graphic நசிரிதீன்ஷா ஷபானாஹாஸ்மி

இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 3: ஸ்பர்ஷ் (இந்தித் திரைப்படம்)

,வெளியிடப்பட்டது

“ஸ்பர்ஷ்” திரைப்படத்தை இவ்வளவு காலம், அதாவது நாற்பது ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விட்டது நம்முடைய மடமையாகும். நமது மடமையின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்படங்கள் என்ற பெயரில் பல குப்பைகளும் நச்சுகளும் குவிந்துவிட்டன.

கா. செல்வம்

ஸ்பர்ஷ் திரைப்பட போஸ்டர்

ஸ்பர்ஷ் திரைப்படம் பற்றிய பார்வையில் முந்தைய பகுதியில் சில விசயங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதாவது பார்வையற்றோர் முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை நடத்திய இணையவழிக் கருத்தரங்கின் வாயிலாக “ஸ்பர்ஷ்” திரைப்படத்தை அறிமுகப்படுத்திய பேராசிரியர் அனில் அனுஜா அவர்களுக்கு நன்றி. அவர் தொட்டுச் சென்ற தடத்தைப் பற்றிக்கொண்டு, தேடிச் சென்று இந்தத் திரைப்படத்தை நம்மிடையே கொண்டு வந்து சேர்த்த நண்பர் சரவணமணிகண்டன் அவர்களுக்கு நன்றி கூறுவது ஏற்புடையது அன்று. ஏனெனில் இத்திரைப்படத்தைப் பொதுவெளியில் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நண்பர் சரவணமணிகண்டன் எதிர்பார்க்கும் நன்றியாகும். அவருக்கு நன்றி கூறும் விதமாக எழுதப்பட்ட “ஸ்பர்ஷ்” திரைப்படம் பற்றிய பார்வையின் இரண்டாம் பகுதி இதோ…

மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதை:

ஷபானா ஹாஸ்மி
ஷபானா ஹாஸ்மி

பட மூலம்: IMDB

அனிருத்தின் பள்ளியில் சேவையாற்ற ஒப்புக்கொள்ளும் கவிதா, இங்குள்ள ஏழ்மையான உள்ளங்களுக்குத் தன்னாலான மகிழ்ச்சியை வழங்குவதாகக் கூறுவார். ஏழ்மை என்பன போன்ற சொற்களால் தங்களைக் குறிப்பிட வேண்டாம் என அறிவுறுத்தும் அனிருத், தாங்கள் வழங்கும் மகிழ்ச்சியை விடக் கூடுதலான மகிழ்வைத் திரும்பப் பெறுவீர்கள் என்று தமது மாணவர்களின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் கவிதாவைப் பணியாற்ற அனுமதிப்பார். ஒருமுறை கவிதா வேறு சிலரை அழைத்துவந்து கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சியை ஏற்பாடு செய்வார். இதனை அறியும் அனிருத் தன்னுடைய அனுமதியைப் பெறாமல் அன்னியர்களை உள்ளே கொண்டு வந்தது ஏன் என்று கேட்பார். பார்வை மாற்றுத்திறனாளி என்பதற்காக தனது சுயமரியாதை நசுக்கப்படுவதையும் தன்மீது ஆதிக்கம் செலுத்துவதையும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார் அனிருத் 

பள்ளியின் முதல்வராக இருக்கும் அனிருத் மட்டுமின்றி மாணவர்களும் அவரவருக்கான சுயமரியாதையுடன் இருப்பர். ஒருமுறை மாணவர்களுக்கு வந்திருக்கும் கடிதங்களைக் கொண்டுவரும் கவிதா, ஒரு மாணவரிடம் கடிதத்தைப் படித்துக் காட்டவா என்று கேட்பார். அதற்கு அந்த மாணவர், கடிதம் பிரெயிலில் இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்றும் தானே படித்துக்கொள்வேன் என்று பதிலளிப்பார். இன்னொரு முறை கவிதாவுடன் மாணவர்கள் வானொலியில் கிரிக்கெட் வர்ணனை கேட்டுக்கொண்டு இருப்பர். அப்போது நாமும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று ஒரு மாணவர் கேட்க, கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டுக்களும் விளையாட முடியும் என்று கவிதா கூறுவார். உடனே மாணவர்கள் தாமாகவே செயலில் இறங்குவர். வளையல் அளவிற்கு ஒரு கம்பியை வளைத்து, அதில் நிறைய குளிர்பான மூடிகளைக் கோர்த்து கட்டிக்கொள்வர். அதைத் தூக்கிப் போடும்போது கலகலவென ஓசையை எழுப்பும். அந்த ஓசையைக் கொண்டு பந்தைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது போல விளையாடுவர். மேலும் அடுத்து இரு முனைகளிலும் ஒவ்வொருவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ஒருவர் பந்து வீச இன்னொரு உணவுத் தட்டை பேட் போல வைத்துக்கொண்டு பந்தை அடிக்க மற்றவர்கள் ஃபீல்டிங் செய்வர். ஆக தங்களால் விளையாட முடியாது என்ற அனுதாபத்தைக் கோராமல் தங்களிடம் உள்ள பொருட்களைக் கொண்டே வெற்றிகரமாக உற்சாகமாக விளையாடிக் காட்டுவர்.

