துண்டு துண்டாய் திருத்தங்கள், துண்டாடப்படுகிறதா ஊனமுற்றோருக்கான கல்வி?

காதொலிக்கருவி, மற்றும் ஊன்றுகோல் உடன் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் லோகோ

ஊனமுற்றோருக்கான சிறப்புக் கல்வியைத் திட்டமிட, அதனைக் கற்பிப்பதற்கான சிறப்பாசிரியர்களை உருவாக்க, அவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளை வடிவமைக்க என பல்வேறு நோக்கங்களுடன் 1992 ஆம் ஆண்டு நடுவண் அரசால் உருவாக்கப்பட்டதுதான் இந்திய மறுவாழ்வுக்குழு சட்டம் Rehabilitation Council of India Act 1992. அந்தச் சட்டம் இயற்றப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான், முக்கியமான ஊனமுற்றோருக்கான சட்டம் 1995 இயற்றப்பட்டது. நாட்டில் ஊனமுற்றோருக்கென்று முதன்முறையாக பிரத்யேகமாக ஒரு சட்டம் இயற்றியாயிற்று. அந்தச் சட்டம் கல்வி குறித்துப் பிரதானமாய்ப் பேசுகிறது. அப்படியானால், கல்விக்கென்றே இயற்றப்பட்ட ஆர்சிஐ சட்டத்தில் ஊனமுற்றோருக்கான சட்டம் 1995 சரத்துகளை உட்புகுத்துவது அவசியம் எனக் கருதிய நடுவண் அரசு ஆர்சிஐ சட்டத்தில் 2000ஆம் ஆண்டு சில திருத்தங்களை மேற்கொண்டது.

இப்போது அதே ஆர்சிஐ சட்டத்தில் சில திருத்தங்களைப் பரிந்துரைத்திருக்கிறது நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம். ஆனால் இம்முறை அதற்கான காரணம் வேறு. பரிந்துரை ஆவணத்தின் முகவுரையில் ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 சரத்துகளை உள்ளடக்கும் பொருட்டு திருத்தங்கள் பரிந்துரைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டிருந்தாலும், தற்போது அமல்ப்படுத்தப்பட உள்ள புதிய தேசியக் கல்விக்கொள்கையின் முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியதாக இந்திய மறுவாழ்வுக் குழு சட்டம் திருத்தப்பட வேண்டும் என நடுவண் அரசு விரும்புவதையே அதன் உள்ளடக்கம் தெளிவாகச் சொல்கிறது.

நடுவண் அரசு பரிந்துரைகளைப் படிக்க

எந்த கல்விக்கொள்கை அருகாமைப் பள்ளிகளை அகற்றிவிடத் துடிக்கிறதோ, எந்தக் கல்விக் கொள்கையால் சிறப்புக் கல்வி என்ற வார்த்தையே வஞ்சிக்கப்பட்டிருக்கிறதோ  அதே கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஊனமுற்றோருக்கான கல்வியையும் வணிகமயமாக்கத் துடிக்கிறது நடுவண் அரசு.

தனிநபர்கள், ஊனமுற்றோருக்காக இயங்கும் அமைப்புகள் நடுவண் அரசின் பரிந்துரையின் மீது தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க டிசம்பர் 23 2020 கடைசி நாள் என காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என ஊனமுற்றோருக்கான தேசிய மேடை (NPRD) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு அமைப்புகள் நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் (TARADACG) மற்றும் டிசம்பர் 3 இயக்கம் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.

நிர்வாகம், அலுவல்சார் அதிகாரங்கள்  என பல திருத்தங்களை அரசு மேம்போக்காக முன்வைத்தாலும், அது நிறைவேற்றத் துடிக்கும் முக்கியத் திருத்தம் ஒன்றே ஒன்றுதான் என்பதை அதன் திருத்த சரத்துகளில் இருக்கிற 3ஆம் பிரிவின் முதல் வரியே நமக்குத் தெளிவாகச் சுட்டிவிடுகிறது.

அதாவது, இந்திய மறுவாழ்வுக்குழு நான்கு ஆண்டுகளில் தனது நிதி ஆதாரங்களைத் தானே உருவாக்கிக்கொள்ளும் ஒரு சுய சார்புடைய தன்னாட்சி அமைப்பாக மாற வேண்டும். (the council shall make the Council financially self sustaining within a period of four  years.)

இந்த ஒற்றைத் திருத்தத்தை மட்டும் பல இடங்களில் தொடர்ந்து தனது பரிந்துரை ஆவணத்தில் சுட்டிக்கொண்டே இருக்கிறது அரசு.

