நாளை டிசம்பர் மாதம் 3-ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை நோக்கிப் பொது சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. அந்த வகையில், மதுரை அருகே பூவந்தியில் செயல்படும் ‘லிவ் வெல்’ மறுவாழ்வு மையத்தின் (LIVE WELL INSTITUTE OF REHABILITATION MEDICINE) சார்பில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இது கரோனா காலம் என்பதால் அலைபேசி வழியாக இந்த ஆலோசனைகளை வழங்க மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, இருந்த இடத்தில் இருந்தபடியே மாற்றுத்திறனாளிகள் இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.
இதுகுறித்து “இந்து தமிழ் திசை“ இணையதளத்திடம் பேசிய ‘லிவ் வெல்’ மறுவாழ்வு மையத்தின் மருத்துவ அதிகாரி கே.எம்.கனியரசு, மேலாளரும் இயன்முறை மருத்துவருமான வி.கிருஷ்ணகுமார் ஆகியோர், “சமூகத்துடன் மட்டுமல்லாது குடும்பத்து உறுப்பினர்களிடமும் ஒன்றிணைந்து போகமுடியாத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளுக்குச் சவால்கள் நிறையவே இருக்கின்றன.
அதிலும் இத்தனை காலமும் நல்ல முறையில் செயல்பாடுடன் இருந்துவிட்டு திடீரென ஏற்படும் விபத்துகளால் உடல் உறுப்புகள் செயலிழந்து போகும் மாற்றுத்திறனாளிகள் பழையபடி சகஜமான நிலைக்கு வரமுடியாமல் ரொம்பவே மனதுடைந்து போகிறார்கள். இதுபோன்ற மனிதர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கும் அதற்கு ஏதாவது தீர்வுகளைக் கண்டடைவதற்கும்தான் டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
கரோனா காலத்தில் இயல்பான மனிதர்களுக்கே மருத்துவ உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அப்படியிருக்கையில், எளிதில் இடம்பெயர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதென்பது இன்னும் சவாலான விஷயம்தான். இதை மனதில் வைத்துத்தான், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த இலவச மருத்துவ ஆலோசனை வழங்கும் மூன்று நாள் முகாமைத் தொடங்க இருகிறோம்.
முதுகுத் தண்டுவட பாதிப்புகள், தலைக்காய பாதிப்புகள், சாலை விபத்துக்குப் பிறகான நரம்பியல் கோளாறுகள், பக்கவாதம், முதுகு வலி, கால்மூட்டு வலி என வலி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள், உடல் இயக்கக் குறைபாடுகளால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளானவர்கள் ஆகியோர் இலவச ஆலோசனை முகாமில் அலைபேசி வழியாக எங்களைத் தொடர்பு கொண்டு உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.
இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவம், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சுப் பயிற்சி, வலி நிவாரண ஆலோசனைகள், படுக்கைப் புண்கள் ஆற்றுவது உள்ளிட்டவை குறித்த மருத்துவ குறிப்புகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சலுகைகள் குறித்த சந்தேகங்களையும் இந்த ஆலோசனை முகாமில் கேட்டுப் பெறலாம்.
எங்களது மறுவாழ்வு மையத்தில் தற்போது சுமார் 40 மாற்றுத் திறனாளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்காக உள் நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேவைப்படுவோருக்கு இந்த மையத்தில் சேர்த்து சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மதுரைக்குத் தொலைவில் வசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் இருக்கும் பகுதிகளிலேயே உரிய மருத்துவ சிகிச்சைகள் பெற உரிய வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களைக் கேட்க விரும்புவோர், 94443 88508, 88254 35511, 70056 17770, 94878 81561 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்” என்றனர்.