மாற்றுத்திறனாளிகள் இடையே மாற்றுத்திறனாளி அல்லாதவர்களின் நிலை:

நசிரிதீன்ஷா
நசிரிதீன்ஷா

பார்வை உள்ளவர்கள் பற்றிய பார்வை மாற்றுத்திறனாளிகளின் அறியாமையும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதே பள்ளியில் பணியாற்றுபவரின் உறவுக்காரச் சிறுவனாகப் பார்வையுள்ள சிறுவன் ஒருவன் இருப்பான். அவன் மற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துகொண்டு மிகவும் உற்சாகமாக அங்கு இருப்பான். அங்கு புதிதாக வரும் கவிதா பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்துவார். தான் அவரால் கவனிக்கப்படவில்லை என்றும் தனக்கு பார்வை இருப்பதும் கூட இங்கு குறைபாடு என்றும் அந்தச் சிறுவன் வருந்துவான். இன்னொரு காட்சியில், அனிருத்தின் சட்டைகளில் பொத்தான்கள் இல்லாமல் இருப்பதை அவரது உதவியாளர் சுட்டிக்காட்டும்போது, இந்தப் பள்ளியில் இதையெல்லாம் யார் பார்க்கப்போகின்றனர் என்பதாகப் பதில் கூறுவார். அதற்கு உதவியாளர், இந்தப் பள்ளியில் என்னைப் போன்று பார்வை உள்ளவர்களும் பணியாற்றுகிறோம் என்பார். இப்படி பார்வை மாற்றுத்திறனாளிகள் கவனம் செலுத்தாத அம்சங்களும் இந்தத் திரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும்.

இயக்குநர் சாய் பரஞ்ச் பே:

சாய் பரன்ச்பே
சாய் பரன்ச்பே

இங்கு கூறப்பட்டவை மட்டுமின்றி இன்னும் பல விசயங்கள் இந்தத் திரைப்படத்தில் உள்ளன. ஆனால் மையக் கதையான அனிருத் மற்றும் கவிதா இடையேயான காதல், ஊடலுக்கு இடையூறு ஏற்படாதவாறு திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர் சாய் பரஞ்பே. பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் வியக்கத்தக்க இசைக் கலைஞர்களாகக் காட்டப்படுவர். ஆனால் ஸ்பர்ஷ் திரைப்படத்தில் பார்வை உள்ளவரான நாயகி இசைப் புலமை உள்ளவராக இருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்பான உருக்கமான பாடலோ ஊக்கமூட்டும் பாடலோ கிடையாது. இதில் வரும் இரண்டு பாடலும் நாயகியின் வாழ்க்கை சோகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். மேலும் பிரச்சாரத் தொனியோ ஆவணத் தன்மையோ இல்லாமல் வழக்கமான காதல் திரைப்படம் போன்று மிக அழகாக உருவாக்கி இருப்பார் சாய் பரஞ்பே.

நஸ்ருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி:

நசிரிதீன்ஷா ஷபானாஹாஸ்மி

ஸ்பர்ஷ் திரைப்படத்தின் நாயகன் அனிருத்தாக நஸ்ருதீன் ஷா முன்னுதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்க வேண்டுமென்றால் கருப்புக் கண்ணாடி அணிந்துகொள்வது, மேல்நோக்கிப் பார்த்தவாறே நடப்பது, தடுக்கி விழுவது, மென் சோகப் பாடல்கள் பாடுவது, இசைக் கருவிகள் இசைப்பது போன்றவை இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இதில் எதுவுமே இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நஸ்ருதீன் ஷா. அவருக்கு சற்றும் குறையாத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கவிதாவாக வரும் ஷபானா ஆஸ்மி. உண்மையில் நாயகனுக்கு முற்றிலும் எதிரான கதாபாத்திரம் அவருடையது. எந்த உணர்வையும் அப்பட்டமாக வெளிப்படுத்தாத மென்மையான கதாபாத்திரம் கவிதா. அந்த மென்மையான கதாபாத்திரம் கவிதாவாக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் ஷபானா ஆஸ்மி.

