இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 2: ஸ்பர்ஷ் (இந்தித் திரைப்படம்)

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திரைப் படைப்புகளுக்கான பெஞ்ச் மார்க் என்று குறிப்பிடுவதற்கு மாற்றே இல்லாத ஒரு படைப்பு ஸ்பர்ஷ் என்று உறுதிபடக் கூறலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படமே இன்றைக்கும் பெஞ்ச் மார்க் நிலையில் இருக்கிறதென்றால், இவ்வளவு காலமாக படைப்பாக்கத்தில் நாம் தேங்கிவிட்டோம் என்பதே முகத்தில் அறையும் உண்மையாகும்.

கா. செல்வம்

ஸ்பர்ஷ் ஹிந்தி திரைப்பட போஸ்டர்
ஸ்பர்ஷ் ஹிந்தி திரைப்பட போஸ்டர்

பெண் இயக்குநரான சாய் பரஞ்பே (Sai Paranjpye) இயக்கத்தில், பிரபல நடிகர்கள் நஸ்ருதீன் ஷா மற்றும் ஷபானா ஆஸ்மி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க 1980இல் வெளியான இந்தித் திரைப்படம் “ஸ்பர்ஷ்” (Sparsh) ஆகும். அதாவது ஸ்பர்ஷ் என்பது ஸ்பரிசம் அல்லது தொட்டுணர்தல் என்று பொருள்படும். இதில் நாயகனான அனிருத் (நஸ்ருதீன் ஷா) நவஜீவன் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியின் முதல்வராகப் பணியாற்றும் பார்வை மாற்றுத்திறனாளி ஆவார்; நாயகியான கவிதா (ஷபானா ஆஸ்மி) அதே பள்ளியில் தன்னார்வலராகச் சேவையாற்றும் பார்வை மாற்றுத்திறனாளி அல்லாதவர் ஆவார். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திரைப் படைப்புகளுக்கான பெஞ்ச் மார்க் என்று குறிப்பிடுவதற்கு மாற்றே இல்லாத ஒரு படைப்பு ஸ்பர்ஷ் என்று உறுதிபடக் கூறலாம்.

பெஞ்ச் மார்க் படைப்பு:

சரி, பெஞ்ச் மார்க் என்றால் என்ன? ஒரு பொருள் அல்லது படைப்பின் தரத்தில் நிரூபிக்கப்பட்ட, சாத்தியப்பட்ட, அத்தியாவசியமான தரநிலை ஆகும். வளரும் சமூகத்தில் பெஞ்ச் மார்க் எனப்படும் தரநிலை அடுத்தடுத்து உயர வேண்டும். குறைந்தபட்சம் அந்த பெஞ்ச் மார்க் தரநிலையை அதே அளவிலாவது பராமரிக்க வேண்டும். அந்த வகையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படமே இன்றைக்கும் பெஞ்ச் மார்க் நிலையில் இருக்கிறதென்றால், இவ்வளவு காலமாக படைப்பாக்கத்தில் நாம் தேங்கிவிட்டோம் என்பதே முகத்தில் அறையும் உண்மையாகும். அது மட்டுமின்றி அந்த பெஞ்ச் மார்க் நிலையை விடுத்து, எதிர்த்திசையான கீழ்நிலையிலேயே நமது படைப்பாக்கம் புதைந்துள்ளது என்பதும் இன்னொரு உண்மையாகும். இன்றைக்கும் பெஞ்ச் மார்க் நிலையில் இருக்கும் “ஸ்பர்ஷ்” திரைப்படம் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.

கதைச் சுருக்கம்:

நசிரிதீன்ஷா ஷபானாஹாஸ்மி ஒரு ஹோட்டலில் அமர்ந்திருக்கும் படம்
நசிரிதீன்ஷா ஷபானா ஹாஸ்மி ஹோட்டலில்

பார்வை மாற்றுத்திறனாளியான அனிருத், தனக்குக் குறைபாடு இருந்தாலும் எவரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்ற இயல்புடையவர் ஆவார். தனது பணிகளைத் தானே செய்துகொள்ள முடியும் என்பதை ஒவ்வொரு இடத்திலும் சாத்தியப்படுத்திக் காட்டுபவராவார். இளம் வயதில் கணவரை இழந்தவரான கவிதா, அந்தப் பள்ளியில் பாடல், கதை, விளையாட்டு போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கும் தன்னார்வலராகச் சேர்கிறார். படிப்படியாக இருவரிடையே காதல் மலர்ந்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். அடுத்த சில நாட்களில் நடக்கும் இரு நிகழ்வுகள் அனிருத்தின் திருமண முடிவை மாற்றுகின்றன. முதலாவதாக கவிதா அவரைத் திருமணம் செய்துகொள்வது ஒரு தியாகச் செயல் என்று நண்பர் ஒருவர் அனிருத்திடம் கூறுகிறார். இன்னொன்று இதே சமயத்தில் தற்போது மனைவியை இழந்த ஒரு பார்வை மாற்றுத்திறனாளி நண்பர், கடந்த பத்தாண்டுகளில் தனது மனைவியைச் சார்ந்தே வாழ்ந்ததையும் இனிமேல் தனித்து வாழ வேண்டிய எதிர்கால அச்சத்துடன் தவிப்பதையும் காண்கிறார். இந்தக் காரணங்களைக் கவிதாவிடம் கூறாமலேயே திருமணம் வேண்டாம் என்று அனிருத் கூற, அவளும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அந்த முடிவை ஏற்றுக்கொள்கிறார். பிறகு இறுதிக் காட்சியில் அனிருத் மனம் மாறி, கவிதாவுடன் இணைவதாகத் திரைப்படம் முடிகிறது.

இதையும் படியுங்கள்

இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 : பகுதி – 1.

இந்த மென்மையான காதல் கதையுடன் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியைப் பற்றியும் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பற்றியும் கூறக்கூடிய இயல்பான திரைக்கதையும் காட்சியமைப்புகளும் இத்திரைப்படத்தில் உள்ளன. மாற்றுத்திறனாளிகளை மற்றவர்கள் அழைத்துச் செல்வது, தானாக நடந்து செல்லும் மாற்றுத்திறனாளி தடுமாறி விழுவது அல்லது மோதிக்கொள்வது, தனது குறைபாடு பற்றிக் கடவுளிடம் மன்றாடுவது, சிந்தியும் சிதறியும் உணவு உண்பது போன்ற காட்சியமைப்புகளுடன் பின்னணியில் “கடவுள் உள்ளமே கருணை இல்லமே” என்பது போன்ற உருக்கமான பாடல் ஒலிக்கும்படியாகவே பெரும்பாலான திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளின் அறிமுகக் காட்சி இருக்கும். இதே தொனி திரைப்படம் முழுவதிலும் தொடரும். ஆனால் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியிலேயே “ஸ்பர்ஷ்” வேறுமாதிரியான திரைப்படம் என்று புரிந்துவிடும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியின் சூழலும் அமைப்பும்:

நவஜீவன் பள்ளிக்குழந்தைகள் இசைக்கருவிகள் வாசிக்கும் படம்
நவஜீவன் பள்ளிக் குழந்தைகள்

நள்ளிரவில் பிரெயில் புத்தகத்தை மூன்றாவது வகுப்பு மாணவர் வாசித்துக் கொண்டிருப்பதாகத் திரைப்படம் தொடங்கும். காலையில் படித்துக்கொள்ளலாம் என்று கூறி, அந்த மாணவரைப் படுக்கைக்கு அழைத்துச் சென்று உறங்க வைக்கிறார் பள்ளியின் முதல்வர் அனிருத். அடுத்த நாள் வழிபாட்டுக் கூட்டத்துடன் பள்ளியின் அன்றாடச் செயல்பாடுகள் தொடங்குகின்றன. பிரெயில் மூலமாக, அபாகஸ் மூலமாக, முப்பரிமாண பூமி உருண்டையைத் தடவிப் பார்க்கச் செய்தல், வெட்டப்பட்ட கணிதக் குறியீடுகளைத் தடவிப் பார்த்துச் சட்டகங்களில் பொருத்துவது என்று கற்றல் – கற்பித்தல் ஒவ்வொன்றாகக் காட்டப்படுகின்றன. மேலும் இசை வகுப்புகள், கயிறு இழுத்தல், கபடி போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவது, மாணவர்களுக்கு மடக்குக் குச்சியைப் பயன்படுத்துவதற்குக் கற்றுத் தருவது போன்றவையும் காட்டப்படுகின்றன. இறுதியில் விடுதியின் உணவைக் கிண்டல் செய்து, பாட்டுப் பாடிக்கொண்டே அனைவரும் உண்பது காட்டப்படுகிறது. இதில் எந்த ஒரு இடத்திலும் அனுதாபத்தை ஏற்படுத்தும் காட்சியமைப்போ பின்னணி இசையோ கிடையாது. பரிதாபமோ வியப்போ இல்லாமல் புதிய ஒன்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையே பார்வையாளர்களிடம் இந்தத் தொடக்கக் காட்சியமைப்புகள் ஏற்படுத்துகின்றன.

