![]() |
P.K. பின்ச்சா |
![]() |
முருகானந்தம் |
வடக்கே பார்வையற்றோர் இணைந்து நடத்தும் ரேடியோ உடான் என்கிற இணையவழி பண்பலை அவருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது. தமிழகத்தில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கமும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையும் இணைந்து, கடந்த 27.ஜூலை.2020 அன்று மாலை சூம் வழியே நினைவேந்தல் கூட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தார்கள். பேரவையின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் கு. முருகானந்தம் அவர்கள் ;நினைவேந்தலை வழிநடத்த, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார் அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் தலைவரும் உலகப் பார்வையற்றோர் ஐக்கியத்தின் (World Blind Union) பொதுச்செயலாளருமான A.K. மித்தல் அவர்கள்.
![]() |
A.K. மித்தல் |
திரு. P.K. பின்ச்சா, மன உறுதிகொண்ட செயல்பாட்டாளர், மனிதநேயப் பண்பாளர் மற்றும் நல்ல உபசரிப்பாளர் எனத் தன் பேச்சைத் தொடங்கிய திரு. மித்தல் அவர்கள், அஸ்ஸாமின் ஜோர்காட்டில் பார்வையற்றோருக்கான நிறுவனத்தைத் தொடங்கியது முதல், இந்திய அரசு செயலருக்கு இணையான ஊனமுற்றோருக்கான நடுவண் தலைமை ஆணையர் பதவிவகித்தது வரை, திரு. பின்ச்சா அவர்களின் படிப்படியான வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். “ஊனமுற்றோருக்கான தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் ஊனமுற்றவர் என்ற பெருமையைப் பெற்ற பின்ச்சா அவர்களுக்கு இரண்டாம் முறை அந்த வாய்ப்பு வழங்கப்படாதது துரதிஷ்டவசமானது, எப்படியாயினும், நான் எனது தனிப்பட்ட அர்ப்பணிப்புள்ள நண்பனை இழந்துவிட்டேன்” எனத் தனது நினைவேந்தல் உரையை முடித்தார் திரு. A.K. மித்தல் அவர்கள்.
![]() |
அரங்கராஜா |
“மிராண்டா என்கிற பார்வை மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர் தனது கல்லூரித் தேர்வை எதிர்கொண்டபோது, அவருக்கான வினாத்தாள்களை பிரெயிலில் வழங்கிட உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் மண்டல மைய இயக்குநர், பார்வையற்றோர் குறித்து தரக்குறைவாகப் பேசிய விவகாரத்தைக் கையிலெடுத்த எமது சங்கத்தின் பக்கம் நின்ற திரு. பின்ச்சா அவர்கள், உடனடியாக அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுத்தார் என்பதை நான் இங்கு நன்றியோடு நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் ஊனமுற்றோருக்கான ஆணையருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை அவர் பதவிகாலத்தில், அவர் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது” என உணர்ச்சி பொங்கப் பேசினார் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத்தலைவரும், பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரியின் விரிவுரையாளருமான திரு. அரங்கராஜா அவர்கள்.
![]() |
சிவராமன் |
திரு. பின்ச்சா அவர்களின் நினைவேந்தலில் பங்கேற்றுப் பேசிய மாநிலக் கல்லூரியின் பேராசிரியரும், பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான திரு. V. சிவராமன் அவர்கள், பதிலி எழுத்தர்கள் தொடர்பாக அவர் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சிலாகித்தார். தேர்வெழுதும் ஒரு பார்வையற்ற மாணவருக்கான பதிலி எழுத்தரும் அந்த மாணவரின் தகுதியை ஒத்தவராக இருத்தல் அவசியம் என்கிற முக்கியமான அம்சத்தை விதந்தோதினார். எப்படி இந்தியத் தேர்தல் ஆணையராக T.N. ஷேஷன் பதவியேற்றதற்குப் பிறகு, ஒரு தேர்தல் ஆணையருக்கான அதிகாரங்கள் குறித்து நாட்டு மக்களால் அறிந்துகொள்ள முடிந்ததோ, அதைப்போலத்தான் பின்ச்சா அவர்களின் பதவிக்காலம் ஊனமுற்றோருக்கான ஆணையரின் பதவிக்கான அதிகாரங்கள் குறித்து ஊனமுற்ற சமூகத்திற்குப் புரியவைத்தது என்பதைச் சுட்டிக்காட்டிய சிவராமன், “அவர் விட்டுச் சென்ற தடத்தைப் பின்பற்றி, உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடுவதே, நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்” என முடித்தார்.
![]() |
பாலகணேசன் |
“வடகிழக்கைச் சேர்ந்த ஒரு பார்வையற்றவர் இத்தனை தூரம் முன்னேறி, உச்சப் பதவியில் இருந்தார் என்பது உண்மையில் வியப்பாக இருக்கிறது. வார்த்தைகளை மாற்றுவதில் அவர் காட்டிய அக்கறை போற்றுதலுக்குரியது” என திரு. பின்ச்சா அவர்கள் குறித்து, தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் விரல்மொழியர் மின்னிதழின் ஆசிரியர் திரு. பாலகணேசன். மேலும் அவர் தனது உரையில், “திரு. பின்ச்சா அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிவரை இயங்கிக்கொண்டே இருந்தார், இது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கைகூடாது. அவர், தொண்டு நிறுவனங்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டார்” என தனது இரங்கல் உரையை நிறைவு செய்தார்.
