graphic 'கைவசமானது விரைவில் வேண்டும்!' ஒரு பார்வையற்ற மாணவியின் அனுபவப் பகிர்வு

‘கைவசமானது விரைவில் வேண்டும்!’ ஒரு பார்வையற்ற மாணவியின் அனுபவப் பகிர்வு

,வெளியிடப்பட்டது

பார்வையற்றவர் நாம் இத்தனை தூரம் வந்துவிட்டோம் என்பதை வங்கித் தேர்வாணையத்திடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தேர்வினைத் தாங்களே எழுத விரும்புபவர்கள் கணினியில் எழுதலாம், மற்றவர்களுக்கு பதிலி எழுத்தர் வசதி வழங்கப்படும் என்ற தெரிவு வசதியை முதலில் அறிமுகப்படுத்துமாறு நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

பிரெயிலில் எழுதப்பட்ட செய்திகளைத் தடவிப் படிக்கும் மாணவி

பள்ளிப் பருவத்தில் பிரெயில் புத்தகங்களைப் படித்தும், பெரும்பாலான தேர்வுகள் பிரெயிலில் எழுதியும், பதிலி எழுத்தர்களை கொண்டு ஒரு சில முக்கிய தேர்வுகள் மட்டும் எழுதிப் பழகிய எனக்கு கல்லூரிக் கல்வி முறை முற்றிலும் மாறுபட்டிருந்தது.

பேராசிரியர்கள் வகுப்பெடுப்பதை பிரெயிலில்  குறிப்பெடுத்துக்கொள்வது, வகுப்பு மாணவிகள், வாசிப்பாளர்கள், உடன் பயிலும் குறை பார்வையுடையவர்கள் உள்ளிட்டவர்களை வாசிக்கச் சொல்லி, கேட்டு படிப்பது, கடினமானவற்றை பிரெயிலில் எழுதிக்கொள்வது போன்ற வழிகளில் படித்து, பதிலி எழுத்தர்கள் உதவியை கொண்டு  தேர்வுகள் அனைத்தையும் எதிர்கொண்டு பட்டம் பெற்றேன்.  

இரண்டாம் ஆண்டின் இறுதியில் பகுதிநேர கணினி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கப்பெற்று, கணினியை இயக்க கற்றுக்கொண்டமையால், இறுதி ஆண்டு இலக்கிய புத்தகங்களை மடிக்கணினியில் நிறுவப்பட்டிருந்த  திரைவாசிப்பான் மற்றும் எழுத்துநரிகள் மூலம் வாசித்து பயின்றேன்.

படித்து முடித்துவிட்டு, கணினி இருக்க, அதை இயக்க தெரிந்திருக்க, கவலை எதற்கு? என்றெண்ணி, தேர்வே கணினி வழியில் நடைபெறும்போது  பெரும்பாலான பணிகள் கணினி தொடர்புடையதாக இருக்கும் என்ற கனவுகளோடும், அதீத ஆர்வத்தோடும் வங்கி தேர்விற்கு விண்ணப்பித்து, தயாரானேன்.

பத்தாம் வகுப்போடு மறந்துபோயிருந்த கணக்கு பாடத்தை மீண்டும் நினைவுகூர்ந்தேன் கடினமான சில கணக்குகளையும் தேடி கற்றேன்.

பகுத்தறிவு திறன்  குறித்த புரிதல்களை பழகிக்கொண்டேன்.

தேர்வு நடைபெறும் நாள் காலை எனது தோழியை தொலைபேசியில் தொடர்புகொண்டபொழுது, பதிலி எழுத்தர் ஒருவரை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தால். கணினிவழி தேர்வுதான், சிறியதாக  ஏதாவது எழுதவேண்டியிருக்கும் போலும் என்றெண்ணி, என் உடன் பிறந்த சகோதரியை அழைத்துக்கொண்டு தேர்வு மையத்தை அடைந்தேன்.

தேர்வு மைய நுழைவுவாயிலில் ஆதார் அட்டை மற்றும் ஊனமுற்றோர் அடையாள அட்டை அசலினை காண்பித்துவிட்டு, அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டிருந்த தளம் மற்றும் கணினி எண்களின் விவரங்களை குறித்துக்கொண்டு, எனது பதிவென்னிற்க்கு ஒதுக்கீடு செய்திருந்த கணினிக்கு முன் சென்று  அமர்ந்தோம்.  

கணினியில் பொருத்தப்பட்டிருக்கும் காதணி  கேட்பொறி அல்லது  ஒலிபெருக்கியை தேடினேன், தேடினேன்,    வெகுநேரமாகத் தேடினேன், ஆனால், அது எனது கைகளுக்கு எட்டவில்லை. என்னுடன் வந்திருந்த சகோதரியையும்,  தேர்வு மேற்பார்வையாளரையும் இது குறித்து வினவியபோது, இத்தகைய சாதனங்கள் ஏதும் இக்கணினியில் இணைக்கவில்லை என்று தெரிவித்தனர். தங்களுடன் வந்திருக்கும் பதிலி எழுத்தர் கணினியை இயக்கி, வினாக்களை வாசிப்பார், நீங்கள் அதற்க்கு பதிலளித்தாள் மட்டும் போதுமென தெரிவித்து, விடைகளை எழுதிப்பார்க்க வெள்ளைத் தாள்களை வழங்கினார் மேற்பார்வையாளர்.

கணினி திரையில் தெரிந்த எனது புகைப்படத்தையும் பதிவு என்னையும் உறுதிசெய்துகொண்டு, கடவுச்சொல்லை தட்டச்சு செய்ய விசைப்பலகையை இயக்கினால், இயக்க இயலவில்லை.

திரையில் தெரிந்த  மெய்நிகர் விசைப்பலகையில் உள்ள எழுத்துக்களை கணினி சுட்டியை கொண்டு சொடுக்கி, கடவுச்சொல் தெரிவு செய்யப்பட்டு, தேர்விற்கு உள்நுழைதல் முடிந்தது.

அமர்ந்திருந்தது  கணினியின் முன்பு ஆனால் இயக்க இயலவில்லை

பிடித்த உணவு மேசைமீது இருந்தும், உன்ன இயலாமல் வாயை கட்டிப்போட்டதுபோன்ற நிலைபோன்று உணர்ந்தேன்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற படைப்புகளில் முதன்மையானதாக விளங்கும் கணினி, சர்வத்தையே ஒரு சிற்றூராக சுருக்கிவிட்டது. இருபத்தோராம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திரைவாசிப்பான் பேச்சொலி மென்பொருளை

கணினியில் நிறுவி, பார்வையற்றவர்களும், கல்வி, வேலைவாய்ப்பு, ஆய்வு, பொழுதுபோக்கு போன்ற எல்லா நிலைகளிலும் /  துறைகளிலும் பார்வையுள்ளவர்களுக்கு இணையாய் வல்லுனர்களாக       விளங்க முடிகிறது.

“கணினி நமது மூன்றாவது கண்”,  “கணினியே இனி நமது கண்ணென கொள்வோம்” போன்ற கூற்றுகள் பரவலாக பார்வையற்றவர்கள் மத்தியில்  பேசப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும் வருகிறது. திரை வாசிப்பான் பேச்சொலி மென்பொருளின் உதவியுடன் பாடங்களை கற்பது, குறிப்பெடுப்பது, தட்டச்சு செய்வது, ஆய்வு மேற்கொள்வது, வாசிப்பது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது, தேவையான தகவல்களை தேடிப் பெறுவது உள்ளிட்ட அணைத்து பணிகளையும் பரவலாக பார்வையற்றோர்  தாமே மேற்கொண்டாலும், தனது தேர்வை, அதும் சுயசார்பை அளிக்கும் கணினிவழி தேர்வை என்னால் எழுத இயலவில்லையே என்ற கவலை மேலோங்கி இருந்ததால், தேர்வில் என்னால் அதிக கவனம் செலுத்த இயலவில்லை.

