காதலிக்குச் சொல்வதாக அவன் ஏதேதோ உளற, அந்தப் பெண்ணோ அதையெல்லாம் பொறுமையாக எழுதுகிறாள். இடையிடையே அந்தப் பெண் கேட்கும் கேள்விகளுக்கு அவன் சொல்லும் சிறுபிள்ளைத்தனமான பதில்களையும் அவள் பொறுமையோடே கையாளுகிறாலாம். இதற்கெல்லாம் உச்சமாய் அந்தக் கடிதத்தை அவன் அவளுக்கே தரும்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லையாம். நம்புங்கள் இது ஏற்கனவே திட்டமிடப்படாத ப்ராங்காம்.

தற்போது பிராங்க் (prank) என்ற பெயரில் யூட்டூப் போன்ற சமூகவலைதளங்களில் பொறுப்பற்று நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகமாகிவிட்டன. ‘just for fun’ என்ற போர்வையில் வித்தியாசமாக ஏதேனும் யோசிக்கிறேன் என்ற பெயரில் பிறரின் மனதைப் புண்படுத்துவதான நிகழ்வுகள் பெருகிவிட்டன. அப்படி ஒரு காணொளியை தமிழ் மீடியம் பசங்க யூட்டூப் சேனல் வெளியிட்டிருப்பது பார்வையற்றோரை மனக்கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது.
அந்தக் காணொளியில் பார்வையற்ற ஒரு இளைஞர், தனக்கு சாலையைக் கடப்பதில் உதவி செய்ய வரும் முன்பின் அறியாத ஓர் இளம் பெண்ணுக்கே காதலைச் சொல்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஒரு கடிதம் எழுதித்தர முடியுமா என அந்தப் பார்வையற்ற இளைஞன் கேட்க, அந்தப் பெண்ணும் சம்மதிக்கிறாள். பிறகு நடப்பதுதான் நகைச்சுவை என்ற பெயரில் நாராச நாடகம்.
காதலிக்குச் சொல்வதாக அவன் ஏதேதோ உளற, அந்தப் பெண்ணோ அதையெல்லாம் பொறுமையாக எழுதுகிறாள். இடையிடையே அந்தப் பெண் கேட்கும் கேள்விகளுக்கு அவன் சொல்லும் சிறுபிள்ளைத்தனமான பதில்களையும் அவள் பொறுமையோடே கையாளுகிறாலாம். இதற்கெல்லாம் உச்சமாய் அந்தக் கடிதத்தை அவன் அவளுக்கே தரும்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லையாம். நம்புங்கள் இது ஏற்கனவே திட்டமிடப்படாத ப்ராங்காம்.
16 நிமிடங்கள் ஓடும் நன்கு திட்டமிடப்பட்ட அந்த நாடகக் காணொளியை ஒருவித அவமான உணர்ச்சியின்றி பார்வையற்றோரால் கடந்து செல்ல இயலாது. மரத்தை ஆள் என்று சொல்வது, ஒருவர் குரல் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, ஒருவித கழிவிரக்கத்தை உண்டாக்குகிற தொனியில் “ஏங்க! நீங்க எங்க இருக்கீங்க” என அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பது. “நான் கம்பெல்லாம் சுத்துவேங்க” என்றபடி, ஊன்றுகோலை மேலே தூக்கி ஆட்டுவது. இதெல்லாம் அறுவறுப்பின் உச்சம்.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களை விடுங்கள். புதுக்கோட்டை போன்ற சிறு நகரங்களில் பார்வையற்றோரின் கைபிடித்து சாலையைக் கடத்திவிடுவதற்கு இளம் பெண்களிடம் ஒருவிதத் தயக்கமும் கூச்சமும் இருப்பதை நான் அன்றாடம் எதிர்கொள்கிறேன். கல்லூரி பயில, ஏதேனும் பணிநிமித்தமாக அன்றாடம் தன் கிராமத்திலிருந்து வந்துசெல்லும் அந்தப் பெண்களின் தயக்கங்களைப் போக்குவதற்குப் பதிலாக, இதுபோன்ற காணொளிகள் அந்தப் பெண்கள் மனதில் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று யோசித்தால், ஒவ்வொரு நிமிடமும் சாலைகளைக் கடக்க முகம் அறியாத மனிதர்களின் உதவியை நாடிக்கொண்டிருக்கிற பார்வயற்றவர்களில் ஒருவனாய் மிகவும் தர்ம சங்கடமாக உணர்கிறேன்.