படைப்பின் தாக்கமும் நோக்கமும்:

ஒரு காட்சியில் அனிருத்தும் கவிதாவும் ஓர் உணவகத்தில் உணவு உண்பர். அவர்களுக்கான பில் கவிதாவிடம் கொடுக்கப்படும். இதனை அறிந்த அனிருத், அனைவரிடமும் இதுபோல பெண்களிடம்தான் கொடுப்பீர்களா என்று கேட்டுவிட்டுத் தானே பில் தொகையைச் செலுத்துவார். மாற்றுத்திறனாளி என்பவர் பெற்றுக்கொள்பவராகவே இருப்பார் என்றும் கொடுப்பவராக இருக்கமாட்டார் என்றும் நினைத்துக்கொள்வதும் நடத்துவதும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனிருத் கதாபாத்திரம் வாயிலாக திரைப்படத்தின் அடிப்படை நோக்கமாகக் கூறப்பட்டிருக்கும். அப்படித்தான் இத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சியும் நிறைவுக் காட்சியும் அமைக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் அனிருத் வெளியே செல்ல முனைவார். அப்போதுதான் முதலில் கவிதாவைச் சந்திக்க நேரிடும். அப்படி அவர் கிளம்பும்போது, இரண்டு சிறுவர்கள் மைதானத்தில் கதை படித்துக்கொண்டிருப்பது தெரியும். அவர்களின் அருகில் சென்று என்ன நடக்கிறதென்று அனிருத் கேட்க, பார்வை உள்ள சிறுவன் கதையை வாசித்துக் காட்ட பார்வை மாற்றுத்திறனாளியான சிறுவன் கேட்டுக்கொண்டு இருப்பதாகக் கூறுவர். பார்வை உள்ள அச்சிறுவனின் நற்செயலைப் பாராட்டிவிட்டுச் செல்வார் அனிருத்.

இதே போல இறுதிக் காட்சியில் கவிதாவைப் பார்க்கக் கிளம்புவார் அனிருத். அப்போதும் அதே இரண்டு சிறுவர்கள் மைதானத்தில் அமர்ந்து கதை படித்துக்கொண்டு இருப்பர். வழக்கம் போல அனிருத் அருகில் சென்று விசாரிக்க, பார்வை மாற்றுத்திறனாளியான சிறுவன் கதையை வாசிக்க, பார்வை உள்ள சிறுவன் கேட்டுக்கொண்டு இருப்பதாகக் கூறுவர். இது எப்படி சாத்தியம் என்று அனிருத் வியந்து கேட்க, ஆறு கதைப் புத்தகங்களைப் பிரெயிலில் தயாரித்துக் கவிதா தனக்குக் கொடுத்ததாகப் பார்வை மாற்றுத்திறனாளி சிறுவன் உற்சாகமாகக் கூறுவான். (அப்போது அனிருத்தின் நிர்பந்தத்தின்பேரில் கவிதா அந்தப் பள்ளிக்கு வருவதை நிறுத்தியிருப்பார்.) இதுதான் அனிருத் வாழ்நாள் முழுதும் செயல்திட்டமாக இருந்தது. அதாவது மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைச் சார்ந்து நிற்காமல் சுயமாக இயங்குவதும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் அளவிற்கு மேம்படுவதும் ஆகும். அந்நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ள கவிதா, தனக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற நிறைவான மனநிலையுடன் கவிதாவின் வீட்டிற்குச் செல்வார் அனிருத். இத்தகைய மனப்பான்மையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே ஒரு படைப்பின் கடமையாகும். அந்தக் கடமையைத் திறம்பட நிறைவேற்றிய “ஸ்பர்ஷ்” திரைப்படத்தை இவ்வளவு காலம், அதாவது நாற்பது ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விட்டது நம்முடைய மடமையாகும். நமது மடமையின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்படங்கள் என்ற பெயரில் பல குப்பைகளும் நச்சுகளும் குவிந்துவிட்டன. இந்தக் குப்பைகளை ஒதுக்கிவிட்டு, ஸ்பர்ஷ் திரைப்படத்தைத் தொட்டுப் பிடித்துக்கொண்டு, அனிருத் மற்றும் கவிதா காட்டும் திசையில் சாய் பரஞ்பே துணையுடன் பயணிப்போம்.

***

தொடர்புகொள்ள: teacherselvam@gmail.com

தொடரின் முந்தைய பகுதிகள்

இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 : பகுதி – 1.

இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 : பகுதி 2.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்