விகடன் செய்திகளில் எமது சங்கம்: குவியும் பாராட்டுகளில் நெகிழ்கிறது மனம்

,வெளியிடப்பட்டது
நன்றி விகடன்.com: மாற்றுத் திறனாளிகளின் வங்கிக் கணக்கை பெற்று நிதி உதவி! – நெகிழ வைக்கும் நலச் சங்கத்தின் முயற்சி

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வருமானமின்றி தவித்த பார்வை மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கின் விவரத்தை எங்கள் குழுவில் உள்ளவர்கள் மூலம் பெற்று அவர்கள் உண்மையான மாற்றுத்திறனாளிகள்தானா என்பதை அறிந்து அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வீதம் அனுப்பி வைத்தோம்.
கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்காக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டுவதுடன், தமிழகம் முழுக்க உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கைப் பெற்று ஒரு குடும்பத்திற்கு ரூ. 1,000 அனுப்பி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவி
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் வேலையில்லாமல் போனதால் வருமானத்தை இழந்து ஏற்கெனவே தொழிலாளர்கள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.
இதே போல் ரயில் மற்றும் பேருந்துகளில் ஊதுபத்தி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து பிழைத்து வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி அத்தியாவசிய தேவைகளைக் கூட செய்துகொள்ள முடியாத நிலையில் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அவர்களின் வாழ்க்கையை நிலைகுலைய வைத்துள்ளது.
சித்ரா
இது குறித்து அரசுப் பணியில் இருக்கும் பெரும்பாலான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளால் நடத்தபட்டு வருகிற ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் தலைவர் சித்ரா என்பவரிடம் பேசினோம், “இந்த ஊரடங்கு அனைத்து தரப்பு மக்களையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியிருந்தாலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை இன்னும் கேள்விக் குறியாக்கியுள்ளது. அவர்கள் வாழ்க்கை பெரும் சூறாவளியே வீசியது போல் மாறியிருக்கிறது.
தமிழகம் முழுக்க உள்ள ரயில் நிலையங்கள், ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊதுபத்தி, கீ செயின், பொம்மை உள்ளிட்ட பல பொருள்களை வியாபாரம் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தனர். சொற்ப வருமானமே வந்தாலும் யாரிடமும் கை நீட்டாமல் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
ரயில் நிலையங்கள்
இந்த நிலையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. பல குடும்பங்கள் கால் வயிற்றுக் கஞ்சி குடிக்ககூட முடியாத அளவிற்கு பொருளாதார வசதி இல்லாமல் பட்டினியால் தவித்துக் கொண்டிருந்தனர். இதை அறிந்த நாங்கள் அவர்களுக்கு எங்களால் ஆன சின்ன உதவியை செய்ய நினைத்தோம். அதற்காகப் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் சொல்ல முடியாத துயரம் குறித்து சமூக வலைதளங்களில்   பதிவிட்டோம். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததுடன் பப்ளிக் பலர் தாமாக முன் வந்து தங்களால் முடிந்த உதவியை செய்யச் சொல்லி எங்களிடம் கொடுத்தனர்.
எந்த அறிமுகமே இல்லாத பலர் பேர் எங்க பதிவைப் பார்த்துவிட்டு நொடிப் பொழுதில் உதவிகளை அள்ளிக் கொடுக்கத் தொடங்கினர். இதே போல் பல்வேறு அமைப்புகளும் உதவுவதற்கு முன்வந்து பணம் கொடுத்தாங்க. அத்துடன் எங்கள் சங்கத்தின் பணத்தையும் சேர்த்து தஞ்சாவூர், சென்னை, கோவை, மதுரை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வருமானமின்றி தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கின் விபரத்தை எங்கள் குழுவில் உள்ளவர்கள் மூலம் பெற்று அவர்கள் உண்மையான மாற்றுத்திறனாளிகள்தானா என்பதை அறிந்து அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ 1,000 வீதம் அனுப்பி வைத்தோம்.
சுரேஷ்குமார்
இதுவரை 400 குடும்பங்களுக்கு இந்த உதவி சென்று சேர்ந்திருக்கிறது. கணவன், மனைவி இருவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கடலூரை சேர்ந்த இவர்கள், குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட காசில்லாமல் தவித்துள்ளனர். நாங்க அவருக்குப் பணம் அனுப்பி வைத்தோம். சொன்னா நம்ப மாட்டீங்க நீங்க அனுப்பிய பணத்தை எடுத்துதான் பால் வாங்கினேன்… பால் அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கிறபோதே உங்களுக்கு போன் செய்கிறேன். இந்த உதவியை எப்போதும் மறக்க மாட்டோம் என நா தழுதழுக்க நன்றி கூறினார். இதனை ஏன் சொல்கிறேன் என்றால் இது போல் இன்னும் பல வலிகளுடன் இந்த நாள்களை அவர்கள் கடந்துகொண்டிருக்கின்றனர்.
அதே போல் எனக்கு ஒரு போன் வந்தது. நான் மற்றொருவரிடம் பேசிக்கொண்டிருந்ததால் எடுக்க முடியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து பார்த்தபோது 11 மிஸ்டு கால் வந்திருந்தது. அவருக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை என போன் செய்தால் அவர் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முதியவர் ராஜேந்திரன் என்பவர் எனத் தெரிய வந்தது. அவர் தன்னோட நிலையை சொன்னபோது எனக்கு கண்கள் கலங்கிவிட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரிடம் பேசினோம், தமிழகத்தில் இது போல் சுமார் 3,000 பார்வை மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். நாங்க ஒரு பகுதிதான் உதவி செய்திருக்கிறோம். இன்னும் பல குடும்பங்களுக்கு செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அவர்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும். இந்த நாள்களில் அவர்கள் என்னவாகப்போகிறார்கள் என நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. எனவே, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களைக் காக்க வேண்டும் தமிழக அரசு அவர்களை துயரத்தில் மீட்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.

  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *