ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை?

,வெளியிடப்பட்டது

மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே! ஊடக நண்பர்களே!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களிடையே உரையாடலினை நிகழ்த்தி, அவற்றின் சாராம்சமாக மாற்றுத்திறனாளிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கும் சில உரிமைசார் கோரிக்கைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்துடன் பரிசீலித்து, தங்கள் தேர்தல் செயல்திட்டத்தில் இடம்பெறச்செய்யுமாறும், ஊடக நண்பர்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளை செய்திகளாகப் பொதுத்தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாறு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

graphic சங்கப்பதாகையின் முன் நிற்கும் தலைவர் சித்ரா
தலைவர் சித்ரா

மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே! ஊடக நண்பர்களே!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களிடையே உரையாடலினை நிகழ்த்தி, அவற்றின் சாராம்சமாக மாற்றுத்திறனாளிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கும் சில உரிமைசார் கோரிக்கைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்துடன் பரிசீலித்து, தங்கள் தேர்தல் செயல்திட்டத்தில் இடம்பெறச்செய்யுமாறும், ஊடக நண்பர்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளை செய்திகளாகப் பொதுத்தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாறு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கைகள் அடங்கிய மனுவினைப் பதிவிறக்க இங்கே க்லிக் செய்யவும்.

1) அரசியல் பிரதிநிதித்துவம்:

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு முதலில் 33%, தற்போது 50% இட ஒதுக்கீடு வழங்கி உலக சமூகத்திற்கு முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2) மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கணக்கெடுப்பு:

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கணக்கெடுப்பு அடையாள அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கையைப் கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்தக் கணக்கெடுப்பு விரிவாகவும் துல்லியமாகவும் ஆழமாகவும் இருக்க வேண்டும். கல்வி அடிப்படையில் எழுத்தறிவு பெறாதோர், பள்ளிப்படிப்பை முடித்தோர், பட்டப்படிப்பு முடித்தோர், தொழிற்கல்வி பயின்றோர், ஆராய்ச்சியாளர்கள் எனவும், குடும்ப அடிப்படையில் ஒன்றிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், தம்பதிகள் இருவரும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளின் வருமானத்தை மட்டுமே சார்ந்திருக்கும் குடும்பங்கள் எனவும், தொழில் அடிப்படையில் அரசுப் பணியாளர்கள், தனியார் துறைப் பணியாளர்கள், சுயதொழில் செய்வோர், பணியில் இல்லாதோர் எனவும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

3) சிறப்புக் கல்வி:

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஒருங்கிணைந்த கல்வி, உள்ளடங்கிய கல்வி என எடுப்பார் கைப்பிள்ளை போலச் சீரழிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்குக் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரையிலான ஆரம்பக்கல்வி சிறப்புக் கல்வி என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். கல்வித்துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை சிறப்புக் கல்வி வழங்க வேண்டும்.

4) மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு:

தம்பதிகள் இருவரும் மாற்றுத்திறனாளிகளாக இருப்போரின் குழந்தைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். குழந்தை மாற்றுத்திறனாளியாகவோ அல்லது மாற்றுத்திறனாளி அல்லாதவராகவோ இருந்தாலும் பெற்றோர் இருவரும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

5) மாற்றுத்திறனாளிகள் பற்றிய வரைவுகள் தயாரிப்பில் மாற்றுத்திறனாளிகளின் பங்கு:

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கொள்கை முடிவுகள், அரசாணைகள் போன்றவற்றின் தயாரிப்பில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். எல்லாம் முடிந்த பின் அல்லது இறுதிக் கட்டத்தில் கருத்துக்கேட்பு என்று பெயரளவில் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு இருக்கும் நிலை மாற வேண்டும். ஆகவே மாற்றுத்திறனாளிகள் சார்ந்த அரசுத்துறை மற்றும் அரசின் உதவிபெறும் நிறுவனங்களின் அனைத்துப் பொறுப்புகளிலும் உரிய இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் சார்ந்த அரசுத்துறை மற்றும் அரசின் உதவிபெறும் நிறுவனங்களின் இட ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக விடப்படக்கூடாது.

6) இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒரு முன்மாதிரி:

மாற்றுத்திறனாளிகளைப் பணிக்கு வைத்துக்கொள்ள அரசுத்துறை நிறுவனங்களே பெரும்பாலும் தயங்குகின்றன. ஆகவேதான் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு முறையும் பணிவாய்ப்பை உறுதி செய்துகொள்ள நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அலுவலகங்கள், சிறப்புப் பள்ளிகள், காப்பகங்கள் போன்றவற்றில் ஏ, பி, சி, டி என அனைத்துப் பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டுப் பணியிடங்கள் எப்போதும் நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குப் பணிவாய்ப்பு அளிப்பதிலும், அவர்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதிலும் மற்ற அரசுத்துறைகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

7) அரசு உதவிபெறும் மற்றும் தனியார் நிறுவனங்கள் பணிவாய்ப்பு:

மாற்றுத்திறனாளிகளுக்கான பணிவாய்ப்புகளில் ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர் போன்ற பணியிடங்களில் மட்டுமே ஓரளவிற்கு உயர்பதவிகள் கிடைக்கின்றன. ஆனாலும் அவையும் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதித் தனியார் நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் வழங்கப்படுவதே இல்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிவரும் இன்றைய நிலையில் அவற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.

8) மாற்றுத்திறனாளிகளின் உடல்நலன் பாதுகாப்பு:

பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் அநேக நேரங்களில் ஒரே இடத்தில் முடங்கியிருப்பதால் மத்திய வயதிலேயே நோய்வாய்ப்பட நேரிடுகிறது. ஆகவே மாற்றுத்திறனாளிகளின் உடல்நலன் பாதுகாப்பிற்கு என்று தனியாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

9) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் கடைகள் அமைக்க அனுமதி அளித்தல்:

பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் என்பது சில பொருட்களை உற்பத்தி செய்து அல்லது கொள்முதல் செய்து சுமந்து சென்று விற்பனை செய்வதாகும். அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவும் நிலையற்றதும் மட்டுமின்றி நிறைய அவமானங்களையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது. ஆகவே அரசின் கல்வி நிறுவனங்கள், உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் கடைகள் அமைக்க நிதியுதவியுடன் அனுமதி அளிக்க வேண்டும்.

10) மாற்றுத்திறனாளிகள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்:

மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீட்டை மறுப்பது (ம) ஏமாற்றுவது, மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி வாய்ப்பை மறுப்பது, மாற்றுத்திறனாளிகளின் சொத்துக்களை அபகரிப்பது, மாற்றுத்திறனாளிகளைத் தாக்குவது, மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்துவது போன்றவற்றைத் தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்; இச்சட்டத்தைக் கண்காணிக்க அதிகாரம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

11) மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை:

மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை ரூ. 1000 மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை ரூ. 1500 என வழங்கப்படுகின்றது. தொடர் விலையேற்றத்தின் காரணமாக இந்தப் பராமரிப்பு உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ. 3000 மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 5000 என உயர்த்தி வழங்கப்பட வேண்டும். மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ. 1500 என்பது, உடற்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிற மாற்றுத்திறனாளிகளான பார்வைத் திறன், செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கும் உயர்த்தப்பட்ட பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

மேலே நாங்கள் தொகுத்துள்ள அனைத்துமே எங்களுடைய வாழ்வாதாரம் தொடர்பான நீண்டநாள் கோரிக்கைகள் ஆகும். எனவே அவை செயல்வடிவம் பெறும் பொருட்டு, தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

இவள், U. சித்ரா

தலைவர்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

தொடர்புகொள்ள: helenkellerforpwd@gmail.com

தொகுப்பு: கா. செல்வம்

பகிர

5 thoughts on “2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை?

  1. regard with article on election manifesto 2021 – sum of your
    recommendation unclear for instunts children of pwd couple need to
    given reservation, but it is unclear which department you are asking.

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்