graphic தொடரும் உரிமை ஓட்டம், துணைநிற்க வேண்டியது நம்மவர்கள் கடமை

தொடரும் உரிமை ஓட்டம், துணைநிற்க வேண்டியது நம்மவர்கள் கடமை

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகளுக்கு முதலில் பொதுப் பிரிவில் வாய்ப்பு வழங்காமல், இட ஒதுக்கீடு இடங்களைப் பெறுவதற்கு மட்டுமே வலியுறுத்துகின்றனர். அதாவது, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு மற்றும் அவர்களது சாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெறுவதில்லை. மாறாக மாற்றுத்திறனாளிகள் அவர்களின் ஊனத்தின் பெயரால் மட்டுமே ஒதுக்கீடு பெறுகின்றனர்

பூரணசுந்தரி
பூரணசுந்தரி

“என்னைவிடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கெல்லாம் ஐ.ஏ.எஸ் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.” — பூரணசுந்தரி.

மிகுந்த வலிநிறைந்த, யோசித்தால் எவராலும் அவ்வளவு எளிதில் கடக்க இயலாத வாக்கியம் இது என்றே நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கே தடுமாறிக்கொண்டிருக்கிற ஒரு நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து, ஐ.ஏ.எஸ் கனவைச் சுமந்தபடி, தடம் மாறாமல் ஒரு பார்வையற்ற பெண் பார்த்துப் பார்த்து எடுத்துவைத்த அடிகள் அவை. பசி, தூக்கம், மகிழ்ச்சியைப் புறந்தள்ளி, பல ஆண்டுகள் ஒரு முனிவனைப்போல தவம் செய்து பெற்ற வெற்றியின் விளிம்பில் அதனை மொத்தமாய்ப் பறித்துக்கொண்டு, நாங்கள் தருவதோடு திருப்திகொள் என்று ஓர் அரசு சொல்லியிருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய ஏமாற்றம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதத்தில் ஒன்றிய அரசுத் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட குடிமைப்பணிகள் தேர்வு அறிவிக்கையின்படி, சுமார் 896 பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 39 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கானவையாக ஒதுக்கப்பட்டன. அவற்றுள் 8 பணியிடங்கள் பார்வையற்ற மற்றும் குறைப்பார்வையுடையோருக்கும், 11 பணியிடங்கள் கேட்கும் தன்மை பாதிக்கப்பட்ட மற்றும் பேச இயலாதோருக்குமானவையாக அறிவிக்கப்பட்டன.

39 பணியிடங்களில் 15 பணியிடங்கள் உடல்ச்சவால்கொண்ட அதாவது, குள்ளத்தன்மை கொண்டோர், ஆசிட் வீச்சிற்கு ஆளானோர், தொழுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச்சிதைவு குறைபாடுடையோர் ஆகியோருக்காக ஒதுக்கப்பட்டன. ஏனைய ஐந்து இடங்கள் பல்வகை ஊனமுற்றோர் உதாரணமாக பார்க்க மற்றும் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டன.

பூரணசுந்தரி
தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பூரணசுந்தரி

நடுவண் அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி முடிவுகளின்படி, ஒட்டுமொத்தமாக நாடு முழுமைக்கும் 43 மாற்றுத்திறனாளிகள் உட்பட 829 பேர் தேர்ச்சி பெற்றனர். மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் பூரணசுந்தரி 969 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றார்.

இத்தனைக்கும் நாட்டின் முதல் மதிப்பெண் 1072 என்று அறிய நேர்ந்தால், அவரது கடுமையான உழைப்பினை நாம் உணர முடியும். மேலும் பூரணசுந்தரி அவர்கள் நாட்டிலேயே பொதுப் பிரிவில் 286ஆவது இடமும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 60ஆவது இடமும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.  இது அவரது நான்காவது முயற்சிக்குக் கிடைத்திருக்கிற வெற்றி. இத்தனை காரணங்களும் வலுவாக இருந்தும், அவருக்கு ஐ.ஏ.எஸ் வழங்கப்படவில்லை. ஐ.எஃப்.எஸ்ஸாவது கிடைக்கும் என்ற கணிப்புகள் எல்லாம் பொய்த்துப்போக, இந்திய வருவாய்த்துறை ஐ.ஆர்.எஸ் பணி ஒதுக்கப்பட்டுள்ளதை எப்படி புரிந்துகொள்வது?

