கழிப்பறை வசதியற்ற அரசு அலுவலகம், காவுகொடுக்கப்பட்ட ஊனமுற்ற பெண் ஊழியரின் உயிர்

தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

நாளொன்றிற்கு நான்காயிரம் என நான்காண்டிற்குள் கழிப்பறைகள் பல கட்டி, நாட்டின் சுகாதாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள   வேண்டி,  தூய்மை இந்தியா திட்டத்தை தீட்டினார் பிரதமர் மோடி.    மாநிலம் முழுவதும் அதனை செம்மையாக  செயல்படுத்தி, மொத்தம்   நாற்பத்து ஒன்பது லச்சத்து, தொண்ணூறாயிரத்து, அறுநூற்று  ஐம்பது கழிப்பறைகள் கட்டி முடித்திருப்பதாக, அறிக்கைகள் கூறுகின்றன.  அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பயன்படுத்தவே இத்திட்டத்தின் பலன் சென்றுசேராத நிலையில், அடித்தட்டு மக்களுக்கு எவ்வளவு எட்டியிருக்கும்  என்பது கேள்விக்குறி.     மேலும்,  ஊனமுற்றோர் உரிமை  சட்டம்  2016, பிரிவு  20.2 யின்படி பணியிடங்களில் ஊனமுற்றோருக்கு தடையற்ற சூழலை உருவாக்கி, அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவேண்டும் என்ற விதிகளைமீறி மெத்தனப்போக்குடன்  அமைந்திருக்கின்றன ஊனமுற்றவர்கள் பணியாற்றும் பல அரசு அலுவலகங்கள்.  அவற்றிற்கெல்லாம் சாட்சி கூறுவதாய் அமைந்துவிட்டது காஞ்சிபுரம் மாவட்டம் கலக்காட்டூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்துவிட்ட அந்த துயர நிகழ்வு.

வேளாண்மை விரிவாக்க மையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி. டி.  தேர்வில் தேர்ச்சிபெற்று, இரண்டு ஆண்டுகளுக்குமுன் இளநிலை உதவியாளராக  காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்விரிவாக்க மையத்தில் பணியில் இணைந்த செல்வி. சரண்யா என்னும் ஊனமுற்றவர்,  அவ்வலுவலகத்தில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்ற காரணத்தால் பணிக்கு செல்ல விருப்பமில்லை என்று பலமுறை தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

எனினும், கடின உழைப்பால் கற்று  பெற்ற வெற்றி என்பதால், அத்தகைய அசௌகரியத்தையும் பாராது,  மழைநாட்களிலும்  பணிக்கு சென்றிருக்கிறாள் அந்்தப் பெண். கழிப்பறையினை பயன்படுத்த, அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களின் வீட்டிற்கு செல்லும்வழியில்  மழைநீர் அதிகமாக தேங்கியிருந்தமையால்  ஓட்டைக்கொண்டு மூடப்பட்டிருந்த எட்டடி  கழிவுநீர் தொட்டியில் கால்வைத்து  தவறி  விழுந்துள்ளார். நீண்டநேரமாக தனது இருக்கையில் இல்லை என்பதால்  உடன் பணியாற்றும்  பணியாளர்களால் தேடப்பட்டதை தொடர்ந்து, ஊர்மக்களால் மீட்கப்பட்டு,  மூன்று சக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிர் இழந்தார்.

மழைநீர் தேங்கிய இடம்

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இ.ஆ.ப. அவர்களை அணுகிக் கேட்டால், மேற்படி அலுவலகத்தில் உரிய வசதிகள் இல்லை என்ற விவரம் இதுவரை  அறியப்படவில்லை என்றும், இனிவரும் காலங்களில் இவ்வாறு நிகழாதவண்ணம்  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும்  செய்தியாளர்களிடம் உறுதியளித்துள்ளார். 

பெரும்பாலான  வேளாண்விரிவாக்க மையங்களில் கழிப்பறை வசதியே இல்லை எனத் தெரிவிக்கிறார்கள் வேளாண்துறை அலுவலர்கள். அவ்வளவு ஏன், பார்வையற்றோர் பெரும்பான்மையாகப் பணியாற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில்  மாணவர்களுக்கான பொதுவான கழிப்பறைகளே சரிவர பராமரிக்கப்படுவதில்லை. இதில், ஊனமுற்றோருக்கான சிறப்புக் கழிப்பறை (Accessible Toilets) பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு அரசுக்கு எங்கே நேரமிருக்கிறது?

ஊனமுற்றோருக்கான தடையற்ற உகந்த பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 20.2 வரையறுத்துச் சொல்கிறது. அப்படி ஒரு சட்டமிருப்பதாகவே இங்கு பெரும்பாலான அரசு அலுவலர்களுக்கு விழிப்புணர்வே இல்லை.

பொதுவாகவே அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால், ஒரு உடல் ஊனமுற்றவர் அந்த அலுவலகத்தில் பணிக்குச் சேர்கிறார் என்றால், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மனிதநேய அடிப்படையிலேனும் ஒரு நிர்வாகம் சிந்தித்திருக்க வேண்டாமா?

இரண்டாண்டுகளாக தனது இயற்கை உபாதைகளுக்கு ஒரு ஊனமுற்ற பெண் அருகே இருந்த யாரோ ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் என்ற செய்தி மனதை அறிக்கிறது. இதுவே இறுதி நிகழ்வாக இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள், ஊனமுற்றோர் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை உயர் அலுவலர்களிடமும் ஆய்வறிக்கை கேட்க வேண்டும். நீதிமன்றங்கள் இதுபோன்ற பிரச்சனைகளைத் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும்.

நமது ஊனமுற்ற தோழர்கள் சகோதரி சரண்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கத் தொடர்ந்து போராட வேண்டும். இல்லையென்றால், இதையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி, “புனித உடல்கொண்டோர்” என்று வார்த்தை ஜாலம் காட்டியபடி, புதைத்துக்கொண்டே இருப்பார்கள் கழிவுநீர் தொட்டிகளில்.

***

சவால்முரசு ஆசிரியர்க்குழு

தொடர்புக்கு: editor@savaalmurasu.com

சவால்முரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s