ஜூன் முதல் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, குழப்பத்தில் தவிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்கள்

,வெளியிடப்பட்டது

தமிழகத்தில் ஜூன் 1 முதல்  பொதுத்தேர்வுகள்: அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, மே 12 ஆம் தேதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எதிர்வரும் ஜூன் முதல் தேதி தொடங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. அமைச்சரின் இந்த அறிவிப்பு, உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய சிறப்புப் பள்ளி மாணவர்கள் என்ன செய்வது, எப்படி தேர்வுக்குச் செல்வது  என்ற குழப்பத்தில் தவிக்கின்றனர்.
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
 இந்த குழப்பங்கள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். சிறப்புப்பள்ளி மாணவர்களின் சிறப்புத் தேவையைக் கவனத்தில்கொண்டு, தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, அவர்களுக்கான விடுதிகள் திறக்கப்பட வேண்டும். இது தொடர்பான அனுமதியைப் பெறுவதில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களுக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
graphic ஆசிரியர் சொல்ல மாணவர்கள் பிரெயிலில் குறிப்பெடுக்கிறார்கள்
 அந்தக் கடிதத்தில், ‘பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் தேதி அன்று தொடங்குகிறது. மேலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், மாணவர்கள் என்றைக்கு வர வேண்டும், மாணவர்களை விடுதியில் தங்க வைக்க அனுமதிக்கப்படுமா என்பன போன்ற விவரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் நமது சிறப்புப் பள்ளி மாணவர்களின் தேவைகளையும் நலன்களையும் கருத்தில் கொண்டு சில விதிவிலக்குகளையும் சிறப்பு வசதிகளையும் உரிய துறைகளிடம் முன்னதாகவே கேட்டுப் பெற வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மாற்றுத்திறனாளி மாணவர்கள் தனிப்பட்ட சிறப்பு முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்திப் பயின்று வருகின்றனர். எனவே மாணவர்களை வீட்டில் இருந்து பெற்றோர்கள் பயிற்றுவிப்பதோ அல்லது மாணவர்கள் பயின்று கொள்வதோ நடைமுறை சாத்தியம் அற்றது; தேர்வு நாட்களில் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சாத்தியம் அற்றது. எனவே மாணவர்களின் நலன் சார்ந்த தேவைகளுக்கான சில அனுமதிகளை துரித கதியில் உரிய துறைகளிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்’ என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புத் தேவைகள் மற்றும்அவை சார்ந்த கோரிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை:
graphic பதிலி எழுத்தர்கள் உதவியுடன் தேர்வெழுதும் மாணவர்கள்
 1. தேர்வு தொடங்குவதற்குப் பத்து நாட்களுக்கு முன்னதாக, அதாவது மே மாதம் 20ஆம் தேதி முதல் தேர்வு எழுதும் மாணவர்களை விடுதியில் தங்க வைக்க அனுமதி பெற வேண்டும்.
2. தொலைவில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கான வாகன வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அத்தோடு மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மெற்கொள்ளப்பட்டு, அவர்களைப் பள்ளிக்கு அழைத்துவர வேண்டும்.
3. அனைத்துத் தேர்வுகளும் நிறைவடையும் வரையில் மாணவர்கள் விடுதியில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்.
4. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை, சுமார் 20க்கும் குறைவான அரசு மற்றும் அரசு உதவிபெறும் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் மூலம், எண்ணிக்கையில் 1000க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே எதிர்கொள்ளவிருப்பதால், மாணவர்களை தினமும் பரிசோதிக்க மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்து தர வேண்டும். ஏனெனில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எளிதாக நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
இவையனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் நடைமுறைகளில் இல்லாமல் இருந்தாலும், அனுமதிக்கப்படாமல் இருந்தாலும் கூட சிறப்புப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு அனுமதியாக கட்டாயமாகப் பெறப்பட வேண்டும் என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அந்தக் கடிதத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் அடைவுகளை மதிப்பிட தேர்வுகள் அவசியமானவை என்றாலும், மதிப்பீட்டுக்குள்ளாகும் மாணவனின் மனநலமும், உடல்நலமும் பேணப்படுவது அதைவிட அவசியம் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

2 thoughts on “ஜூன் முதல் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, குழப்பத்தில் தவிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்கள்

  1. பொதுவாகவே மாற்றுத்திறனாளி குழந்தைகள் மிகுந்த வறுமைச்சேழல் கொண்ட குடும்பப் பின்னணியிலிருந்து படிக்க வருகிறார்கள். அவர்களுள் பெரும்பாலான மாணவர்களின் நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. எனவேதான் எந்த ஒரு தொற்றுநோயும் எளிதில் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

  2. வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் மாற்றுத்திறனாளிகளுக்கு நோய் தொற்று மிக எளிதில் தொற்றிக் கொள்ளும் என்பதன் பொருள் என்ன தயவுகூர்ந்து தெரிவிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *