
கடந்த 2012 ஆம்ஆண்டு, வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித்திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 – 2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, சவால்முரசு வாசகர்களுக்காக அந்த ஒலிக்கோப்பை வழங்கிய திரு. ரகுராமன் அவர்களுக்கு சவால்முரசு ஆசிரியர்க்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆங்கில வழியில் நடைபெற்ற அந்த உரையாடலின் தமிழாக்கத்தின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி இதோ.
பேட்டியின் முதல் பகுதியைப் படிக்க
பேட்டியின் இரண்டாம் பகுதியைப் படிக்க
கே: தற்போது ஒருங்கிணைந்த பகுதி மற்றும் உள்ளடங்கிய சமூகம் போன்ற சொற்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் உள்ளடங்கிய சமூகத்திற்கான சாத்தியக் கூறுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள மாநிலங்களில் இக்கருத்தை எவ்வாறு புகுத்தலாம்?
ப: ரகுராமன்! முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். உலகம் முழுவதும் உள்ளடங்கிய சமூகம் அல்லது அதன் ஒரு பகுதியாகிய உள்ளடங்கிய கல்வி என்ற சொல் வேறுபட்ட பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் தனித்தனி புரிதல்களைக் கொண்டிருக்கின்றனர். இன்னும் இதுகுறித்த என்னுடைய புரிதலும் உங்களுடைய புரிதலும் வெவ்வேறாக இருக்கலாம். நான் ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். உள்ளடங்கிய கல்வி என்ற சொல் சிறப்பு தேவையுடைய குழந்தைகள் மற்றும் சிறப்பு பள்ளிகள் போன்ற சொற்களை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு எல்லா குழந்தைகளும் ஒரே பள்ளியில் ஒரே ஆசிரியரிடம் கட்டாயமாகக் கல்வி பயில்வதை குறிப்பதாகும். நான் இந்தக் கருத்தோடு உடன்படவில்லை. ஒரு வகுப்பறையில் 40 குழந்தைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்களில் 20 பேர் குறைபாடுகள் அற்ற குழந்தைகள். சிலர் பார்வையற்றோர்; சிலர் காது கேளாதோர்; சிலர் கை கால் ஊனமுற்றோர்; சிலர் அறிவுத்திறன் குறைபாடுடையோர்; சிலர் மனநலம் பாதிக்கப்பட்டோர். என்றால், ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பார்வையற்றோருக்கு பிரெயில் முறையிலும், காதுகேளாதோர்க்கு சைகை மொழியிலும், மற்ற ஊனமுற்றோருக்கு அவரவர் புரிந்துகொள்ளும் வகையிலும், சாதாரண குழந்தைகளுக்கு சாதாரணமாகவும் பயிற்றுவிக்கும் அளவுக்குத் திறமை பெற்றிருக்க வேண்டும். சாதாரணமாக 40 முதல் 45 நிமிடங்களை உள்ளடக்கிய பாட வேளையில் ஒரு ஆசிரியரால் எப்படி இவ்வளவு திறமைகளையும் பயன்படுத்தி பயிற்றுவிக்க முடியும்? மேலும் இந்தச் சொல் வலுப்பெறும் பட்சத்தில் ஒருநாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக இயங்கக்கூடிய பள்ளிகளை மூடும் படி கூட சிலர் பரிந்துரைக்கலாம். என்னுடைய வாதம் என்னவென்றால், குழந்தைகளுக்கு சில தெரிவுகள் வழங்கப்படவேண்டும். நீங்கள் உள்ளடங்கிய கல்வியைப் புகுத்தலாம்; சிறப்புக் கல்வியை தடைசெய்யச் சொல்வது முறையல்ல. சிறப்புக் கல்வி என்ற சொல்லிலும் எனக்கு உடன்பாடில்லை. கல்வி எப்பொழுதும் கல்வி தான்; அதில் என்ன சிறப்பு இருக்கிறது? ஊனமுற்ற குழந்தைகளுக்கு வாய்ப்புக்கள் தெரிவுகள் வழங்கப்பட வேண்டும். அந்தக் குழந்தை விரும்பினால் உள்ளடங்கிய கல்வியில் கல்வி பயிலலாம். அல்லது சிறப்புப் பள்ளிகளில் அதாவது பார்வையற்றோர் பள்ளியிலோ அல்லது காது கேளாதோருக்கான பள்ளியிலோ சென்று கல்வி பயிலலாம்.
கே: இது ஊனமுற்றோர் சமூகம் குறித்த பொதுவான கேள்வி. ஊனமுற்றோரில் ஒரு சாராருக்கு பிரச்சனை என்றால் அனைத்து வகை ஊனமுற்றோரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்; மற்றும் அரசியல் பின்புலம் வேண்டும் என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த கருத்தை நீங்கள் எவ்வாறு அணுக விரும்புகிறீர்கள்?
ப: இது ஒரு நல்ல கேள்வி. நான் இப்போது உங்களுக்கு விளக்குகிறேன். நமது நாட்டில் ஊனமுற்றோரைப் பொறுத்தவரை, ஒரே வகை ஊனமுற்றோர் மற்றும் சார் வகை ஊனமுற்றோர் என இரு வகையிலான இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரே வகை ஊனமுற்றோருக்கான இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட வகைக் குறைபாட்டைப் பெற்றவர்கள் ஒரு குழுவாகச் செயல்படுவதைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டு தேசியப் பார்வையற்றோர் சங்கம். சார்வகை ஊனமுற்றோருக்கான இயக்கம் என்பது பலதரப்பட்ட குறைபாடுகளை உடையவர்கள் ஒரு குழுவாக இணைந்து அவர்களின் முன்னேற்றம் சார்ந்த முன்னெடுப்புகளோடு செயல்படுவதைக் குறிப்பதாகும்.
சிலர் ஒரே வகை ஊனமுற்றோர் சார்ந்த இயக்கம் சிறந்தது என்றும் சிலர் சார் வகை ஊனமுற்றோர் சார்ந்த இயக்கமே சிறந்தது என்றும் சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இருவகை இயக்கங்களும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒத்துழைத்துச் செயல்படுவதே பொருத்தமானதாக இருக்கும். இருவகை இயக்கங்களும் நல்ல முறையில் செயல்படலாம். எல்லா ஊனமுற்றோருக்கும் பொதுவான பிரச்சினைகள் இருப்பதுண்டு. அதாவது அவரவர் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வஞ்சிக்கப்படுகிறார்கள். பார்வையற்றோர் பார்வையின்மையையும், காதுகேளாதோர் செவிப்புலன் குறைபாட்டையும், கை கால் ஊனமுற்றோர் அவர்களது குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி வஞ்சிக்கப்படுகிறார்கள். இது போன்ற சூழல்களில் அனைத்துவகை ஊனமுற்றோரும் ஒன்றாகச் சேர்ந்து தங்களை வஞ்சிப்போரை எதிர்த்துப் போராடலாம். மேலும் ஒவ்வொரு குறிப்பிட்ட குறைபாட்டை உடையவருக்கென்று தனித்தனிப் பிரச்சினைகள் இருப்பதுண்டு. அப்போது தனிப்பட்ட வகையிலும் போராட்டம் நடத்தலாம். பார்வையற்றோர் தங்களுக்காகப் போராடும்போது மற்றவகை ஊனமுற்றோர் அமைதியாக அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த நிலை தொடரும் பட்சத்தில், சண்டைக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது? இன்னொரு வகையில் சொல்வதென்றால், ஊனமுற்றோருக்கென்று இரண்டு வகை அமைப்புகள் செயல்படுகின்றன. ஒரு தனிப்பட்ட குடிமகனாக என்னிடம் எது சிறந்தது என்று கேட்டால், பார்வையற்றோர் அல்லது ஊனமுற்றோருக்கான அமைப்புகளைவிட பார்வையற்றோர் அல்லது ஊனமுற்றோரின் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். எனினும் பார்வையற்றோருக்கான அல்லது பார்வையற்றோரால் பார்வையற்றோரின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்களும் வரவேற்கத் தகுந்தவையே. நான் ஒரு மனிதன் என்பதால் மனிதவியல் சார்ந்த அத்தனை பிரச்சினைகளிலும் பங்கேடுக்கலாம். பெண் என்பதால் ஆண்களின் பிரச்சினைகளில் தலையிட கூடாது என்றோ ஆண் என்பதால் பெண்களின் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது என்றோ சொல்வதற்கில்லை. அனைவருக்கும் அவரவர் பிரச்சினை குறித்த தெளிவான புரிதல் இருக்கும். பார்வையற்றோருக்கு அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்தே அதிக அனுபவம் இருக்கும். எனவே நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல பார்வையற்றோருக்கான அல்லது ஊனமுற்றோருக்கான அமைப்புகளை விட பார்வையற்றோரின் அல்லது ஊனமுற்றோரின் அமைப்புகளே சிறந்தவை.
கே: இந்த உரையாடலை முடிப்பதற்கு முன் தங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சாதிக்கத் துடிக்கும் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்தால் அவர்களது முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.
