SPB

ஆயுள் காதலன் சிறுகதை

,வெளியிடப்பட்டது

சீரற்ற அவள் எண்ண ஓட்டங்கள் முன்னும் பின்னுமாய் அவளைப் பந்தாடுகின்றன. டீவியில் யார் யாரோ இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகை ராதிகா குரல் மட்டும்தான் அவளுக்குப் பரிட்சயம். “தாங்க முடியலையே சார்” பிரமிட் நடராஜன் சொன்னபோது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.

அவள் மட்டும்தான் வீட்டில் இருக்கிறாள். டெலகிராம் வாட்ஸ் ஆப் போய்ப் போய்த் திரும்புகிறாள். புதிதாக ஒன்றுமில்லை. ஒருத்தர் ஒரு செய்தியை எல்லாக் குழுக்களிலும் ஃபார்வேட் செய்து வைத்தமை தருகிற சளிப்பு. போதா குறைக்கு நீள நீளமாய் குரல்ப்பதிவுகள். வேறு எதுவும் வேலை இல்லை. மத்தியத்திற்கும் சேர்த்தே சமைத்துவைத்துப் போய்விட்டான் அவன். எங்கு போயிருப்பான்? முக்கத்திலிருக்கிற ஆட்டோ ஸ்டாண்டுதான் கதி. தளர்வு அறிவித்ததுதான் தாமதம், உடனிருந்த அம்மாவும் மகனை, பேரனைப் பார்க்கப் போய்விட்டாள்.

கீதாவுக்கு ஃபோன் செய்யலாம்தான். ஆனால் அவளோ, “உனக்கென்னப்பா, டீச்சர், லாக்டவுன்ல ஜாலியா வீட்டில இருக்க. நாங்க ஆஃபீஸ் போய்த்தான ஆகணும்” என்று சளித்துக்கொள்வாள் என்கிற வெறுப்பு. இன்று ஒரு ஜூம் மீட்டிங் கூட இல்லை. இப்படியெல்லாம் தன்னைத் தனிமையிலிருந்து விலக்கிக்கொள்ள வழிதேடிச் சுற்றிக்கொண்டிருந்த அவளின் எண்ணங்களை ஒரு நிமிடம் நிறுத்தியது அந்த அழைப்பு.

“நலம் வாழ, எந்நாளும் என் வாழ்த்துகள்” எதிர்முனையில் பாடியவன் குமார். உடனிருக்கிற தன் கணவனே பெரிதாக அலட்டிக்கொள்ளாத சில பிறந்தநாள்களை அவள் கடந்திருப்பதால், இப்போது அதுபற்றியெல்லாம் அவள் யோசிப்பது இல்லை. ஒருமுறை குடித்துவிட்டு வந்த அவனிடம், “இன்னக்கி எனக்குப் பொறந்தநாளு, அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா?” அவள் கேட்டதுதான் தாமதம், “ஆமா பொல்லாத பொறந்தநாளு, புள்ளையப் பெத்து அதுக்குப் பொறந்தநாளு கொண்டாட முடியல, ஊர்ல ஒருத்தன் பாக்கியில்லாமக் கேட்கிறான்” என்று அழுது புலம்புவதுபோல் போதையில் அரற்றத் தொடங்கிவிட்டான் அவன்.

வருடம் தவறாமல் அவளுக்கு வந்துவிடுகிற ஒரே வாழ்த்துச் செய்தி குமாரினுடையது. பள்ளி கால வகுப்புத் தோழன்.

“நல்லா இருக்கியா குமாரு”

“ஊம் ஏதோ ஓடுது. இப்பதான் தளர்வு அறிவிச்சிட்டான் பஸ் விட்டுட்டானேனு, வியாபாரத்துக்குப் போனா, ஒன்னும் தேரல. யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க. முன்னலாம் இரக்கப்பட்டாவது ஒன்னு ரெண்டு பத்திப் பாக்கெட் வாங்குவாங்க.” குமார் சொல்லி முடிப்பதற்குள் “இப்ப எல்லோர் நிலைமையும்தான் இரக்கப்படுற மாதிரி இருக்கே” என்று முடித்தாள் அவள்.

“அப்புறம் என்ன பண்ற” என அவன் கேட்டுவிடக்கூடாது என்பது அவளின் பரிதவிப்பு. கீதா போல ஆரம்பித்து, இவன் வேறு மாதிரிப் புலம்புவான். “டெட்ல 84 மார்க் எடுத்து என்ன பிரையோஜனம்? ஊர் ஊரா சுத்திட்டிருக்கேன். முன்னமாதிரி கச்சேரியும் இல்ல, நீ ஏதாச்சும் கேள்விப்பட்டியா? டெட்ல பாஸ் பண்ணினவுங்களுக்குத்தான்் அப்பாயின்ட்மென்ட்ல முன்னுரிமைனு மினிஸ்டர் சொல்லிருக்காராமே?மாற்றுத்திறனாளிகளுக்குஸ்பெஷல் டெட் அறிவிக்கப் போறாங்களாமே” என்றெல்லாம் அந்த மினிஸ்டர் போலவே ஏதாவது அரைப்பான்.

“அப்புறம் லட்சுமி எப்படியிருக்கா” அவள் கேட்க வாய்திறப்பதற்குள் “ஏங்க எஸ்பிபி இறந்துட்டாராம்” தூரத்தில் மறுமுனையிலிருந்து அவச்செய்தியுடன் லட்சுமியின் குரல். “தெய்வமே” என்ற பெருஞ்சத்தம் எழுப்பியபடி அழைப்பைத் துண்டித்தான் குமார். அவளுக்கும் திடுக் என்றது. ‘கவலைக்கிடம்’ என நேற்றிலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், இது அவள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவளும் துடித்துப் போகிறாள். உடனே டீவி ஆன் செய்ய ரிமோட்டைத் தேடுகிறாள். “இதோ பார் மாமா! எந்தப் பொருளையும் எடுத்தா எடுத்த இடத்தில வைக்கப் பழகிக்கோ”அவள் எத்தனையோ முறை அவனுக்குச் சொல்லிவிட்டாள், அவனுக்கு அது புரிந்தாலும் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை. ஒருவழியாக அங்கும் இங்கும் தடவி, அருகாமை ஜன்னலிலிருந்த ரிமோட்டைத் தேடி எடுத்து டீவி ஆன் செய்தாள்.

சிகிச்சையில் எஸ்பிபி
சிகிச்சையில் எஸ்பிபி

“நாளை நானும் போகிறேன், உன்னில் நானே வாழ்கிறேன், அழுகின்ற நெஞ்சங்களே! வாழ்க வாழ்கவே!” பின்னணியில் பாடல் ஒலிக்க, அவரின் இறப்புச் செய்தியை அறிவித்துக்கொண்டிருக்கிறது புதியதலைமுறை. கண்கள் கலங்குகின்றன. நடுக்கம் பிறக்கிறது. ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வு.

சீரற்ற அவள் எண்ண ஓட்டங்கள் முன்னும் பின்னுமாய் அவளைப் பந்தாடுகின்றன. டீவியில் யார் யாரோ இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகை ராதிகா குரல் மட்டும்தான் அவளுக்குப் பரிட்சயம். “தாங்க முடியலையே சார்” பிரமிட் நடராஜன் சொன்னபோது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.

