graphic கால இயந்திரம்

கடந்துபோகும் 2020 ஆண்டு, கடகடனு ஒரு ரிவைண்டு

,வெளியிடப்பட்டது
கால இயந்திரத்தில் பறக்கும் மனிதன்
கால இயந்திரத்தில் பயணிக்கும் மனிதன்

வருஷம் முழுக்க அரசுக்கும் நமக்கும் வாய்க்கால் வரப்புத் தகராறுதான்ணே. ஸ்டேட்டாவது கொஞ்சம் கேட்டுக்குள்ள நின்னாங்க. என்ன வேணும்? ஏது தேவைனு கேட்கவாவது செஞ்சாங்க. இந்த செண்ட்ரலு நம்ம கண்ட்ரோல்லையே இல்ல. ஜெயரஞ்சன், சித்தரஞ்சன், இது என்னடா திவ்யாஞ்சன் புதுப்பேருன்னு பார்த்தா, தெய்வாம்சம் கொண்டவுங்கனு அர்த்தமாம். சரியான மனோரஞ்சன்தான் போங்க. அட மனோரஞ்சன்னா ஹிந்தில டைம் பாஸ்னு அர்த்தம்ணே.

“ஏம் மா இந்த காக்லியர் ஆப்ரேஷனுக்கு 5%, அதுக்கு யூஸ் பண்ணுற மெஷினுக்கெல்லாம் 12 18% ஜிஎஸ்டி போட்டா நாட்டில இருக்கிற 12 லட்சம் காது கேட்காதவுங்க பாவம்தானே; வரியைத் தூக்கிவிட்டுடுங்க”னு நம்ம ராகுல் அண்ணாச்சி கொடுத்த ஸ்டேட்மண்டை யாரும் காதுலேயே போட்டுக்கிட்டதா தெரியல. அப்பதான் புரிஞ்சது அவரு அவுங்களுக்கும் சேர்த்துதான் பேசிருக்காருன்னு.

அதைக் கன்ஃபார்ம் பண்ணின கதையா, தனிநபர் வருமான வரியில புதிய திட்டத்தைக் கொண்டாந்து, எழுபது வகையான வரிவிலக்கை ரத்து செஞ்சாங்க. 80DD 80G பிரிவில ஊனமுற்றோருக்கு சாதகமான வரி விலக்கையும் ரத்து பண்றோம்னு சொன்னாங்க. நம்ம சைடு நாய்ஸ் கொஞ்சம் தூக்கலானதும், அட இதெல்லாம் ஒரு சாய்ஸ் மட்டும் தாங்கனு வாய்ஸும்  கொடுத்தாங்க.

நிர்மலா சீதாராமன் ஓ. பன்னீர்செல்வம்
நிர்மலா சீதாராமன் ஓ. பன்னீர்செல்வம்

2020 21 பட்ஜெட்ல முதியோருக்கும் ஊனமுற்றோருக்கும் மொத்தமே ஒதுக்கீடு 9500 கோடி. தேநில, அதான் தேசிய நிதியில ஒதுக்கினதைக் கணக்குப் போட்டா, நம்ம தேநிக்காரரு பட்ஜெட்டு பரவால போங்க. இங்க மாற்றுத்திறனாளி நலனுக்கு மட்டும் 667 கோடி. போன வருஷத்தைவிடக் கூடுதலா 95 கோடி. நம்ம ஊரு எப்பவுமே நல்ல ஊரு தாங்க.

அட இப்படிலாம் ஒசத்தியாப் பேச ஆசதானுங்க. ஆனா அஞ்சாப்பு படிக்கிற பாப்பாவுக்கெல்லாம் பரிட்சைனு சொல்லி, படுத்தினாங்கலே பாடு. அப்பா அம்மாவப் பிரிஞ்சு ஹாஸ்டலில இஷ்டமே இல்லாமப் படிக்கிற பார்வையில்லாத குழந்தைக்கெல்லாம்  ஸ்கிரைப் சிஸ்டமாம். பப்லிகாம் மெல்லுற குழந்தைக்கு என்னயா பப்லிக்குன்னு கேட்காத பப்லிக்கே இல்லைனு ஆனதுக்கு அப்புறமாத்தான் அந்த ஐந்தாண்டு திட்டம் ரத்தாச்சு.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

