graphic dogani poster

இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 4: Dogani (Silenced) (கொரியத் திரைப்படம்.

,வெளியிடப்பட்டது

இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

கா. செல்வம்

டொகானி திரைப்பட போஸ்டர்

தமிழ்த் திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள் கட்டமைக்கப்படும் விதம் பற்றிய இத்தொடர், ஒன்றிரண்டு இந்தித் திரைப்படங்கள் குறித்தும் விவாதித்தது. இப்பரிமாணத்தின் தொடர்ச்சியாக பிற மாற்றுத்திறனாளிகள் குறித்த தனித்துவமான சில திரைப்படங்கள் பற்றியும் இத்தொடர் விவாதிக்க இருக்கிறது. அந்த வகையில் செவித்திறன் மாற்றுத்திறனாளி கதாபாத்திரங்கள் இடம்பெற்ற திரைப்படங்கள் அடுத்துவரும் பகுதிகளில் வரவிருக்கின்றன. பிற மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் செவித்திறன் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள் ஓரளவிற்கு இயல்புத் தன்மையுடன் கட்டமைக்கப்படுகின்றன. செவித்திறன் குறைபாடு இருப்பதால் பேச இயலாமல் இருப்பது, உதட்டசைவைப் பார்த்து பேசுவதைப் புரிந்துகொள்வது, சைகை மொழியைப் பயன்படுத்துவது என இயல்பான தன்மையுடனே செவித்திறன் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் முதன்மைக் கதாபாத்திரம் மட்டுமின்றி பெருமளவு துணைக் கதாப்பாத்திரங்கள் ஆங்காங்கே காட்டப்படுகின்றன. திடீரென அதிர்ச்சியால், இறைவன் சக்தியால் கேட்கும், பேசும் திறன் வந்துவிடுவது போன்ற சில திரைப்படங்களைத் தவிர பெரும்பாலான திரைப்படங்களில் செவித்திறன் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள் சரியாகவே உண்மைக்கு நெருக்கமாகவே உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு திரைப்படம் செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரம் வெளியாகிறது. அந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. திரைப்படம் வெளியான அடுத்த மாதத்திலேயே (அக்டோபர்) அந்தத் திரைப்படத்தின் பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்படுகின்றது. அந்தத் திரைப்படம் பேசிய குற்றச் சம்பவங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. முந்தைய சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள், மறு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாகின்றனர். ஒரு படைப்பு என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் இந்தத் திரைப்படம்; ஒரு படைப்பை எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் இந்தத் திரைப்படத்தின் பார்வையாளர்களும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆவர்.

கதைச் சுருக்கம்:

செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியில் சேர்கிறான் நாயகன். பள்ளியின் சூழலும் மாணவர்களின் நடத்தையும் நாயகனுக்கு மிகவும் வித்தியாசமாகத் தோன்றுகிறது. பெரும்பாலான மாணவர்கள் இறுக்கமான மனநிலையுடனே காணப்படுகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டு தண்டிக்கப்படுவதை நாயகன் பார்க்கிறான். மேலும் ஆண், பெண் பாரபட்சமின்றி பெரும்பாலான மாணவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதையும் நாயகன் பார்க்கிறான். இவை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிடுகிறான்; ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கல்வித்துறை, காவல்துறை என எங்கு முறையிட்டாலும் கண்டுகொள்ளப்படவில்லை. இறுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக இந்தப் பிரச்சினை மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகின்றது.

நீதிமன்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் துருவித்துருவி கேள்விகள் கேட்கப்படுகின்றன; மாணவர்களைக் குழப்புவதற்கும் முயற்சிக்கின்றனர். இதனிடையே நாயகனும் வழக்குத் தொடுத்த மாணவர்களும் மிரட்டப்படுகின்றனர். சில பெற்றோர்கள் ஏழ்மை காரணமாக விலைக்கு வாங்கப்படுகின்றனர். அவ்வாறான பெற்றோர்கள் வழக்கைத் திரும்பப் பெறுகின்றனர். உச்சகட்டமாக நீதிபதிக்கும் விலை உறுதி செய்யப்படுகின்றது. வழக்குத் தொடுக்க ஏற்பட்ட கால தாமதம், வழக்குத் தொடுத்த சிலர் திரும்பப் பெற்றது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக அந்தஸ்து போன்ற காரணங்களைக் கூறி பலருக்கு விடுதலையும் இருவருக்கு மட்டும் மிகக்குறைந்த அளவிலான தண்டனை அளிக்கப்படுகிறது. பெரும் ஏமாற்றத்தினால் கோபம் கொண்ட பாதிக்கப்பட்ட மாணவர்கள் போராடுகின்றனர். போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்ட பிறகு, எதுவும் செய்ய இயலாத நாயகன் அந்த ஊரை விட்டுச் செல்வதாகத் திரைப்படம் முடிகிறது. ஆனால் நிழலில் அங்கே முடிந்த இந்தத் திரைப்படம், நிஜத்தில் வீரியமான பயணத்தைத் தொடர்ந்து சரியான தீர்ப்பைப் பெற்றுத் தந்தது.

மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள்:

நீதிமன்றத்தில் சைகை மொழி
sign language in court

இந்தத் திரைப்படத்தில் மிக முக்கியமானவை நீதிமன்றக் காட்சிகள் ஆகும். முதலில் நீதிமன்ற விசாரணையைப் பார்க்கும் மாணவர்கள் தங்களுக்கு எதுவும் புரியவில்லை என்கின்றனர். அதாவது செவித்திறன் குறையுடைய தங்களுக்கு மற்றவர்கள் பேசுவது கேட்காது என்பதால் சைகை மொழியாக்கம் வேண்டும் என்று கேட்கின்றனர். அதன்பின் சைகை மொழியாக்கத்துடன் விசாரணை தொடர்கிறது. செவித்திறன் குறையுடையோர்களிடம் எழுதிக்காட்டி விசாரணை செய்வதே பெரும்பாலான திரைப்படங்களில் காட்டப்படும். ஆனால் இவ்வாறான சைகை மொழியாக்கத்துடன் நீதிமன்றக் காட்சி அமைக்கப்பட்டது மிகச்சிறந்த முன்னுதாரணம் ஆகும்.

நீதிமன்றத்தில் இசை கேட்டு சாட்சி சொல்லும் சிறுமி

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சிறுமி அந்த அறையில் குறிப்பிட்ட இசை ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று கூறியிருப்பாள். நீதிமன்றத்தில் அச்சிறுமியை அக்குறிப்பிட்ட இசையொலியை அடையாளம் காட்ட நீதிபதி உத்தரவிடுவார். அச்சிறுமி திரும்பி நிற்க வைக்கப்பட்டு, சில நொடிகள் அமைதிக்குப் பிறகு அந்த இசை ஒலிக்க விடப்படும்; சற்று நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒலிக்க விடப்படும். இசை ஒலிக்கும் போதெல்லாம் அச்சிறுமி தனது கையை உயர்த்திக் காட்டுவார். செவித்திறன் குறையுடையவர் என்று கூறும் அச்சிறுமி, கேட்கும் திறனுடையவர் என்றும், இந்நாள் வரை அச்சிறுமி பொய்யாக நடித்திருக்கிறார் என்றும் வழக்கறிஞர் வாதிடுவார். அதற்கு அச்சிறுமி தனக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது உண்மை என்றும், ஆனாலும் தன்னால் குறிப்பிட்ட சில ஒலிகளைக் கேட்டறிய இயலும் என்றும் வாதிடுவார். பல திரைப்படங்களில் செவித்திறன் குறையுடையோருக்கு முற்றிலும் எந்த ஒலியையும் கேட்க இயலாது என்பது போலவும், பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முழுமையான பார்வையற்றவர்கள் என்பது போலவும் தவறாகக் காட்டப்படும். ஆனால் இத்திரைப்படத்தில் குறைபாடு மிகச்சரியாகக் காட்டப்பட்டிருக்கும்.

இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் ஹீரோயிசம் காட்டுவதில்லை. அதீதமான சிறப்புத் திறன்களைக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக ஒரு காட்சியில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன், அடுத்த நாள் வழக்கு விசாரணையின் போது பதில் சொல்வதற்கு படித்துக் கொண்டிருப்பான். அப்போது நாயகனான ஆசிரியர், அச்சிறுவனிடம் என்ன செய்கின்றாய் என்று கேட்க, இன்று அவள் மிகச்சரியாக நீதிமன்றத்தில் பதில் கூறினாள் என்றும், தன்னால் அந்தளவிற்கு சிறப்பாகக் கூற முடியாது என்றும் அதற்காகப் பயிற்சி செய்கிறேன் என்றும் கூறுவான். அதாவது மாற்றுத்திறனாளிகளும் நிறைகுறைகளைக் கொண்ட சராசரியான மனிதர்கள் என்பதையும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அதீதமான தனித்திறன்கள் கொண்டவர்கள் அல்லர் என்றும் இத்திரைப்படத்தில் மிக இயல்பாகக் காட்டப்பட்டிருக்கும்.

கதையின் உண்மைப் பின்னணி:

1961ஆம் ஆண்டில் தென் கொரியாவின் Gwangju நகரில் Gwangju Inhwa என்ற பெயரில் செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டது. அந்தப் பள்ளியின் மீது இத்திரைப்படத்தில் கூறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு 2000ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்டது. ஆனால் சட்டத்தில் உள்ள சில கூறுகளைப் பயன்படுத்தி ஆறு குற்றவாளிகளில் நால்வர் விடுவிக்கப்பட்டனர்; இருவருக்கு மட்டும் ஓராண்டிற்கும் குறைவான மிகச்சிறிய அளவு தண்டனை வழங்கப்பட்டது. இந்த சம்பவங்களின் அடிப்படையில் Gong Ji-Young என்ற எழுத்தாளர் The Crucible எனும் நாவலை 2009ஆம் ஆண்டு எழுதினார். இந்நாவலைக் கொண்ட இத்திரைப்படத்தை 2011ஆம் ஆண்டு இயக்கினார் Hwang Dong-Hyuk. 22.9.2011இல் வெளியான இத்திரைப்படம் அரசின் கவனத்தை ஈர்த்தது. அதே ஆண்டில் அக்டோபர் மாதம், குற்றவாளிகள் விடுவிக்கப்படக் காரணமாக இருந்த விதிவிலக்குகள் நீக்கப்பட்டு கடுமையான புதிய சட்டம் இயற்றப்பட்டு, வழக்கு மறு விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். அந்தச் சட்டம் இத்திரைப்படத்தின் பெயராலேயே “Dogani Law” என்று பெயரிடப்பட்டது.