“பூரணசுந்தரியின் நீதிப் போராட்டத்தில் திமுக துணைநிற்கும்” ஸ்டாலின் அறிவிப்பு

இங்குதான் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் இட ஒதுக்கீடு சார்ந்து ஒன்றிய அரசு கடைபிடிக்கும் அணுகுமுறையை நாம் புரிந்துகொள்வது அவசியம். இட ஒதுக்கீட்டில் பொதுப் பிரிவு எனப்படுவது அனைவருக்கும் அதாவது இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு உரிமை அல்லாதவர்கள் என அனைவருக்கும் உரியது. அதாவது அதிக மதிப்பெண்கள் பெற்ற எந்த சாதியினரும் எந்த வகையான மாற்றுத்திறனாளிகளும் வேண்டுமானாலும் பொதுப் பிரிவில் வாய்ப்புப் பெற முடியும். அதாவது அதிக மதிப்பெண்கள் பெற்ற பட்டியல் சாதியைச் (அல்லது இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச்) சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் பொதுப் பிரிவில் சேர்ந்த பிறகு, அடுத்த நிலையில் இருக்கும் பட்டியல் சாதியைச் (அல்லது இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச்) சேர்ந்த மாற்றுத்திறனாளியான இன்னொருவருக்கு பட்டியல் இன (அல்லது இதர பிற்படுத்தப்பட்ட இன) இட ஒதுக்கீட்டில் வாய்ப்புக் கிடைக்கும். அதற்குப் பிறகும் அடுத்த நிலையில் இருக்கும் பட்டியல் சாதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மேலும் ஒருவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் வாய்ப்புக் கிடைக்கும். ஆக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு கூடுதல் வாய்ப்புகள் (பொதுப் பிரிவு மற்றும் பட்டியல் பிரிவு இட ஒதுக்கீடு) வழங்கப்படுகின்றன. இதே வாய்ப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் கூடுதலாக (பொதுப் பிரிவு, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு) வழங்கப்படுகின்றன. இதுவே உண்மையான இட ஒதுக்கீடு முறையாகும்.

ஆனால் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு நடைமுறைகள் இதற்கு எதிர்மாறானதாக இருக்கின்றன. அதாவது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு முதலில் பொதுப் பிரிவில் வாய்ப்பு வழங்காமல், இட ஒதுக்கீடு இடங்களைப் பெறுவதற்கு மட்டுமே வலியுறுத்துகின்றனர். அதாவது, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு மற்றும் அவர்களது சாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெறுவதில்லை. மாறாக மாற்றுத்திறனாளிகள் அவர்களின் ஊனத்தின் பெயரால் மட்டுமே ஒதுக்கீடு பெறுகின்றனர். அதாவது இட ஒதுக்கீடு என்பது மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதல் வாய்ப்பாக இல்லாமல், குறிப்பிட்ட ஒரு சில இடங்களுக்குள் அடைத்து வைக்கும் தந்திரமாக வளர்ந்து வருகிறது. எனவே தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போட்டியிடும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றிலும் இன்க்லுசிவ் பேசும் அரசு, இட ஒதுக்கீட்டில் மட்டும் இப்படி சிறப்பாக நடந்துகொள்வது ஆகப்பெரிய முரண்.

நன்றி விகடன்.com: கேட்டது ஐ.ஏ.எஸ்… கிடைத்தது ஐ.ஆர்.எஸ்!’ -மதுரை பூர்ணசுந்தரி விவகாரத்தில் என்ன நடந்தது?

