இணையம்: துணையாக இருந்தவர் இறந்தது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்த மூதாட்டி!

,வெளியிடப்பட்டது
துணையாக இருந்தவர் இறந்தது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்த மூதாட்டி!
நன்றி மின்னம்பலம்
சென்னை மயிலாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வண்டி ஒன்றை வீடாக மாற்றி சாலையோரம் வசித்து வந்தவர்கள் தங்கப்பன் மற்றும் ஜெயா. 65 வயதாகும் ஜெயா, 70 வயது தங்கப்பனிடம் காலையில் பேசியபடியே தனது நாளை துவங்குவது வழக்கம். அதுபோல ஞாயிற்றுகிழமை அவர் பேசிக்கொண்டிருக்கையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தங்கப்பன் ஏற்கனவே இறந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.
அந்த பகுதியில் வசிப்பவர்கள் அவர்களுக்கு காலை உணவு வழங்க வந்தபோது, தங்கப்பன் இறந்தது அவர்களுக்கு தெரியவர பார்வையற்ற ஜெயாவால் அதை உணர்வதற்கு இயலவில்லை. தங்கப்பனும் பார்வை குறைபாடு உள்ளவர் தான். அவர் அதற்கு முந்தின நாள் இரவே இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெயா மற்றும் தங்கப்பனுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்களை கொண்டு உதவிக் கொண்டிருந்த தன்னார்வலர்களுக்கு இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது. ஆனால் தங்கப்பன் ஒருவேளை கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்திருக்கலாமோ என்ற பயத்தினால் யாரும் அருகில் வரவில்லை. ஒரு பூமாலை வாங்கி கொடுத்து விட்டு அவர்கள் சென்றுவிட்டனர். ஜெயா மாலையை தங்கப்பன் உடலில் போட்டு விட்டு மதியம் வரை உடலின் அருகிலேயே அமர்ந்திருந்திருந்தார். மதியம் மாநகராட்சி ஊழியர்கள் வந்து தங்கப்பனின் உடலை புதைத்துவிட்டு ஜெயாவை, ஊரடங்கு காலத்தில் சாலையில் தங்கியிருந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
தங்கப்பன் கேரளாவில் யானைகளுக்கு பயிற்சி அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் கோவில் விழாக்களில் பங்கேற்பதற்காக பல யானைகளை பழக்கியுள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த தங்கப்பன், மைலாப்பூரில் உள்ள ஒரு கோவிலில் விதவையான ஜெயாவை சந்தித்துள்ளார். பிறகு அவர்கள் இருவரும் பழகி உள்ளனர். தங்கப்பன் சிறிது சிறிதாக தனது பார்வையை இழக்க, அவர்கள் மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள நடைபாதையில் தங்க துவங்கியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சர்ச் மற்றும் கோவில்களில் சென்று அவர்கள் கொடுக்கும் பணம், உணவு அல்லது உடைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும்போது, இவர்கள் இருவரும் கோவில் திருவிழா நேரம், மற்றும் கூட்டம் வரும் காலம் ஆகியவற்றை பொறுத்து கோவில்களிலும் சர்ச்சுகளிலும் மாறிமாறி சென்று தங்கி இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் ஒருவர் அவர்களுக்கு மூன்று சக்கர வண்டி ஒன்றை தானமாக வழங்கியுள்ளார். மேலும் ஒருவர் தானமாக வழங்கிய தார்ப்பாய் கொண்டு அவர்கள் வண்டியை ஒரு வீடாக மாற்றி தங்கியுள்ளனர். தனது கண்களை இழந்திருந்தாலும் கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இருந்துள்ளார் தங்கப்பன். மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் இருவரும் வேறு எங்கும் செல்லவில்லை எனவும், அருகில் இருப்பவர்கள் கொடுத்த உணவு மற்றும் டீ ஆகியவற்றைக் கொண்டு இங்கேயே தங்கி இருந்ததாகவும் சாந்தப்பன் எனும் அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தங்கப்பன் தனக்கு உடல் முடியவில்லை என கூறியதாகவும் சனிக்கிழமை காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறியதாகவும் ஜெயா, தனக்கு உதவ வந்தவர்களிடம் கூற, அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்று உள்ளனர். அவருக்கு கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு மருந்துகள் கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஜெயா எழுந்து அவர் வழக்கமாக தங்கப்பனிடம் பேசுவது போல பேச தொடங்கிய சில நேரத்தில் டீ கொடுப்பதற்காக பக்கத்தில் உள்ள நபர் ஒருவர் வந்திருக்கிறார். அப்போதுதான் தங்கப்பன் இறந்த விஷயம் ஜெயாவுக்கு தெரிந்திருக்கிறது. அவர் இறந்துவிட்டார் என்பது தெரியாமலேயே பல மணி நேரமாக நான் பேசிக் கொண்டிருந்ததாகவும் தனக்கு இருந்த ஒரே ஒரு பலமும் இப்போது இல்லை எனவும் ஜெயா செய்தியாளரிடம் கூறியுள்ளார்.
தனக்கு இருந்த ஒரே ஆதரவை இழந்து உள்ளதால் அவர் யாராலும் ஆறுதல் படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், அந்தப் பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அவர் விடப்பட்ட இல்லத்தில் உள்ளவர்கள் யாராலும் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
– பவித்ரா குமரேசன்
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்