இனி ஒரு பிரச்சனையும் இல்லைனு, கம்பீரமா மார்ச் போட்டு மார்ச்சுக்குள்ள நுழைஞ்சா, மார்ச்சுவரியெல்லாம் நிறையுதாம்னு இத்தாலிலருந்தும் சீனாவிலருந்தும் ஒரே சேட் நியூஸ். ஏய் கோவிட்டெல்லாம் அமெரிக்க ஐரோப்பால இருக்கிற டேவிட்டுக்குத்தான்னு சொல்லிட்டுக் கெடாவெட்டுக்குத் தெனாவெட்டாக் கிளம்புன கூட்டத்தை டோண்ட் கோ அவுட்ட்உன்னு துவம்சம் பண்ணிடுச்சு கரோனா.

மார்ச் 22 ஒருநாள் லாக்டவுன். மார்ச் 24ல இருந்து ஏப்ரல் 13 வரை லாக்டவுன். அப்புறம் ஒரு மாசம், இன்னும் ஒரு மாசம். கட்டம் கட்டமா நம்மலக் கட்டம் கட்டிடுச்சு கரோனா. இதுல கரண்டி எடு, கைதட்டுனு நம்ம ஜி நம்மல சொரண்டிவிட்டதெல்லாம் தனிக்கதை.

மச்சி நானெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில காலேஜ் போகப்போறேனு காலரைத் தூக்கிவிட்ட பசங்க எக்சாம்ல ஏழரையைக் கூட்டிடுச்சு கரோனா. ப்லஸ் ஒன் கடைசித் தேர்வை ஒத்திவைக்கிறோம், ப்லஸ்2 தேர்வு கண்டிப்பா நடக்கும். ஆனா எக்சாம் முடியும்போது லாக்டவுனும் போட்டுடுவோம். நொடிக்கு ஒரு அறிவிப்பு, தலைமுறையின் அதே டான்டட டான்டட பிரேக்கிங் நியூஸ் மியூசிக்கை வாண்டடா வண்டியில ஏத்தினதுதான் மிச்சம். ஹாஸ்டலில தங்கிப் படிச்ச சிறப்புப் பள்ளி பசங்களெல்லாம் பரிட்சையைப் பாதியிலேயே விட்டுட்டு பதறிப்போய் ஒட்டம் எடுத்தா, பஸ் சேவை நிறுத்தப்பட்டதா பகீருன்னு ஒரு செய்தி.  இப்படி எதுக்குமே இல்ல அவகாசம், எல்லாமே இங்க சாகசமுன்னு லாரி ஏறி வீடு சேர்ந்த ஸ்டோரியெல்லாம் ஏராளமா இருக்கு.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இரயில் இல்ல, தொழில் இல்ல, உணவில்ல, உறையும் இடத்துக்கான வாடகைக்கும் வழியில்லனு தவிச்சு நின்ன ஒரு தரப்பைத் தங்்களுக்குள்ளேயே தாங்கிப் பிடிச்சது இன்னோரு தரப்பு. நமக்கு நாமே திட்டத்தில நாட்கள் கொஞ்சம் போச்சு. அரசின் அன்புக்கரமும் அழைப்பு மையமா நீண்டுச்சு. ஆனா, ஐயாயிரம் கேட்டதுக்கு ஆயிரம்தான் கொடுப்போம்னு அடம் பிடிச்சதும், அதுவே சாதனைனு சிலர் அரசாங்கத் தேருக்கு வடம் பிடிச்சதுமாய் வரலாற்றில் இடம் பிடிச்சது ஏகப்பட்ட டுவிஸ்டுகள்.

டீவி சீரியல்கள் நின்னுட்டா என்னங்க, திக் த்ரில் அனுபவங்களுக்கு 24-7 செய்திச் சேனல்கள் இருக்கே. அதிலையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதானு பல வாரங்கள் படு ஜோரா நடந்த பட்டிமன்றத்தில மெயின் எக்சாம் தேதியையே அரியர் ஸ்டைலில அறிவிச்ச அரசாங்கத்தைப் பார்த்து டரியல் ஆயிட்டான் பையன்.

பேருந்து முன் நிற்கும் மாணவர்கள்
பேருந்து முன் நிற்கும் மாணவர்கள்

தேதி குறிக்க, மாத்தி வைக்க, ஒத்திப்போடன்னு புதுசா ஜோக் சொல்ல மேடை ஏறுனவன் தோத்தான் போங்க. ஒருவழியா ஜூன் பதினைந்துன்னு முடிவானதுதான் தாமதம், சிறப்புப் பள்ளி மாணவருக்கெல்லாம் சிறப்பான ஏற்பாடு. முடங்கிக் கிடந்த பஸ்ஸையெல்லாம் பேசி, முப்பத்தேழு மாவட்டத்துக்கும் முடுக்கிவிட்டுட்டாரு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரு.  ஒரு மாணவனுக்கு ஒரு பஸ்ஸுங்கிறதெல்லாம் உலக சரித்திரத்திலேயே முதன்முறைங்க.

எக்சாம் எல்லாம் இல்ல, எல்லோரும் பாஸுன்னு தமிழ்நாட்டு பாஸு தைரியம் சொன்னதில தலைகால் புரியல பையனுக்கு. வால்ல அடிச்ச பந்து கணக்கா, ஸ்கூல்ல இருந்து ரிட்டனு.

மாணவிகள் காவியா மற்றும் ஓவியா
இடது காவியா, வலது ஓவியா

நடக்காத எக்சாம விடுங்க. நடந்த சிபிஎஸ்சி பத்தாம் வகுப்புப் பரிட்சையில தன்னோட லேப்டாப்ல தானே எழுதி 500க்கு 447 வாங்கி, எல்லாரையும் வாவ் போட வச்சது நம்ம குழந்தை நெய்வேலி ஓவியானா, ப்லஸ்2 தேர்வில 600க்கு 571 எடுத்து,சாதனை படைச்சாங்க திருச்சி அரசுப் பார்வையற்றோர் பள்ளியோட மாணவி காவியா. ஐஏஎஸ்தான் கனவுன்னு ரெண்டு பேருமே சொல்லி முடிக்கல, டில்லிலருந்து வந்த சேதிக்குத் துள்ளிக் குதிச்சது தமிழ்நாடு.

பூரணசுந்தரி பாலநாகேந்திரன்
பூரணசுந்தரி பாலநாகேந்திரன்

சிவில் சர்வீஸ் பரிட்சையில பூரணசுந்தரியும்,பாலநாகேந்திரனும் பாஸுன்னு வந்த நியூசால, ராவும் பகலும் கரோனா கரோனானு ரவுண்ட்ஸ் வந்த சேனலெல்லாம், பொழுதுக்கும் பூரணா பூரணானு பேசுனதைக் கேட்டு நெஞ்சுக்குள்ள பூக்காடு நெறஞ்சிருச்சு போங்க.

போராடும் ஊனமுற்றோர்
போராடும் ஊனமுற்றோர்

கரோனா காலத்தில, யாரும் வரமாட்டான் ரோட்டுக்குன்னு தன் பாட்டுக்கு மோடிஃபிகேஷன்களை முடுக்கிவிட்டது செண்ட்ரல். அதிலையும் ஆர்பிடி ஆக்டு செக்‌ஷன்  90, 92ல சின்னதா ஒரு திருத்தமுன்னு சிலருக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லி, விட்டுப் பார்த்தது விஷாமுத்திரர் கூட்டம். இப்பகூட, நேஷனல் டிரஸ்ட் ஆக்டு, பார்வையற்றோருக்கான நேஷனல் இன்ஸ்டியூட்டோட ரீஜினல் ப்ராஞ்சுங்கள மூடுற விவகாரமெல்லாம் பரவி, சமூகம் வெகுண்டதில, அத்தனையும் வாபஸு ஆப்பரேஷன் சக்சஸு.