ஐ.ஏ.எஸ் பணிக்காக மட்டும் இந்த ஆண்டு சுமார் 180 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதோடு, அவை பொதுப்பிரிவினருக்கு 72, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  (EWS) 18, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 52, பட்டியலினம் சார்ந்தவர்களுக்கு 25 மற்றும் பழங்குடியினருக்கு 13 என ஒதுக்கீடு செய்யப்பட்டன. வெற்றிபெற்ற 9 பார்வை மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவில் 143ஆவது இடமும், மாற்றுத்திறனாளிகளில் முதல் இடமும்  பிடித்த மங்கல் ஜெயந்த் கிஷோர் என்ற பார்வை மாற்றுத்திறனாளிக்கு மட்டும் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அவர் மாற்றுத்திறனாளியாகவே கணக்கில்கொள்ளப்பட்டு, அவருக்கு ஐ.ஏ.எஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. கிஷோருக்குப் பிறகு 286ஆவது இடம் பிடித்து, மாற்றுத்திறனாளிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பூரணசுந்தரிக்கு நிச்சயம் ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாக இருந்தும் அவருக்கு ஐ.ஏ.எஸ் ஒதுக்கப்படவில்லை. அவருக்கு அடுத்த இடத்தில் அதாவது 288, 289, 291, 292, 296, 303 ஆகிய இடங்களைப் பிடித்த இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்பட்டுள்ளதைத்தான் தன்னைவிட மதிப்பெண் குறைந்தவர்கள் எனச் சுட்டிக்காட்டுகிறார் பூரணசுந்தரி.

286ஆவது இடத்திலிருந்து தொடரும் பட்டியல்
பட்டியல்

பூரணசுந்தரியை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்ற மேற்குறிப்பிட்டவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் ஐ.ஏ.எஸ் பணியைப் பெற்றுள்ளனர். ஆனால் அதே இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த, அவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற பூரணசுந்தரிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உரிமை மறுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மட்டுமே இடம்பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளியாக இருக்கும் இவருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்காமல், இருக்கின்ற வாய்ப்புகளையும் மறுத்திருக்கின்றன இந்த அநீதியான நடைமுறைகள். அதிலும் 287ஆவது இடம் பிடித்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்கு ஐ.எஃப்.எஸ் ஒதுக்கப்பட்டு, அவருக்கு முந்தைய இடத்திலிருக்கும் பூர்ணாவுக்கு ஐ.ஆர்.எஸ் ஒதுக்கப்பட்டுள்ளதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஆகவே மாற்றுத்திறனாளி என்ற சலுகை ஏதுமின்றி பூரணசுந்தரியை பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராகக் கணக்கில் கொண்டிருந்தால், அவருக்கு ஐ.ஏ.எஸ் நிச்சயமாகக் கிடைத்திருக்கும். தனக்கு மறுக்கப்பட்ட சமூகநீதியை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் பூரணசுந்தரி. அவருக்குத் துணைநிற்க வேண்டியது மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தார்மீகப் பொறுப்பாகும். தமிழகத்தின் முன்னணி மாற்றுத்திறனாளி சங்கங்கள் ஒருங்கிணைந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்திட வேண்டும்.

இலக்கை நோக்கிய இலட்சிய ஓட்டம் என்பது, எல்லோருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்ட கணத்தில் முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்தான்,

பரிசளிப்பே முடிந்தாலும்,

பந்தயங்கள் முடிவதில்லை.

சவால்முரசு ஆசிரியர்க்குழு

தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com

பகிர

2 thoughts on “தொடரும் உரிமை ஓட்டம், துணைநிற்க வேண்டியது நம்மவர்கள் கடமை

  1. நடுவண் அரசு பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையும், அதற்கு மாறுபட்ட நடைமுறை போக்கினையும், பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்களையும், மிக தெளிவாக, விளக்கிய வண்ணம் அமைந்திருக்கும் கட்டுரைக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற முன்னெடுப்புகள் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு சென்றடைந்து, பார்வையற்றவர்கள் நல்வாய்ப்புகள் பல பெறவேண்டும்.

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்