graphic திரு. அ.கு. மிட்டல் அவர்களின் சோக மரணம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு. கவுல் அவர்களின் இரங்கல் அறிக்கை

வேர்கள் அறிவோம், அறிவிப்போம்

,வெளியிடப்பட்டது

“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்”
இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின் இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.

ப. சரவணமணிகண்டன்

அஜய்குமார் மித்தல்
அஜய்குமார் மித்தல்

“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்”

இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின்  இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.

“உரிமைக்காய் சண்டையிடுவோம், ஆனால் ஒருவரிடமும் பகைமை வேண்டாம்” என்ற உயர்வான எண்ணத்தைப் பற்றிக்கொண்டு, கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பார்வையற்றோர் சமூகத்திற்காய் அவர் நிறைவேற்றிய பணிகள், எதிர்கொண்ட போராட்ட களங்கள் ஏராளம்.

1970களில் தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தைத் (national Federation of the Blind) தொடங்கியது முதல், 2020ல் உலகப் பார்வையற்றோர் ஐக்கியத்தின் (World Blind Union) பொதுச்செயலாளராக அவர் பணியாற்றியதுவரை, சிந்தை, சொல், செயல் என அத்தனையிலும் பார்வையற்றோர் நலன் மற்றும் உரிமைகளையே உட்பொதிந்து வைத்திருக்கிறார் என்பதை அறியும்போது சிலிர்ப்பு ஏற்படுகிறது.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற திரு. அஜய்குமார் மித்தல், டெல்லியிலு்ள பிலைண்ட் ரிலீஃப் அசோசியேஷனால் Blind Relief Association BRA) நடத்தப்படும் ஜேபிஎம் என்கிற பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், அங்கு தொடங்கப்பட்ட பார்வையற்றோருக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையத்தின் முதல்வராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவருடைய மதிநுட்பத்தையும், அணுகுமுறைகளையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய இந்திய அரசு, அவரை டேராடூனில் உள்ள தேசியப் பார்வையற்றோர் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. சென்னையிலுள்ள அதன் மண்டல மையத்தின் இயக்குநராகவும் தனது பணிகளை சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார் மித்தல்.

அஜய்குமார் மித்தல்
அஜய்குமார் மித்தல்

இயற்கையில் அவருக்கு வாய்த்த பொழிவான தொற்றம், புத்தி கூர்மை இரண்டையும் எந்தவித நிபந்தனையுமின்றி, பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்கான முதலீடாக்கினார். நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பார்வையற்றோருக்கான பெரும்பாலான செயல்திட்டங்களில் அவருடைய தனித்துவமான பங்களிப்பு இருக்கவே செய்தது.

கடந்த ஜூலை 7 2020  அன்று, தேசிய பார்வையற்றோர் சங்கத்தால் (National Association for the Blind) ஏற்பாடு செய்யப்பட்ட புதிய கல்விக்கொள்கை தொடர்பான கருத்தரங்கமே அவர் இறுதியாகப் பங்கேற்ற பொதுநிகழ்வு என்கிறார்கள். அந்தக் கருத்தரங்கிலும், பார்வையற்றோருக்கான அமைப்புகள் ஒரு சில முக்கியப் பிரச்சனைகளிலாவது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கமும் இதே கருத்தைத்தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

பிரெயில் அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. தொழில்நுட்பங்களின் தோல் சாய்கிற இந்தத் தலைமுறையினருக்கிடையேயும், அவர் தனக்கான குறிப்புகளை பிரெயிலிலேயே எடுப்பது, எந்த ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தாலும், நேரத்திற்கு வந்துவிடுவது, கையிலே ஒரு பிரெயில் பேப்பரில் தனக்கான குறிப்புகளை எடுத்து வருவது என அக்கறையும், ஆன்ம சுத்தியோடும் செயல்பட்டிருக்கிறார்.

“நாங்கள் சாலைகளில் இறங்கிப் போராடினோம் என்றால், அவர் பேனா அதாவது எழுத்தை ஆயுதமாக்கிப் போராடினார்” என்கிறார் வழக்கறிஞரும் பார்வையற்றோர் தேசிய சம்மேளனத்தின் முன்னால் தலைவருமான ரூங்க்டா. “கடைசியாக அவர் பார்வை மற்றும் கேட்கும் திறன் என இரண்டும் பாதிக்கப்பட்டோருக்கான பிரெயில் மேனுவலை வடிவமைப்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். எனவே, அந்த பிரெயில் மேனுவல் இறுதி வடிவம் பெறும்போது, அதற்கு அவர் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்” என்கிறார் பார்வையற்றோருக்கான சர்வதேசக் கல்விக்குழுவைச் சேர்ந்த M.G. மணி.

