உன்னத உரிமைக்களம்

,வெளியிடப்பட்டது
30 ஜூன், 2020
graphic பார்வையற்றோர் பயன்படுத்தும் சதுரங்கப்பலகை
எந்த ஒரு மூவும் செய்யாதபடிக்கு, ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் கரோனா செக் வைத்துவிட்டது. பார்வையற்றோருக்கு சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற டபுல் செக் வேறு. நம் ஆட்கள்தான் சவாலை திவாலாக்கப் பிறவியெடுத்தவர்களாயிற்றே. விடுவார்களா? ஒருகை பார்ப்போம் என்று எல்லாக் களத்திலும் புகுந்து அடித்தார்கள். வங்கிக்களம் நுழைந்து, வறுமையில் வாடிய தன் சமூகத்தின் துயர் துடைத்தார்கள். அகில உலகிற்கே ஜூம் பயன்பாட்டைப் பரவலாக்கி, அறிவுக்களத்தில் சட்டம், சமூகம், இலக்கியம், இசை என இன்றுவரை விவாதித்து விழிப்புணர்வு பரப்பிக்கொண்டிருப்பவர்கள் விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை.
graphic Tamilnadu Braille Chess Association
 உள்ளரங்கை உலகரங்காக மாற்ற, செஸ் மித்ரா என்கிற செயலி கிடைத்ததே வேறென்ன வேண்டும்? கடந்த மே 25 முதல் 29 வரை, தமிழ்நாடு பிரெயில் செஸ் அசோசியேஷன் ஏற்பாட்டில் இணையவெளியில் மூண்டது போர். தமிழகம் முழுக்க சுமார் 38 பார்வையற்ற வீரர்கள் சதுரங்கக் களம் புக, அனைவருக்கும் ஒற்றை சஞ்சையனாய் உரத்து ஒலித்தது ஈஸ்பீக். தன் படையையும், மாற்றான் படையையும் தலைக்குள் ஏற்றிக்கொண்டு வியூகம் வகுத்து விளையாடினார்கள் வீரர்கள்.
graphic யசோதை பிரபு
யசோதை பிரபு
 “முதலில் செயலியைக் கையாளுதல், அதை பயன்படுத்தி எப்படி கேம் ஆடுவது என எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 150 பேருக்கும் இணைய வழியில் பயிற்சி வழங்கலாம் என்றுதான் யோசித்தோம். பிறகுதான் எத்தனை பேரால் செயலியைப் பயன்படுத்தி விளையாட முடிகிறது என்பதைத் தெரிந்துகொள்ள இது போன்ற ஒரு போட்டியை நடத்தினோம். ஒரு நாளைக்கு இரண்டு சுற்றுகள் கடைசி நாள் மட்டும் ஒரு சுற்று என ஐந்து நாட்கள் மொத்தம் ஒன்பது சுற்றுகள் நடத்தப்பட்டன.” என்கிறார் சங்கத்தின் தலைவர் யசோதை பிரபு.
 முதல் மூன்று பரிசுகள் மட்டுமின்றி, பங்கேற்ற பள்ளி மாணவர்கள், பெண்கள் என மொத்தம் 15 பரிசுகள் வழங்கியதைப் பூரிப்புடன் நம்மிடம் பகிரும் யசோதை பிரபு, செயலி மற்றும் இணையத்தில் போட்டிகள் நடத்துவதில் கண்காணிப்பு தொடர்பான நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், பங்கேற்பாளர்கள் மிக உற்சாகத்துடன் பங்கேற்றது, எங்களின் முதல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என பெருமிதம்கொள்கிறார்.
 

graphic மாரிமுத்து
மாரிமுத்து

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவர்தான் இந்தப் போட்டியில் முதல்ப்பரிசு பெற்றவர். மாரிமுத்துவிடம் பேசினோம். “பொதுவாஆன்லைன் மேட்ச்னாலே டைம் அதிகமாக் கொடுக்க மாட்டாங்க. ஆனா, இந்தப் போட்டில ஒரு ப்லேயருக்கு 15நிமிஷம் கொடுத்ததோட, ஒவ்வொரு மூவுக்கும் இன்க்ரிமெண்டா 15 வினாடிகளும் கொடுத்தாங்க. இந்த அம்சம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.” என்றார்.
 

