முதல்வரைச் சந்தித்த மாரீஸ்வரி

மாநிலமெங்கும் மாரீஸ்வரிகள்

,வெளியிடப்பட்டது

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. அவர்களுள் அரசுப்பணி கிடைத்த மாற்றுத்திறனாளிகள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்பது முகத்தில் அறையும் உண்மையாக இருக்கிறது.

முதல்வரைச் சந்தித்த மாரீஸ்வரி
மாரீஸ்வரி

பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக இன்று தூத்துக்குடி வந்தார் முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய செயல்பாட்டுக் கருவிகளைத் திறந்து வைத்தபிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைந்தார். செல்லும் வழியில் சாலையில் தன்னை நோக்கிக் கைகளைக் கூப்பிக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணை அருகே அழைத்து விசாரித்தார் முதல்வர்.

அந்தப் பெண்ணும் தனது பெயர் மாரீஸ்வரி என்றும், கணவன் கூலி வேலை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், தனக்கு அரசு வேலை வழங்கி தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டினார். மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் அவர்கள், இரண்டே மணிநேரத்தில் அவருக்கு அரசு வேலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், தூத்துக்குடியில் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்களா எனவும் பல மாற்றுத்திறனாளிகள் கேள்வியெழுப்புகிறார்கள்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிசம்பர் 3 இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. தீபக்நாதன் அவர்கள் “exceptions  are not  examples CM sir” “விதிவிலக்குகள் விதிகளாகாது முதல்வர் அவர்களே! எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. அவர்களுள் அரசுப்பணி கிடைத்த மாற்றுத்திறனாளிகள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்பது முகத்தில் அறையும் உண்மையாக இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய பணிநியமனங்கள் எதுவும் தமிழக அரசால் வழங்கப்படவில்லை. 2013 உச்ச நீதிமன்றத்தின் பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் தொடர்பான தீர்ப்பும் பல ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும்,மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என பலமுறை முதல்வரிடம் கோரிக்கை வைத்தும் அதற்கும் உரிய நடவடிக்கை இல்லை.

கல்வித் தகுதிகள் இருந்தும், அரசுப்பணி வழங்கப்படாததால், பல மாற்றுத்திறனாளிகள் இரயில்களில் வணிகம் செய்தும், நடைபாதைகளில் கடை விரித்தும் தங்கள் அன்றாடத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப் பணிவாய்ப்பை வழங்கும் ஆசிரியர் பணிநியமனங்களுக்கு  45 வயதை உச்ச  வரம்பாக நிர்ணயித்திருப்பது மாற்றுத்திறனாளிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பணி வாய்ப்பைப் பொருத்தவரை, முதலில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்ப்படுத்தி, மாநிலத்தில் துறைவாரியாக இருக்கிற பின்னடைவுக் காலிப் பணியிடங்களைக் கணக்கெடுத்து பணிநியமனங்களைச் செய்தாலே பல ஆயிரக்கணக்கான மாரீஸ்வரிகள் பயனடைவார்கள்.

“செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?”

பகிர

2 thoughts on “மாநிலமெங்கும் மாரீஸ்வரிகள்

  1. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகம் என தோன்றுகிறது தேர்தல் கண்ணோட்டத்தில் இது நடைபெற்றிருக்கும். நியாயம் கேட்டு சென்றவர்கள் பல நேரங்களில் சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்வர் வாக்கு வங்கியை குறிவைத்து செயல்படுகிறார் என்று கருதுகிறேன்.

  2. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகம் என தோன்றுகிறது தேர்தல் கண்ணோட்டத்தில் இது நடைபெற்றிருக்கும். நியாயம் கேட்டு சென்றவர்கள் பல நேரங்களில் சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்வர் வாக்கு வங்கியை குறிவைத்து செயல்படுகிறார் என்று கருதுகிறேன்.

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்