அவள் நினைவுகளில் யார் யாரோ வந்துபோகிறார்கள். தாங்க இயலாத துன்பங்களில் மூழ்கும்போதெல்லாம், ஏழாண்டுகளுக்கு முன்பு இறந்துபோன தன் அப்பாவை நினைத்துக்கொள்வாள். இப்போதும் அப்படியே முயல்கிறாள். அங்கும் “வா மகளே! என்னைப் பார் மகளே! எந்தன் உயிரின் ஒளி நீயே”என எஸ்பிபிதான் முன் வந்து நிற்கிறார்.

எஸ்பிபி என்றாலே அவளின் நினைவுகளில் குமார்தான் சட்டென்று வந்து நிற்பான். பள்ளி நாட்களில் அவன் எஸ்பிபியை சிலாகித்தது, இலங்கையிலிருந்து ஒலிபரப்பான கொலும்பு வானொலியில் பாடல்கள் கேட்பதற்காகவே விடுதியிலிருந்த வானோலிப் பெட்டிமுன் அமர்ந்துகொண்டு பிடித்த பாடல்கள் வரும்போது, அதிரும்படியாகத் தன் நெஞ்சைத் தட்டுவது என ஒலிவும் மறைவுமாய் அவளுக்கு எஸ்பிபியை அறிமுகம் செய்தவனே குமார்தான்.

ஒருமுறை கிரவுண்டில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த குமாருக்கு எங்கிருந்தோ எஸ்பிபியின் அந்தப் பாடல் கேட்டிருக்கிறது. விடுதி ரேடியோவில்தான் இருக்கும் என விரைந்த அவனுக்கு ஏமாற்றம். ரேடியோ பெட்டி அணைத்துவைக்கப்பட்டிருந்தது. பெரிய்ய வகுப்பு அண்ணன்மார்களுக்கு மட்டுமே ரேடியோவை இயக்க அனுமதி உண்டு. என்ன செய்யலாம்? பாடல் முடிந்துவிடுமே என்ற பதட்டம் ஒருபுறம் என்றால், “நடந்தது நடக்கட்டும், கிடைத்தது கிடைக்கட்டும், நான் ரொம்பத் துணிஞ்சவன் டா” என உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடலும் உசுப்பேற்ற, ரேடியோவை ஆன் செய்தேவிட்டான்.

நிம்மதியாய் பாடலைக் கேட்டானில்லை. சத் என்று முதுகில் ஓர் அடி. “ஒழுங்கீனம் இத்துனூண்டு இருந்துகிட்டு ரேடியோவிலெல்லாம் கை வைக்கிறியா?” அடித்தது விடுதிக்காப்பாளர். அழுகை வராமல் அவனைத் தேற்றின தொடர்ந்து ஒலித்த “போடா டோண்ட் கேர், டோண்ட் கேர், டோண்ட் கேர் என்ற வரிகள்.

அன்று விடுதி முழுக்க குமாரின் வீரதீரச் செயல் பற்றியே எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதெல்லாம் என்ன வீரச்செயல். அவன் ரேடியோ பெட்டியைத் தொடும் சுதந்திரம் பெற்ற எட்டாம் வகுப்பில் செய்தானே அதுதான் உண்மையான வீரச்செயல். எத்தனை துணிச்சல் அவனுக்கு. படிக்கத்தா என்று இரவல் வாங்கிய அவளின் பிரெயில் புத்தகத்தில் செருகினானே இன்றளவும் அவள் உயிர்க்குடையும் வாளோன்றை.

தான் வைக்காது புதிதாய்த் துருத்திக்கொண்டிருந்த அந்த பேப்பரை எடுத்துப் படித்தாள்.

“பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ,

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ,

கண்ணல்ல, கண்ணல்ல, அள்ளிப்பூ,

சிரிக்கும் மல்லிகைப்பூ.

சரி பாடல்தானே விட்டுவிடலாம் என்று  பார்த்தால், அவள் வரும் இடங்களிலெல்லாம் ‘உன், நீ’ என வார்த்தைகளை மாற்றி நிரப்பியிருந்தான்.

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ,

இதைத் தடவிப் படிக்கும் உன்

கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ.

தென்றலைப் போல நடப்பவள், எனைத்

தழுவப் பார்த்துக் கிடப்பவள்.

செந்தமிழ் நாட்டுத் திருமகள் – நீ

என்றன் தாய்க்கு வாய்த்த மருமகள்.

போதாதா. படபடவென்று பற்றிக்கொண்டது கோபக் கனல்.

வகுப்பில் தன் சக தோழிகளை வைத்துக்கொண்டே குமாரை ஒரு வாங்கு வாங்கிவிட்டாள்.

அவன் அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளவே இல்லை. “எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்தவ இவதான்”, “மஞ்சப்பொடி தேய்க்கயிலே என் நெஞ்சத் தொட்டுத் தேய்ச்ச புள்ள”, “அன்புக்கதை, வம்புக்கதை,எந்தன் கதை காதல் கதையே” அவளின் தொடர் அவமதிப்புகளை அந்தப் பாடல்கள் தந்த கற்பனைகளாலேயே கடந்தான்.

நம்பிக்கை, சோகம், கும்மாளம், கூத்து, விரசம், விரக்தி என வகைவகையாய் விதவிதமாய் எஸ்பிபி பாடல்கள் ஏராளமாய் அவன் மூளையில் பொதிந்திருந்தன. அவனும் அவனுடைய மனோபாவத்திற்கேற்ற பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தான். அவனுடைய ஒரே நோக்கம், அவை அவளின் காதுகளில் விழவேண்டும் அவ்வளவுதான்.

“நீ பேசாமப் போறியே, இது நியாயமா?” வார்த்தையை மாற்றிப்போட்டு ஜாடையாய் அவன் பாடியது அவளுக்கு ஆத்திரமூட்டியிருக்க வேண்டும். அழுதுகொண்டே தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுவிட்டாள். சில பிரம்படி கண்டிப்புகளுக்குப் பிறகு கொஞ்சமே கொஞ்சம் அடக்கி ஆனால் வாசிக்கவே செய்தான். அத்தனையும் சோகமே சோகம். “ஆசை உன்மேல் வச்சதுக்கு அடிச்ச அடியும் வலிக்கலையே”, “நிலவில்லாத நீல வானம் போலவே, உயிரில்லாமல் எனது காதல் ஆனதே!”, “கல்லில் அடிச்சா அது காயம், காயம், சொல்லில் அடிச்சா அது ஆராது” அது பள்ளியின் கடைசி வகுப்பின் கடைசி நாட்கள் என்பதால் அவளும் அவனைப் பொருட்படுத்தாமல் கடந்தாள். ஆனால், அவன் பாடல்களை மட்டும் ஆயுளுக்கும் அப்படிச் செய்ய இயலாது என்பதை, அவளது வகுப்பும் வயதும் ஏற ஏற அறிந்தாள்.

இப்போது அவளுக்கு குமாரிடம் பேச வேண்டும்போல் இருந்தது. ஃபோன் செய்தாள். ரிங் போய்க்கொண்டே இருந்தது எடுக்கவில்லை. மறுபுறம் கதவு தட்டும் சத்தம். அவன்தான். வழக்கம் போல முழு நிறைவாய் வந்திருக்கிறான் என்பதை, அவன் காற்றிலே கரையவிட்ட, குரல் மாற்றமும், குமட்டல் நாற்றமும் கலந்த “சாப்பிட்டியா” என்ற கேள்வியால் அறிந்துகொண்டாள்.