ஜூம் லோகோ
ஜூம் லோகோ

தனிச்சுகூட இருக்கலாம், ஆனா தமிழ் இல்லாம எப்படி? குந்தகமாப் போச்சேனு அந்தகக்கவி ஆளுங்க முடங்கிடல ரூமுல. முற்போக்கா திங் பண்ணி முதல் ஆளாக் கூடுனாங்க ஜூமுல. இலக்கியத்துக்காக நீங்க இயங்குனா, சமூகத்துக்காக நாங்களும் சவுண்டு கொடுப்போம்லனு இந்தப் ப்ராசசைப் ப்ராகிரஸ் பண்ணுன பெருமையை அப்படியே பிய்க்காம பிசையாம பீட்டிஎஃப்பி ஃபாரத்துக்கே கொடுத்திரலாம். ஆனா பாருங்க பாஸு! அரங்கத்தில நீங்க வெளக்கு வேணா ஏத்திருக்கலாம், வெடி வெடிச்சது நாங்கதேனு விரல்மோழியர் சொல்லுறதுக்கும் ஒரு  வெள்ளிவிழாக் கதை இருக்கு.

டெக்னாலஜி, டெர்மினாலஜி, உங்க ப்ராப்லம் லாவாஜி? அப்போ இங்க ஆவோஜினு, இந்த வருஷம் ஜூமோட பிக்பாஸு, இணையத்தென்றல் காட்டினதெல்லாம் எவர்கிரீன் மாஸு.

ரூமானாலும் ஜூமானாலும் குமுறிக்கிட்டே இருக்காம கூப்பிடுவோம் லீடரைனு பார்டர் தாண்டிப் பாஞ்சது பவர்ஃபுல் சிங்கம் நம்ம ஹெலன்கெல்லர் சங்கம். கரோனா சிச்சுவேஷன், கண்டிப்பா வேணும் சொலூஷன், பக்குவமான ரெப்பிரஷண்டேஷன், யாரும் பண்ணிடாத ஆப்ரேஷன் ஜூலை 26ஜூம்ல நடந்ததெல்லாம் சுமூகமான கான்வர்ஷேஷன்.

ஜெனிடிக்கல் கேட்ராக்டு, செண்ட்ரல் இன்ஃபர்மேஷன் ஆக்டு, அவேர்னஸ்தான் எப்பவுமே ஏஐசிஎஃப்பி தாட்டுன்னுஅதுக்காகவே திறந்தாங்க ஜூமோட கேட்டு. எஜுகேஷன் பாலிசி, எல்லாமே ஃபாலசினு சிஎஸ்ஜிஏபியும், டிஏபியும் தெறிக்கவிட்டாங்க பாரு, ரொம்பத் தேவையான வாரு. இன்னும் ஒரே ஒரு பன்ச் மட்டும்.

உண்மையச் சொன்னா இந்தாண்டு ஜூமோட மோஸ்ட் வாண்டட் க்லைண்டு, உலகத்திலேயே வேற யாருமில்ல அது தமிழ்நாட்டு ப்லைண்டு.

கவிதை மட்டுமில்ல ஜி, இந்த லாக்டவுன் காலத்தில கடந்துவந்த கண்ணீர்க்கதையும் நிறையவே இருக்கு. ஆயுசுக்கும் சொசைட்டிக்காக அக்கினிச் சட்டி சுமந்த சிலர சாய்ஸே இல்லாம சாச்சுடுச்சு கரோனா. பிகே பின்ச்சா, ஏகே மித்தலுன்னு வடக்கு வாடுனதும், அர்ணாச்சலம், முத்தரசன், ராமமூர்த்தினு அடுத்தடுத்து தெற்கு தேம்புனதெல்லாம், தீராத சோகம், என்றும் ஆறாத காயம்.

முத்துசாமி
முத்துசாமி

எல்லாத்துக்கும் சேத்து, எடுத்துவச்சு மொத்தமா  ஆணியறைஞ்ச கதையா, அறிய முடியாத விபத்துன்னு சரியக்கூடாத வயசுல சங்கத்தலைவர் முத்துசாமி சாஞ்சாரே சாமி. அவராவது நாளுநாள்தான். நாளு மாசமா அவரோட டெத் கேஸு கோமாவிலதான் கெடக்கு.