ப: எனக்கு பெயரும் புகழும் பெறுவதில் பெருமளவு விருப்பம் இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்பதால் என்னைப் பற்றி அதிகப்படியாக இல்லாமல் உள்ளதை சுருக்கமாகச் சொல்கிறேன். நான் பிறவியிலேயெ பார்வையை இழந்தவர். என்னுடைய கல்வி கல்கத்தாவில் பார்வையற்றோர் பள்ளியில் தொடங்கியது. உயர் கல்வியை என் சொந்த ஊரான ராஜஸ்தானில் படித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டேன். என்னுடைய கல்லூரிப் பட்டங்கள் அனைத்தையும் (B.A, LLB, M.A ஆங்கில இலக்கியம்)அசாமில் முடித்தேன். பிறகு அசாமில் உள்ள ஜோஹ்ராட் பகுதியில் பார்வையற்றோர் நிறுவனம் அமைப்பதற்கான முயற்சியை மேற் கொண்டவர்களில் என்னுடைய பங்களிப்பையும் செலுத்தியிருக்கிறேன். Johrad Blind Institute என்ற அந்த நிறுவனத்தின் முதன்மை நிறுவனராகவும் செயல் பட்டிருக்கிறேன். பின்னாளில் அது அரசு நிறுவனமாக உருமாற்றம் பெற்றது. இப்படியாக நான் அரசுப் பணிக்குள் நுழைந்துவிட்டேன். பார்வையற்றோரில் பிரிவு அ. பகுதியில் பணி வாய்ப்பைப் பெற்ற முதல் பார்வையற்றவர் என்ற பெருமையையும் பெற்றேன். அதன்பின் கௌஹாத்தீயில் சமூக நலத் துறையில் இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றேன். இந்த வாய்ப்பும் எனக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து போராடி உச்சநீதிமன்றம் வரை வழக்கை எடுத்துச் சென்று வெற்றிபெற்ற பிறகுதான் அந்தப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றிய பின் ஆக்ஷனெய்ட் என்ற அரசு சாராத சர்வதேச அளவிலான அமைப்பில் வடகிழக்கு மாநிலங்களுக்கான மண்டல அலுவலர் பொறுப்பு வழங்கப்பட்டது. இது உயர் மேலாளர் பதவிக்கு நிகரான பொறுப்பாகும். அங்கு ஊனமுற்றோர் மட்டுமன்றி பிற சமூக நலத் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கவனிக்க வேண்டியிருந்தது. பிறகு எனக்கு டெல்லிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. அங்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனத்திற்காண குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கே பணியாற்றிய படி இந்திய தேசிய மனித உரிமைகள் அஆணையத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். அப்போது ஊனமுற்றோர் நல சட்டத்தின் பயன்பாடு குறித்த அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அங்கிருந்தபடி இந்தப் பணிக்கு விண்ணப்பித்தேன். முதலில் மொத்தப் போட்டியாளர்களில் ஏழு பேர் வடித்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பை ஏற்றிருந்தார். எழுவரில் தகுதியின் அடிப்படையில் எனக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான முதன்மை ஆணையர் என்ற பணிவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் நான் கடந்து வந்த பாதை.
மேலும், நான் ஒரு சமூகச் செயல்பாட்டாளராகவே அதிகம் அறியப்படுகிறேன். நீதி மற்றும் சட்டம் சார் செயல்பாடுகளிலும் ஊடகச் செயல்பாடுகளிலும் என்னுடைய பங்களிப்பைச் செலுத்தி வருகிறேன். ஊனமுற்றோர் தொடர்பான பல செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறேன். பல வழக்குகளை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று வெற்றி கண்டிருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சிக்கிம் மாநிலத்தில் ஊனமுற்றோருக்கான நலச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை அதை எதிர்த்து கவுகாத்தியில் வழக்கு தொடுப்பு வெற்றி பெற்று சட்ட அமலாக்கத்திற்கு வகை செய்திருக்கிறேன்.
கே: உங்களுடைய பார்வையில் தனிப்பட்ட மனிதன் அல்லது பொதுச்சமூகம் செய்ய வேண்டியது என்ன?
ப: தனிப்பட்ட மனிதனோ பொதுச் சமூகமோ அல்லது அமைப்புகளோ அரசின் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவசியமெனில் ஒத்துழைப்புக் கொடுக்கவும், அநியாயம் எனில் தட்டிக் கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். அதாவது, ‘co-operate, where you can, resist, where you must.
கே: அரசு சாரா அமைப்புகள் சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து தங்களது கருத்து.
ப: ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துக் கொண்டு அதுகுறித்துப் பேசுவதற்கான துணிச்சலை மக்களிடையே ஏற்படுத்தி, போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கே: வேறு எதையாவது நான் விட்டிருந்தால் நீங்கள் நினைவுபடுத்தலாம்.
ப: இல்லை நான் இந்த உரையாடலை ஒரு வித்தியாசமான முறையில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன். சிறு வயதில் கற்ற ஒரு பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனக்குச் சரியாக நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. அதன் தலைப்பு GIVE A LITTLE என்பதாகும்.
Give a little live a little
Try a little mirths;
Sing a little bring a little
Happiness to earth.
Play a little pray a little
Be a little glad;
Rest a little zest a little
If the heart is sad.
Spend a little send a little
to another’s door;
Give a little live a little
Love a little more.
கே: அருமை. வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்திற்காக தங்களுடைய பொன்னான நேரத்தைச் செலவிட்டமைக்கு நன்றி.
ப: நன்றி.
தமிழில் X. செலின்மேரி
தொடர்புகொள்ள: celinmaryx@gmail.com