அவளுக்கு எல்லாம் பழகிவிட்டது. சத்தியம் வாங்குவது, கயிறு கட்டுவது, அவ்வளவு ஏன் சீர்திருத்த இல்லங்களுக்கெல்லாம் சென்றுவந்தாகிவிட்டது. இனி இதுதான் விதியென விட்டுவிட்டாள். பள்ளிக்குத் தன்னை அழைத்துப் போகிற, திரும்ப அழைத்து வருகிற நேரங்களில் அவன் குடிப்பதில்ல்ஐ என்பதுதான் அவளுக்கான ஒரே ஆறுதல்.

தன்னைப் போலவே தன் மகளை இறுதிவரை தடுமாறாமல் பார்த்துக்கொள்ள தன் தங்கை மகன் தனசேகரன்தான் சரியான தேர்வு என்று அவள் அப்பா நினைத்தார். அவளும் அதைப் பெரிதாய் மறுக்கவில்லை. தனசேகரனும் அன்பானவன்தான். ஒரு பஞ்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு, தானே தொழில் தொடங்கி நடத்தும் ஆசை வந்ததுதான் ஆபத்தின் தொடக்கப்புள்ளி. ஆசிரியர் என்பதால் வங்கியில் அவளுக்கு தனிநபர் கடன் எளிதாகவே கிடைத்தது என்றாலும், பக்குவமில்லாத அவனுடைய தொழில்சார் முடிவுகளால் பெருநட்டம் ஏற்பட்டுவிட்டது.

நட்டத்திற்கு அவனை அவள் கடிந்துகொள்உம்போதெல்லாம், குழந்தையின்மைப் பிரச்சனையைத் தனக்கான கேடயமாக்கி, சமயங்களில் அதையே ஒரு ஆயுதமாகவும் அவள்மீது எறியப் பழகிக்கொண்டான் அவன். தன்னுடன் இருக்கும் தன் அம்மா வருத்தப்படுவாள் என்பதால், அவனோடு அதிகம் மல்லுக்கு நிற்காமல், அவள் அவனைப் பொறுத்துக்கொள்ளப் பழகிவிட்டாள்.

“வா சாப்பிடலாம்”

“எனக்கு பசிக்கல”

“எது பசிக்கலையா? மணி ரெண்டாகுது.”

“நீ போட்டு சாப்பிடு, நா அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்.” அவள் கொஞ்சம் குரல் உயர்த்திச் சொல்லிவிட்டு, புதியதலைமுறையோடு ஒன்றிவிட்டாள்.

சாப்பிட்டு ஹாலுக்கு வந்த அவன் இளைப்பாறத் தயாரானான். அவன் கண்கள் டீவியை நோட்டமிட்டன. “இறந்துட்டாரா? எப்போ? அதுதான் உனக்குப் பசிக்கலையா?” கேட்டுக்கொண்டே அவன் அவள் தோள்மீது கைவைத்தான்.

“கொஞ்சம் அமைதியா இருக்கியா” அவள் கடுகடுத்தாள். “ஏய் எவ்லோ பெரிய பாடகர் அவரு, எனக்குக் கூட அவரு பாட்டுனா ரோம்பப் பிடிக்கும்,” என்று சொல்லியவன் படுக்கையில் சாய்ந்துகொண்டே “மீனம்மா, மீனம்மா, கண்கள் மீனம்மா, சே செம பாட்டு, அவரு பாடுனதிலையே எனக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்” கதாகாலட்சேபம் ஆரம்பிக்கிறான் என்று புரிந்துகொண்டாள்.

“அந்தப் பாட்டு எஸ்பிபி பாடுனதா? தெரிஞ்சாப் பேசு, இல்லைனா படுத்துத் தூங்கு, அதான் சாப்பிட்டீஈஈஈஈல?” என குத்தலாய் அதட்டினாள்.

“என்னது அது எஸ்பிபி இல்லையா? அப்புறம் வேற யாரா இருக்கும்?” ஏதோ ஆழ்ந்து சிந்திப்பவனைப்போல பாவனை காட்டியவனிடமிருந்து சிறிது நேரத்த்இல் கிளம்பியது குரட்டைச் சத்தம்.

புதியதலைமுறையில் வைரமுத்து இரங்கற்பா வாசித்துக்கொண்டிருந்தார். “என் சங்கீத ஜாதிமுல்லை, சருகாகிப் போனதோ?”

“சங்கீத ஜாதிமுல்லை”, அவளின் உயிர் உருக்கும் சொல். பருவமெனும் நந்தவனத்தில், தனது உடல்த்தரு எங்கும் மதுநிறைப் பூக்கள்  மண்டிக்கிடப்பதாய் அவள் உணர்ந்து, உறைந்து, இறந்து, பிறந்து பெருவாழ்வு வாழ்ந்த நாட்களின் மிச்சமாய் இருப்பது அந்தப் பாடலும் அது தரும் நினைவுகளும் மட்டுமே.

இளங்கலைப் பட்டம் முடித்த கையோடு, பார்வையற்றோருக்கென்று பிரத்யேகமாக நடத்தப்பட்ட ஆசிரியர்ப் பயிற்சி மையத்தில் சேர்ந்தாள். உடன் பயிலும் இருபது பெண்களுமே தனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால், சில நாட்கள் வெறுமையாகக் கடந்தன. அதனால் விடுதியைவிட வகுப்பில் இருப்பதையே அவள் அதிகம் விரும்பினாள். இதே நிலைதான் பயிற்சி மையத்தில் சேர்ந்த தினேஷ் மற்றும் பழனிக்கும். அவர்களுக்கும் பிற பையன்கள் அறிமுகமில்லை. ஆனாலும் அந்தப் பயிற்சி மையத்தின் வகுப்பறையைக் கலகலவென வைத்துக்கொண்டவர்கள் இருவரும்தான். அந்த இருவரின் ஜாலி, கேலி,கூத்துகளை அவள் மிகவும் ரசித்தாள்.

வகுப்பில் ஆசிரியர் வராத நேரங்களில் இருவரின் பாட்டு கச்சேரி கலை கட்டும். அவற்றில் பெரும்பான்மை எஸ்பிபியினுடையது. தூது, சூசகம், வாழ்த்து, அனுதாபம்  என ஏதோ ஒரு செய்தியைத் தாங்கிய அவர்களின் பாடல் தெரிவுகள் மூலம், வகுப்பில் எறிச்சல் அடைந்தவர்களும், இன்பம் கண்டவர்களும் சம எண்ணிக்கையில் இருக்கவே செய்தார்கள்.

அப்படித்தான், தன் காதலைச் சொல்லிவிட்ட முன் இறுக்கை பாண்டியைக் கடிந்துவிட்டது எதிர்முகாம். பாண்டி படுஅப்செட். விஷயம் அறிந்ததுதான் தாமதம், “இந்தப் பாடலை அண்ணன் பாண்டி பாடுவதாக நினைத்துக்கொள்ளுமாறு நண்பர்கள் நண்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன்” தினேஷ் அறிவிப்பைத் தொடர்ந்து பாடல் ஒலித்தது.

“வேண்டி வந்த பக்தனை நீ வெட்டி வெட்டி முறைக்கணுமா?

வேப்பிலைய அடிச்சுதான் வேகத்த குறைக்கணுமா?

பூப்போட்ட பாதத்துக்கு பூசை ஒன்னு பண்ணட்டுமா?

பூவரசி மனசுக்குள்ள காதல் வல பின்னட்டுமா?”

பாண்டி பயந்ததுபோல் விரிசலெல்லாம் அதிகமாகவில்லை. நாட்பட நாட்பட அவன் விரும்பிய காதல் அவனுக்குக் கைகூடியது.