graphic ஷியாம்பினியேல்
ஷ்யாம் பினியேல்

சென்னை அம்பத்தூரிலுள்ள சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் ஷியாம் பினியேல்தான், தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட பார்வையற்ற சதுரங்க வீரர்களில் ரேட்டிங் என்று சொல்லப்படும் சர்வதேசத் தரப்புள்ளி பெற்ற ஒரே ப்லேயர். அவரும் இந்த 38 ப்லேயர்களுள் ஒருவராக விளையாடியிருக்கிறார்.
 

graphic விக்ணேஷ்
விக்ணேஷ்

தமிழகம் எங்கும் சிறப்புப் பள்ளிகளில்  படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு செஸ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை எங்கள் சங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாக வைத்துச் செயல்பட்டுவருகிறோம். அதன் முதற்படியாக, சென்னை மற்றும் அதனையொட்டியு்ள்ள பார்வையற்றோருக்கான நான்கு சிறப்புப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, பள்ளிக்கு ஒரு பயிற்றுனரை நியமித்து, அந்த மாணவர்களுக்கு தினமும் சென்று செஸ் கற்பிக்கிறோம். இந்தத் திட்டத்திற்கு மட்டும் எமது சங்கத்தின் மூலம் மாதம் 20000 வரை செலவிடுகிறோம் என்றார் சங்கத்தின் செயலர் திரு. விக்ணேஷ்.
graphic ஜெயப்பிரகாஷ்
ஜெயப்பிரகாஷ்

“பார்வையற்றோரும் பார்வையுள்ளோரும் இணைந்து சமமாகப் பங்கேற்கும் ஒரே விளையாட்டு சதுரங்கம்தான். இந்தக் கரோனா ஊரடங்கு காரணமாக, நாங்கள் ஒரு இடத்தில் கூடி விளையாடும் நிலை இல்லை என்பதால், செஸ் மூவ் எனப்படுகிற செயலியின் மூலம் விளையாடுகிறோம். செஸ் விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்ற பார்வையற்ற டாப்பர்ஸ் எல்லாம் போர்ட் வைத்துக்கொள்ளாமல், நொட்டேசன் சொல்லியபடியே மிக அசால்ட்டாக விளையாடுவார்கள்” எனச் சொல்லி, நம்மைப் புருவம் உயர்த்தச் செய்கிறார் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படித்துக்கொண்டே, இணையவழியில் செஸ் கற்றுக்கொண்டிருக்கும் பார்வையற்ற நண்பர் ஜெயப்பிரகாஷ்.

graphic விதித் குஜராத்தி

மேலும் அவர் நம்மிடம், “ஒரு விஷயம் சொல்லட்டுமா? தற்போது இந்தியாவின் பிரபல செஸ் ப்லேயரான விதித் குஜராத்தி தனது கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் மூன்று நபர்களோடு விளையாடிப் பயிற்சி பெறுகிறார். அவராலேயே இது முடிகிறது எனில், இயல்பிலேயே பார்வையிழந்த நம்மால் பார்வையுள்ளவர்களைத் தாண்டியும் இந்த விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதே உண்மை. எனவே, பார்வையற்ற மாணவர்களுக்கு அவர்களின் சிறப்புப் பள்ளிகளில் சிறுவயதிலிருந்தே பயிற்சி வழங்கவேண்டும். அந்தப் பயிற்சி செஸ்ஸில் மட்டுமல்ல, வாழ்வில் அவர்கள் மேற்கொள்ளும் எல்லாச் செயல்களிலும் எந்தவிதக் கவனச் சிதறலுமின்றி, சிந்தனையைக் கூர்மையடையச் செய்து, நிரந்தரமான வெற்றியைப் பெற்றுத்தரும்” என முடித்தார் ஜெயப்பிரகாஷ்.

சம வாய்ப்பும், சம பங்கேற்பும் நமக்கு இயல்பாய் கிடைக்கிற உன்னத உரிமைக்களமே சதுரங்கக்களம். விளையாட்டுதான் நம் போராட்ட வடிவம். விளையாடுவோம், விளையாட்டாய் உலகை வெற்றிகொள்வோம்.
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com

2 thoughts on “உன்னத உரிமைக்களம்

  1. பார்வை மாற்றுத்திறனாளிகள் நன்கு பயிற்சி பெற்று இந்த விளையாட்டு போட்டிகளில் சீரகம் தொட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *