“கரோனா நிவாரண நிதி வழங்குவதில் உள்ளாட்சி ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

,வெளியிடப்பட்டது
ஜூன் 22, 2020 

graphic டாராடாக் கடிதம்

கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிவாரணத்தை மாவட்ட வாரியாகப் பகுத்து வழங்கிட, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் நேற்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் டாராடாக் முதல்வருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்,

“கொரோனா ஊரடங்கு வாழ்வாதார நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 / – வழங்க அரசாணை வெளியிடப்பட்டு , வீடு வீடாக அத்தொகையை பட்டுவாடா செய்யும் வகையில் விதிமுறைகளை உருவாக்கி மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் வெளியிட்டுள்ளதை எமது சங்கம் வரவேற்கிறது. உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மூலம் இத்தொகையினை வழங்க மாநிலம் முழுவதும் ஒரே துறையை தேர்வு செய்யாமல் , பட்டுவாடா செய்யும் துறையை மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்வர் என விதிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏராளமான குழப்பங்களை உருவாக்கும் என ஐயப்படுகிறோம்.
எனவே , கிராமப்புறம் வரை அதிக ஊழியர்களை கொண்டுள்ள உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மூலம் இத்தொகையை பட்டுவாடா செய்ய , உரிய உத்தரவுகளை மாண்புமிகு முதலமைச்சர் பிறப்பிக்க எமது சங்கம் கோருகிறது. இடம்பெயர்ந்த மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கக் கூடாது, வேறு மாவட்டங்கள் அல்லது வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு மொத்தமாக விபரம் சேகரித்து , பின்னர் வழங்கப்படும் என விதிமுறை உருவாக்கி இருப்பது , இடம்பெயர்ந்த மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் , தாமதமாகும் . எனவே , ஒரு முகவரியில் அடையாள சான்று பெற்று , பல காரணங்களால் வேறு முகவரியில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கும் , அவர்கள் எந்த மாவட்டம் , பகுதியை சேர்ந்தவர்களானாலும் , அலைக்கழிக்காமல் நிவாரண தொகை வழங்க மாற்றுத்திறனாளிகள் இயக்குனரின் விதிமுறையில் உரிய திருத்தம் செய்திட முதலமைச்சர் உத்தரவிட வேண்டுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “சங்கங்களுடன் கலந்தாலோசித்து செயல்பட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனருக்கு உத்தரவிடுக” என அந்தக் கடிதத்தில்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்