உட்கார்ந்த இடத்திலேயே சமூகப்பணி, உதவிக்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர்; கரூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

,வெளியிடப்பட்டது
10 ஜூலை, 2020

graphic மாரியப்பன்
கரூர் காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயபாலன். பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் நொடிநேர சமூகப்பணி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற 70 வயது மாற்றுத்திறனாளி தனது அடையாள அட்டை தொலைந்துவிட்டதால், அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ. 1000 நிவாரணத்தைப் பெறமுடியாமல் தவித்து வந்திருக்கிறார். தனக்குப் புதிய அடையாள அட்டை வழங்கும்படி வட்டாட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே, மாரியப்பனுக்கு நிவாரணம் வழங்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர், அவரை மோசமாகத் திட்டியதாகவும், அதனால் மாரியப்பன் மிகவும்மனமுடைந்து போனதாகவும்  செய்தி வெளியானது. இந்தச் செய்தியைப் படித்த மறுகணமே, திரு. ஜெயபால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசி செய்து, செய்தியை மேற்கோள் காட்டி, தொடர்புடைய அந்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு நிவாரணம் பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
திரு. ஜெயபால் அவர்கள் புகார் செய்த ஓரிரு மணிநேரத்தில் அவர் அலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தியில்,
மதிப்பிற்குரிய ஐயா,
கடவூர் வட்டம் இடையப்பட்டி மேற்கு கிராமம் மஜ்ரா அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் த/பெ பிச்சை என்பவருக்கு COVID-19 மாற்றுத்திறனாளி நிவாரண உதவித்தொகை இன்று  09.07.2020 வழங்கப்பட்டது.
மேற்படி, பயனாளி அசல் மாற்றுத்திறனாளி  அடையாள அட்டையை தொலைத்து விட்டமையால் உதவித்தொகை வழங்க இயலாத நிலை இருந்தது. தற்போது,  அவர் கையில் வைத்திருந்த நகல் (Xerox) மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், இவருக்கு  மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (மறுபிரதி) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலமாக செய்தி அனுப்பியிருந்தார்.
உட்கார்ந்த இடத்திலேயே, ஒரே ஒரு அலைபேசி அழைப்பின் மூலம், மாற்றுத்திறனாளி முதியவரின் கண்ணீர் துடைத்த ஜெயபாலன் அவர்களுக்கு சவால்முரசு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
‘நயன் தூக்கின் நன்மை கடலினும் பெரிது’

சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

5 thoughts on “உட்கார்ந்த இடத்திலேயே சமூகப்பணி, உதவிக்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர்; கரூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

  1. உங்களின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் கவனித்து வருகிறோம். தொடர்ந்து நட்புடன் பயணிப்போம் மிக்க நன்றி சார்.

  2. உங்கள் கருத்து மிகவும் சரியானதே. எமது வெளியீடுகளைத் தொடர்ந்து படித்து ஆதரவு வழங்கிவரும் உங்களுக்கு நன்றிகள்.

  3. நிச்சயமாக மணிவண்ணன் சார்.
    நமக்கான அலுவலகங்களில் கூட நம்மவர்கள் அதிக அளவில் இல்லை என்பது வேதனை நிறைந்த உண்மை.
    இத்தகைய செய்திகளை தேடித்தேடி வெளியிடும் சவால் முரசுக்கு வாழ்த்துக்கள்.

  4. இதன் மூலம் ஒரு மாற்றுத்திறனாளியின் துயரத்தை புரிந்துகொள்ள அதிகாரிகளாக மாற்றுத்திறனாளிகள் இருக்கவேண்டும் என்ற கருத்து நிரூபிக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் ஜெயபாலன்ஐயா அவர்களே

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்