் உதவித்தொகைகள், பல்வேறு போட்டித் தேர்வுகள் குறித்த அறிமுகங்கள் எல்லாம் வழங்கப்பட்டன. அந்த நடவடிக்கையும் தற்போதைய ஊரடங்கால் தடைபட்டுப்போக, அதனை ஜூமில் நடத்துவது எனத் திட்டமிட்டோம்.

18 ஆகஸ்ட் 2020 மாலைப்பொழுது நடந்த நிகழ்வில்,  திருச்சியை சேர்ந்த முதுகலை வரலாற்று ஆசிரியர் திரு. அப்துல் ஜாஃபர் பங்கேற்று, விரிவாகவும், விளக்கமாகவும் மாணவர்களுக்குப் பல்வேறு கருத்துகளை வழங்கினார். நிகழ்வு மாலை நேரத்தில் நடந்ததால், டேட்டா போதாமை காரணமாக இருபதுக்கும் குறைவான மாணவர்களே பங்கேற்றனர். எனினும் அனைவரும் பயன்பெறும் வகையில், நிகழ்வு முழுமையும் பதிவு செய்யப்பட்டு, சவால்முரசு வலையொளிப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

நலத்திட்டங்கள் தொடர்பான மூன்றாவது கருத்தரங்கு:

நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட அலுவலர்கள்

மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்கவும், விளக்கம் பெறவும் மாற்றுத்திறனாளிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர்கள் சிலரையும் ஜூம் வழியே ஒருங்கிணைத்து, ஒரு கூட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 8ஆம் தேதி, சங்கத்தின் இரண்டாவது ஜூம் வழிக் கூட்டமாக நடத்துவதுதான் திட்டம். அறிவிப்புகளெல்லாம் வெளியிட்டு, அதே தேதியின் கடைசி நிமிடத்தில் கூட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரின் நேரடி அனுமதியைப் பெற்று, 30 ஆகஸ்ட் 2020 அன்று, அன்றைய சேலம், நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் முறையே, திரு. ஸ்ரீநாத், திருமதி. ஜான்சி, திரு. சரவணக்குமார் இவர்களோடு சிவகங்கை மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளர் திரு. கணேஷ் அவர்களும் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்தும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் வங்கிக் கடன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.

சிறப்பாசிரியர்களைப் போற்றிய ஆசிரியர் தினக் கொண்டாட்டம்:

ஆசிரியர் தினவிழா அழைப்பிதழ்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கமும், அதன் ஊடகத் தோழமையான சவால்முரசும் இணைந்து, ஆசிரியர் தினத்தை வெகு விமர்சையாகவும், அதேசமயம், பொதுச்சமூகத்திற்கு சிறப்புக்கல்வி மற்றும் சிறப்புப் பள்ளிகள் குறித்த புரிதலை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்திட்டம் ஒன்றை வகுத்தோம்.

அதன்படி, தமிழகத்திலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளின் முன்னால் மாணவர்கள் பங்கேற்று, தங்கள் சிறப்புப் பள்ளி குறித்தானநினைவுகளைப் பகிரும் வண்ணம், நான்கு நாட்கள் “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற நிகழ்வை ஜூம் அரங்கில் ஒருங்கிணைத்து, அவை சவால்முரசு வலைஒளிப் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டன.

பூவை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட அரசு சிறப்புப் பள்ளி மாணவர்களும், திருப்பத்தூர் டிஈஎல்சி, மதுரை ஐஏபி, பரவை செயிண்ட் ஜோசப், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ, பர்குர் ஐஈஎல்சி, அடையாறு செயிண்ட் லூயிஸ், தேனாம்பேட்டை எல்எஃப்சி உள்ளிட்ட அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளி மாணவர்களும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் பல்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் பெருமளவில் பங்கேற்று தங்கள் பள்ளிகால நினைவுகள், தங்களைப் பெரிதும் கவர்ந்த ஆசிரியர்கள் பற்றியும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்ற பத்து ஆசிரியர்கள்

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, செப்டம்பர் 6 மாலை ஆறு மணிக்கு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர்தின கொண்டாட்டம் கலைகட்டியது. அந்த நிகழ்வில், பல மூத்த சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்புப் பள்ளிகள் மற்றும் சிறப்புக்கல்வி தொடர்பான தங்கள் பணி அனுபவங்களை விவரித்து விழாவைச் சிறப்பித்தனர். அவர்களுள் பலர் ஓய்வு பெற்றுவிட்டதாலும், இன்னும் சிலர் நிரந்தரப் பணிநிமித்தம் சாதாரணப் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டதாலும், அவர்களைத் தேடுவதே பெரும் சவாலாக அமைந்துவிட்டது. அதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரிடமும் தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் அனைவரையும் விழாவுக்கு மட்டுமின்றி முதல்நாள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் வரவழைத்தசாகசப் பெருமையெல்லாம்  சங்கத்தலைவி சித்ராவையே சாரும். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, காணொளிப்பதிவு வாயிலாக பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டியையும் நடத்தி, அவற்றில் வெற்றிபெற்றோரின் பெயர்கள் விழாவில் அறிவிக்கப்பட்டு, பரிசுத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

அதிகாரப் பகிர்வை வென்றெடுக்க ஐந்தாவது கருத்தரங்கு:

மின்னணு வாக்கு இயந்திரம்

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் பற்றியும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளை இடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் குறித்தும், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் “தமிழகத் தேர்தலும், மாற்றுத்திறனாளிகள் முன்வைக்க விரும்புகிற முக்கிய கோரிக்கைகளும்” என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 22ஆம் தேதி ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தியது சங்கம்.