இன்னோரு முறை, வகுப்பில் இரு தோழிகளுக்கிடையே ஏதோ ஒரு விஷயத்தில் வகுப்பே அதிருமளவுக்குக் கடுமையான வாய்ச்சண்டை. உடனுறைத் தோழிகளின் சமாதானமெல்லாம் எடுபடவே இல்லை. அப்போதும் ஒலித்தது பாடல்.

“கம்பன் ஏமாந்தான், – இளம்

கன்னியரை ஒரு மலர் என்றானே!

கற்பனை செய்தானே!

கம்பன் ஏமாந்தான்.” வகுப்பில் முழு அமைதி. இறுக்கம் குறைந்து மெல்லப் பழைய நிலை திரும்பியது.

பிசகாத குரல்பாவம், பிரளாத வார்த்தைகள் என ஒரு பாட்டை இருவரும் ஒன்றாகப் பாடுவதை ஒட்டுமொத்த வகுப்பே ரசிக்கும் என்றாலும், ஒரு சிரிப்பின் வழியே அவள் மட்டும்தான் அவற்றை அங்கீகரிப்பாள். ஒன்றிரண்டு முறைக்க்உப் பிறகு, அவளின் சிரிப்பை தினேஷும் குறிப்பெடுக்கத் தொடங்கினான். “இன்னக்கிஇலேசா சிரிச்சா, இரண்டுமுறை சிரிச்சா.

இன்னக்கி கலகலனு சிரிச்சிட்டா” பழனியிடம் தினேஷ் தினமும் இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பான்.

“சிரிப்பைக் குறிப்பெடுக்கத் தொடங்கிட்டீல, இனி சிரிப்பா சிரிக்க வேண்டியதுதான்.”பழனி கிண்டலாகச் சொன்ன அத்தனையும் நடப்பதற்கு முதற்புள்ளி வைத்த அந்த நாளும் வந்து சேர்ந்தது.

ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் இசைப்போட்டியில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து ஒரு மாணவரையாவது பங்கேற்கச் செய்யலாம் என முடிவு செய்தது நிர்வாகம். இரண்டு வகுப்புகளிலும் குரல்த்தேர்வு நடத்தும் பொறுப்பை ஏற்றார்கள் அந்தந்த வகுப்பின் பொறுப்பாசிரியர்கள். வகுப்பில் விஷயத்தை விலக்கிய ஆசிரியர், ஒரு மாணவியை நோக்கி, “திவ்யா நீ பாடலாமே, நீதான் கர்நாடக சங்கீதம் கத்துக்கிறீல” என்றார். மாணவியும் பாட சம்மதித்தாள். “சார் தினேஷ் நல்லாப் பாடுவான்” வகுப்பின் ஏதோ ஒரு மூலையிலிருந்து தொடங்கிய ஒற்றைக் குரலுக்குக் கற்றைக் குரல்களின் ஆதரவு கிடைத்தது.

“இதோ பாருங்க, இது ஏதோ காலேஜ் ஸ்டேஜ்ல பாடுற மாதிரிலாம் இல்ல, இவுங்க ஒரு அக்காடமி. சும்மா டப்பாங்குத்து பாட்டெல்லாம் அங்க செல்லாத்உ.” ஆசிரியர் தங்களைக் குறைத்துச் சொல்வதாகத் தோன்றியது பழனிக்கு. “சார் நீங்க பாட வெச்சுப் பாருங்க, டப்பாங்குத்தா, தலையில குட்டானு அப்புறம் முடிவு செய்யலாம்” ரொம்ப தைரியமானவன் பழனி, மனதில் பட்டதை முன் பின் யோசிக்காமல் பளிச்சென்று சொல்லிவிடுவான். பழனியை ஒரு நொடி முறைத்துவிட்டு, “ஊம் தினேஷ் பாடு பார்க்கலாம்” என்றார் சிறப்பாசிரியர்களுக்குக் கற்பிக்கும் அந்த சிறப்பு வாய்ந்த ஆசிரியர்.

எல்லோரும் ஆவலாய்க் காத்திருக்க, தினேஷ் தொடங்கினான்.

“ஆஆஆ” என்ற ஆலாபனை மெல்ல நெலிவு சுழிவுகளுடன் தொடங்கி, “தம் னம்த னம்த னம் தம்” என்கிற சொற்கட்டைச் சுகமாய் கடந்து முன்னேறி, “என் நாதமே வா” என்று சுத்த சுதியும் கம்பீரமுமாய் தினேஷின் குரல் மேலெழுந்தபோது, அந்த ஆசிரியர் உட்பட அனைவரின் உடல் உரோமங்கள் தமது இருப்பை அறிவிக்கத் தொடங்கியிருந்தன.

பழனியின் மேசைத்தாளம் பின்தொடர, தினேஷின் இசைவாகனம் சங்கீத ஜாதிமுல்லையைத் தேடுகிற தவிப்பில், முதல் சரணத்தின் திருமுகம் நுழைந்து, தன்னை அறிமுகம் செய்தபடி, பொன்னி, கன்னி, என ஜீவ நதிகளி் தானும் மூழ்கி, எல்லோரையும் மூழ்கடித்துப் பின் மேலெழுப்புகிற வாஞ்சையில் இன்னும் வேகமெடுத்தது.

“விழிகள் அழுதபடி, கரங்கள் தொழுதபடி,

சிறைகளும் உடைபட வெளிவரும் ஒரு கிளி,

இசையெனும் மழை வரும், இனி எந்தன் மயில் வரும்”

கவிப்பேரரசின் விருத்தங்களில் திருத்தமும், எஸ்பிபியின் அழுத்தமும் கொஞ்சமும் குறையாத அவனது ராக ஓட்டத்தை

“ஆடிய பாதங்கள், காதலின் வேதங்கள் ஆடிடுமோ, பாடிடுமோ,” என மெல்ல நிறுத்தி,  சற்று ஆசுவாசம் அடைந்தான். மற்றவரும் ஆசுவாசம் அடையத் துணிந்த அந்த கணத்தில், “ராஜதீபமே! எந்தன் வாசலில் வாராயோ?” என முழக்கம் மீண்டும் தொடங்கிற்று.

ஆற்றாமை, அழுகை, ரவுத்திரம் என அவன் முழுக்க அந்தப் பாடலில் கரைந்துவிட்டிருந்தான். கண்களை மூடிக்கொண்டால், காதல் ஓவியம் படத்தின் இறுதிக் காட்சிகள் மனக்கண்ணில் அரங்கேறக் கூடும் என்று நினைத்தார் ஆசிரியர்.

“குயிலே! குயிலே!” அவளுக்கு அழுகை வந்துவிடும்போல் இருந்தது. அவள் முகம் இன்னும் அதிகமாய் அவன் பக்கம் திரும்பிற்று.

“நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அது நீதானே, நீதானே.

மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே, நீதானே, நீதானே.”

படிப்படியாய் மேலெழும்பும் அவனது விசும்பல்கள் தனக்கானதே என்று கற்பனை செய்துகொள்வது அவளுக்குச் சுகமாய் இருந்தது.

“விழி இல்லை எனும்போது, வழி கொடுத்தாய்” இந்த வரி அடுத்த நொடியே அவளை அவளின் கற்பனைகளிலிருந்து விலக்கிவிட்டது. அவன் ஏதோ ஒரு பார்வையுள்ள பெண்ணின் நினைப்பில் பாடுவதாக அவளுக்குப் பட்டது.

“நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்” பழனியின் தாளமும் அசரடித்துக்கொண்டிருந்தது.

“சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்,

தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்,

கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்,

இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்?

கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்.” எங்கேனும் தடுமாறிவிடுவான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஆசிரியரும் மெல்ல தன் இறுக்கை நுனிக்கு வந்துவிட்டார்.

“சச சச நிச நிச நிசரிச நிச நிச கரிசநி ரிச நித பதநி சரி” இப்போது அந்த ஆசிரியர் உள்ளிட்ட எல்லோரும் அவன் எங்கும் தடுமாறிவிடக் கூடாது என பதட்டம் அடைந்தார்கள். ஆனால் அவனோ, சுரக்கட்டுகளில்  எஸ்பிபியின் அந்த அனாயசத்தை வெளிப்படுத்தி, மிக இலகுவாகக் கடந்தான்.

“மகன யகன ரகன சகன, யகன ரகன சகன தகன,

ரகன சகன தகன தகன, சகன தகன பகன ககன” என்று அவன் முடித்தபோது பெருமழை பெய்து ஓய்ந்த அமைதி. கைதட்டல்கள் அடங்க வெகு நேரமானது.

“உனக்கு கர்நாட்டிக் தெரியுமா தினேஷ்?” ஆசிரியர் கேட்டார். “இல்ல அப்படியே கேட்டுப் பாடுறதுதான் சார்” தினேஷின் பதிலில் அனைவருக்கும் ஆச்சரியம். அன்றிலிருந்து பயிற்சி மையத்தில் அனைவரும் அவனை “வாங்க எஸ்பிபி” என்றே விளித்தார்கள்.

அன்று மாலை, அவனை எப்படியாவது தனியே சந்தித்துப் பாராட்டிவிட வேண்டும் என நினைத்தாள். வகுப்பு முடிந்து எல்லோரும் விடுதிக்குப் போனார்கள். அவள் மட்டும் விடுதி வாசலில் நின்றிருந்தாள்.  அவ்வளவு சீக்கிரமெல்லாம் தினேஷ் விடுதியடைய மாட்டான். நண்பர்களோடு அரட்டையடித்தபடி, தங்கள் விடுதிக்கு எதிரே இருக்கிற அவனது விடுதி வந்து சேரும்போது எப்படியும் அவனைப் பிடித்துவிடலாம் என்று நினைத்தாள். நினைத்தது கூடியது. தினேஷ் கும்பல் சகிதம் சத்தமாகப் பேசிக்கொண்டு வந்தான்.

“தினேஷ்”, அவள் அழைத்ததில் அவன் நின்றான். உடன் வந்தவர்கள் இங்கிதம் கருதியெல்லாம் இல்லை, அவள் வேறு யாரிடமும் பேசமாட்டாள் என்பதால், அவர்களும் அவளிடம் கெத்துக் காட்டுவதாய் விடுதி நோக்கி முன்னேறினார்கள். ஆனால், வகுப்பில் பையன்கள் யாரிடமும் பேசாத அவள், இன்று தினேஷை அழைத்துப் பேசுகிறாள் என்ற செய்தியை மட்டும் விடுதி முழுக்கப் பரப்பினார்கள்.

“வாழ்த்துகள், சான்ஸேஇல்ல, அசத்திட்டீங்க.” அவள் முடிப்பதற்குள், “அப்படிலாம் ஒன்னும் இல்லங்க” தன்னடக்கமாய்க்  குழைந்தான். அந்த கணத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்ற தடை நீங்கியது. அடுத்தடுத்த உரையாடல்களில் ‘ங்க’ எனும் மரியாதை விகுதி மறையத் தொடங்கி, ஒருமை விலிப்புகள் உரிமை பேசின. அவர்கள் வகுப்பில் சகஜமாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால், இருவரின் மனதில்உம் அந்த சகஜம் இல்லை என்பதை அவர்கள் அறியாமலும் இல்லை. உடன் பயில்வோரும் சகட்டை மேனிக்கு அலரெனும் நீரூற்ற, விதைமெல்ல முளைவிட்டுத் தழைக்கத் தொடங்கிய்யது.

“அது சரி, அந்த சங்கீத ஜாதிமுல்லை யாரு? எவ்ளோ நாளாக் கேட்குறேன், இன்னைக்காவது சொல்லேன்” அவள் கேட்டதுதான் தாமதம், “நீதான்” கொஞ்சமும் யோசிக்காமல் தினேஷ் சொன்னதில் நிலைகுலைந்தாள். இப்படிப் பட்டென்று போட்டுடைத்ததில் அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான் என்றாலும் அதை உடனே காட்டிக்கொண்டுவிட்டால் அப்புறம் அவள் என்ன பெண்? எதுவும் பேசாமல் இடம் அகன்றாள்.

அவள் கோபித்துக்கொண்டாளா தெரியவில்லை. முறைத்துப்போனாளா? யாருக்குத் தெரியும். வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம், ஒரு பெண்ணின் மௌனத்தை என்ன செய்வது? “அட கண்ணில்லாத கவோதியே!” என்றோ அவன் வழித்தடத்தில் யாரோ அவனைத் திட்டிய குரல் அவனுள் ஒலித்தது.

அவன் அவள் கொலுசு சத்தத்தையே கவனித்துக்கொண்டிருந்தான். அதிரும் நடையா, அன்பு நடையா ஏதாவது ஒரு சின்ன க்லு கிடைக்கலாம் இல்லையா? நிச்சயமாக இல்லை. எதிரே இருக்கும் தன் விடுதியின் மாடிப்படிகளில் அவள் ஏறிக்கொண்டிருப்பதாக சொன்னதே தவிர, கொலுசு வேறெதுவும் சொல்லவில்லை.

அவனும் தன் விடுதி அறைக்குள் நுழைந்தான். சரி இன்றைக்குப் போட்டுடைத்தது போலவே, நாளைக்கு மையத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போது நேரடியாகவே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தான்.

“மலரே! என்னென்ன கோலம், எதனால் என்மீது கோபம்?

தினமும் வெவ்வேறு நிறமோ? இதுதான் உன்னோட அழகோ?”

நான்கு நான்கு பேர்களாய் தங்கியிருந்த விடுதியின் ஐந்து அறைகளில் ஏதோ ஒரு அறையிலிருந்து கசிந்து கொண்டிருந்தார் எஸ்பிபி.

“என்ன பழனி, தலைவர் அழுதிட்டிருக்கார்?” தினேஷ் கேட்டான். “எல்லாம் சீனியர் ராஜா அண்ணன்தான்”

“இன்னும் அந்தப் பிரச்சனை ஓடிட்டுதான் இருக்கா?” ஆமா, அவர் ஒரு குழப்பவாதி. ஒருநேரம் அந்த அக்காவை ரோம்பப் பிடிச்சிருக்குங்கிறாரு, இன்னோரு நேரம், நான் யாரு, அவள் எவ்வளவு பெரிய ஆளுங்கிறாரு. சேச்சே எனக்கெல்லாம் ஒரு ரெண்டு வயசு அதிகமா இருந்திருந்தா அந்த அக்காவுக்கு பிரப்போஸ் பண்ணியிருப்பேன்” பழனி முடிப்பதற்குள்,

“பழனீஈஈஇ! என்ன இது? ஜூனியர்!ஜூனியர்!! ஜூனியர்! இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்” தினேஷ் பாடினான்.

“ஹேய் திருமணம் எங்கப்பா ஆச்சு, ஏதாவது கிளப்பிவிட்டுடாதே, சரி உன் கதை என்ன ஆச்சு? ஏதாவது செருப்படி?” பழனி முடிப்பதற்குள்,  “அவ்ளோ ஆசையா இருக்கா” என்று சொல்லியபடி நடந்ததைச் சொன்னான் தினேஷ்.