‘சுய சார்புடைய, தன்னாட்சி அமைப்பு!’ எங்கேயோ கேட்ட குரல் ஆயிற்றே என நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஆம்! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான அதே பிரச்சனைதான் இங்கும். அதாவது, இதுவரை நடுவண் அரசு இந்திய மறுவாழ்வுக் குழுவுக்கு வழங்கிவந்த நிதி ஆதரவை நிறுத்திக்கொள்ளும். குழு தனது நிதியை தானே திரட்டிக்கொள்ள வேண்டும்.

எப்படித் திரட்டுவார்கள் என்றால், அதற்கும் நேரடியாக இல்லை என்றாலும் சூசகமாக வழி கற்பித்துத் தருகிறது அரசு. அதாவது, ஊனமுற்றோருக்கான சிறப்புக் கல்வி தொடர்பான கலைத்திட்டம் வகுத்தல், சிறப்புக் கல்வி தொடர்பான பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளைத் தொடங்க விரும்பும் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல், ஊனமுற்றோருக்கான சிறப்புக் கல்வியைப் பெறும் சிறப்பாசிரியர்களுக்கான அங்கீகாரம் வழங்குதல், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அவற்றைப் புதுப்பிப்பது தொடர்பான தேர்வுகளை நடத்துதல் என சகல வழங்குதல் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் குழுவிற்கு இருக்கும். நன்றாகக் குறித்துக்கொள்ளுங்கள்! “சகல வழங்குதல் தொடர்பான அதிகாரங்கள்”.

அதேசமயம், அப்படி மறுவாழ்வுக் குழுவினால் அங்கீகரிக்கப்படும் நிறுவனங்கள் மீதான முறைகேடு புகார்களை விசாரித்து அறிக்கை தர மட்டுமே குழுவுக்கு அதிகாரம் உண்டு. நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பு அரசைச் சார்ந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆர்சிஐ, நேஷனல் ட்ரஸ்ட் முதலிய ஊனமுற்றோர் தொடர்பான அமைப்புகளில் தலைவர் நாற்காலிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. இதனால், முறையான நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளின்றி மேற்சொன்ன நிறுவனங்கள் தடுமாறிக்கொண்டிரு்க்கின்றன. விளைவு, ஊனமுற்றோருக்காக நடத்தப்படும் பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கையில் அவ்வளவு விதிமீறல்கள் குளறுபடிகள். ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்குப் பின் ஊனமுற்றோருக்கான செயலர் தலையீட்டில் தற்போது சேர்க்கை நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடுவண் அரசு அதீதமாய் வலியுறுத்தும் சுய சார்புடைய தன்னாட்சி என்பது ஊனமுற்றோருக்கான சிறப்புக் கல்வியின் ஒட்டுமொத்த தரத்தையே கேள்விக்குள்ளாக்கும். மேற்சொன்ன வழங்கல் அதிகாரத்தால் இந்திய மறுவாழ்வுக் குழுவின் நிதி வளங்கள் மேம்படலாம். ஆனால், கல்வி ஒன்றையே தங்கள் வாழ்வியல் ஏற்றமாக நம்பிக்கொண்டிருக்கும் ஊனமுற்றோரின் நிலை என்ன ஆவது?

அதனால்தான் சொல்கிறோம், துண்டுதுண்டாய் திருத்தங்கள் செய்து, எங்கள் கல்வியைத் துண்டாடுவதைக் கைவிடுங்கள். உண்மையில் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அமலாக்கத்தை இதய சுத்தியோடு நிறைவேற்ற விரும்பினால், ஊனமுற்றோரின் உரிமைகளுக்காய் களம் காணும் அனைத்து சங்கங்களுடனும் அமர்ந்து பேசி, புதிய இந்திய மறுவாழ்வுக்குழு சட்டத்தை நிறைவேற்றுங்கள். கல்வி வணிகமயமாகுவதை அதிகம் ஊக்குவிக்கிற புதிய தேசியக் கல்விக்கொள்கையின் அடிப்படையில், இந்திய மறுவாழ்வுக்குழு சட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில திருத்தங்களை வார்த்தைக் கோர்வைகளால் வண்ணமயமாக்கிவிட்டு, அடிமடியில் கைவைத்தால் அணியமாவதைத்தவிர வேறு வழியில்லை.

***

சாமானியன்

தொடர்புகொள்ள: naansamaniyan@gmail.com

சவால்முரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s