நிகழ்வில், திரு. தீபக்நாதன் தலைவர் டிசம்பர் 3 இயக்கம், திரு. சகாதேவன் தலைவர் இந்திய மாற்றுத்திறனாளிகள் ஃபவுண்டேஷன், திரு. மனோகரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு, திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன் துணைத்தலைவர் தேசிய பார்வையற்றோர் சம்மேளனம், திரு. அரங்கராஜா துணைத்தலைவர் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், திரு. ஆறுமுகம் தலைவர் பார்வையற்ற ஆசிரியர் சங்கம் மதுரைக்கிளை, மற்றும் திரு. முருகானந்தன் ஒருங்கிணைப்பாளர் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவை ஆகியோர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், சமூக மற்றும் அரசியல் பங்கேற்பு உள்ளிட்ட பல தலைப்புகளின் கீழ் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். சங்கத்தின் செயலர் திரு. செல்வம் அவர்கள் அதனைத் தொகுத்து, தற்போது அந்தக் கருத்துகள் அடங்கிய ஆவனம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஆறாம் மேடை, அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா:

மாற்றுத்திறனாளிகள் தினவிழா அழைப்பிதழ்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மூன்றாம் நாளை உலக மாற்றுத்திறனாளிகள் நாளாக அனைத்து நாடுகளும் கொண்டாடி வருகின்றன. இதனையொட்டி, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனித்திறன், கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று  இந்த தினத்தை இணையவழியில் கொண்டாடியது. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் அவர்கள் நிகழ்ச்சியில் முழுமையாகப் பங்கேற்கஇயலாமல் போனது பின்னடைவாகத் தோன்றாத அளவுக்கு நிகழ்வை சிறப்பித்தார்கள் இதர சிறப்பு அழைப்பாளர்கள். விரல்மோழியர் ஆசிரியர் திரு. ரா. பாலகணேசன், இணையத்தென்றல் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்களில்ஒருவரான திரு. வினோத் பெஞ்சமின் மற்றும் இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்றுள்ள திரு.பாலநாகேந்திரன் ஆகிய மூவரின் உரைகளும் வெறும் வாழ்த்தாக அல்லாமல் இயல்பாக இருந்தன.

சிறுமி சகானாவின் பாடல், திரு. குமாரின் பலகுரல்ப் பதிவு, செல்வி. நாகேஷ்வரியின் கவிதை, சிறுவன் ஹரிஹரனின் பேச்சு மற்றும் செல்வி. சுந்தரியின் பலகுரல் என கலைகட்டியது அரங்கு.

பயிற்சி மையம் என்னும் தொடர் நடவடிக்கை:

இதுவரை ஆறு கூட்டங்களை ஜூம் வழியே ஒருங்கிணைத்திருக்கிற ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று மறைந்துவிட்ட முன்னால் ஊனமுற்றோருக்கான தலைமை ஆணையர் திரு. பி.கே. பிஞ்சா அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டத்தை, மறுநாளே பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையோடு இணைந்து நடத்தியது.

சங்கத்தின் தொடர் நடவடிக்கையாக, பார்வையற்றோருக்கான பணிவாய்ப்பே அவர்களின் சமூக ஒருங்கிணைப்பிற்கு வழிகோளும் என்பதைக் கருத்தில்கொண்டு, ஹெலன்கெல்லர் சங்கத்தின் போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி பயிற்சி மையத்தைத் (Coaching Centre for Competitive Exams by Helenkeller Association)தொடங்கி, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதிமுதல், தினமும் மாலை ஏழு மணிமுதல் எட்டுமணிவரை ஒருமணிநேரம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். அதற்கென ஒரு புலனக்குழுவை உருவாக்கி, பயிற்சி மைய மாணவர்களை அதன்வழியே ஒருங்கிணைத்துள்ளோம். சுமார் நூறு மாணவர்களைக்கொண்ட மையத்தின் வகுப்புகள் நூறுநாட்களைக் கடந்திருக்கும் நிலையில், அதன் வெற்றிவிழாவினை எதிர்வரும் ஜனவரி 3 2021 அன்று, உலக பிரெயில் தின விழாவோடு இணைத்து நடத்த உள்ளோம்.

எந்த ஒரு பிரச்சனை குறித்தும், சிந்தனைத் தளத்தின் வழியே அனைவரோடும் உரையாடி, தெளிவான புரிதல்களை உருவாக்கி, திட்டமிட்டு களத்தில் செயலாற்றுவதே ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முக்கியமான குறிக்கோள். அத்தகைய எங்களின் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அடுத்தாண்டிலும் தொடர வேண்டும் என விரும்புகிறோம்.

அனைவருக்கும் 2021 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்