
கடந்த 7 நவம்பர் 2020 அன்றைய தி இந்து நாளிதழில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதீர் பார்த்தசாரதி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அது ஒரு வழக்கு பற்றிய கட்டுரை. நிபன் மல்ஹோத்ரா என்ற மாற்றுத்திறனாளி, சர்க்கர நாற்காலி, மூன்று சர்க்கர வண்டி, பிரெயில் உபகரணங்கள் மற்றும் பிரெயில் தாள்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உதவி உபகரணங்களுக்கு விதிக்கப்படும் 5 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திடம் முறையிடுகிறார். நீதிமன்றமோ, இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சிலிடம் முறையிட்டுத் தீர்வு பெறுமாறும், இதுபோன்ற வரிவிதிப்பு விடயங்களில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது எனவும் கூறிவிடுகிறது.
ஒருவகையில் நீதிமன்றத்தின் இந்தக் கூற்று சரியானதுதான் எனச் சொல்லும் சுதீர், ஆனால், நிபனின் வழக்கில் நீதிமன்றம்தான் ஒரே தீர்வு என்பதையும் படிப்படியாக விளக்குகிறார். நாட்டின் பல்லடுக்கு மற்றும் சிக்கலான வரிவிதிப்பு முறையினை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற நோக்கத்தைச் சொல்லி, சரக்கு மற்றும் சேவை வரியினை அமல்ப்படுத்தியது இந்திய ஒன்றிய அரசு. ஆனால், மாநிலங்களின் கொத்துச்சாவியைப் பிடுங்கிக்கொள்ளும் முயற்சி என்பதை இப்போதுதான் பல மாநிலங்கள் உணரத் தொடங்கியிருக்கின்றன. மாநிலங்கள் உணரத் தொடங்கியதோ இல்லையோ மாற்றுத்திறனாளிகள் தங்களை முடக்கிப்போடுகிற வரிவிதிப்பாகவே இதனைப் பார்க்கிறோம்.
இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பெரிதும் சார்ந்திருக்கிற உதவி உபகரணங்களான சர்க்கர நாற்காலி, மூன்று சர்க்கர வண்டி, பிரெயில் கருவிகள், தாள்கள் மற்றும் பிரெயில் கடிகாரங்களுக்கு 18 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகளின் தொடர்ச்சியான போராட்டங்களால் இது தற்போது ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்றுத்திறனாளிகளின் ஒற்றைக் கோரிக்கை இந்த உதவி உபகரணங்களுக்கு வரிவிதிப்பிலிருந்து முற்றிலும் விலக்கு வேண்டும் என்பதுதான்.
ஒன்றிய அரசு இந்த விடயத்தில் முரண்டு பிடிக்கிறது. முற்றிலும் வரிவிலக்கு என்பது இந்தக் கருவிகளைத் தயாரிக்கும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதிக்கும், அலுமினியம் போன்ற மூலப்பொருட்களை வாங்கும்போது அவர்கள் செலுத்துகிற வரிகளைக் கணக்கில் கொண்டால் முற்றிலுமான வரிவிலக்கு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக அமைந்துவிடுவதோடு, வெளிநாட்டு உற்பத்தியாளர்களோடு நமது உற்பத்தியாளர்கள் போட்டியிட இயலாது என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் காரணம் சொல்கிறது.
சரி, மூலப்பொருட்களின் வரி விகிதங்கள்ள்தான் பிரச்சனையென்றால், அத்தகைய மூலப்போருட்களின் பயன்பாடு சார்ந்து அவற்றின்மீது வரி விதிக்கப்படலாம்தானே என்று கேட்கிறார் சுதீர் பார்த்தசாரதி. உதாரணமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை உற்பத்தி செய்கிற நோக்கத்தில் வாங்கப்படும் அலுமினியம் போன்ற பொருட்களுக்க்உ அப்போது மட்டும் விலக்கு அளிப்பதற்கான வழிவகைகளைச் செய்வது ஓர் அரசுக்கு இயலாத காரியமா என்ன? என்பதுதான் அவர் கேள்வி. தவிர இது ஒன்றும் பிஸ்கட் சமாச்சாரம் இல்லை, இது மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சனை. அவர்களின் நடத்தல், படித்தல் போன்ற இயல்பான அடிப்படைச் செயல்பாடுகளையே இந்த வரி விதிப்பு முடக்கிப்போடுகிறது என்றால், அவர்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்றுதானே பொருள். எனவே, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் எந்த ஒரு விடயத்திலும் நீதிமன்றங்கள் தலையிடாமல் வேறு யார் தலையிடுவது எனக் கேட்கிறார். அத்தோடு, கனடா மற்றும் ஆஸ்த்ரேலியா போல,ஊனமுற்றோருக்கான உதவி உபகரணங்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கிட வேண்டும் எனவும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஆலோசனை சொல்கிறார்.

இது சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியம்தான். தீவிரமான போராட்டங்களுக்குப் பிறகு, பெண்களுக்கான நாப்கின்கள் மற்றும் இதர தூய்மை உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்கப்பட்டுள்ளது. உண்மையில், உதவி உபகரணங்களுக்கான வரி விலக்கால் நாட்டுக்கு பெரிய அளவில் நட்டமெல்லாம் ஏற்படப்போவதில்லை. ஆனாலும், ஏன் அரசு தயங்குகிறது? அரசு தயங்கவில்லை. இதற்கான கவுன்சில் கூட்டங்களில் இதுபோன்ற விடயங்களைப் பெரிதென எடுத்துக்கொண்டு விவாதிப்பதில்லை அவ்வளவுதான். அரசு நினைத்தால், ஊனமுற்றோருக்கான உதவி உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தானே நிறுவி, அதன் உற்பத்திப் பொருட்களை தேவையின் அடிப்படையில் நாடெங்கும் இலவசமாகவே வினியோகிக்கலாம். அது ஓர் அரசுக்கு எளிமையான காரியம்தான். ஆனால், வறியோரை வதம் செய்து, வல்லரசு ஆகிவிடத் துடிக்கும் வல்லாதிக்க அரசுக்கு வள்ளலார் மனம் வாய்ப்பதெல்லாம் அத்தனை எளிமையானதில்லை.
***
சாமானியன்
தொடர்புகொள்ள: naansamaniyan@gmail.com