இந்தக் காணொளியை இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நேரம்வரை சுமார் 70 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஐயாயிரத்திற்கும் மேலாக விருப்பக் குறிகள் இடப்பட்டுள்ளன. எதை நோவது என்று தெரியவில்லை. சிறிதும் கூச்சமோ, தயக்கமோ இல்லாமல், தன் சக மனிதனின் இயலாமையைப் பழித்து ஒரு காணொளி வெளியிடுவதற்குத் துணிகிற பொறுப்பற்ற இளைஞர் கூட்டத்தையா? அல்லது அந்தக் காணொளிக்கு “வாவ், சூப்பர், வேற லெவல்” என்று அற உணர்ச்சியின்றி ஆர்ப்பரிக்கும் பொறுப்பற்ற சமூகத்தின் கூட்டு மனப்பான்மையையா?
பொதுவாகப் பார்வையற்றவர்களிடம், “உங்களுக்குத் தூக்கம் வருமா?, கனவு காண்பீர்களா?, அழுதால் கண்ணீர் வருமா?, இரவு பகலை எப்படி அறிந்துகொள்வீர்கள்?” என்பது போன்ற ஏராளமான அறியாமை கலந்த கேள்விகளை அன்றாடம் பொதுச்சமூகம் எழுப்பிக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற காணொளிகள் அத்தகைய பொதுப்புரிதல்களுக்கான ஒரு சோற்றுப் பதமாக இருப்பதோடு, சமூகத்தில் பார்வையற்றோர் குறித்த அத்தகைய தவறான புரிதல்கள் மேலும் வலுப்பெறவே உதவி செய்கின்றன.
எனவே, தமிழ் மீடியம் பசங்க யூட்டூப் சேனல் நடத்துபவர்கள், மேற்சொன்னவற்றைக் கவனத்துடன் படித்துப் புரிந்துகொண்டு, அந்தக் காணொளியைத் தங்கள் தளத்திலிருந்து நீக்கிவிடுவதோடு, வருத்தம் தெரிவித்து ஒரு காணொளி வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில், வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கான சட்ட வாய்ப்புகள் தற்போது நடைமுறையிலுள்ள ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 (Rights of Persons with Disabled Act 2016) இருக்கிறது என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறேன்.
***
ப. சரவணமணிகண்டன்
தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com
***
அன்பு நண்பா.. இது தனி மனிதனின் நடிப்பு விடியோ மட்டுமே.. இதில் எந்த இடத்திலும் பார்வை இல்லாதவர்களை பற்றி தவறாக பேசவில்லை.. அது அதில் நடிக்கும் அவரை மட்டுமே சார்ந்த விடியோ.. இதில் மற்றவர்கள் துன்புற எதுவும் இல்லை.. இதில் வந்த அனைவரின் விருப்பத்துடன் போடப்பட்டது.. தயவு கூர்ந்து மனிக்கவும்.. இந்த சேனலை நம்பி பல குடும்பங்களும்.. குழந்தைகளும் உள்ளனர்.. இதே சேனலில் விழிப்புணர்வு வீடியோக்களும் வந்துள்ளது.. இல்லாதவர்களுக்கு சேனலின் வருமானத்தில் இருந்து பல உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.. இது பணத்திற்காக இயங்கும் சேனல் இல்லை.. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இனிமேல் இவ்வாறு நடிக்க போவதில்லை..இப்படிக்கு உங்கள் அன்பு நண்பர்கள்… . .
தமிழ் மீடியம் பசங்க சேனலுக்கு நாம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். ஆனால், காணொளியை தளத்திலிருந்து அகற்றவில்லை. இதற்கிடையே நமது கடிதம் முகநூல், கீச்சகம், புலனம் என பெருவாரியாகப் பகிரப்பட்டது.
டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் திரு. தீபக்நாதன் அவர்கள், “ஊனத்தை நகைச்சுவையாக்குவது, அல்லது கேலிக்குரியதாகச் சித்தரிப்பது சட்டப்படி குற்றமாகும். இந்தக் காணொளி மற்றும் இதனைத் தயாரித்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என தனது எதிர்ப்பினைக் கடுமையாகப் பதிவு செய்ததோடு, ஒரு கடிதத்தினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கானமாநில ஆணையருக்கும் அனுப்பினார்.

ப்லைண்ட் பிராங்க் என்ற பெயரில், பார்வையற்றோரின் வாழ்வியலைத் தவறாகச் சித்தரிக்கும் காணொளிகளைத் தடைசெய்யக் கோரி, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பிலும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Be the first to leave a comment