“மேக்சிமம்  ஏத்துக்கிட்டானுதான் தோணுது” தினேஷ் முடிப்பதற்குள்,

“அப்படிலாம் சட்டுன்னு முடிவுக்கு வந்துற முடியாது. ஏன்னா பெண் மனசு ஆழமென்று” பாடத் தொடங்கினான் பழனி.

வகுப்பு நேரங்களில் எதையும் விளக்கிச் சொல்ல அவகாசம் இருக்காது. ஆனால், தன்னுடைய முழு சம்மதத்தையும் சொல்லியாக வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தாள். உணவு இடைவேளையின்போது, தினேஷ் பழனி அமர்ந்திருந்த மேசைக்கருகே வந்து நின்றுகொண்டாள்.

முன்புபோல இன்று அவனை அவன் பெயர் சொல்லி அழைத்துப் பேச ஏனோ அவள் மனம் தயங்கியது. “பழனியண்ணா! ஒரு டவுட், சிகரம் படத்துல ஒரு பாட்டுவருமே” என்று ஆரம்பித்தாள்.

கேட்டது பழனியிடம் இல்லை என்பது இருவருக்குமே தெரியும் என்பதால், “வண்ணம் கொண்ட” என்றான் தினேஷ்.

“அது இல்ல” “அகரம் இப்போ” இது பழனி.

“அண்ணா அதெல்லாம் இல்ல. நான் சொல்றது  சித்ரா பாடின பாட்டு. எப்படியோ தொடங்குமே” அவளுக்குத் தெரியும்தான். ஆனாலும் பாவனை.

“உன்னைக் கண்ட பின்புதான் என்னைக் கண்டுகொண்டேன்” எஸ்பிபி பாடலை தினேஷ் பாட, “இல்ல இல்ல ராகம் தப்பு” என்று சொல்லிக்கொண்டே  அவள் பாடினாள்.

“உன்னைக் கண்ட பின்புதான்,

என்னைக் கண்டுகொண்டேன்” “டவுட் தீர்ந்திடுச்சா?” இலேசாக சிரித்தபடி கேட்டாள். ஏய் நீதானே டவுட்டுனு சொன்ன” பழனி கேட்டான்.

“டவுட் தீர்ந்திடுச்சில்ல?”மீண்டும். “ஏய் நீ கேட்கிறதப்பார்த்தா, டவுட் உனக்கா,எனக்கா, இவனுக்கா?”என்றான் பழனி.

“யாருக்கோ” எனச் சொல்லிவிட்டு தன் இடம் சென்று அமர்ந்தாள். தொடங்கியது ஒரு புது அத்தியாயம்.

அடிக்கடி அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டார்கள். நகர்வளம் போனார்கள். பரிசுப் பொருட்கள் பரிமாறிக்கொண்டார்கள். இருவருமே பாடல்ப்பிரியர்கள் என்பதால், ஒருவருக்கொருவர் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதான பாவனையில், பாடல்கள் பதிந்து ஒலிநாடாக்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.

அதிலும் தினேஷின் தொகுப்புகளைக் கேட்கும்போதெல்லாம் அவன் ரசனையை எண்ணி பிரமித்துப் போவாள். அதிலுள்ள பல பாடல்களை முதன்முறையாகக் கேட்டால் என்றாலும், அத்தனையும் தன் மனதிற்கு நெருக்கமாகிவிடும் மாயத்தை வியந்தாள்.

அவள் பிறந்தநாளில் தினேஷ் அவளுக்கு மூன்று ஒலிநாடாக்கள் பரிசாகத் தந்தான். அந்த மூன்று ஒலிநாடாக்கள் மீதும், “அழகை ஆராதிக்கிறேன் பகுதி 1 பகுதி 2 பகுதி 3” என எழுதப்பட்டிருந்தது.

மூன்றையும் கேட்டாள். மூன்றும் அடுத்தடுத்த தசாப்தங்களில் எஸ்பிபி பாடியவை. ஒன்றையொன்று மிஞ்சும் தொகுப்புகள். முதல் தொகுப்பில் “வான் நிலா நிலா, அவள் ஓரு நவரச நாடகம், பொட்டுவைத்த முகமோ, ராகங்கள் பதினாறு” என அடிக்கடி தான் கேட்ட பாடல்களைக்காட்டிலும், “மழை தருமோ மேகம், படைத்தானே பிரம்மதேவன், தென்றலுக்கு என்றும் வயது பதினாறு அன்றோ, விழியிலே மலர்ந்தது, பொன்னை நான் பார்த்ததில்லை, ஈரத்தாமரை பெண்ணே, பொன்னாரம் பூவாரம்” என அடுத்தடுத்து தான் கேட்காத பாடல்கள். ஆனாலும் கேட்க கேட்க மனதில் நின்றுவிட்டன.

தினேஷ் தன்னை எப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்கிறான் என்று உள்ளுக்குள் பூரித்தாள். இரண்டாவது மூன்றாவது பகுதிகளிலும் “இனிய தென்றலே இரு கைகள் வீசி வா, அம்மன் கோவில் தேரழகு, இதழ் செந்தூரம்” ஆகிய அறிமுகமில்லாத பாடல்களுக்கு நடுவே “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ” பாடலும் இடம்பெற்றிருந்தது. அவள் உள்ளூர சிரித்துக்கொண்டாள்.

“மணி என்ன?” தூக்கம் கலைந்து கேட்டான். “நாளு, டீ போட்டு வெச்சிருக்கேன் எடுத்துக்கோ” என்றாள்.

“என்னை எழுப்பிருக்கலாமே” என்றபடி சமையல் கட்டில் நுழைந்து டீயைப் பருகினான். மீண்டும் முன் அறைக்கு வந்தவன், “எப்போ அடக்கம் பண்றாங்க” எனக் கேட்டான். பதில் சொல்வதற்குள் அவளுக்கு ஒரு அழைப்பு வந்துவிட்டது.

“எப்படி இருக்க? நான் ஜெயா பேசுறேன்” என்றது அந்த மறுமுனைக்குரல். “சொல்லுங்க அக்கா? எப்படி இருக்கீங்க?”

“என்னடி இப்படி ஆயிடுச்சு” ஜெயா கலங்கினாள். “ரொம்ப கஷ்டமா இருக்குக்கா” என்றாள்.

காலைல ஒரு நல்ல செய்தி கிடைச்சதுன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன்பா. அதுக்குள்ள இப்படி ஒரு நியூஸ். எனக்கு நம்ம ஸ்கூல் ஞாபகம் வந்துருச்சு. இன்னக்கிதான் எனக்கு டைவஸ் கிடைச்சது. சே என்ன கோ இன்சிடண்ட் பாரேன்”. என்றாள் ஜெயா. “ எப்போ இன்னக்கித்தானா? ஏன் கா கொஞ்சம் பேசிப் பார்த்திருக்கலாம்ல” அவள் கேட்டாள். “பிரையோஜனம் இல்லப்பா” ஜெயா சொன்னாள்.

“சரி, எஸ்பிபிக்கு ஜூம்ல இரங்கல் கூட்டம் நடத்துறாங்கலாம் நீ கலந்துக்கிரியா?” என்றாள் ஜெயா. “கண்டிப்பா கா, லிங்க் அனுப்புங்க, எத்தனை மணிக்கு”

“இப்போ ஆறு மணிக்கு. சரி நான் உனக்கு லிங் அனுப்புறேன்”என்று சொல்லிவிட்டு, அழைப்பைத் துண்டித்தாள் ஜெயா.

