“ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் உரையாடத் தொடங்குவோம்!” ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வாழ்த்து

இடது தலைவர் வலது செயலர் நடுவில் சங்க லோகோ

உலக மக்கள் நம்மைப் பற்றிச் சிந்திக்கவும், நாம் உலக மக்களிடம் நமது உரிமைகள் குறித்து உரையாடவும், வருடத்தில் ஒரு நாளாய் வரையறுக்கப்பட்டிருக்கிறது இந்த டிசம்பர் மூன்று. அமர்ந்த இடத்திலேயே அனைத்தையும் இயக்குகிற வல்லமை பொருந்திய தொழில்நுட்ப யுகத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால், நமது இந்தியச் சூழலில், மாற்றுத்திறனாளிகளாகிய நாம் தற்சார்புடன் இயங்கத் தடையற்ற சூழலும், நம்மைப் பற்றி பொதுச்சமூகத்திடம் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த புரிதல்களிலும் முன்னேற்றம் வந்திருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016 அமல்ப்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், நம்மையும் உள்ளடக்கிய நாட்டின் உள் கட்டமைப்புகள் பற்றி ஆள்வோர் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. நமது அடிப்படை உரிமைகளான கல்வி, சுகாதாரம் குறித்து, அரசிடம் ஏதேனும் தனித்துவமான திட்டங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. அவ்வளவு ஏன், மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி 21 பிரிவுகளாக மாற்றுத்திறனாளிகளாகிய நாம் வகைப்படுத்தப்பட்டுள்ளோம். எனவே, உரிய திட்டங்கள் தீட்டவும், அவற்றை முறையாகச் செயல்படுத்தவும் முதலில் நம்மைக் குறித்த தரவுகள் அவசியம் என்பதில்கூட அக்கறையற்று இருக்கிறது அரசு. காரணம், இன்று நாம் முற்றுகையிட்டிருக்கும் களம் அத்தகையது.

நமது வரலாற்றுச் சுவடுகளைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால், முதலில் பிறரின் கருணைக்காய் மன்றாடிக்கொண்டிருந்தோம். பின்னர் மறுவாழ்வு வேண்டும் என்று சற்று முன் நகர்ந்தோம். அப்போதெல்லாம் கொடுத்துச் சிவக்கிற கொடையாளர்களாய் தங்களைத் தகவமைத்துக்கொள்வதில் பீடும் பெருமையும் கொண்டார்கள் ஆள்வோர். ஆனால், இன்று, நாம் புகுந்திருப்பது உரிமைக்களம். கொடுப்பது இனி இல்லை, எடுத்துக்கொள்வதற்கான எல்லா உரிமைகளும் எமக்கிருக்கிறது என்ற நமது முழக்கத்தை அவர்கள் ரசிக்கவில்லை. எண்ணிக்கையே ஆதிக்கம் செய்யும் வாக்கரசியலில் நம்மால் பெரிய தாக்கங்களையும் ஏற்படுத்திவிட முடியாது. அப்படியானால், நாம் என்ன செய்யலாம்?

நமது உரிமைசார் முழக்கம் குறித்துப் பொதுச்சமூகத்திடம் உரையாடத் தொடங்க வேண்டும். இந்த நாட்டில்், எத்தனை மருத்துவமனைகள், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்கள் நமது சிறப்புத் தேவைகளைக் கவனத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என அவர்களிடமே கேள்விகளை முன்வைக்க வேண்டும். நமக்கான சிறப்புத் தேவைகளைக் கருணைக் கோட்டிற்குள் கட்டம் கட்டிவைத்திருக்கிற பொதுச்சமூக மனப்பான்மையை களைந்து, நமது முழக்கத்தை அவர்களும் முழங்கத் தொடங்கினால், ஆள்வோர் ரசிப்பதென்ன, சேர்ந்திசை நிகழ்த்தவும் முன்வந்துவிடுவார்கள்.

இது மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காய் போராடும் அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் பணி மட்டுமன்று. மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டிய அன்றாடக் கடமை. எனவே, இந்த நாளில் தடையற்ற சூழல், அதிகாரமளித்தல், உள்ளடங்கிய சமூகம் என்கிற மூன்று அரும்பெரும் இலக்குகளை நம் மனதில் தாரக மந்திரமாய் தருவித்துக்கொண்டு, உரையாடல்களைத் தொடங்குவோம்.

அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் நாள் நல்வாழ்த்துகள்.

சவால்முரசு

One thought on ““ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் உரையாடத் தொடங்குவோம்!” ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வாழ்த்து

  1. இந்த கருத்துக்கு நான் ஒப்புக் கொள்கிறேன் நான் கண்டிப்பாக பங்கு எடுத்துக் கொள்வேன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s