குறைபாடு என்பது ஊனம் அன்று:

நசிரிதீன்ஷா ஷபானா ஹாஸ்மி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் படம்
நசிரிதீன்ஷா ஷபானா ஹாஸ்மி

தொடக்கக் காட்சியில் சாலையில் சென்றுகொண்டிருக்கும் அனிருத், அங்கே வீட்டில் பாடிக்கொண்டிருக்கும் கவிதாவின் பாடலால் கவரப்பட்டு அங்கு செல்கிறார். பாடல் நன்றாக இருந்தது என்று பாராட்டிவிட்டு வருகிறார். அடுத்த சில நாட்களில் ஒரு விழாவில் மீண்டும் இருவரும் சந்திக்க நேர்கிறது. கவிதா பேசத் தொடங்கும்போதே அவரை அடையாளம் கண்டுகொள்கிறார் அனிருத். அவரது குரலை வைத்து அடையாளம் கண்டதாக விளக்கமும் கூறுகிறார். ஆனால் அந்த முதல் சந்திப்பில் ஒன்றிரண்டு வார்த்தைகள் தவிர அதிகமாகப் பேசாமல், குரலை அடையாளம் கண்டது எப்படி என்று கேட்கிறார் கவிதா. பார்வை உள்ளவர்கள் ஒருவரை ஒருமுறை மட்டுமே பார்த்திருந்தாலும் அடையாளம் கண்டுகொள்வது போலவே, தானும் ஒருமுறை பேசியதை வைத்து அடையாளம் கண்டதாகக் கூறுகிறார் அனிருத். அதாவது பார்வை உள்ளவர்களைப் போன்றே தாமும் இயல்பானவர்கள் தான் என்பதையும் இதில் வியப்பதற்கு எதுவுமில்லை என்பதையும் தெளிவுபடுத்துவார்.

அதே போல பால் திரிந்து போனதை வைத்து, யாரையாவது உதவிக்கு வைத்துக்கொள்ளலாமே என்று கூறும் தனது உதவியாளரிடம், பார்வை உள்ளவர்கள் சமைக்கும்போது பால் திரிந்து போவதே இல்லையா என்று கேட்பார். இன்னொரு காட்சியில் மேலே உள்ள பொருளை எடுக்கும்போது தடுமாறி விழுந்து, அனிருத்திற்கு காயம் ஏற்பட்டுவிடும். காயத்திற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், பார்வை இல்லாதவரான அவர் இம்மாதிரியான வேலைகளை மற்றவர்களை வைத்துச் செய்துகொள்ள அறிவுறுத்துகிறார். இந்த மருத்துவமனைக்கு காயம் ஏற்பட்டு வருகின்ற அனைவரும் பார்வை மாற்றுத்திறனாளிகளா, பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விபத்தைச் சந்திக்கின்றனரா என்று மருத்துவரைக் கேட்கிறார் அனிருத். கவனக் குறைவால் நிகழும் பால் திரிந்தது, தவறி விழுந்தது என்பன போன்ற செயல்களை பார்வையின்மையுடன் தொடர்புபடுத்துவதை ஒவ்வொரு முறையும் காரண காரியங்களுடன் திடமாக நிராகரிக்கிறார். இப்படியாக பார்வை மாற்றுத்திறனாளியைத் திறனற்றவராக அணுகுவதைச் சற்றும் தாமதிக்காமல் கடுமையான சொற்களாலும் இடித்துரைக்கிறார் அனிருத்.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய தொலைநோக்குச் சிந்தனை:

திரையில் வரும் கீதோன்கி என்ற பாடலின் காட்சி
திரையில் வரும் கீதோன்கி என்ற பாடலின் காட்சி

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியின் தேவைகள் குறித்தும் தெளிவான பார்வையை உருவாக்குகிறது இந்தத் திரைப்படம். மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளுக்கு நன்கொடையும் உணவும் மட்டுமே தேவை என்று பெரும்பாலும் நினைக்கின்றனர்; ஆனால் அங்கு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் நேரத்தைச் செலவிடவும், பாடல்கள், விளையாட்டுக்கள், கதைகள் கூறும் தன்னார்வலர்களும் தேவைப்படுகின்றனர் என்று பள்ளியில் பணியாற்ற கவிதாவை அழைக்கும்போது பள்ளியின் தேவைகளை தீர்க்கமான பார்வையுடன் அனிருத் விளக்குவார். இன்னொரு சூழலில் மாணவர்கள் பாடநூல்களைச் சுயமாக வாசிக்கும் வகையில் பிரெயில் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்பதால் வாசித்துக் காட்டும் ரீடர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலையும் காட்டப்படும். பாடநூல்களே பிரெயில் புத்தகங்களாகக் கிடைக்கப் பெறாத நிலையில், பாடநூல்கள் தவிர்த்த பிற நூல்கள் பிரெயில் புத்தகங்களாக உருவாக்கப்படுவதில்லை என்பதையும் பார்வை மாற்றுத்திறனாளிகள் படிப்பதை உணராமல் இச்சமூகம் இயங்குவதைக் கடும் கோபத்துடன் சாடுவார் அனிருத்.

இந்தத் திரைப்படம் பற்றிய புரிதலுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆகவே இந்தத் திரைப்படம் பற்றிய பார்வையின் இரண்டாம் பகுதி அடுத்த இதழில் இடம்பெறும்.

தொடர்புகொள்ள: teacherselvam@gmail.com

பகிர

2 thoughts on “இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 2: ஸ்பர்ஷ் (இந்தித் திரைப்படம்)

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்