திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் ம. சிவக்குமார் (38).(அலைபேசி :8220745473) இவர் PhD முனைவர் பட்டம் பெற்று தற்போது கரூர் அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக தற்காலிகப் பணியில் உள்ளார். இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு திருமணமான தங்கையும் உள்ளனர். முனைவர் சிவக்குமார், இவரது அண்ணன், தங்கை என இவரது குடும்பத்தில் மொத்தம் உள்ள மூன்று பேருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் மூவருமே பார்வையில்லாமல் பிறந்த காரணத்தால் இவரது தந்தை மணி தனது 3 குழந்தைகள், மனைவி என ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கைவிட்டுவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டார். இவரது தாயார் அனுசூயா இவர்களை கடுமையான வறுமைக்கு இடையிலும் பெரும்பாடு பட்டு வளர்த்துள்ளார். சிவக்குமார் PhD வரைபடித்து பட்டம் பெற்றுள்ளார், அவரது தங்கை ஜெயந்தி M.a, B.ED.. வரை படித்துள்ளார். சிவகுமாருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஏழ்மையிலும் வறுமையிலும் உழன்று, பல்வேறு துன்பங்களுக்குப் பிறகே இவர் படித்து இவரது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.
![]() |
சிவக்குமார் |
ஆனால் இவரது பெரியப்பா மகன்(உடன் பங்காளி) முறை அண்ணனான வேடந்தவாடி கிராமம், பச்சையப்பன் அவர்களின் மகன் ப. சேட்டு (அலைபேசி: 9787700428) இவரையும் இவரது குடும்பத்தையும் ஊரில் இருந்து விரட்டிவிட்டு இவரது குடும்பத்திற்குச் சேர வேண்டிய சொத்துக்களை தானே முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் நோக்கத்துடன் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வருகிறார். அவர் ஏற்கனவே இவர்களை பலமுறை மிரட்டியுள்ளார். இவரது பார்வையற்ற தங்கை ஜெயந்தியைத் தாக்கியதற்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதாகியிருந்தார், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வீடு கட்டும் பணியைத் தொடங்கிய நாள்முதல் பல்வேறு விதங்களில் சேட்டு தொந்தரவு கொடுத்துவருகிறார். கடந்த 3 மாதங்களாக இந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை வீடு கட்டவிடாமல் தடுக்கும் நோக்கத்துடனும் பிரச்சனை செய்யும் எண்ணத்துடனும் தனது லாரியை வீடு கட்டப்படும் இடத்தை அடைத்து நிறுத்தியுள்ளார். சிவக்குமார் குடும்பத்தை ஒன்று ஊரை விட்டு விரட்டப் போவதாகவும், இல்லையென்றால் இங்கேயே கொன்று புதைக்கப் போவதாகவும் தொடர்ந்து பலர் மூலமும் மிரட்டி வந்தார். இனி சிவக்குமார் குடும்பத்தினர் சேட்டு மீது புகார் கொடுத்தால் சிவக்குமாரின் தங்கை ஜெயந்தியைத் தாக்கிய வழக்கில் சேட் பிணை ரத்துசெய்யப்பட்டு கைதுசெய்யப்படுவார் என்பதால், “நான் ஜெயிலுக்குப் போனா அந்தக் குருட்டுப் பயலுக குடும்பத்த வெட்டிட்டுத்தான் போவேன்” என்று நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தனக்கு காவல்துறையிலும் நீதிமன்றத்திலும் முழு செல்வாக்கு இருப்பதாகவும், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிவருகிறார்.