அவள் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த அந்த மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள் ஜெயா. எஸ்பிபி ரசிகைகள் என்ற வகையில் இருவரும் நெருக்கமானார்கள். பள்ளி வளாகத்தில் கைகளைக் கோர்த்துக்கொண்டு, இருவரும் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடித் திரிந்த ஞாபகம் இப்போது அவள் நினைவிலும் நிழலாடியது. ஜெயா கல்லூரியில் சேர்ந்த பிறகும் இருவரின் நட்பு தொடர்ந்தது. தனக்குள் புதிதாய்ப் பிறந்திருக்கும் காதல் பற்றி கடிதங்கள் வழியாக நிறைய சொல்வாள் ஜெயா.

“அவன் என்னோடு முதல் ஆண்டில் படிக்கிறான், கொஞ்சம் வெளிச்சம் தெரியும் அவ்வளவுதான். என்னைப்போல அதிகமாகவெல்லாம் பாடல் கேட்கமாட்டான். அப்படிப்பட்டவனே, எனக்கு முதல்முறையாக ஒரு பரிசு வாங்கிக்கொடுத்திருக்கிறான். என்ன பரிசு என்று தெரிந்தால் நீயும் மகிழ்ச்சியடைவாய். அவனுக்கு மிகவும் பிடித்த எஸ்பிபி பாடல் ஒன்றை ஒரு சிக்ஸ்டி கேசட் முழுவதும் பதிந்து கொடுத்திருக்கிறான்.  ஒருமணி நேரமும் அந்தப் பாடல் மட்டும்தான் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. இப்போது மற்ற பாடல்களைவிட நான் அந்த ஒற்றைப் பாட்டைத்தான் அதிகம் விரும்பிக் கேட்கிறேன். அப்போது அவன் என்னோடு பேசுவதாகக் கற்பனை செய்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”

கடிதத்தின் இறுதியில் பாடல் வரிகளை எழுதியிருந்தாள் ஜெயா.

“பல்லவி இல்லாமல் பாடுகிறேன்,

பாதை இல்லாமல் ஓடுகிறேன்.

ஊமைக் காற்றாய் வீசுகிறேன்,

உறங்கும்போதும் பேசுகிறேன்.

இந்த ராகம் தாளம் எதற்காக?

உயிரே உனக்காக.”

ஒருவகையில், ஜெயா தான் காதல் வளர்த்ததைச் சொல்கிறேன் பேர்வழி தனக்குள்ளும் ஹார்மோன்களை வளர்த்துவிட்டாளோ எனத் தோன்றியது அவளுக்கு. ஜெயாவின் காதல்  பற்றியும், அவர்கள் திருமணம் செய்துகொண்டதையும் அடிக்கடி தினேஷிடம் சொல்லி, தனது ஆசையை வெளிப்படுத்துவாள். அப்படித்தான் தனக்கும் ஒரு கேசட் முழுக்க ஒரே பாடல் வேண்டும் என்று அடம் பிடித்தாள் அவள். தினேஷுக்கு ஏனோ அது பிடிக்கவி்லை. ஆனால், அதற்கு ஈடாக ஒரு தொகுப்பை அவளுக்குப் பதிந்து தந்தான் அவன். “இதைக் கேட்குறப்போ,ஒருத்தர் தோளில இன்னோருத்தர் சாஞ்சிட்டு  அழுது ஆறுதல் தேடுற சுகம் கிடைக்கும் கேட்டுப்பாரு” என்றான்.

அத்தனையும் எஸ்பிபி தனியாகவும், ஜானகி மற்றும் சித்ராவோடு இணைந்து பாடிய பாடல்கள். “நந்தா என் நிலா, கணாக் காணும் கண்கள் மெல்ல, ஒரு குங்குமச் சங்கமலம், தாழம்பூவே! வாசம் வீசு, உன் கண்ணுக்கொரு நிலவா என்னப் படைச்சான், சாமிகிட்ட சொல்லிவச்சு, ஓ! ஓ! மதுபாலா!, வெள்ளி நிலவே! வெள்ளி நிலவே!, கூடு எங்கே, கண்களில் என்ன ஈரமோ, நிலவே முகம் காட்டு”.

இப்போதும் அந்தத் தொகுப்பைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள் அவள். அதே பாடல்களை தனது மெமரி கார்டிலும் பதிந்துவைத்துக்கொண்டு அவ்வப்போது கேட்பதுதான் அவளுக்கான ஒரே ஆறுதல். அதிலும்,

“காலம் மாறும் கலக்கம் ஏனம்மா?

இரவில்லாமல் பகலும் ஏதம்மா?

நான் உன் பிள்ளைதானம்மா?”

‘நிலவே முகம் காட்டு’ பாடலில் இடம்பெற்ற அந்த வரிகள், குழந்தை நிமித்தம் இருவருக்குள்ளும் அவ்வப்போது எழும் சச்சரவுகளுக்கான மிகச் சிறந்த வலி நிவாரணியாக இருக்கிறது அவளுக்கு.

“உயிரே உனக்காக” என்று உருகியவனிடத்தில் டைவஸ் வாங்கி நிற்கிறாள் ஒருத்தி. “காலம் உள்ளவரை நீ பாதி” என்று கையடித்துச் சொன்னவன் காணாமலேயே போய்விட்டான். பயிற்சி முடித்து சில மாதங்கள் இருவருக்குமிடையே இருந்த கடிதப் போக்குவரத்து, படிப்படியாகக் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றே போனது. தற்போது ஆசிரியர்ப் பணி கிடைத்து, தன்னோடு  பணியாற்றும் உடல்ச்சவால் கொண்ட பெண்ணைத் தினேஷ் திருமணம் செய்திருப்பதாகக் கேள்வி.

“உன் பர்ஸிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் எடுத்துக்கிறேன்” அவன் சொன்னான். “எதுக்கு ஐநூறு? இந்தபாரு, காலைல மாதிரி வந்தீனா நல்லா இருக்காது பார்த்துக்கோ” என்று குரல் உயர்த்திச் சொன்னாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, வண்டியை சர்வீஸ் பண்ணனும் அதான்,”

“நேத்துத்தானே வண்டி சர்வீஸ்னு வாங்கிட்டுப்போன?”

“ஒரு ஸ்பேர் பார்ட் அப்படியே புதுசா மாத்தணுமாம்”

“என்ன ஸ்பேர் பார்ட்ஸ்?”

“உனக்கு சொன்னா புரியுமா? சும்மா நொச்சு நொச்சுனுட்டு” படாரெனக் கதவை சாத்தியடித்துவிட்டுக் கிளம்பினான் அவன்.

அவளுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. தேற்றிக்கொண்டபடி, ஜெயா அனுப்பியிருந்த லிங்கை க்லிக் செய்து ஜூமில் நுழைந்தாள். எஸ்பிபி பற்றி, அவரின் பாடல்கள் பற்றி ஒவ்வொருவராகப் பேசிச் சென்றார்கள். எஸ்பிபி பற்றி தனக்கும் நிறைய பேச இருக்கிறது என்றாலும், தினேஷோடான நினைவுகளைத் தவிர்த்துவிட்டு அவற்றை எப்படிப் பேசுவது? ஒருவேலை தினேஷும் இதில் கலந்துகொண்டிருக்கக் கூடும் என்று நினைத்தவள் தான் பேசுவதில்லை என முடிவெடுத்தாள்.

