கல்லூரியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் இன்று, (நேற்று) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கவுன்சிலிங் நடத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியிட்டு இருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை நான் இழந்திருக்க மாட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளித் தோப்பு தெருவைச் சேர்ந்த பார்வைக்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி மாணவி சுபத்ரா. நங்கவள்ளிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த இவர், 449 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 170 மதிப்பெண்கள் எடுத்துத் தரவரிசைப் பட்டியலில் 342ஆவது இடத்தைப் பிடித்தார்.
தமிழக முதல்வர் அறிவித்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் இரண்டாம் நாள் மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்துகொண்டார். முதல்நாளே அரசுக் கல்லூரிகளுக்கான இருக்கை நிரப்பப்பட்ட நிலையில், இவருக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்புதான் கிடைத்தது.
இவரது தந்தை சுரேஷ், பெயிண்டடிக்கும் கூலித் தொழிலாளி. கரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதனால், மாணவி சுபத்ரா தனியார் கார்மண்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுகொண்டே நீட் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்தி வந்தார். குடும்ப வறுமை காரணமாக தனியார் கல்லூரியில் சேர்ந்து அதிக செலவு செய்து படிக்க முடியாது என்பதால், மருத்துவம் படிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்தார். அதிர்ச்சியடைந்த சுபத்ரா, கல்்விக்கட்டணம் செலுத்த முடியாததால், தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக வேதனையில் ஆழ்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் உட்பட ஏராளமானோர், வசதியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க மறுத்துவிட்டோம். பின்னர், என்னுடைய மதிப்பெண்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டிப் படிக்க முடியும் என்ற வசதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கல்லூரியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் இன்று, (நேற்று) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கவுன்சிலிங் நடத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியிட்டு இருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை நான் இழந்திருக்க மாட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் அவர், “இரண்டாம் நாள்நடந்த கவுன்சிலிங்கை மீண்டும் நடத்தி என்னைப் போன்று வாய்ப்பை இழந்தவர்களுக்கு மறுவாய்ப்புவழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
Be the first to leave a comment