25 ஜூன் 2020 காலை 7.30 மணி அளவில் சிவக்குமார் குடும்பத்தினர் வீடு கட்டிக்கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்ற சேட்டு, அங்கிருந்த பணியாளர்களை மிரட்டியதோடு அவர்களது குடும்பம் குறித்தும் ஊனம் குறித்தும் தவறான வார்த்தைகளால் தகாத முறையில் திட்டியுள்ளார். வீடு கட்டும் வேலைக்கு அழைத்தால் யாரும் வரக்கூடாது என்று மிரட்டிய சேட்டு, அவ்வாறு வருபவர்களை அடித்து உதைக்கப் போவதாகவும், மீறிக் கட்டினால் கட்டிடத்தை தனது லாரியை விட்டு இடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். “அந்தக்குருட்டுப் பயலுக்கே அவளவு திமிர் இருந்தா நான் சும்மா விட்டுட்டுப் போயிடுவேனா? ஒரு வழி பண்ணிட்டுத்தான் போவேன்” என்றும் மிரட்டியுள்ளார். சிவக்குமார் குடும்பத்தினர் மீது ஏற்றிக் கொள்வதர்க்காகவே தனது லாரியை அங்கேயே நிறுத்தியிருப்பதாகவும் சொல்லீயிருக்கிறார்.
இவ்வாறு தனது மிரட்டல்கள் எதற்கும் சிவக்குமாறும் அவரது குடும்பமும் அடிபணியாததால் குறுக்குவழியில் அவர்கள் வீடுகட்டுவதை தடுக்க நினைத்து சேட்டு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி (BDO) அலுவலகத்தில் பொய்யான புகார் ஒன்றிணைக் கொடுத்துள்ளார். தனது புகாரில், தற்போது சிவக்குமார் குடும்பத்தினர் வீடு கட்டிக்கொண்டிருக்கும் இடம் ஊராட்சிமன்றக் கட்டிடம் தொடர்பான வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், எனவே வழக்கு முடியும்வரை அக்குடும்பத்தை வீடுகட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் சேட்டு. அந்தப் புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீடுகட்டும் பணியைத் தொடரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சிவக்குமார் வீடுகட்டும் நிலத்திற்கும் ஊராட்சிமன்றக் கட்டிட வழக்கிற்கும் ஒரு தொடர்பும் இல்லை, குறிப்பிட்ட Survey என் வழக்கில் சேர்க்கப்படவே இல்லை. இருப்பினும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து தெளிவுபடுத்திய பின்னரே வீடுகட்ட அனுமதிக்க முடியும் என்றும், அது தொடர்பாக வருவாய்த்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கடந்த 2 மாதத்திற்கு முன்பே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
சேட்டுவின் உள்ளூர் செல்வாக்கையும் பணபலத்தையும் உறுதிப்படுத்தும் விதத்தில்தான் BDO மற்றும் வருவாய்த் துறையினரின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. கடந்த 4/9/20 வெள்ளிக்கிழமை அன்று சிவக்குமார் தற்போது வசித்துவரும் தகரக்கூரை போட்ட வீட்டிற்குச் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர், நிலத்தை அலக்காமலேயே வேறு இடத்தில் வீடு கட்டிக்கொள்ளுமாறும், சிவக்குமார், அவரது அண்ணன், தங்கை அனைவரும் ஊனமுற்றோர் என்று பொய்யாக நடித்து ஏமாற்றுவதாகவும் நாக்கூசாமல் கூறியிருக்கிறார். மேலும் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் என வருவாய்த்துறை அதிகாரிகலெல்லாம் கடிதம் அனுப்பிவிட்டால் மட்டும் தானாக வந்து நிலத்தை அளக்க மாட்டார்கள் என்றும், சிவக்குமார்தான் நேரில் சென்று, உட்காந்து, காத்திருந்து அவர்களை அழைத்து வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.
சேட்டுவிடமிருந்து மீட்க வேண்டியது, சிவக்குமாரின் நிலம் மட்டுமல்ல, சீர்கேட்டுக்குக் காரணமான சில அதிகாரிகளையும் தான்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்புக்கும் உயிருக்கும் குந்தகம் ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க இது போன்று
விஷக் கிருமிகளை அடியோடு கிள்ளி எறிய வேண்டும்
கேட்கும் போதே நமக்கு வேதனை அளிக்கிறது இந்த வேதனையில் தவிக்கும் அந்த குடும்பத்தை சட்டம் தான் காப்பாற்ற வேண்டும்