ஏற்றத்தாழ்வை வளர்க்கும் இணையவழிக் கற்றல்

,வெளியிடப்பட்டது
30 ஜூன், 2020

graphic சுற்றறிக்கை
கரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கின்றன மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட சிறப்புப் பள்ளிகள். இனி பள்ளி எப்போது திறக்கும்? நாம் எப்போது விடுதிக்குச் செல்லப்போகிறோம் போன்ற விடை தெரியாத கேள்விகளுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஆறு முதல் 12ஆம் வகுப்புப் படிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டிருக்கிறார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள். வகுப்பு வாரியாகப் புலனக் குழுக்கள் (whats app groups) ஏற்படுத்தப்பட்டு, வகுப்பு ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் நிர்வாகிகளாகவும், மாணவர்கள் உறுப்பினர்களாகச் செர்க்கப்பட வேண்டும். அனைத்துக் குழுக்களையும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கரோனா பேரிடர் நெருக்கடி எப்போது முடிவுக்குவரும் என்று கணிக்க இயலாத நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இதனைக் காரணமாகச் சொல்லி, மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடமுடியாதுதான். ஆனால், சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் கடந்தும், மின் வசதியே ஒழுங்காகப் போய்ச்சேராத, முற்றிலும் சாலை வசதிகள் இன்றி, நகரங்களினின்று துண்டிக்கப்பட்டிருக்கிற பல கிராமங்களைக்கொண்ட இந்த தேசத்தில், இணையவழிக் கல்வி என்பது எல்லோர்க்கும் சாத்தியம்தானா? அதிலும், தனக்கான கற்றல் கற்பித்தலில் சிறப்புத் தேவையைக் கோருகிற மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான எளிய அணுகளுடன் கூடிய (easy access)சிறப்புக்கல்வி என்பது, இணையவழியில் கிடைப்பதற்கான அடிப்படைத் திட்டமிடலோ,கட்டமைப்போ நம்மிடம் இருக்கிறதா?
graphic சித்ரா உபகாரம்
சித்ரா உபகாரம்
“இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் வறுமைதான் பெரும்பாலான உடல்க்குறைபாடுடைய குழந்தைகளைப் பிரசவிக்கின்றன. கிராமமோ, நகரமோ, பெரும்பாலான மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் இருக்கிறார்கள். இந்தப் பேரிடர் காலத்தில், அவர்கள் உரிய வேலையின்றி, வருமானமின்றி உழன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பொத்தான் அமுக்கிப் பேசும் சாதாரண அலைபேசிகளே எட்டாக்கனியாக இருக்கிறது.  தன் குடும்பத்தின் அடுத்தவேளை உணவுக்காக, உடல்க்குறைபாடுடைய தன் குழந்தையைத் தனியே விட்டும், விட இயலாமலும் அவர்கள் வேலை கிடைக்கும் இடத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். சில குடும்பங்களில் பழைய, இரண்டாம் நிலை ஸ்மார்ட் ஃபோன்கள் இருந்தாலும்கூட, அவற்றிற்குக் காசுபோட முடியாததால், அவைகள் பயன்பாடின்றிக் கிடக்கின்றன. இத்தகைய கசப்பான கள எதார்த்தங்களைப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வின் நிமித்தமாக திருப்புதல் செய்யலாம் என்று, மாணவர்களின் வாட்ஸ் ஆப் எண்களைக்  கோரியபோது அறிய முடிந்தது” என்கிறார் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவரும், பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான செல்வி. சித்ரா உபகாரம்.
 மேலும் அவர், “இப்போதும் பட்டன் ஃபோன் வைத்திருக்கும் மாணவர்களைக் கூட்டழைப்பில் (conference call) இணைத்து ஸ்போக்கன் இங்லீஷ் எடுத்துவருகிறேன். ஆனாலும், ஒருநாள்கூட அந்த வகுப்பு எனக்கு திருப்தியைத் தரவில்லை. காரணம், ஒவ்வொரு மாணவரும் மறுக்கவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால் சரியாக வகுப்புக்கு வருவதில்லை. சிலருக்கு அப்பா வேலைக்குப் போவதால் ஃபோன் கொண்டுபோய்விட்டதும், சிலருக்கு ரீச்சார்ஜ் செய்யப் பணமில்லை என்பதுமான காரணங்கள்  கேட்பதற்கு வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. பல நேரங்களில், இதுபோன்ற காரணங்களைப் பிற மாணவர்களின் முன்னிலையில் சொல்லக்கூட பாதிப்புக்குள்ளான மாணவர்கள் தயங்குகிறார்கள்” என்கிறார்.
 மாணவர்களின் இத்தகைய உளவியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்காமல், இணையவகுப்புகள் பற்றிச் சிந்திப்பது, பெரும்பான்மையான மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையையே உண்டாக்கும். ஒரு எதிர்பாராத பேரிடரின் விளைவால்,  கடக்கவே இயலாத அன்றாடத்தில் சிக்கியிருக்கிற பெரும்பான்மை மாற்றுத்திறனாளி மாணவர்களின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதே சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் முதன்மையான பணியாக இருத்தல் வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறையால் வலியுறுத்தப்படுவதே காலத்தின் தேவையாகும். அதைவிடுத்து, “உன்கிட்ட ஸ்மார்ட் ஃபோன் இருக்கா? உடனே அப்பாகிட்ட சொல்லி ஃபோனுக்கு ரீச்சார்ஜ் பண்ணச்சொல்லு ஆன்லைன் க்லாஸ் தொடங்கப்போறோம்” என்றெல்லாம் மன உறுத்தலின்றி எப்படிச் சொல்வது?
graphic கல்வித்தொலைக்காட்சி செயலி