பொதுவாக வங்கி தேர்வில் மொத்த வினாக்களின் எண்ணிக்கையைவிட தேர்வு நேரம் மிக குறைவாகவே வழங்கப்படும். ஒவ்வொரு வினாவும் ஒரு பக்க அளவும் அதற்க்கு மேலும் இருக்கும்.  சில பிரிவுகளில் ஒரு கேள்விப் பத்தியைப் பயன்படுத்தி, பல வினாக்களுக்கு விடையளிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். இத்தகைய வினாக்களை உள்வாங்கி, உரிய விடைகளை அளிப்பதற்குப் பலமுறை வாசிக்க கேட்டு, குறிப்பிட்ட இடத்திலிருந்து மீண்டும் வாசிக்க கேட்பது, அதை பதிலி எழுத்தர்கள் புரிந்துகொண்டு அவ்விடத்திலிருந்து வாசித்து காண்பிப்பது போன்ற நிகழ்வுகளை மேற்கொள்வதற்குல், கூடுதலாக வழங்கப்படும்  தேர்வு நேரமே முடிந்துவிடுகிறது.

திரைவாசிப்பான் பயன்படுத்தி, விசைப்பலகை மூலமாகவே  அணுகும் / கணினியை இயக்கும்  முறையில் மேற்படி தேர்வுகளை அமைக்கும் நேர்வில், பார்வையற்ற தேர்வர்கள் தாமே தமது தேர்வினை எதிர்கொண்டு, நிச்சயம் தன்னிறைவு பெற இயலும். பதிலி எழுத்தர் மற்றும் பார்வையற்றோர் தொடர்புடைய நிரூபிக்கப்படாத சில கூற்றுகள் அழியும்.

சிம்ரன் ஜோஷி
சிம்ரன் ஜோஷி

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பார்வையற்ற பெண்ணான சிம்ரன் ஜோஷி, தனது மேல்நிலைப் பள்ளிப் பொதுத்தேர்வை கணினியிலேயே எழுதி சாதித்திருக்கிறார். ஏன் நம் நெய்வேலி ஓவியாவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன? பார்வையற்றவர் நாம் இத்தனை தூரம் வந்துவிட்டோம் என்பதை வங்கித் தேர்வாணையத்திடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தேர்வினைத் தாங்களே எழுத விரும்புபவர்கள் கணினியில் எழுதலாம், மற்றவர்களுக்கு பதிலி எழுத்தர் வசதி வழங்கப்படும் என்ற தெரிவு வசதியை முதலில் அறிமுகப்படுத்துமாறு நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். பின்னர் படிப்படியாக மற்றவை தானே நிகழும்.

இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் அண்ணன் பாலநாகேந்திரனும் இதுகுறித்து நடுவண் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ந்து முறையிட்டு வருவதாகச் சொல்கிறார். நல்லரசு தன் குடிமக்கள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

நானே நான் விரும்பிய புத்தகம் திறந்து, எவரின் துணையின்றிப் படிக்க வேண்டும், எனக்கான கவிதையை, கடிதத்தை என் கைப்பட நானே எழுத வேண்டும் என்ற கனவுகளெல்லாம் மெய்ப்பட்டுப் போன காலம் இது. கணினிகள் நம் கைவசமாகிவிட்டன. ஆனால் கணினிவழி வங்கித் தேர்வுகள்? …

ரக்ஷிதா

தொடர்புகொள்ள: mysteryheartmine@gmail.com

பகிர

2 thoughts on “‘கைவசமானது விரைவில் வேண்டும்!’ ஒரு பார்வையற்ற மாணவியின் அனுபவப் பகிர்வு

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்