பேசுவதில்லை என்று முடிவெடுத்தபின் ஏன் இருக்க வேண்டும்? வெளியேறிவிடலாம் என்று நினைத்தவளின் காதுகளில் ஒலித்தது அந்தப் பெண் குரல். “சொல்லுங்க மேடம்” என்றார் தொகுப்பாளர்.

“என்னால பேச முடியாம பாதில கட்டாயிட்டா அப்படியே விட்டுடுங்க. ஏன்னா என்னால முழுசாப் பேச முடியுமானு தெரியல. ஒரு பெண்ணா எனக்குள்ள எத்தனையோ விதமான உணர்வுகளைக் கடத்தியவர் எஸ்பிபி. அப்பாவா, அண்ணனா, இப்படி என்னோட குடும்பத்தின் வாழ்க்கையின் ஒரு அங்கமாவே மாறிட்டார்.” சொல்லும்போதே விசும்புகிறார்.

“இன்னக்கி என்னோட பிறந்தநாள். இனிமேல் ஆயுளுக்கும் என் பிறந்தநாளை . . . . .” அவருக்குப் பேச்சு வரவில்லை. பொதுவில் தேம்புவதைத் தவிர்க்கும் பொருட்டு, வெளியேறிவிட்டார்.

தனக்கான அசரீரியாகவே அந்தப் பெண்ணின் குரல் ஒலித்ததாக உணர்ந்தாள். இனி கேட்பதற்கும் பேசுவதற்கும் என்ன இருக்கிறது? இதற்கு மேல் யார் என்ன சொல்லிவிட முடியும்? என்று நினைத்தவள், உடனடியாக ஜூமை விட்டு வெளியேறினாள். அவளுக்கு என்னவோ போலிருந்தது. ஏதோ ஒன்று அவள் உள்ளத்தை அழுத்தியது. தனிமை பிடிக்காதவளாய், டீவியை ஆன் செய்தாள்.

எஸ்பிபி பற்றிய செய்திகளே அங்கும் நிறைந்திருந்தன. அப்படி ஒரு செய்தியாக, பார்வையற்ற இசைக்குழு ஒன்று எஸ்பிபியின் பாடல்களைப் பாடி, அவருக்கு அஞ்சலி செய்யும் காட்சியும் கொஞ்சநேரம் ஒளிபரப்பானது.

தனக்கு பரிட்சயமான குரல்கள். எஸ்பிபியாக குமாரும், ஜானகியாக லட்சுமியும் பாடிக்கொண்டிருந்தார்கள்.

“சாமிகிட்ட சொல்லிவச்சு சேர்ந்ததிந்த செல்லக் கிளியே! – இந்த

பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே.”

சித்ரா வெடித்தழ விரும்பிய தருணம் அது.

***

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

14 thoughts on “ஆயுள் காதலன் சிறுகதை

 1. நீண்ட நினைவுகளை படிப்படியாக சொல்லிய விதம் மிக மிக அருமை.

 2. நீண்ட நினைவுகளை படிப்படியாக சொல்லிய விதம் மிக மிக அருமை.

 3. ஆயுள் காதலன் என்ற சிறுகதை மூலம் SPB அவருடைய பாடல்களை கதையின் ஆசிரியர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆதரித்தனர் மேலும் தங்களுடைய ஆசிரியர் பயிற்சி காலங்களில் நடந்த பல்வேறு சுவாரசியங்களை SPB அவருடைய பாடல்கள் மூலம் ஒவ்வொரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார் கதையின் போக்கு இரசனை குறையாமல் செல்கிறது தங்களுடைய சந்தோஷமான அனுபவங்களை மெல்ல மெல்ல அழகாக கூறியுள்ளார் மொத்தத்தில் மிக மிக அருமை

 4. ஆயுள் காதலன் என்ற சிறுகதை மூலம் SPB அவருடைய பாடல்களை கதையின் ஆசிரியர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆதரித்தனர் மேலும் தங்களுடைய ஆசிரியர் பயிற்சி காலங்களில் நடந்த பல்வேறு சுவாரசியங்களை SPB அவருடைய பாடல்கள் மூலம் ஒவ்வொரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார் கதையின் போக்கு இரசனை குறையாமல் செல்கிறது தங்களுடைய சந்தோஷமான அனுபவங்களை மெல்ல மெல்ல அழகாக கூறியுள்ளார் மொத்தத்தில் மிக மிக அருமை

 5. ஆயுள் காதலன் என்ற சிறுகதை மூலம் SPB அவருடைய பாடல்களை கதையின் ஆசிரியர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆதரித்தனர் மேலும் தங்களுடைய ஆசிரியர் பயிற்சி காலங்களில் நடந்த பல்வேறு சுவாரசியங்களை SPB அவருடைய பாடல்கள் மூலம் ஒவ்வொரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார் கதையின் போக்கு இரசனை குறையாமல் செல்கிறது தங்களுடைய சந்தோஷமான அனுபவங்களை மெல்ல மெல்ல அழகாக கூறியுள்ளார் மொத்தத்தில் மிக மிக அருமை

 6. ஆயுள் காதலன் என்ற சிறுகதை மூலம் SPB அவருடைய பாடல்களை கதையின் ஆசிரியர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆதரித்தனர் மேலும் தங்களுடைய ஆசிரியர் பயிற்சி காலங்களில் நடந்த பல்வேறு சுவாரசியங்களை SPB அவருடைய பாடல்கள் மூலம் ஒவ்வொரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார் கதையின் போக்கு இரசனை குறையாமல் செல்கிறது தங்களுடைய சந்தோஷமான அனுபவங்களை மெல்ல மெல்ல அழகாக கூறியுள்ளார் மொத்தத்தில் மிக மிக அருமை

 7. கதையின் தலைப்பே மிக பொருத்தமானதாக உள்ளது. இசை ரசிகர்களின் ஆயுள்வரை காதலனாக திகழ முடிந்த ஒரே ஆளுமை s p b அவர்கள் .
  அவரது பாடல்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை யதார்த்தமாகவும், சுவாரசியமாகவும் இக்கதையின் மூலம் கடத்தியிருக்கிறீர்கள். இடையிடையே கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்திற்குப்பின் பலதரப்பட்ட பார்வையற்றவர்கள் நிலையினை கூறியிருக்கிறீர்கள்.
  எழுத்து நடை அருமை.
  வாழ்த்துக்கள்.

 8. கதையின் தலைப்பே மிக பொருத்தமானதாக உள்ளது. இசை ரசிகர்களின் ஆயுள்வரை காதலனாக திகழ முடிந்த ஒரே ஆளுமை s p b அவர்கள் .
  அவரது பாடல்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை யதார்த்தமாகவும், சுவாரசியமாகவும் இக்கதையின் மூலம் கடத்தியிருக்கிறீர்கள். இடையிடையே கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்திற்குப்பின் பலதரப்பட்ட பார்வையற்றவர்கள் நிலையினை கூறியிருக்கிறீர்கள்.
  எழுத்து நடை அருமை.
  வாழ்த்துக்கள்.

 9. பாராட்ட வார்த்தைகள் இல்லை
  இன்றய பார்வையற்றோரின் வாழ்வியல் நிலைத் தொடங்கி, பாடும் நிலாவின் நினைவுகளைப் பகிர்ந்திருக்கும் படைப்பு மிக அருமை வாழ்த்துக்கள் சார்

 10. பாராட்ட வார்த்தைகள் இல்லை
  இன்றய பார்வையற்றோரின் வாழ்வியல் நிலைத் தொடங்கி, பாடும் நிலாவின் நினைவுகளைப் பகிர்ந்திருக்கும் படைப்பு மிக அருமை வாழ்த்துக்கள் சார்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்