“ஆசிரியர்ப் பணிநியமனத்தில் வயது குறைப்பு உத்தரவைத் திரும்பப் பெறுக!” தமிழக அரசுக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோரிக்கை

,வெளியிடப்பட்டது

போதிய விழிப்புணர்வு இல்லாததால், தங்கள் பள்ளிக்கல்வியையே தாமதமாகத் தொடங்கும் மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்ப் பயிற்சி முடித்துப் பட்டதாரி அல்லது முதுகலை ஆசிரியர் தகுதி பெறுவதற்குள் வயது 30ஐஎட்டிவிடுகிறார்கள்.

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் லோகோ

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநியமன வயதை 57லிருந்து 40ஆக குறைத்துள்ள நடவடிக்கையைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்ப் பணிநியமனங்கள் நடைபெறவில்லை. இந்நிலையில், ஆசிரியர்ப் பயிற்சி முடித்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியை எதிர்நோக்கிக் காத்திருக்க, தமிழக அரசிதழில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம் பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால்,  தங்கள் பள்ளிக்கல்வியையே தாமதமாகத் தொடங்கும் மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்ப் பயிற்சி முடித்துப் பட்டதாரி அல்லது முதுகலை ஆசிரியர் தகுதி பெறுவதற்குள் வயது 30ஐஎட்டிவிடுகிறார்கள். இதுபோன்ற சமூகக்  காரணிகள் ஒருபுறம் என்றால், அரசும் பணிநியமனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்றாமலும், முறையான இடைவெளிகளில் ஆசிரியர்த் தகுதித்தேர்வுகளை நடத்தாமலும் இருப்பதால், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆசிரியர்ப்பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் 45 வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர்கள்.

ரயில்களில் வியாபாரம் செய்து தங்கள் அன்றாடத்தை நடத்திவரும் பார்வையற்றவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர், இளங்கலை, முதுகளை ஏன் முனைவர் பட்டத்தைக்கூட முடித்து, பல ஆண்டுகளாக அரசின் பணிநியமனத்திற்காய் காத்திருப்பவர்கள் என்ற அவலத்தை ஏற்படுத்தியதில் அரசுக்கே முக்கியப் பங்கு இருக்கிறது. அரசின் பின்னடைவுக் காலிப்பணியிடங்களை முறையாக நிரப்பியிருந்தாலே மேற்கண்ட அவலத்தை அரசு தடுத்திருக்க முடியும்.

எனவே, ஆசிரியர்ப் பணிநியமனங்களில் 40 வயது என்கிற புதிய உத்தரவை ரத்து செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தகுதித் தேர்வுகளை உடனடியாக நடத்தி, அவர்களுக்கு ஆசிரியர்ப் பணிகளை வழங்கிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அத்தோடு, அரசின் வயது குறைப்பு நடவடிக்கை தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் உடனடியாகக் கலந்து ஆலோசித்து, உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட வேண்டும் எனவும் எமது சங்கம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரைக் கேட்டுக்கொள்கிறது.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்