“மாற்றுத்திறனாளிகளுக்கு யாரும் இல்லை என நினைக்கவேண்டாம்” டிசம்பர் 3 தீபக்நாதன் கொந்தளிப்பு

,வெளியிடப்பட்டது
4 ஜூலை, 2020

graphic சாத்தான்குளம் காவல்த்துறை
மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 3 இயக்கத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் காவல்த்துறை கண்காணிப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்த்துறையின் அத்துமீறலை உலகமே கண்டித்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சிக்கியுள்ள அதே காவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு, மாற்றுத்திறனாளி ஒருவரையும் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இராமநாதபுரத்தைச் செர்ந்த பாதிரியார் தன் குழுவினருடன் மத வழிபாட்டுக் கூடுகைக்காக கடந்த பிப்பரவரி மாதம் தூத்துக்குடி வந்துள்ளார். இந்தக் குழுவினர் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என பொன்னையா என்பவர் கொடுத்த புகாரின்பேரில், ஒன்பது பேரும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து, துணைக்காவல்ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட காவலர்களால்  கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் இருந்த அப்பாதுரை என்ற மாற்றுத்திறனாளியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
csr.org என்ற லண்டனைச் சேர்ந்த இணையதளம், கடந்த பிப்பரவரி 28ஆம் தேதியன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஜூனியர்விகடன்,தி நியூஸ் மினிட்  போன்ற ஊடகங்களிலும் கடந்தவாரம் இந்தச் செய்தி வெளியானது. இதனை மேற்கோள் காட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையருக்குக் கடிதம் எழுதியிருந்தார் டிசம்பர் 3 இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. தீபக்நாதன் அவர்கள்.
graphic தீபக்நாதன்
தீபக்நாதன்

திரு. தீபக்நாதனைத் தொடர்புகொண்டு கேட்டோம். “உண்மையில் தாக்கப்பட்ட அப்பாதுரையை எனக்குத் தெரியாது. ஆனால், தாக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், நாம் குரல்கொடுக்கிறோம். இப்போதுகூட, காவல்த்துறை தனது ஆட்டோவைப் பறிமுதல் செய்துவிட்டதால், ஒரு மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கேட்பதற்கு யாருமில்லை என்கிற அலட்சியத்தின் வெளிப்பாடுகள் இவை” என்றார் கொந்தளிப்புடன்.

லத்திகளுக்குத் தெரியாதுதான் அவர் மாற்றுத்திறனாளி என்று. காவலர்களுக்குமா? உண்மையில் லத்திகள் யார்?

சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

1 thought on ““மாற்றுத்திறனாளிகளுக்கு யாரும் இல்லை என நினைக்கவேண்டாம்” டிசம்பர் 3 தீபக்நாதன் கொந்தளிப்பு

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்