![]() |
சித்ரா |
“திரு. பின்ச்சா அவர்கள், மனித உரிமைகள் ஆணையத்தில் ஊனமுற்றோர் அறிக்கையாளராகவும், பல்வகை ஊனமுற்றோருக்கான தேசிய அறக்கட்டளையின் தலைவராகவும் அரசால் அமைக்கப்பட்ட இரண்டு அமைப்புகளில் ஒரே காலகட்டத்தில் பதவிவகித்த முதல் ஊனமுற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவர் ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகமாகிய நமக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறார்” எனத் தனது இரங்கல் உரையை நிகழ்த்தினார் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் செல்வி. சித்ரா.
![]() |
பூபதி |
“ஆக்ஷன் எய்ட் அமைப்பின் மூலம், ஐநாவின் மனித உரிமைகள் பிரகடனத்தை வடிவமைப்பதில் பங்காற்றிக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு ஒரு வங்கி செக் புக் வழங்க மறுத்தது. அதை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற்றார். அப்போது அவர் சொன்ன வாக்கியம் “சண்டை முடிந்துவிட்டது, ஆனால், போர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.’ ஆக்ஷன் எய்ட் என்கிற சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் அவர் ஊனமுற்றோருக்காக மட்டும் பணியாற்றவில்லை. ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்காகவும் பணியாற்றினார்” என பின்ச்சா பற்றிய இன்னொரு கோணத்தையும் பதிவு செய்துவிட்டுச் சென்றார் பேராசிரியர் பூபதி.
![]() |
முத்துச்செல்வி பாண்டியராஜன் |
“திரு. பின்ச்சா அவர்கள் ஊனமுற்றோருக்கான நடுவண் தலைமை ஆணையராகப் பதவி வகித்த காலத்தில், அன்றைய காங்கிரஸ் அரசாங்கம், ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டத்தை அவசரகதியில் அமல்ப்படுத்தும் செயலில் இறங்கியது. அதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம், தான் ஒரு அரசு அதிகாரியாக இருந்தபோதிலும், மிகத் துணிச்சலுடன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி அமலாக்கத்தை நிறுத்தினார். அவர் காலத்தில் அமலிலிருந்த ஊனமுற்றோருக்கான சட்டம் 1995 எல்லா மாநிலங்களிலும் முழு வலிமையுடன் அமலாக்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து அதைக் கண்காணித்தார்” என பின்ச்சா அவர்களின் பதவிகால அதிரடிகளைப் பகிர்ந்துகொண்ட அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் துநைத்தலைவர் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன், திரு. பின்ச்சா அவர்கள் குறித்த தனது சொந்த அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.
![]() |
அழகிய பெருமாள் |
பொறியியல் பட்டதாரியான அழகிய பெருமாளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கண்களிலும் பார்வை போய்விட்டது. ஆனாலும் நம்பிக்கையைக் கைவிடாத பெருமாள், கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். நூறு விழுக்காடு பார்வையற்றவருக்கு உயர் அலுவலர் பணியிடத்தை வழங்க மறுத்து, பெருமாளின் கனவுக் கோட்டையைத் தகர்த்தெறிந்தது குறிப்பிட்ட வங்கி நிர்வாகம். அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பு இந்தப் பிரச்சனையை அன்றைய தலைமை ஆணையரான திரு. பின்ச்சா அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது. வங்கி உயர் அலுவலர்ப் பணியானது முழுப்பார்வையற்றவர்களுக்கான அடையாளம் காணப்பட்ட பணித்தொகுப்பில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, தொடர்புடைய வங்கி நிர்வாகத்தை வழிக்குக் கொண்டுவந்திருக்கிறார் பின்ச்சா. எந்த வங்கி நிர்வாகம் தன்னை நிராகரித்ததோ, இன்று, அதே வங்கியின் மேலாளராகப் பணிபுரிகிறார் திரு. அழகிய பெருமாள். ஒரிசாவில் கைரேகை பதித்து வேட்புமனு தாக்கல் செய்ததால், தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்ட பார்வையற்றவரைப் போட்டியிட வைத்தார் என்கிற பெருமித நிகழ்வையும் நினைவுகூரத் தவறவில்லை திருமதி. முத்துச்செல்வி அவர்கள்.
![]() |
சிவக்குமார் |
இறுதியாக பின்ச்சா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த கரூர் அரசு கலைக்கல்லூரியின் விரிவுரையாளர் திரு. சிவக்குமார் அவர்கள், அவரைச் சந்தித்த அந்தப் பொன்னான தருணத்தை நினைவுகூர்ந்தார். நேத்ரோதயா என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் தனக்கு சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டதையும், அதை பின்ச்சா அவர்களின் கையால் பெற்றபோது, அவர் தன்னை அவரோடு இறுக அணைத்துக்கொண்டதைத் தன் வாழ்நாளின் மிக முக்கியத் தருணமாக வியந்தார் சிவக்குமார். அந்த அணைப்பு, ‘நான் உன் உயர் அதிகாரி அல்ல, உன் மூத்தவன்’ என்று தனக்குச் சொல்வதாக உணர்ந்திருக்கிறார் அவர்.
![]() |
சோஃபியாமாலதி |
நினைவேந்தலுக்கான அறிவிப்பு வெளியாகி நான்கு மணிநேரங்கள் கூட முடியாத நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் இறுதியில், திரு. பின்ச்சா அவர்கள் குறித்துப் பார்வையாளர்கள் சிலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். முத்துச்செல்வி அவர்கள் உதாரணமாகச் சொன்ன திரு. அழகியபெருமாளும் நிகழ்வில் பங்கேற்று, தனக்கு வாழ்வளித்தவர் பின்ச்சா என நேரடி சாட்சியம் பகிர்ந்தது அனைவரையும் நெகிழ்த்தியது. அந்த நெகிழ்வின் தடம், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான திருமதி. சோஃபியாமாலதி நவின்ற நன்றி உரையிலும் எதிரொலித்தது.
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com
சிந்திக்க உதவும்