‘அறிய இயலா விபத்து.’ ஆயுசுக்கும் அடிமனச அசைச்சு பாக்குற வரிய நாம மட்டும் சொல்லல, நாளும் தெரிஞ்ச அதிகாரிங்களும் நாளு மாசமா சொல்லுறாங்க. என்னது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ஆ? போனவர்கிட்டேயே கொடுத்திட்டோம்னு அவுங்க புதுசா ஒரு கதை சொன்னாலும் புழுங்கத்தானே போறோம், புரட்சி பண்ணவா போறோம்?

முத்துசாமி இறப்பு அறிய இயலா விபத்துன்ன்னா, சகோதரி சரண்யா கழிவுநீர்த் தொட்டில விழுந்து உயிர்விட்டது அறிஞ்சே நடந்த படுகொலைதான? ஆனா அது பற்றி யாருக்கும் அக்கறை இல்ல. பொற்கால திராவிட ஆட்சின்னு போற இடமெல்லாம் முழங்குற இந்நாளும் முன்னாலும் கூட கவர்மெண்ட் ஆஃபீசுங்களோட கற்கால கேவலத்தக் கண்டுக்கிட்டதா தெரியல. அரசியல் சாக்கடைனு ஆண்டு கணக்கா சொல்லிட்டு, இப்போ அடுத்த முதல்வர் நான்தானு கோதாவில இறங்கிட்ட புதிய இந்தியா போதகரு, தூய்மை இந்தியா தூதுவரு, ஸ்வச் பாரத்து, வெஜ் பாரத்துன்னு வேதாந்தம் பேசுற கூட்டமுனு எல்லாரும் அன்னக்கி வேற கிரகத்துக்குப் போய்ட்டாங்க போல. ஆனா பாருங்க, ஓட்டுக் கேட்டு புலூட்டோவுக்கா போக முடியும், பூமிக்குத்தானே வரணும். ஊனமுற்ற தோழமைகளே! உஷாரு, உஷாரு.

graphic ஊன்றுகோலைப் பயன்படுத்தி சாலையில் நடக்கும் பார்வையற்றவர்

ஃபன் தானே பண்ண்்ணுறோமுனு ரன் ஆகுற பார்வையற்றோர் தொடர்பான யூட்டூப் வீடியோ ஒன்னு நம்ம யூத் சங்கத் தலைகிட்ட சிக்க, காரித் துப்புங்க, கண்டபடி மொத்துங்கனு அவரு குழுக்குழுவா கொதிச்சதுல கொந்தளிச்சது சமூகம். வாபஸ் வாங்குங்க இல்லைனா வழக்குத் தொடுப்போம்னு நாம தொடுத்த அட்டாக்குக்கு அப்பாலஜி கேட்டாங்க, ஐயா சாமினு கெஞ்சுனாங்க. ஆனா வீடியோவ எடுக்கல. விவகாரம் இப்போ வழக்காகி மாற்றுத்திறனாளி ஆணையரோட கையில.

அட ப்ராங் வீடியோவ விடுங்க, ப்ராங்க்கா சொன்னா, நடிகை குஷ்பு, நாளும் தெரிஞ்ச திருமா, இப்போ நாடாளும் கட்சியில இருந்து ஐயா வைத்தியலிங்கம், இப்படிப் பொறுப்பான மனுஷங்களே போற போக்குல ஊனத்தைச் சொல்லி உளறுறதைப் பார்த்தா, நாம கேட்கிறதெல்லாம் கருணை இல்ல உரிமைனு புரிஞ்சுக்க இவங்களுக்கே இன்னும் ஒரு நூறாண்டு வேணும் போல.

அதனால, இப்ப இல்லைனா நாளைக்காச்சும்,

மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்.

முதல்ல  இந்த வருஷக் காலண்டரை.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com

பகிர

1 thought on “கடந்துபோகும் 2020 ஆண்டு, கடகடனு ஒரு ரிவைண்டு

  1. பாஸ்கர் புதுக்கோட்டை யிலிருந்து says:

    கடந்து வந்த இந்த ஆண்டின் பல்வேறு சம்பவங்களை தொகுத்து மன கண் முன்னே திருத்திய இந்தி கடகடனு ஒரு ரிவைன்டு 2020 மிகவும் அருமை

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்