ஸ்பர்ஷ் போஸ்டர்
ஸ்பர்ஷ் போஸ்டர்

பார்வையற்றோர் சமூகத்தின் வளர்ச்சியைச் சாத்தியமாக்குகிற எள் முனை வாய்ப்பையும் தவறவிடக்கூடாது என்பதில் தீர்மானமாய் செயல்பட்டவர். இயக்குநர் சாய் பரஞ்ச் பாய் இயக்கத்தில், நசிரிதீன்ஷா பார்வையற்ற நாயகனாக நடித்த ஹிந்தித் திரைப்படம் ஸ்பர்ஷ். பார்வையற்றோர் பற்றிய சிறந்த சித்தரிப்பான அந்தத் திரைப்படத்தின் நிஜ நாயகன் திரு. மித்தல்தான் என்பது பார்வையற்ற சமூகம் பதிவு செய்ய மறந்த முக்கிய வரலாறு.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஸ்பர்ஷ் படத்தின் கதை வழியே பொதுச்சமூகத்துடன் உரையாடியிருக்கிறார் அவர். சும்மா ஒப்புக்கு இல்லை. பிரெயில், பார்வையற்றோர் அதிகம் விரும்பும் தற்சார்பு, அதற்கு சமூகத்திடமிருந்து பார்வையற்றோர் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு என அவர் முன்வைத்த பேசுபொருள்கள் அழுத்தமானவை.

படம் குவித்த விருதுகள் அதிகம். ஆனால் பார்வையற்றோருக்கு என்ன கிடைத்தது? இருந்தாலும், சளிக்காமல், தன் ஆயுள்வரை அதே கோரிக்கைகளைத் தூக்கிச் சுமந்தார். காலங்கள் மாறின, களங்களும் மாறின. ஆயினும் அவரின் மேன்மை நோக்கங்களைத் தாங்கிய மென்மையான உரையாடலை அவர் நிறுத்தவே இல்லை. அவற்றைத் தற்கால ஜூமிற்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்டாரேயன்றி, முதுமை, மூப்பு என்றெல்லாம் சொல்லி, அவர் முடங்கிவிடவி்ல்லை.

தன் அன்பு மகள் நித்திகா மற்றும் மனைவி மீராவைத் தவிக்கவிட்டு, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அவர் மறைந்தார் என்ற செய்தியை அறிந்த உலகப் பார்வையற்றோர் சமூகம் துக்கத்தில்ஆழ்ந்தது. அவர் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய உலகப் பார்வையற்றோர் ஐக்கியத்தின் (World Blind Union) இணையதளத்தில்,தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன்அமெரிக்கா என உலகின் பல மூளைகளிலிருந்தும் இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் இருந்தன.

அத்தனையும் வெறும் பெயரளவு அறிக்கைகள் இல்லை. ஒரு சமூகத்தின் அரை நூற்றாண்டு வரலாற்றில் அவர் பதித்த சுவடுகளைச் சுருக்கிச் சொல்கிற வரையறைகள் அவை என உணர்ந்தபோது, பிரமிப்பாக இருந்தது.

உலகப் பார்வையற்றோர் ஐக்கியத்தின் இரங்கல் செய்தியைப் படிக்க

தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் (NFB), அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (AICFB), தேசிய பார்வையற்றோர் சங்கம் (NAB), பார்வையற்றோர் சங்கம் (BPA), பார்வையற்றோருக்கான சர்வதேசக் கல்விக்குழு, (ICEVI),ஐவே (eyeway) உள்ளிட்ட பார்வையற்றோருக்கான முன்னணி நிறுவனங்கள் ஒரே தளத்தில் ஒன்றாய் நின்று, அவருக்கான நினைவேந்தல் கூட்டத்தை 26செப்டம்பர் 2020 அன்று இணைய வழியில் நடத்தினார்கள்.

அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட வேண்டும், அவருடைய எழுத்துகள் தொகுக்கப்பட வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவர் இயற்கை எய்திய செப்டம்பர் 22ஆம் நாள் அவருடைய பெயரிலேயே கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும் என நினைவேந்தலில் பங்கேற்றவர்கள் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்கள்.

திரு. மித்தல் அவர்களின் இறப்பு குறித்து எனது வட இந்திய நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னார், “பார்வையற்றோர் சமூகத்தில் திரு. மித்தலின் செயல்பாடுகள் என்பவை, பூமிக்குள் ஆழப் புதைந்து பெருமரத்தைத் தாங்குகிற வேருக்கு ஒப்பானவை. அவற்றை எவரும் கண்ணுற இயலாது. ஆனால், அந்தத் தரு பரப்பும் குளிர் நிழலில் தலைமுறைகள் பல தங்கிச் செல்லும் “ என்றார்.

அவர் அப்படிச் சொன்னவுடன் எனக்குள் எழுந்த கேள்வி இதுதான், “நாம் வெறும் தங்கிச் செல்லும் தலைமுறைதானா? வேர்கள் அறிதலும் அறிவித்தலும் நம் தார்மீகக் கடமை இல்லையா?

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்