படைப்பின் இலக்கணம்:

இரயில்வே டிராக்கில் சண்டையிடும் மாணவன்
இரயில்வே டிராக்கில் சண்டையிடும் மாணவன்

அடிமையாக இருக்கும் ஒருவனிடம், அவன் அடிமையாக இருப்பதை உணர்த்துவதே எந்தவொரு புரட்சியின், மறுமலர்ச்சியின் அடிப்படைக் கூறாகும். அந்த அடிப்படையில் இத்திரைப்படம் நடந்த சம்பவங்களை அப்படியே திரையில் கொண்டுவந்து காட்டியது. கலை ஆக்கம் என்ற போர்வையில் மிகைப்படுத்தலோ மழுப்பலோ இல்லாமல், உண்மையை உண்மையைப் போன்று உருவாக்காமல் உண்மையை அப்படியே மக்களிடையே கொண்டு சேர்த்தது இத்திரைப்படம். அதற்கு ஒரு சோற்றுப் பதமாகப் பின்வரும் காட்சியைக் கூறலாம்.

வழக்கு விசாரணைக்காக முந்தைய நாள் நன்றாகத் தயார்படுத்திக் கொண்ட அச்சிறுவன் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கிறான். ஆனால் அவன் அழைக்கப்படவே இல்லை. ஏன் என்று ஆசிரியரிடம் கேட்க, அவனுடைய வயது முதிர்ந்த ஏழ்மையான பாட்டியிடம் பணம் கொடுத்து வழக்கைத் திரும்பப் பெறச் செய்துவிட்டனர் என்று ஆசிரியர் கூறுகிறார். வழக்கைத் திரும்பப் பெறுவது பற்றிப் பாதிக்கப்பட்ட தன்னிடம் கேட்காமல் எப்படி முடிவு செய்யலாம் என்றும் இதனைத் தான் ஏற்க முடியாது என்றும் தன்னுடைய வாக்குமூலத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் என்றும் அழுகிறான். ஆனால் அவனைக் கண்டுகொள்ளாமல் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது; குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

ஆனாலும் கோபம் குறையாத அச்சிறுவன், தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆசிரியரைத் தண்டிக்கக் கத்தியுடன் கிளம்புகிறான். அவனைப் பார்த்த ஆசிரியர் சற்றும் குற்ற உணர்வோ அதிர்ச்சியோ இல்லாமல், “என்னடா, சுகத்தைத் தேடி வந்தாயா?” என்றவாறு கட்டிப்பிடிப்பார். மேலும் அச்சிறுவன் தன்னைக் கத்தியால் குத்தவிடாமல் அவனது கையைப் பிடித்துக்கொள்வார். உடல் வலிமையான அந்த ஆசிரியரை எதிர்த்து அச்சிறுவனால் எதுவும் செய்ய இயலாது. ஆனாலும் அப்போது அவர்கள் இரயில் தண்டவாளத்தில் இருப்பதால் அவரை நகர விடாமல் பிடித்துக்கொள்வான். அப்போது வரும் இரயிலில் இருவரும் அடிபட்டு இறந்து போவர்.

பொதுவாகப் பல திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளின் துயரத்தைக் கண்டு இறுதிக் காட்சிகளில் கெட்டவர்கள் திருந்திவிடுவர். இத்திரைப்படத்தில் அம்மாதிரியான ஒரு காட்சி கூடக் கிடையாது. மேலும் பல திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகள் கூடுதலான உடல் வலிமையுடனும் அதீதமான புத்திக்கூர்மையுடனும் இருப்பதாகக் காட்டப்படும். சாதாரண மனிதர்களில் சிலர் தனித்துவமாக இருப்பது போல மாற்றுத்திறனாளிகளிலும் தனித்துவமான சிலர் இருப்பர். ஆனால் பெரும்பாலானோர் சராசரியான மனிதர்கள் தான். அவர்களின் இயலாமையும் தோல்வியும் எவ்வித ஒப்பனையும் இல்லாமல் காட்டப்படும்போது மட்டுமே நிவாரணம் சரியானதாக இருக்கும். மேலும் இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால் இங்கே க்லிக் செய்யுங்கள்

கொரோனா பொது முடக்கக் காலத்தில் மாற்றுவழி வெளியீடாக இணைய வழியில் பல திரைப்படங்கள் வெளிவருகின்றன. வழி மட்டுமே மாற்றுவழியே தவிர திரைப்படங்களில் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. அப்படி வெளியான மிகவும் சராசரியான ஒரு திரைப்படம் பற்றி இத்தொடரின் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

***

தொடர்புகொள்ள: teacherselvam@gmail.com

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்