சுற்றறிக்கையில் கல்வித்தொலைக்காட்சி பார்ப்பதற்கு மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் e-learning.tnschools.com/welcome என்ற இணைய பக்கத்தில் உள்ள பாடங்கள் மற்றும் கற்றலுக்குத் துணைபுரியும் காணோளிகளைத் தரவிறக்கிப் பயன்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறப்புப் பள்ளிகள், அதிலும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளிகளைப் பொருத்தவரை, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் பார்வை மாற்றுத்திறனாளிகள். ஆனாலும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற முன்யோசனையில், அந்தந்தப் பள்ளிகளில் தாமாகவே முன்வந்து புலனக்குழுக்களின் வழியே மாணவர்களை ஒருங்கிணைத்ததும் அவர்கள்தான். அத்தகைய உத்வேகம் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பாடம் சார்ந்து எளிதில் இணையத்தை, அதுவும் சுற்றறிக்கையில் சொல்லப்பட்ட அந்தக் குறிப்பிட்ட இணையப்பக்கத்தை எளிதில் அணுகமுடிவதே இல்லை. அவர்களுக்கான பிரெயில்வழி பாடப்புத்தகங்களும் இன்னும் முறையாக அச்சேறவில்லை. புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்படும் பாடப்புத்தகங்கள் இணையத்தில் பிடிஎஃப் முறையில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய ஒருங்குறி வடிவில் பதிவேற்றப்படும் என்ற தமிழக அரசின் வாக்குறுதி என்ன ஆனது என்று தெரியவில்லை.சில தன்னார்வலர்கள் அச்சுப்புத்தகங்களை ஒலிவடிவில் பதிந்து தருவதால் மட்டுமே பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களால் தங்கள் பணியை மேற்கொள்ள முடிகிறது.
 என்ன செய்ய வேண்டும்?
1.சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இணைய வகுப்புகள் குறித்துச் சிந்திப்பதற்கு முன்பு, மாற்றுத்திறன் மாணவர்கள் தொடர்பான தொழில்நுட்ப உதவி உபகரணங்கள், (assistive devices) அவற்றின் பயன்பாடுகள்  குறித்துப் பெரும்பாலான சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சி இல்லை என்ற உண்மைக்கு முகம் கொடுக்க வேண்டும். இதனைக் களையும் பொருட்டு, சிறந்த வல்லுநர்களைக்கொண்டு, சிறப்புப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிலரங்குகள் அவ்வப்போது ஜூம் வாயிலாக துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு, நடத்தப்பட வேண்டும்.
2.வாட்ஸ் ஆப் குழுக்களை ஏற்படுத்தி மாணவர்களை ஒருங்கிணைப்பதற்கு முன்னதாக, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ளதுபோல், ஆசிரியர்களை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழுக்கள் அனைத்து சிறப்புப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.
3.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில், குடும்பஸ்ரீ என்ற உள்ளூர் தொலைக்காட்சி வாயிலாக வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான (children with special needs) கற்பித்தல் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் முன்வர வேண்டும்.
4.பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒலிவடிவிலும், செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு சைகை மொழியிலும் காணொலிகள் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பது வெறும் அறிவுரையாக மட்டுமல்லாமல், அதற்கு துறையும் ஆக்கபூர்வமான முறையில் பங்களிக்க வேண்டும். அதற்கான வள ஆதாரங்களைத் திரட்டிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
5.பார்வைமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பிரெயில்வழிப் பாடப்புத்தகங்கள் அச்சடிப்பதில் நிலவும் தற்போதைய நடைமுறைச் சிக்கலைக் கவனத்தில்கொண்டு, ஒலி மற்றும் ஒருங்குறி வடிவில் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.ஒவ்வொரு   மாவட்டத்தின் வட்டார வளமையத்தில் (block resource centre) பணியாற்றும் சிறப்பாசிரியர்களும், அந்த மாவட்டத்தில் இயங்கும் சிறப்புப் பள்ளியும் தங்களுக்குள்ளாக ஓர் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, குக்கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரைத்  தொடர்புக்குள் கொண்டுவர முயல வேண்டும். இத்தகைய ஒருங்கிணைப்பை மாவட்ட ஆட்சியர்களின் வழியே மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஏற்படுத்திட வேண்டும்.
7.எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி தொடர்பான நடவடிக்கைகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கும் இடையே நிலவும் மிகப்பெரிய இடைவெளி போக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் முன்னெடுக்கப்படும் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும், மாற்றுத்திறன் மாணவர்களையும் உள்ளடக்கித் திட்டமிடப்படுவதை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உறுதிசெய்ய வேண்டும்.
பிச்சை புகினும் கற்கை நன்றுதான். ஆனால், பிச்சை புகவும் வழியற்ற இந்த நெருக்கடியான காலத்தில், இணையவழிக் கற்றல் என்கிற கருத்து, மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோரிடையே ஒரு புதிய ஏற்றத்தாழ்வைக் கட்டமைக்கவே உதவும். விளிம்புநிலையிலுள்ள பெரும்பான்மையோரை ஒதுக்கிவிட்டு, சம பங்கேற்பு குறித்துப் பேசிப் பயனில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு என்பது, பொதுச்சமூகம் சார்ந்தது மட்டுமல்ல, அது மாற்றுத்திறனாளிகளுக்குள்ளும் நிலைநாட்டப்பட வேண்டிய ஒன்று என்பதை அரசு உணர்ந்துகொள்வது எப்போது?

ஆசிரியர்க்குழு
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்